Wednesday 30 August 2017

மோட்ச தீபம்!

மோட்ச தீபம்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருந்தாலும், ஒரு ஆன்மீகவாதியின் இறுதியான வேண்டுதல் என்னவாக இருக்க வேண்டும்? அது மோட்சம் மட்டுமே. மோட்சம் அல்லது முக்தி என்பது மீண்டும் பிறவாத வரம் கேட்பது தான் இறைவனிடம் வேண்டப்படும் கடைசி வேண்டுதல். மனிதன் தான் செய்யும் கர்மாக்களுக்குத் தகுந்தாற் போல அடுத்தடுத்த பிறவிகள் அமையும் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்கின்றது.
உள்ளத் தூய்மையுடன், உண்மையான பக்தியுடன், ஆன்மீகம் காட்டும் தூய அறப்பாதையில் இறைவழிபாட்டைச் செய்தால் பிறவாநிலை கிடைக்கும் என்கின்றன புராணங்கள். உயர்ந்த பக்தியே உன்னத முக்திக்கு உண்டான வழி. கலிகாலத்தில் வாழும் நாம் மோட்சத்தை அடைய என்ன தான் வழி? பக்தி நிலையை சரியாக பின்பற்ற முடியுமா? மோட்சத்தை அடைய எளிய வழி எது? இக்கேள்விகளுக்கும் ஆன்மீகம் விடை தருகின்றது.
க்ருத யுகம், த்ரேதாயுகம், துவாபர யுகம் போன்ற காலங்களில் எங்கும் கோவில்கள் கிடையாது. கடும் தவம், பெரும் வேள்விகள், வடக்கிருத்தல் போன்றவையே மோட்சத்தை தரக்கூடியனவாக இருந்தன. அந்த யுகங்கள் இறைவனே நேரில் நின்ற காலம். ஆனால், கலியுகம் - இறைவனை ஆலயங்களில் தரிசித்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
நமது ஆன்றோர்கள் சில ஆலயங்களில் முக்தி தரும் ஆலயங்களாக வகுத்துள்ளார்கள். திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும், காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி கிடைக்கும், காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும். திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி கிடைக்கும். சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும்.
திருவாரூரிலே பிறந்தாலும், காஞ்சியிலே வாழ்வதும், காசியில் இறப்பதும் அனைவருக்கும் கிடைப்பது அரிது. சிதம்பரத்தை தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும். இந்த ஸ்தலத்தின் பூஜை பிரயோகங்களை வகுத்தவர் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனின் வடிவாகிய பதஞ்சலி மஹரிஷி. ஆயிரம் தலைகளில் உள்ள ஆயிரம் நாக்குகளால் கூட சிதம்பரத்தின் பெருமைகளை சொல்லிமுடிக்க முடியவில்லை என்கிறார் ஆதிசேஷன்.
நாம் வாழும் கால வெள்ளத்தின் கணக்குப் படியும், உடல் கணித படியும் அமைந்து தரிசித்தாலே முக்தியைத் தரவல்லது. சிதம்பரத்திற்கு நான்கு கோபுரங்கள் உண்டு. நான்கு கோபுரங்களும் நான்கு பொழுதுகள். ஒவ்வொரு கோபுரமும் ஏழு நிலைகளைக் கொண்டது. கோபுரத்தின் மேலே பதின்மூன்று கலசங்கள் உள்ளன. நான்கு கோபுரங்களின் உச்சியில் 365 விளக்குகள் ஏற்ற வசதியாக பெரும் அகல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த 365ம் ஒரு வருடத்தில் உள்ள நாட்களைக் குறிக்கின்றன. ஒருவர் இறந்து விட்டால் அவர் மோட்சம் செல்ல வசதியாக வெளிச்சம் வேண்டும் என வேண்டிக் கொண்டு அவருக்காக அவருடைய உறவினர்களோ அல்லது நண்பர்களோ ஏற்றக் கூடியது மோட்ச தீபம். இந்த மோட்ச தீபம் மிகவும் புனிதமானது.
ஆத்மாவுக்கு ஒரு நல்வழியைக் காட்டக் கூடியது. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்களும், இறந்து விட்ட முன்னோர்கள் நல்லபடியாக மோட்சம் அடைய வேண்டியும், முன்னோர்களுக்கு நற்கதி ஏற்பட வேண்டியும் ஏற்றப்படும் மோட்ச தீபம் மிகவும் பலனளிக்கக் கூடியது. இறந்து விட்ட முன்னோர்களுக்கான தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் போன்ற செயல்கள் செய்ய முடியாதவர்கள், அந்த ஆத்மா திருப்தி அடைய மோட்ச தீபம் ஏற்றப்படுகின்றது.
நான்கு கோபுரங்களும் நான்கு யுகங்களாக அமைந்திருக்கின்றன. கோபுரத்தின் ஏழு நிலைகளும் ஏழு பிறவிகளைக் குறிப்பன. ஒரு ஆன்மா ஏழு பிறப்புகளுக்குப் பிறகு தான் மோட்சம் சென்றடையும் என்று புராணங்கள் கூறுகின்றன.
முதலாவது அல்லது மூன்றாவது என்று எந்தப் பிறப்பில் இருந்தாலும் சிதம்பரத்தை தரிசனம் செய்வதால் மீதம் இருக்கும் பிறப்புகள் பிறக்காமல் நேராக மோட்சத்தை அடைய முடியும். தமிழ்நால்வரில் ஒருவரான அப்பர் சுவாமிகள், சிதம்பரத்தை வந்து தரிசித்தால் மோட்சம் கிடைத்து விடும்.
ஆகையால், நடராஜரின் திருவடி தரிசனத்தை காண வேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் என்றே மன்றாடுகின்றார். மோட்சம் தரும் காட்சியைக் கண்டு முக்தி நிலை பெறுவோம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment