Wednesday 31 May 2017

எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் !

எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் !
எப்போதும் தடங்கல், எந்த காரியங்களும் முடிவு வரை வந்து பின்பு நடக்காமல் போதல், எப்போதும் மனக்கவலை, தோல்வி பற்றியே எப்போதும் சிந்தனை போன்ற எதிர் மறை சக்திகளை கீழ்க்கண்ட பரிகாரம் மூலம் நம் உடலில் இருந்து விரட்டி அடிக்கலாம். இதை முதல் முதல் ஆரம்பிக்கும் நாள் அமாவாசை நாளாக இருத்தல் நலம். பின்பு தேவைப்படும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.
தேவை : 2 கோழி முட்டை


உடைகளை முழுதும் கலைந்து குளியல் அறையில் கிழக்கு நோக்கி நின்று கொள்ளவும். பின்பு 1 முட்டையை எடுத்து அதை ராக் சால்ட் அல்லது கல் உப்பு நீரால் கழுவி கொள்ளவும்.பின்பு சிறிது எலுமிச்சை நீரால் கழுவவும்.
பின்பு கண்களை மூடி கொண்டு பிரபஞ்சத்தை உங்கள் எதிர் மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டி கொள்ளவும். பின்பு உச்சந்‌தலையில் ஆரம்பித்து உடல் முழுதும் மெதுவாக ஒரு இடம் விடாமல் முட்டையால் தடவ ஆரம்பிக்கவும். உடலில் உள்ள எதிர் மறை சக்திகள் அனைத்தும் முட்டை சுவீகரித்து கொள்ளும். உடலில் ஒரு இடம் விடாமல் தடவி கொள்ளவும்-ஏதேனும் இடத்தில் வலி இருந்தால் அந்த இடத்தை பிரத்யேகமாக கவனித்து தடவி கொள்ளவும். உள்ளங்கால் வரை தடவ வேண்டும். முக்கியமாக கழுத்தின் பின் புறம், கை கால்களின் முட்டிகளின் பின்புறங்களில் நன்கு தேய்க்கவும் -இந்த இடங்களில் தான் எதிர் மறை சக்திகள் அதிகம் தங்கும். நன்கு தேய்து முடித்ததும் ஒரு பாத்திரத்தில் அதை உடைத்து விட்டு பார்க்கவும்.
முட்டையில் கொப்பளம் அல்லது குமிழ்கள் வரின் எதிர் மறை சக்திகள் எடுக்கப்பட்டு விட்டது என அறிந்து கொள்ளவும். சாரங்களாக வந்தால் மேலும் எடுக்கப்பட வேண்டும் என அர்த்தம். ரத்தம் அல்லது கருப்பு புள்ளிகள் இருப்பின் ஏதோ பெரிய எதிர் மறை சக்தி இருந்தது க விட்டது என அர்த்தம் கொள்க. பின்பு இதை கழிவறையில் கொட்டி அதில் எலுமிச்சை நீர் சிறிது மற்றும் கல் உப்பு போட்டு நீர் விட்டு கழுவி விட்டு, பின்பு நீங்கள் யாம் ஏற்கனவே கூறியுள்ள நம் புற ஒளியை (Aura Cleansing)மிளர செய்யும் குளியல் செய்யலாம் அல்லது ராக் சால்ட் குளியல் செய்யவும். மற்றொரு முட்டையை மூன்று நாட்கள் இரவு தூங்கும் சமயம் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் முட்டையை போட்டு,தலை மாட்டில் வைத்து உறங்கி பின்பு காலையில் அந்த நீரை கழிவறையில் கொட்டி விடவும். மூன்று நாட்களும் புதிய நீரை எடுத்து கொள்ளவும். நான்காம் நாள் முட்டையை கழிவரை அல்ல்து தெரு சாக்கடையில் எறிந்து விடலாம்.
மேலை நாடுகளில் பரவலாக கடைபிடிக்கும் பரிகாரம் இது. மிகுந்த சக்தி வாய்ந்தது. செய்து பயன் அடையுங்கள்.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

(வியக்க வைக்கும் உண்மைகள்!!!) கலியுகத்தின் 15 கணிப்புகள்

கலியுகத்தின் 15 கணிப்புகள்
(வியக்க வைக்கும் உண்மைகள்!!!)

நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.
5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!
1) கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]
2) கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]
3) சில ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான். [பாகவத புராணம் 12.2.3]
*கணவன் மனைவி உறவு என்பது வெறும் உடலுறவுக்காக மட்டுமின்றி, அது ஒரு மிக உன்னதமான பந்தம். ஆணும் பெண்ணும் சமம், இருவரும் தங்களின் குடும்பத்தை முறையாக வழிநடத்தவேண்டும். பெண்ணை மதிப்பதால் தான் ஒருவன் ஆணாகிறான்; ஆணை மதிப்பதால் தான் ஒருவள் பெண் ஆகிறாள். பிராமணன் என்பவன் நற்குணங்களாலும் தர்மசெயல்களாலும் உருவாகிறானே தவிர பூணூல் அணிவதால் அல்ல. சமூகத்தில் வேண்டுமென்றால் பூணூல் அணிந்துகொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளலாம். ஆனால், பகவானின் முன்னிலையில் எல்லாவுயிர்களும் சம்மே! (சர்வபூதேஷு சமஹ்-கீதை)

4) ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]
5) கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]
6) அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். [பாகவத புராணம் 12.2.6]
7) உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]
8) ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். (அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.9]
9) கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]
10) கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]
11) தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். [பாகவத புராணம் 12.3.42]
12) பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]

13) வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]
14) தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]
15) நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். [பாகவத புராணம் 12.3.32]
கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.
மழையினில் குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். மனத்தை உறுதியாக வைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும்.
கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.
கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது.
இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும். அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்! மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும்.
ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும். ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி!!!


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

சுந்தர காண்டம் படிப்பதன் பலன் !!!

சுந்தர காண்டம் படிப்பதன் பலன் !!!
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன்பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூடவிவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன்கூறியுள்ளார்.


2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான்மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும்
அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும்சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர்
பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய்விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும்
மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்தஅளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால்வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும்.கஷ்டங்கள் தொலைந்து போகும்.
7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால்,வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமானதிருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய்விடும்.
9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால்அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை,துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு,
வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும்.முடியாத செயல்கள் முடிந்து விடும்.
11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம்ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்றநம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான்.எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.
14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு "ஜெய பஞ்சகம்'' என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக
வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.
18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.
19. பெண்கள் வேதத்தை சொல்லக் கூடாது என்பது விதி.எனவே சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.
20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.
21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ,அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல்கிடைக்கும்.
22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும்
நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.
24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.
25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.
26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.
28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன்
முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.
30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.
31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன்பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.
34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும்படிக்கலாம்.
35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.
36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.
38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.
39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.
40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

சித்தரின் ஜீவசமாதி வழிபடும் முறை !!!

சித்தரின் ஜீவசமாதி வழிபடும் முறை !!!


ஆசை உடையவன் மனிதன்.பேராசை,முறையற்ற ஆசை கூடாது.அது நிச்சயம் சீரழிவில் கொண்டுபோய்விடும்.நாம் ஜீவசமாதிகளின் துணை கொண்டு நமது நியாயமான கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் சுமார் 1,00,000 ஜீவ சமாதிகள் இருக்கின்றன.நிச்சயமாக இந்த எண்ணிக்கையை விட அதிகமாகத்தான் இருக்கும்.இது தோராய மதிப்பீடு.ஏதாவது ஒரு கோரிக்கையுடன் அமாவாசைக்கு முன்னிரவு,அமாவாசை,அமாவாசைக்கு மறு நாள் இரவு ஆகிய மூன்று இரவுகள் ஏதாவது ஒரு ஜீவசமாதி உள்ள இடத்தில் தங்குங்கள்.ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து ஆயிரம் அடி தூரத்துக்குள் தங்கவும்.

இந்த மூன்று இரவுகளும் தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது;உப்பு,புளி,காரம்,எண்ணெய் சேர்க்கக் கூடாது.பால் பழம் அல்லது பால் சாதம் அல்லது பச்சரிசி சாதம்,வெல்லம் சாப்பிடலாம்.இந்த மூன்று இரவுகளுக்கு முன்பு ஒரு மாதம் வரையிலும் அசைவம்,மது பழக்கத்தைக் கைவிடவும்.ஜீவசமாதியில் இருப்பவரின் ஆவியின் துணையால்,உங்களின் கோரிக்கை நிறைவேறியதாக எண்ணுங்கள்.உங்கள் கோரிக்கை எட்டு தினங்கள் கழித்து நிறைவேறும்.மூன்று தினங்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பிவிடவும்.இதே மாதிரி பௌர்ணமிக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் முயற்சி செய்யலாம்.

ஜீவ சமாதியிடத்தில் தங்கியிருக்கும்போது,உபவாச முறையில் இருக்க வேண்டும்.சமாதியில் இருப்பவரின் பெருமையை எண்ணியவாறு இருக்க வேண்டும்.அனாவசியப் பேச்சு மற்றும் சிந்தனை சிறிதும் கூடாது.பொதுவாக எந்த சமாதியாக இருந்தாலும்,இயன்ற அளவு கனிவர்க்கங்கள் வைத்து வழிபடலாம்.பூக்கள் வைத்தும்,வாசனைப்பொருட்கள் தடவியும் வழிபடலாம்.தீபதூப நைவேத்தியம் சமாதிகளுக்கு உண்டு.கருப்பு திராட்சை,கற்பூர வள்ளி வாழைப்பழம்,பேரீட்சை பழம்,பால்,இளநீர்,சீனா கல்கண்டு,தேன் ஆகியவை முக்கியமான நைவேத்தியங்கள் ஆகும்.பசு நெய்தீபம்,தாமரை நூல் திரியில் ஏற்றுவது நன்று.

அனைத்து மதங்களுக்கும் இது பொருந்தும்.தங்களுடைய வசதியைப் பொறுத்து கூட்டியோ,குறைத்தோ செய்து கொள்ளலாம்.

இப்படித்தான் காரியம் சாதித்தேன் என்று தேவரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது;என்னதான் மந்திர,தந்திர பூஜைகள் செய்தாலும் அன்னதானத்திற்கு மேல்பட்டது எதுவும் கிடையாது.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

சித்தர் சிவ வாக்கியர்

சிந்தனைச் செல்வர் சித்தர் சிவ வாக்கியரின் சில பாடல் வரிகளைக் கொண்டு அவர் நாத்திகர் என்ற கருத்து பரவலாகச் சிலரால் கூறப்படுகிறது. குறிப்பாக,
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்…
- என்ற வரிகளைச் சுட்டுகிறார்கள். வசதியாக பாடலின் இறுதி வரியான “ சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ” என்பதை எளிதில் மறந்து விடுகிறார்கள்.




இந்தப் பாடல் வரிகளில் எங்கே நாத்திக் கருத்துக்கள் உள்ளது?. அவர் சமயச் சடங்குகளைக் கண்டிக்கிறார். உண்மைதான். ஆனால் நாதன் உனக்கு உள்ளேயே இருக்கும் போது வெளியில் போய் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறாயே! மூடா. போலியான சடங்குகள் எதற்கு? உனக்குள் இருக்கும் ஜோதியைத் தேடு. அதை விடுத்து வெளியில் இறைவனைத் தேடிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. கறி சமைக்கப் பயன் படும் பாத்திரம் – வெறும் பாத்திரம் மட்டுமே. அதனால் அதன் சுவையை உணர்ந்து கூற இயலுமா? முடியாது. அது போல உருவ வழிபாடும், பூஜை, ஆராதனைகளும் இறைவனை உணர்வதற்கான பாவனையேயன்றி அவையே இறைவனாக மாட்டா. அதன் மூலம் இறைவனை உணர்ந்து அடைய வேண்டுமே தவிர, அதுவே முழுமையானதல்ல என்பதைத்தான் அவர் தனது பாடல் வரிகள் மூலம் சுட்டுகிறார்.
அதுபோல

கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
- என்ற வரிகளைச் சொல்வார்கள்.
ஆனால் அதன் தொடர்ச்சியான

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
என்ற வரிகளை வழக்கம் போல மறந்து விடுவார்கள். இந்தப் பாடலுக்கு விளக்கமே தேவையில்லை. மனதுக்குள்ளேயே அனைத்தும் உள்ளது என்பதை மிக அழகாகச் சொல்கிறாரே சிவ வாக்கியர்.
உள்ளத்தில் உள்ளத்தைக் கடந்து செல்ல ’கடவுளை’ அடையலாம் என்கிறார் சிவ வாக்கியர். உள் கட உள் கட கடவுளை அடையலாம் என்பதே அவரது கருத்து.
இதனை

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
என்று மிக அழகாக விளக்குகிறார்.
மேலும்

”உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே”
என்றும் அவர் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.
நீண்ட காலம் உடலைப் பாதுகாப்பது என்ற சூட்சுமத்தினை

ஈராறு கால் கொண்டெழுந்த புரவியைப்
போராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீராயிரமும் நிலமாயிரத்தாண்டும்
போராது காயம் பிரான் நந்தி ஆணையே
என்று அவர் கூறுவதையே திருமந்திரமும் பலவிதங்களில் விதந்தோதுகிறது.
ஞானம் எய்துவது எப்படி என்பதை சிவ வாக்கியர்,

உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் ஆணை அம்மை ஆணை உண்மையே
என்கிறார்.
மேலும் அவர் சொல்கிறார்,

ஓடியோடி யோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே
என்கிறார். இதயத்துள்ளே இருக்கும் இறைவனைக் காணாமல் வெளியே தேடியலைந்து, இறுதியில் எங்கும் காண இயலாமல், இறைவனை, அந்த அருட்பெருஞ்சோதியை உணரவும் முடியாமல் மாண்டுபோனவர்கள் கோடி கோடிப் பேர் என்கிறார்.
பிரம்ம ஞான தத்துவத்தைச் சிவ வாக்கியர் தனது பல பாடல்களில் சுட்டுகிறார்.

அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
- என்கிறார். அதாவது விஷ்ணு அல்ல. பிரம்மாவும் அல்ல. அதற்கு அப்பாலுக்கும் அப்பால் இருக்கிறார். அவர் கருமை செம்மை வெண்மை என பல நிறங்களைக் கடந்து அந்த அனைத்து நிறங்களுக்கும் காரணமாய் இருக்கிறார். அவர் தன்மை பெரியதும் அல்ல. சிறியதும் அல்ல. அதையும் கடந்தது. பற்ற முடிந்தவர்கள் பற்றிக் கொள்ளுங்கள் என்கிறார்.
அது மட்டுமல்ல; எந்த நாமத்தை இடைவிடாது சொன்னால் உயர்நிலையை அடையலாம் என்பதையும் அவர் தனது பாடல்களில் சொல்லுகிறார்.
……………………………………………………………..
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே…
……………………………………………………………..
ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே…
என்றும்
கார கார கார கார காவலூழி காவலன்
போர போர போர போர போரினின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்களேழு மெய்தஸ்ரீ
ராம ராம ராம ராம ராமவென்னு நாமமே
என்றும்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
என்றும் சொல்கிறார்.
மட்டுமல்ல;
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சிவ வாக்கியர் கூறும் மறை ஞான இறைவன் யார் என்பதை நாம் உணரலாம்.
இனிமேலாவது வெட்டி மன்றத்தில் பேசுபவர்கள் அல்லது கட்டுரைகளில் எழுதுபவர்கள் “சிவ வாக்கியர்” பாடல்களை முழுமையாகப் படித்து உணர்ந்தும், அவரது ஆன்மீகப் பார்வை என்ன என்பது குறித்த புரிதலும் தெளிவும் பெற்றுப் பேசுதல், எழுதுதல் சிறப்பு. அதனை விடுத்து ”சிவவாக்கியர் ஒரு நாத்திகர்” என்றெல்லாம் உளறினால், அவர்களைப் பார்த்து நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

கொங்கணர்சித்தர்! நல்லதே நடக்கும்!


எழில் கொஞ்சும் கேரளத்தின்
கொங்கண தேசத்தில்
சித்திரை மாதத்தில்
உத்ர நட்சத்திரத்தில்
புளிஞர் குடியில்
கொங்கணர் பிறந்தார் என்று
அகத்தியர் பனிரெண்டாயிரமும்,
போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன.


கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.

கொங்கணர் குருநாதரைச்சுற்றி வந்து வணங்கிவிட்டு, உடனே கிளம்பி சென்று உயர்ந்த மலை ஒன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் அமர்ந்து அம்பிகையை நினைத்து தவம் செய்து கொண்டிருக்கையில் மனதிற்குள் ஏதோ தோன்றவே, தவத்தைக் கைவிட்டு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான ஒரு யாகத்தை ஆரம்பித்தார்.

அப்பொழுது கௌதமர் அவர் முன் வந்து “கொங்கணரே, தவத்தைச் செய்து அதன்மூலம் தான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விடு, தவம் செய்” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.
எனவே யாகமும் நிறுத்தப்பட்டது.

தில்லையை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் முடிந்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராளமான சித்திகள் கிடைத்தன. அதனால் நிறைய குளிகைகளை உண்டாக்கினார்.

ஒருநாள் கொங்கணர் திருமழிசை ஆழ்வாரிடம் சென்று செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றினைப் பெருமையுடன் கொடுத்து, “இது காணி கோடியை போதிக்கும்” என்றார்.

ஆழ்வாரோ தம் உடம்பின் அழுக்கையே
திரட்டி கொடுத்து
“இரசவாதக் குளிகை இது காணி கோடியை ஆக்கும்” என்று கொடுத்தார்.
ஆழ்வாரின் பெருமையினை கண்ட கொங்கணர், அவரோடு நட்புறவு கொண்டார். திருமழிசையாழ்வார் சந்திப்பிற்கு பிறகு தவத்தில் ஈடுபட்டார்.

கடுந்தவம் பலன் தந்தது. இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தைச் செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

பிச்சை எடுத்த உணவை மட்டுமேஉண்டார்.ஒருநாள் இவர் தவம் செய்து கொண்டிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு இவர் மேல் எச்சம் இட்டது. கொங்கணர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். உடனே கொக்கு எரிந்து சாம்பலாகியது.

தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட கொங்கணர், திருவள்ளுவர் வீட்டிலே பிச்சையின் பொருட்டு வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் காலதாமதமாக பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர்,

மாதே! என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி விழித்து நோக்கினார். ஆனால் அவ்வம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்த்தார்.

உடனே வாசுகி அம்மையார் நகைத்து...

“கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!”

என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

திருவள்ளுவர் வீட்டிலிருந்து கிளம்பி வரும் வழியில் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் என்பவனைச் சந்தித்தார்.
கொங்கணரைப் பார்த்ததும் தர்மவியாதன் ஓடிவந்து வணங்கினான்.

“சுவாமி! வாசுகியம்மையார் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். கொங்கணருக்கு மேலும் வியப்பு. “அப்பா! நான் அங்கிருந்து தான் வருகிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

தர்மவியதன், “சுவாமி! வாசுகி அம்மையார் கணவரிடம் பக்தி கொண்ட பதிவிரதை, அடியேன் பெற்றோர்கள்தான் தெய்வம்என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுபவன். இதனால் தான் எங்களிடம் ஏதோ சக்தி இருக்கவேண்டும்” என்று கூறி அவரிடம் விடைபெற்றான்.

கொங்கணர் உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது.

கொங்கணர் போகரைச் சந்திப்பதற்கு முன் சித்தர்களைச் சந்தித்து சித்துக்கள் பல பயின்றார்.தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார்.
அப்போது அவர்,“திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்” என்று வழியனுப்பினார்.

பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை எதிர்கொண்டழைத்து உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்கு பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்து சமய தீட்சை நிர்வாண தீட்சை முதலியனவற்றையும் உபதேசித்தார்.

அதன்பிறகு கொங்கணர் திருவேங்கட மலை சென்று தவம் செய்தார். அப்போது வலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரைச் சந்தித்து அவர் சீடராக ஆனான். பலப் பல ஞான அனுபவ விவரங்களைக் கொங்கணரிடம் இருந்து அறிந்தான்.

அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க கொங்கணர் பல பாடல்களை எளிமையான முறையில் இயற்றி அருளினார். இறுதியில் கொங்கணர் திருவேங்கடத்தில் சித்தியடைந்தார்.

கொங்கணவர் இயற்றிய நூல்கள்:-
================================
கொங்கணவர் வாதகாவியம் – 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500கொங்கணவர் தனிக்குணம் – 200
கொங்கணவர் வைத்தியம் – 200கொங்கணவர் வாதசூத்திரம் – 200
கொங்கணவர் தண்டகம் – 120
கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
கொங்கணவர் வாலைக்கும்பி – 100
கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் – 80
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21
கொங்கணவர் சுத்த ஞானம் – 16 என்பவையகும்.

கொங்கணவர் சித்தர் தியானச் செய்யுள்;-
**********************************************
கொக்கை எரித்த கொங்கணரே
அம்பிகை உபாசகரே
கௌதமரின் தரிசனம் கண்டவரே
இரசவாதமறிந்த திவ்யரே
உங்கள் திருப்பாதம் சரணம்.
**********************************************
கொங்கண சித்தருக்கான பூசை முறைகள்:
அகப்புறத் தூய்மையுடன் பூஜையைத் துவக்க வேண்டும். அழகியசிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகிக் கோலமிட்டு, எட்டு பக்கங்களிலும் சந்தனமும், குங்குமமும் இடவேண்டும். அப்பலகை மீது கொங்கணரின் உருவப்படத்தை வைக்க வேண்டும். சுத்தமாக விளக்கிய குத்து விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் மலரிட்டு அலங்கரித்து முக்கூட்டு எண்ணெய் தீபமேற்றி பூசையைத் துவங்க வேண்டும்.முதலில் தியானச் செய்யுளை சொல்லி பக்தியுடன் வணங்கவேண்டும். பின்பு வில்வம், சாமந்தி, அரளி ஆகியவற்றால் 16 போற்றிகளைச் சொல்லிக் கொண்டே அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கம்பீரமான தோற்றம் உள்ளவரே போற்றி!
2. அம்பிகைப் பிரியரே போற்றி!
3. இரசவாத சித்தரே போற்றி!
4. அர்ச்சனையில் மகிழ்பவரே போற்றி!
5. சிறந்த தவசக்தி பெற்றவரே போற்றி!
6. செல்வங்களைத் தருபவரே போற்றி!
7. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
8. நோய்களை அழிப்பவரே போற்றி!
9. வறுமையை போக்குபவரே போற்றி!
10. ஞானம் அளிப்பவரே போற்றி!
11. தீய கனவுகளில் இருந்து காப்பவரே போற்றி!
12. மாயையை அகற்றுபவரே போற்றி!
13. கருணாமூர்த்தியே போற்றி!
14. காவி வஸ்திரம் தரித்தவரே போற்றி!
15. கொங்கு தேசத்தவரே போற்றி!
16. குலம் விளங்கச் செய்பவரே போற்றி!

இவ்வாறு அர்ச்சித்தபிறகு
“ஓம் ஸ்ரீம் கொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி!”
என்று 108 முறை ஜெபித்து
பிரார்த்தனையை கூற வேண்டும்.
நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ கொங்கணசித்தரின் பூஜா பலன்கள்:
முறைப்படி இவரை வழிபட்டால்....,
1. மனவளர்ச்சி அபிவிருத்தி ஏற்படும்.
2. கேது பகவானின் தோசம் நீங்கி களத்திர தோசம் இன்றி திருமணம் நல்ல முறையில் நடக்கும்.
3. தியானம் கைகூடும்.
4. சகவாச தோசம் நீங்கும்.
5. தீய பழக்கங்கள் விலகும்.
6. ஞாபக சக்தி உண்டாகும்.
7. உறவினர்களின் பலம் உண்டாகும்.
8. முன் கோபம் உள்ளவர்கள் சாந்த சொரூபிகளாவர்கள்.
இவருக்கு மஞ்சள், அல்லது சிவப்பு வர்ணங்கள் உடையை வைத்து அல்லது அணிவித்து பூஜை செய்யலாம்.
வழிபட சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.
நிவேதனம்: தயிர்சாதம், கல்கண்டு, பழங்கள்.
 
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
 

பித்ருக்களின் மனம் குளிரவைக்கும் தில ஹோமம்

தில ஹோமம்
பித்ருக்களின் மனம் குளிரவைக்கும் தில ஹோமம்

பல ஆயிரக்கணக்கான அன்பர்களின் வருங்கால ஷேமத்தை மனதில் கொண்டு, அவர்கள் வாழ்வில் நிச்சயமாக ஒரு மலர்ச்சியை ஏற்படுத்த, அந்த சர்வேஸ்வரனை முழு மனதாய் தியானித்து – திலா ஹோமம் பற்றி ஒரு முழு விளக்கக் கட்டுரை சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.



தில் என்றால் எள். திலா ஹோமம் ( Thilaa Homam ) என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பனத்திற்கும், திலா ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திலா ஹோமம் – ராமேஸ்வரம் அல்லது திருப்புல்லாணி ஆகிய இரு இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.
ராமேஸ்வரம் – நம் நாட்டின் தொன்மை வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களில் மிக முக்கியமானது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த ராமநாதரால் உலகம் எங்கும் கோடிக்கணக்கான பக்தர்களை வசீகரித்து, பல கோடிக்கணக்கான ஆன்மாக்களின் பாவங்களைக் கரைத்து ஜீவன் முக்தி அடையை செய்யும் தவ பூமி.
திலா ஹோமம் எங்கே செய்வது? ஏன் செய்ய வேண்டும்? யார் யார் கண்டிப்பாக செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்? என்ன பலன்கள் ஏற்படும் என்கிற உங்கள் மனதில் தோன்றும் கேள்விளுக்கு விளக்கம் இதோ.
நீங்கள் அந்தணர்களாய் இருந்தால் நீங்கள் செல்லவேண்டிய இடம் திருப்புல்லாணி. மற்ற அனைத்து சமூகத்திற்கும் ராமேஸ்வரத்தில் செய்வது தான் முறை. ஒரு சிலருக்கு ராமேஸ்வரத்தில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிப்பதும் வழக்கம்.
திலா ஹோமம் முடித்தவுடன் – தங்களால் முடிந்த அளவுக்கு ( 3 பேருக்கோ, 9 பேருக்கோ, 27 பேருக்கோ ) அன்னதானம் செய்வதும் நல்லது.
பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான். எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பனங்கள் தரப் படவில்லையோ, எவர் ஒருவர் தலைமுறையில் – செயற்கை மரணம் ( கொலை) , ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் பிரிந்த உயிர் – விபத்துகள் போன்றவை, தற்கொலை , வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்காமல் , அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் அவர்களை வாட விடுதல் , போன்ற சமபவங்கள் நடந்திருப்பின், அந்த குடும்பத்திற்கு பிதுர் தோஷம் ஏற்படுகிறது. அந்த ஜாதகர் திலா ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் அது உரிய நிவாரணம் அளிக்காது.
எவர் ஒருவர் வாழ்வில் திருமணத் தடை, விவாக ரத்து , நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை , முறைகேடான உறவு முறைகள் – அதனால் வழக்கு, வில்லங்கம், குழந்தைகள் இல்லாமை, கர்ப்பசிதைவு, குழந்தைகள் – பெற்றோர் மனம் கோணும்படி வேறு மதம் அல்லது சமூகத்தில் திருமணம் புரிதல், எத்தனையோ உரிய தகுதிகள் இருந்தும் , திறமைகள் இருந்தும் வாழ்வில் அதற்குரிய நிலையை அடைய முடியாமல் போதல், குடும்பத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுதல் , இதோ முடிந்துவிட்டது இந்த வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கடைசித் தருணத்தில் – நம் கை நழுவி போகும் நிலை , என்று – திருப்தி அடையாத ஆத்மாக்கள் – அந்த தலைமுறையை , அது தாய் தந்தையோ , வாரிசுகளோ – அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து – அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே இந்த திலா ஹோமம்.
ஜாதகப்படி – யார் யாருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை எப்படி உணர முடியும்?
எல்லோருடைய ஜாதகத்திலும் அவரவர் பிறந்த நேரப்படி லக்கினம் கணிக்கப்படுகிறது. மொத்தம் இருக்கும் பன்னிரண்டு கட்டங்களில் , ஒரு கட்டத்தில் ” ல” என்று எழுதி இருக்கும். இது அந்த ஜாதகரின் முதல் வீடு என்று அழைக்கப்படுகிறது . கடிகாரச் சுற்றுப்படி 1 முதல் 12 வீடுகள் எண்ணிக்கொள்ளவும். எவர் ஒருவர் ஜாதகத்தில் – 1 , 5 , அல்லது 9 எனப்படும் திரிகோண வீடுகளில் – சர்ப்ப கிரகங்கள் எனப்படும் இராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் – அது பிதுர் தோசமுள்ள ஜாதகம் என்று கருதப்படுகிறது. இதைத் தவிர எவர் ஒருவர் ஜாதகத்தில் இரண்டு முக்கியமான வீடுகளும் – பூர்வ புண்ணியம் எனப்படும் 5 ஆம் வீடும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடும் – பாதிக்கப் பட்டிருந்தால் , அதன் அதிபதிகள் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் , அந்த அதிபதிகளின் திசை நடக்கவிருந்தால் அவர்களும் பிதுர் தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பொருள்.
இது ஒரு பவர்புல் ஹோமம். முழு மனதுடன் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய தவறினால் அது செய்பவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போக முக்கியமான விஷயம் – நம் வாழ் நாளில் ஒரே ஒரு தடவை மட்டுமே இதை செய்ய வேண்டும். சரியாக செய்யப்படும் திலா ஹோமம் , ஒரு சந்ததிக்கே நல்ல வழிகாட்டும்.இதை செய்த ஆறு மாதங்களில் – நீங்கள் இதைக் கண்கூடாக உணர முடியும். உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனை நிகழும்.
உங்கள் ஜாதகப்படி பலம் பொருந்திய நாளில் இதைச் செய்வது நல்லது. பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் செய்ய ஆரம்பித்தால் , காலை 9 மணி அளவில் தான் முடியும். அந்த தினம் இரவு ராமேஸ்வரத்தில் தங்கி , மறுதினம் நீங்கள் ஊருக்கு கிளம்புவது நல்லது.
யோக பலம் பொருந்திய நாளை எப்படி தெரிந்து கொள்வது ?
உங்கள் லக்கினத்திலிருந்து – 9 ஆம் வீட்டுக்கு உரியவரின் கிழமை உங்கள் வாழ் முழுவதும் – யோகமான நாளாக கருதப்படும். உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்தால், 9 ஆம் வீடு தனுசு. அதற்கு அதிபர் – குரு பகவான். ஆகவே வியாழக்கிழமை – உங்களுக்கு யோகமான நாள். ஆகவே மேஷ லக்கினத்தில் பிறந்தவராக இருந்தால் – ஒரு வளர்பிறை வியாழக்கிழமையில், உங்கள் ராசிக்கு சந்திர அஷ்டமம் இல்லாத நாளில் – திலா ஹோமம் செய்து , அன்று இரவு தங்கி, வெள்ளிகிழமை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்புதல் நலம். இதைபோலே , உங்கள் ஜாதகப்படி யோகமான நாளைத் தெரிந்துகொண்டு செயல்படவும்.

ஜாதகப்படி பிதுர் தோஷம் இல்லாதவர்களும், விருப்பம் இருந்தால் – வாழ்வில் ஒரே ஒரு முறை – திலா ஹோமம் செய்து கொள்ளலாம்.
ஒருவருக்கு திலா ஹோமம் செய்ய, கிட்டத்தட்ட சுமார் 10 இலிருந்து 15 ஆயிரம் வரை செலவு ஆகும். அனைவருக்கும் அந்த சர்வேஸ்வரனின் ஆசிகளும், முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
ராமேஸ்வரம், திருப்புல்லாணி , தேவிப்பட்டினம் ( நவபாஷாணம்). இந்த இரு இடங்களுமே ராமேஸ்வரத்திற்கு வெகு அருகில் இருக்கும் ஸ்தலங்களாகும். இதில் நவபாஷானத்தில் இருக்கும் நவகிரகங்கள் ஸ்ரீ ராமராலேயே நிறுவப்பட்டு , வழிபட்ட நவகிரகங்களாகும். நாமே கிரகங்களை வலம் வந்து, நம் கைப்பட அர்ச்சித்து வழிபடலாம். (ஆண், பெண் இருபாலாரும்).

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்...!

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்...!
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.



1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.
2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.
14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.
17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.
18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.
20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.
28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.
33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.
53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று... தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.
55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

விரதம் இருப்பது எப்படி ?

விரதம் இருப்பது எப்படி ?

ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது. நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள் சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும் காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால் நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான் செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம் தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன் செய்யமுடியும். மேலும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும். நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம் மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள் இருந்தாலும், அனைத்து முறையிலும் சில சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது. அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது விரதம் இருத்தல் என்பதாகும். விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல் இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம் இருத்தல் என விளக்கலாம். பஞ்சபூதங்களின் வடிவமான நமது ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில் அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில் மேம்படலாம். உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பதாக விளக்கினேன் அல்லவா? பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என காண்போம்.


கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - மண்
தொடு உணர்வு - காற்று

நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும் பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல் சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம் வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச் செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம் அடையும். காது மற்றும் மூக்கு பகுதிகளின் செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும் இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின் தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும் வாழமுடியாது. அதை போலவே இந்த இரு அவயங்களின் செயல்களை நாம்மால் செயற்கையாக நிறுத்த முடியாது. உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி? என பலர் நினைக்கிறார்கள். மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது. பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார். துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ ருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள். பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடை பகுதியில் இல்லை. பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடிய வில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும். விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது. சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோமவாரம்), வியாழன் (குருவாரம்)கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும்.அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும். சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக்பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது. நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம். நமது உடலின் சக்தியை அதிகமாக செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை காட்டிலும் அதிகமாக சக்தியை செலவு செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள். உண்ணாமல் இருந்தால் மயங்கி விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன் உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல் தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள் உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை கலந்துகொண்டு உண்ணாநோன்பு இருங்கள். உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு. அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும் தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம் ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது. விரதம் இருக்கும் பொழுது ஏற்படும் முக்கியமான பயன் மனது தனது செயலை மிகவும் குறைவாக செய்து தன்னில் அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில் ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும். பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது மற்றொரு வகை. நமது உடலின் தன்மை வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க வேண்டும். சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம் உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும் விரதம் சந்திராம்சவிரதம். பெளர்ணமி அன்று முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும் சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக உணவை கூட்டுவார்கள். சந்திராம்சவிரதத்தை பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத தினங்கள்தான்.
யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க கூடாது?
• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்

இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும் சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும் பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும் சாஸ்திரத்தில் உண்டு. மெளனவிரதம் இருப்பது வாய் எனும் உறுப்பின் மற்றொரு விரதமாகும்.மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும் இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும் தடையில்லை. உலகின் சிறந்த மொழி மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில் இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால் உங்கள் உள்ளுணர்வு மிகவும் கூர்மையானதாக மாறி உங்களை விழிப்புணர்வாளர்களாக மாற்றும். மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர் காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும் விரதத்திற்கு இது எதிரான செயல். மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள். அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை முழுமையாக உணரமுடியும். விரதங்களில் வாய்மூலம் அனுஷ்டிக்கும் விரதத்தை பற்றி பார்த்தோம். ப்ராணாயமத்தில் கும்பகம் எனும் செயல் தற்காலிகமான சுவாச விரதம் எனலாம். மேலும் பிரம்மச்சரிய விரதம் தொடு உணர்வுக்கு விரதமாகும். ஒரு ஆன்மீகவாதிக்கு வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகியவை மிகவும் முக்கியம். தனது எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம். தனது ஆன்மீக செயல்களை தடையில்லாமல் தினமும் எந்த காரணம் கொண்டும் விடாமல் செய்வது அப்யாசம். ஈஸ்வரனிடத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் இருப்பது பக்தி. ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத்தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான். நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும்தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது. நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இரைச்சலான ஒரு சந்தையில் ஒருவரை அழைத்தால் அவருக்கு நாம் அழைப்பது கேட்காது, அதே நேரம் அமைதியான ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒருவரை அழைத்தால் அவருக்கு நமது அழைப்புரியும். அது போல உங்கள் உணர்வு உறுப்புக்கள் சந்தைக்கடை போல பல செயல்களில் ஈடுபடும் பொழுது பரமாத்மாவை அழைத்தால் அவரிடம் நீங்கள் நெருங்க முடியாது. விரதம் மூலம் உங்கள் உடலை மேன்மையாக்குங்கள். உங்கள் உடல் எனும் நந்தவனத்தில் பரமாத்மா நிரந்தரமாக வசம் செய்வார்

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com