Tuesday 2 May 2017

இறுதிக் கிரியைகள் செய்வதும், பிதிர்வழிபாடு செய்வதும் ஏன்?

இறுதிக் கிரியைகள் செய்வதும், பிதிர்வழிபாடு செய்வதும் ஏன்?


இப் பூவுலகில் வாழும் மக்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம், சைவம் என பல சமயங்களைச் பின்பற்றுபவர்காளக வாழ்கின்றனர். எல்லாச் சமயங்களும் வாழ்கையை நல்ல முறையில் பயனுள்ளதாக அமைவதற்கான நெறிமுறைகளையும், சமய அனுட்டானங்க்களையுமே போதிக்கின்றன.

அவற்றுள் சைவ சமயம் மட்டுமே கர்ம வினைகள் பற்றியும் அதன் காரணமாவே பிறப்பு, இறப்பு நிகழ்கின்றது என்றும், ஒருவருடைய இறப்பின் பின் என்ன நிகழும் என்பது பற்றியும் பேசுகின்றது.

விளக்கமாக கூறுவதாயின் ஒருவருடைய மரணத்தின் பின் என்ன நிழும்? ஏன் அவ்வாறு நிகழ்கின்றது? என்பதை பற்றி சைவ சமயம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. மரணத்தின் பின் என்ன நிகழும் என்பதை அறிவியலாலும், மற்றைய சமயங்களினாலும் இதுதான் நடக்கும் என கூற முடியாத நிலையில் சைவ சமயம் இதுதான் நிகழும் என உறுதியாக கூறுகின்றது.

ஆன்மா அழிவில்லாதது என்றும் அவை கர்ம வினைகளால் பீடித்து இருக்கும்போது ஜீவாத்மாவாக ஏழுவகையான (ஒவ்வொரு வகையிலும் பல கோடி) பிறப்புக்களை எடுக்கின்றன எனவும், அதனை பீடித்துள்ள கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பு அமையும் எனவும் நாம் சைவசமய நூல்களில் படித்திருக்கின்றோம். ஒரு(வர்) ஆன்மா செய்யும் நல்வினை தீவினைகளை அவையே அனுபவித்து தீர்க்கப்பட வேண்டும் என்பதும் நியதி.

எப்பொழுது அந்த ஜீவாத்மா தன்னைப் பீடித்திருக்கும் கன்ம விணைகளை தீர்த்து பரிசுத்த ஆத்மாவாக திகழ்கின்றதோ அப்போது அது பரமாத்மாவுடன் இரண்டறக் கலக்கின்றது என சைவ சமயம் கூறுகின்றது. இதனை திருமூலர் “உரையற்று, உணர்வற்று” என்னும் பாடலில் உயிரானது “உயிர் – பரம் அற்ற நிலை” எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது உயிரானது உயிரின் தன்மை அற்றதாகவும், பரமாத்மாவின் தன்மை அற்றதாகவும் இரண்டும் இணைந்து பேரானந்த நிலையை அடைகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

ஈமைக்கிரியை செய்வதற்கான காரணம்:

ஒரு(வர்) ஆன்மா செய்யும் நல்வினை தீவினைகளை அவையே அனுபவித்து தீர்க்கப்பட வேண்டும் என்பது நியதியாக இருக்கும் போது ஒரு ஆன்மாவின் பிரிவில் அந்த ஆன்மாவுக்காக அவரின் வாரிசுகள் செய்யும் இறுதிக் கிரியைகள் பிரிந்து சென்ற ஆன்மாவுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும்? என்ற கேள்வி எழுவது நியாயமே.

ஒருவர் வாய் மூலமாகவும், மனம் மூலமாகவும், உடம்பு மூலமாகவும் மூன்று விதமாக கன்ம வினைகளை செய்கின்றார். ஒருவர் செய்யும் தீவினையானது இரு சந்தற்பங்களில் நிகழ்கின்றன. அதாவது தான் செய்யும் செயல் பாவமானது என அறிந்தும் செய்வது, மற்றையது பாவம் என அறியாமலே செய்வது. இவற்றுள் தாம் பாவம் செய்வதாக அறிந்தும். செய்யும் பாவமானது அவர் அனுபவித்தே தீரவேண்டும். ஆனால் பாவச்செயல் என அறியாது தற்சமயம் நிகழ்ந்த பாவ வினைகளாயின் அவற்றை அவரின் வாரிசுகளினால் அவருக்காக செய்யப் பெறும் இறுதிக் கிரியை, அந்தியேட்டி கிரியைகளினால் நிவர்த்தியாகின்றன என சைவசமயம் கூறுகின்றது. அதனாலேயே நம் மூதாதையினர் ஈமைக் கிரியைகளையும், அந்தியேட்டிக் கிரியைகளையும் செய்து வந்துள்ளனர்.

அந்தியேட்டிக் கிரியை செய்வதற்கான காரணம்:

ஆலயங்களில் மஹோற்சவிழாக்கள் நடைபெறுவதை நாம் எல்லோரும் பார்த்திருக்கின்றோம். அவை ஆலயத்தில் நடைபெறும் நித்திய, நைமித்திய பூசைகளின்போது எம்மை அறியாது ஏதாவது குறைகள் இடம்பெற்றிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே மஹோற்சவ விழாக்கள் நடாத்தப்பெறுவதாக சைவசமயம் கூறுகின்றது.

அது போலவே,ஒருவருடைய மரணம் என்பதும் (முதியவராகிலும், இளையவராகிலும்,நோய்வாய்ப்பட்டவராகிலும்) எதிர்பாராத நேரத்தில் நிகழ்வதாகும். அதனால் சிலவேளைகளில் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிக் கிரியைகளில் குறைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யவே அந்தியேட்டி கிரியைகள் செய்யப் பெறுகின்றன.

அந்தியேட்டிக் கிரியை, ஈமைக் கிரியை போன்றே நிகழ்த்தப் பெறுதல் இதனை ஊர்யிதம் செய்கின்றது. அதாவது பூதவுடலுக்குப் பதிலாக 36 தற்பைப் புல்லினால் செய்யப் பெற்ற உருவம் வைத்து அதனை இறந்தவரின் உடலாக ஆவகணம் செய்து அதற்கு பூசைகள் செய்து அந்த உருவம் தகனம் செய்யப்பெறுகின்றது. எனவே இதுவும் ஒருவகையில் மரணகிரியையே.

ஈமக்கிரியைகள் யாவும் சைவக்குருமார் மூலமே செய்யப் பெறுகின்றது. அதுபோல் அந்தியேட்டிக் கிரியையும் மரணச் சடங்கிற்கு நிகரானதாக இருப்பதனால் சைவக்குருமாரே செய்வது வழக்கம். அத்துடன் ஒருவருடைய மரணக் கிரியை செய்தவரே அந்தியேட்டிக் கிரியை செய்யும்போது தவறுகள் நிவர்த்தியாகுவதாக ஐதீகம். மரணக் கிரியையும், அந்தியேட்டிக் கிரியையும் அபரகிரியைகளாக அமைவதால் மரணக் கிரியை, அந்தியேட்டிக் கிரியைகளை செய்யும் சைவக்குருமார் ஆலயங்களில் செய்யப் பெறும் சுப கிரியைகள் செய்வது தவிர்க்கப் பெற்றுள்ளது.

பிதிர் வழிபாடு செய்வதற்கான காரணங்கள்:

இல்லறம் சிறக்க தெய்வப்புலவர்; “தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்திற்கும், இனத்திற்கும், தனக்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம். என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார்.

தென்புலத்தார் என்போர் இறந்த எமது மூதாதையினராவர். அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர்களின் ஆசி எம்மை வாழவைக்கும் என்றும், அவர்களை வாழ்த்தி அவர்களின் ஆசியைப் பெறுவது மானிடனாகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது கடமை என்றும் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.

இறந்தோரின் (பித்ருக்களின்) ஆசி வேண்டி பித்ரு வழிபாடு செய்யும் வழக்கம் எமது முன்னோர்களால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அவை இரண்டு விதமாக அமைகின்றன. ஒன்று இறந்த எமது நெருங்கிய உறவினர்கள் இறந்த மாதத்தில் வரும் திதியில் ஒரு புரோகிதர் மூலம் எள்ளு நீர் இறைத்து அவர்களை நினைந்து வழிபடுவது. இறந்த திதியைச் சிரத்தையுடன் செய்வதால் சிரார்த்தம் அல்லது திவசம் என்று அழைக்கப்பெறுகின்றது. மாதா மாதம் வரும் அமாவாசையில் எள்ளும் நீரும் இறைத்து வழிபடுவது புரோகிதருக்கு அரிசி காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்வதும் ஒரு வகை பிதிர் வழிபாடாகும்.

இவை தவிர; பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். புரட்டாதி மாதம்பொதுவாக புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும். நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது.

இது, எம்மை விட்டுப் பிரிந்த எல்லா உறவினர்க்கும் விருந்தளிப்பது போன்ற ஒரு ஆராதனையாகும். இங்கே குறிக்கப்பெற்ற மஹாளய தினத்தில் சைவ உணவு ஆக்கிப் படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் வழக்கமாக நடைபெறும் மஹாளய ஆராதனையாகு,இவை தவிர, அமாவாசை, பௌர்ணமி திதிகளில் உரியவர்கள் விரதம் அனுஷ்டிப்பதும், விளகீடு, தீபாவளி போன்ற விஷேச தினங்களுக்கு முதல் நாள் அவர்களுக்கு விருந்து படைப்பதும் நம் முன்னோரால் பின்பற்றி வந்த சில சமய அனுட்டானங்களாகும்.

இவை யாவும் இல்லற வாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும், ஆசீர்வாதங்களும் சிறப்பளிக்கின்றன என்பதனால் எம் முன்னோரால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் எம்மை சபித்து விடுவார்கள் என்பது ஆதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகம்.
ஒரு வருடத்தை தேவ, ப்ரஹ்ம, பூத, பித்ரு, மநுஷ்ய என்னும் ஐந்து பாகங்களாக வகுத்து; புரட்டாதிமாதம் (மஹாளய னக்ஷம்) பித்ருக்களுக்கு உரிய மாதமாக கணிக்கப்பெற்றுள்ளது. எனவே அந்தக் காலத்தில் மஹாளய-பித்ரு வழிபாட்டுகள் செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளை பெறுகின்றோம்.

மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என இந்து மதம் வலியுறுத்துகிறது. அவை பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர் அதனைக் கடைபிடித்து வந்ததுடன் நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.

இறந்த எமது முன்னோர்களுக்காகச் செய்யப்படுவது பிதிர் வழிபாடு.
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ
(தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.

அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த குருமார்களை வைத்து முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.

பிதிர் வழிபாட்டில் பிண்டம் போட்டு சமைத்த உணவு, பழங்களை நைவேதிக்கின்றேம். பிதிர்கள் திருப்தியடைய எள்ளுந் தண்ணீரும் இறைக்கின்றோம். புரோகிதருக்கு அரிசி, காய்கறி, வேட்டி சால்வை, தட்சணை கொடுக்கின்றோம். இவ்வழிபாட்டால் எமக்குப் பிதிர் ஆசியும் குரு ஆசியும் கிடைக்கின்றது. மேலும் நாம் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி மோக்ஷ அர்ச்சனை செய்து வழிபடுவதால் தேவ ஆசியும் கிடைக்கின்றது.
நமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள் யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாப புண்ணியத்துக்கு அமையவே நடைபெறும். அதிலே பிதிர் காரியமும் ஒன்றாகும். அதனை நாம் கிரமமாக சிரத்தையுடன் செய்ய வேண்டும். அது தவறின் பிதிர்களின் கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிஷ சாஸ்திரம் கூறுகின்றது.

நாம் பிறக்கும் போது நமது ஜாதகத்தைக் கணிப்பர். அதனைப் பார்த்து ஜோதித்தர் கிரக தோஷம் உள்ளதால் பிள்ளைப் பாக்கியம் குறைவு என கூறுவார். இத்தகைய கிரகதோஷம் உள்ளதால் பிதிர் வழிபாடு செய்யுங்கள் என கூறுவார்.

இதனால் நமக்குப் பிள்ளை இல்லையே என்ற குறைபாடு கண்டவிடத்து பிதிர் வழிபாட்டை சிரமமாகச் செய்தல் வேண்டும். வீட்டிலே மேலே கூறியவாறு செய்கின்றோம். கீரிமலையில் செய்கின்றோம். வசதியானோர் இராமேஸ்வரம், திருவாலங்காடு, காசி, காயா சென்று பிதிர் வழிபாடு, தேவ வழிபாடுகளைச் செய்வதை நாம் அறிவோம்.

ஆகவே பிதிர் வழிபாடு மிக முக்கியமானது. அதிலும் மஹாளயஞ் செய்து பிதிர் வழிபாடு செய்து பிதிர் ஆசி, குரு ஆசி, தேவ ஆசி பெற்று வாழ்வது மிக மிக மேலானது.

இதனை வீட்டில் செய்ய முடியாதோர் புரட்டாதி அமாவாசையில் புரோகிதருக்கு அரிசி, காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்யலாம்.
 
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment