Thursday, 29 June 2017

சித்ரா பௌர்ணமி விரதம் !!!

சித்ரா பௌர்ணமி விரதம் !!!

இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார். இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.
ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்ரா பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.
பூமியைச் சுற்றிவரும் சந்திரன்பௌர்ணமி அன்று முழு நிலவாகத் தோன்றி மிகப் பிரகாசமாகக் காட்சிதரும். இந்தப்பௌர்ணமி தினமானது மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன.மாதம் தோறும் வரும்பௌர்ணமி நாளில் மலைக்கோவில்களுக்குச் சென்று மக்கள் கிரிவலம் வருகின்றனர்.எனினும், சித்திரைப் பௌர்ணமியன்று கிரிவலம் வருதல், கோவில்களிலும் புனிதத்தலங்களிலும்தம் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்தல் போன்றனசிறப்பானவையாகும்.
மேலும் அன்றைய தினம் புனித நதிகளில் நீராடியும் நமது பாவங்களைப் போக்கிக்கொள்ளலாம். சித்திரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால், அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில்அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.
சித்திரைப் பௌர்ணமியானது, சித்திரகுப்தனாரின் திருமண நாளாகும். அவர் நமதுபிறப்பு, இறப்பு கணக்குகளைப் பார்த்துவரும் எமதர்மனின் கணக்குப்பிள்ளை ஆவார்.
பூமியில் மனிதர்கள் செய்யும் பாவ,புண்ணியங்களைக்கணக்கெடுத்துஅவைகளுக்குத் தகுந்தால் போல் நமக்குரிய சொர்க்க, நரகங்களை முடிவு செய்வதே சித்திர குப்தனின் கடமையாகும். எனவே அவரது திருமண நாளான சித்திரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது, சித்திர குப்தனை மனதில் நினைத்து ” நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபட வேண்டும்.
சித்ரா பௌர்ணமியன்று பெரும்பாலான ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்வார்கள்.எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள சித்ரா பௌர்ணமியை நாம் சிறப்புடன் அனுஷ்டித்து பயன் பெறுவோம்.
சித்ரா பௌர்ணமி விரதமுறை:
சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும் (கொப்பி&பேனா ) வைத்து, ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு”என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
இந்த வழிபாட்டின்போது ”சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்” என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
இலங்கையில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் இந்துக்கள் இறந்துபோன தமது தாயாரின் ஆத்மாவை நினைத்து அனுஷ்டிக்கும் ஒரு விரதமாக இது அமைந்துள்ளது. இங்கு ஆலயங்களில்விஷேட பூசைகளும் குறிப்பாக அம்மன் கோவில்களிலும் சில பொது இடங்களிலும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அரிசி, தேங்காய் போன்ற பொருட்களைக் கொண்டு சித்திரைக்கஞ்சி சமைத்து அனைவருக்கும் கொடுப்பதோடு சித்திர குப்தனின் கதையைப் படித்தும் இவ் விரதத்தை அனுஷ்டித்து இறந்த தாயாரின் ஆத்மாவைப் பூசிப்பது வழக்கமாகும்.
சித்ரகுப்த கோயில்:
இந்த சித்ரகுப்தனுக்கென காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சன்னதியும் உள்ளது. இதே போல் தேனி மாவட்டம் போடி அருகே கோடங்கிப்பட்டி, கோவை சிங்காநல்லூர் எமதர்மன் கோயில்களிலும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ய கடன் வசூலாகும், வாணிபம் சிறக்கும், ஆயுள்பலம் கூடும் என்பது நம்பிக்கை. எமன் தென்திசைக்கு அதிபதி என்பதால் சித்ரா பவுர்ணமி அன்று போடப்படும் கோலங்கள் தென்புற வாசலை அடைப்பது போல் கோலம் போடும் வழக்கம் இன்றும் உள்ளது. சித்ரா பவுர்ணமி மற்ற பவுர்ணமியைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்தது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment