Thursday, 22 June 2017

தேவி சமயபுரம் மாரியம்மன் !!!

தேவி சமயபுரம் மாரியம்மன் !!!


சமயபுரத்தில் தேவி சமயபுரம் மாரியம்மனுடன் சம்மந்தப்பட்ட இரு ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான தேவி சமயபுரம் மாரியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். அங்குள்ள அம்மனை பார்வதி தேவியின் அம்சமாக கருதுகிறார்கள். அவளுக்குள்ள அனைத்து சக்திகளையும் சிவபெருமானே தந்துள்ளார். பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து தமது பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும், தீராத தமது நோய்கள் குணமாக வேண்டும், அம்மை நோய்களால் தாம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டிக் கொள்வார்கள். சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி தெரிந்திருக்காத ஆன்மீக பக்தர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அம்மை நோய் வந்தவர்கள் அந்த நோய் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக் கொண்டு பரிகாரம் செய்வார்கள். அப்படி குணம் அடைந்ததும் அவர்களை இந்த ஆலயத்துக்கு அழைத்து வந்து நேர்த்திக் கடன்களை செய்வார்கள். அவளே உலகெங்கும் பல்வேறு ரூபங்களிலும் பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படும் அனைத்து தேவி மாரியம்மன்களுக்கும் தலைவியானவள் ஆகும். தமிழில் மாரி என்றால் மழை என்பது அர்த்தம். ஆகவே மழையைப் போல அருளை பொழிபவள் என்பதினால் தேவி மாரியம்மன் என அழைக்கப்பட்டாள். தமிழில் அம்மன் என்பது பெண் தெய்வத்தை குறிப்பதாகும்.
தேவி சமயபுரம் மாரியம்மன் காளியின் அவதாரம் எனவும், காளி பார்வதியின் அவதாரமே என்பதினால் சமயபுரம் மாரியம்மனும் சக்தியின் அவதாரமே எனவும் கூறுகிறார்கள். காளி தேவியானவள் பயங்கர ரூபத்தோடு காட்சி அளிப்பதைப் போலவே பல மாரியம்மன் தேவிகளும் பயங்கர ரூபத்தில் சில ஆலயங்களில் காணப்படுவதினால், தேவி மாரியம்மங்களின் தலைவியாக கருதப்படும் தேவி சமயபுரம் மாரியம்மனை காளி தேவியின் அவதாரமாக கூறுகிறார்கள். அவளுக்கு மழைப் பொழிய வைக்கும் சக்தியைத் தவிர அம்மை நோய்களை குணப்படுத்தும் விசேஷமான சக்தியும் அவளுக்கு மட்டுமே உண்டு என்ற வரத்தையும் சிவபெருமான் தந்து இருந்தார். இந்த அம்மனுக்கு அம்மை நோயைக் குணப்படுத்தும் சக்தி தந்ததற்கு காரணமாக ஒரு புராணக் கதையை கூறுகிறார்கள். அனைத்து சக்தி தேவி ஆலயங்களும் எழும்பக் காரணமாக இருந்த அதே கதைதான் இங்கும் கூறப்படுகிறது. தக்ஷ யாகத்தில் அவமானம் அடைந்து தற்கொலை செய்து கொண்ட பார்வதியை சிவபெருமான் தனது தோளில் தூக்கிக் கொண்டு சென்ற போது பார்வதியின் உடலில் இருந்து அவள் கண்கள் இந்த ஆலயம் உள்ள கண்ணனூரில் விழுந்ததினால் பார்வதின் அவதாரமாக தோன்றிய தேவி சமயபுரம் மாரியம்மனுக்கு ஆயிரம் கண்களை சிவபெருமான் கொடுத்தாராம். அம்மை நோயினால் ஏற்படும் சின்னஞ் சிறிய நீர்க் கொப்புளங்களை பார்வதியின் சிறு கண்களாக கருதுகிறார்கள் என்பதினால் அம்மைக் கண்களையும் குணப்படுத்தும் சக்தியையும் அவளுக்கு தந்தாராம்.
பக்தர்களுக்கு தேவி சமயபுரம் மாரியம்மனின் மீதான பயம் எந்த அளவு உள்ளது என்றால், எவராவது ஒருவர் வாய் தவறிக் கூட ஏதாவது ஒரு காரணத்திற்காக அந்த ஆலயத்துக்கு வருவதாக ஒரு முறை வேண்டிக் கொண்டால் வாழ்நாளில் ஒரு முறையாவது அங்கு போகாமல் இருக்க மாட்டார்கள். தாம் அந்த ஆலயத்துக்கு வருவதாக கூறிவிட்டதை நிறைவேற்ற அங்கு வந்து அம்மனை வழிபட்டு விட்டுச் செல்வார்கள். காரணம் அப்படி தாம் கூறியதை நிறைவேற்றாவிடில் தமக்கோ அல்லது தமது குடும்பத்தினருக்கோ பல்வேறு பிரச்சனைகள் தோன்றிக் கொண்டே இருக்கும் என்ற பயமேதான் காரணம் ஆகும். இந்த ஆலயம் தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இந்த ஆலய வரலாறு குறித்து பல்வேறு கதைகள் உலவுகின்றன. ஆனால் அனைத்துமே வாய்மொழிக் கதையாகவே உள்ளன. களி மண் சிலையாக காணப்படும் இந்த ஆலய தேவி ஸ்வயமாக அவதரித்தவள் என்பது நம்பிக்கை ஆகும். காட்டுப் பகுதியில் தோன்றியதாக நம்பப்படும் தேவி சமயபுரம் மாரியம்மனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்குள்ள கிராமத்தினர் வழிபாட்டு வந்துள்ளனராம். தான் அங்கு ஸ்வயமாக எழுந்தருளி இருந்ததை தேவி சமயபுரம் அம்மனே ஒரு விழாவில் தமது பக்தர் உடலில் தாமே புகுந்து கொண்டு (சாமியாடி) அந்த உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்தாளாம். மூல விக்ரஹம் களி மண்ணால் ஆனதாக இருந்ததால் அதைப் போன்றே இன்னொரு சிலையை கல்லில் வடித்து மூல மூர்த்திக்கு முன்பாக வைத்து அதற்கே அபிஷேகம் பூஜை போன்றவற்றை செய்கிறார்களாம். மூல மூர்த்திக்கு எந்த சிதைவும் எற்படக் கூடாது என்ற பயம்தான் அப்படி செய்வதற்கான காரணம்ஆகும்.
ஒரு கிராமியக் கதையின்படி 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்த ஆலயம் எழுப்பப்படாமல் இருந்தபோது பராசக்தியின் அம்சமான ஒரு தேவியின் சிலையை ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதஸ்வாமி ஆலயத்தில் வைத்து பூஜித்து வந்தார்கள். ஆனால் அந்த சிலை அந்த ஆலயத்தில் வைக்கப்பட்டது முதல் அந்த ஆலய பண்டிதருக்கு பலவிதமான உடல் நலக்குறைவு தொடர்ந்து ஏற்ப்பட்டு வந்து கொண்டிருக்க அந்த வியாதிக்கான காரணம் அந்த சிலையே என சந்தேகப்பட்ட பண்டிதர் அந்த சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி வனத்தில் கொண்டு போய் வைத்துவிட ஏற்பாடு செய்தார். அன்றைய காட்டுப் பகுதியாக இருந்த சமயவரத்தில் அந்த சிலையை வைத்து விட பெயர் தெரியாத தேவியை அங்கிருந்த கிராமத்தினர் கிராம தெய்வமாகக் கருதி வழிபடலானார்கள். ஆனால் அவர்களுக்கு அதைக் குறித்த எந்த தகவலும் தெரியாது.
அங்கிருந்த கிராம மக்கள் அந்த தேவியை வணங்கத் துவங்கியது முதல் அவள் அவர்களுக்கு காவல் தேவதையாக உள்ளதைப் போல இருப்பதாக உணர்ந்தார்கள். அவர்களுக்கு திருடர்களினாலோ அல்லது வேறு எந்த விதமான மிருகங்களினாலோ பயம் ஏற்படவில்லை. அது மட்டும் அல்ல கடவுளிடம் அவர்கள் வைத்த வேண்டுகோட்கள் அதுவாகவே நிறைவேறத் துவங்கியன. அந்த காலகட்டங்களில் கிராம தேவதைகள் மனிதர்களது வாழ்க்கையை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகித்தன.
அங்கிருந்த மக்கள் அந்த பெயர் தெரியாத அந்த தெய்வத்திடம் தகுந்த முறையில் வேண்டிக் கொண்டு வழிபட்டால் அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன என்பதை உணரத் த்குவங்கியதும் அந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் பரப்பலானார்கள். அந்த செய்தி பரவலாக அனைத்து இடங்களிலும் பரவத் துவங்க அது அப்போது திருச்சியில் தங்கி இருந்த விஜயநகர மன்னர்கள் காதுகளிலும் விழுந்தது. ஆகவே அவர்களும் அங்கு வந்து அந்த தெய்வத்தை வழிபடலானார்கள். பின் ஒருமுறை அவர்கள் தாம் ஈடுபட்டு உள்ள யுத்தத்தில் வெற்றி பெற்றால் அந்த தேவிக்கு ஒரு ஆலயம் எழுப்புவதாக சபதம் செய்ய அவர்கள் யுத்தத்தில் வெற்றி பெற்று திரும்பி வந்ததும் கண்ணனூர் மாரியம்மன் ஆலயம் என்ற பெயரில் சிறு ஆலயம் அமைத்தார்கள்.
அதைப் போலவே இன்னொரு கதையும் உள்ளது. அந்தக் கதையின்படி விஜயநகர மன்னர்கள் திருச்சியில் தங்கி இருந்தபோது பெயர் தெரியாத ஒரு பெண் தெய்வத்தை வணங்கி வந்திருந்தார்கள். அவர்கள் யுத்தத்தில் தோல்வி அடைந்து தமது ஊருக்கு கிளம்பிச் சென்றபோது அந்த சிலையையும் பல்லக்கில் வைத்து எடுத்துச் சென்றார்கள். சாதாரணமாக விஜயநகர மன்னர்கள் தாம் தினமும் வணங்கி வந்திருந்த தெய்வத்தின் சிலையை எங்கு அவர்கள் சென்றாலும் தம்முடன் எடுத்துச் சென்று விடுவதுண்டு. அப்படி அவர்கள் திரும்புகையில் காட்டுப் பகுதியாக இருந்த சமயவரத்தின் வழியே சென்றார்கள். காட்டில் ஒரு இடத்தில் இளைப்பாறிய பின் மீண்டும் கிளம்பியபோது என்ன செய்தும் பூமியில் அவர்கள் வைத்து இருந்த அந்த தேவியின் சிலையை அவர்களால் எடுக்க முடியவில்லை. ஆகவே வேறு வழி இன்றி அந்த சிலையை சுற்றி அங்கேயே மேல்கூறை இல்லாத ஒரு தடுப்பை எழுப்பிவிட்டு சென்று விட்டார்கள். அந்த சிலையையே வழிப்போக்கர்களும் கிராமத்தினரும் வணங்கி வரலானார்களாம். அதுவே பிற்காலத்தில் சமயவரம் தேவி மாரியம்மன் என அறியப்பட்டு பின்னர் அமைக்கப்பட்ட பெரிய ஆலயத்தில் அமர்த்தப்பட்டது.
மற்றுமொரு கிராமியக் கதையின்படி ஒருமுறை அங்கு படையெடுத்து வந்த மொகலாய மன்னரின் போர்வீரர்கள் அந்த கிராமத்தினர் வணங்கி வந்திருந்த சிலையை தம் நாட்டில் கொண்டு போய் மன்னன் முன்னால் அதை உடைக்க வேண்டும் என்பதற்காக தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். வழியில் அவர்கள் நதி ஒன்றைக் கடக்க வேண்டி இருந்தது. அனைத்து பொருட்களையும், சிலையையும் நதிக்கரையில் வைத்தப் பின் களைப்பினால் சற்று ஒய்வு எடுத்துவிட்டு அங்கேயே குளித்தப் பின்னர் மீண்டும் புறப்பட்டார்கள். ஆனால் கிளம்பும்போது அந்த சிலையைக் காணவில்லை. எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை என்பதினால் வெறுத்துப் போய் ஊருக்கு சென்று விட்டார்கள்.
படைவீரர்கள் அங்கிருந்து சென்ற சில தினங்களுக்குப் பிறகு அந்த சிலை வேப்ப மரங்களின் அடியில் இருந்த புதர் ஒன்றில் இருந்ததை அந்த ஊர் ஜனங்கள் கண்டு பிடித்தப் பின்னர் மீண்டும் அதை எடுத்து வைத்து வணங்கத் துவங்கினார்கள். அது எப்படி அங்கு சென்றது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த தெய்வத்தின் மகிமையைக் கேள்விப்பட்ட விஜாநகர மன்னனான விஜயரங்க சொக்கநாதர் என்பவர் சமயபுரத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டி அதில் பராசக்தியின் அம்சம் என கருதப்பட்ட அந்த சிலையை பிரதிஷ்டை செய்து அங்கு வழிபட்டாராம். இப்படியாகவே சமயபுரம் தேவி ஆலயம் எழுந்ததாக சிலர் நம்புகின்றார்கள். பலரும் அந்த ஆலயம் குறித்த பலவிதமான வரலாற்றை வாய்வழி செய்தியாக கூறி வந்தாலும் அனைத்து கதைகளுமே அந்த ஆலயத்தைக் கட்டியது விஜயநகர மன்னர்களில் ஒருவரே என்பதையும், தேவி சமயபுரம் மாரியம்மன் ஸ்வயம்புவாக வெளி வந்தவளே என்பதையும் வெளிப்படுத்துகின்றது.
அதைப் போலவே வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் அந்த ஆலயத்தை கண்ணனூர் எனும் இடத்தில் 18 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் கட்டினார்கள் என்றே கருதுகின்றார்கள். கண்ணனூரை பல்வேறு சமயங்களில் கண்ணபுரம், விகரமபுரம் மற்றும் மகாலிபுரம் என்றெல்லாம் அழைத்து உள்ளார்கள். ஆனால் இந்த வரலாற்று செய்திகளை உறுதிப்படுத்தும் விதத்தில் எந்த விதமான எழுதப்பட்ட ஆவணமும் கிடைக்கவில்லை. அதன் காரணம் அந்த காலங்களில் எந்த செய்திகளையுமே எழுத்து வடிவில் எழுதி வைத்திருக்கவில்லை. அனைத்து செய்திகளுமே வாய்வழி செய்திகளாகவே இருந்துள்ளன. அதைத் தவிர அங்கொன்றும், இங்கொன்றுமாக சில இடங்களில் காணப்படும் பாறைகளில் பொறிக்கப்பட்ட செய்திகள் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன.
வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி விஜயநகர மன்னர்கள் இங்குள்ள தேவி மாரியம்மனை வணங்கி வந்துள்ளார்கள். 1706-1732 ஆண்டுகளில் இங்கு ஆட்சியில் இருந்த விஜயராய சக்ரவர்த்தி காலத்தில்தான் இந்த ஆலயத்தில் தேவி சமயபுரம் அன்னையின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது என்றும் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
அன்னை சமயபுரத்தாள் என அன்போடு பக்தர்களால் அழைக்கப்படும் தேவி சமயபுர மாரியம்மனின் சிலை மற்ற ஆலயங்களில் காணப்படும் கல்லினாலோ அல்லது உலோகத்தினாலோ வடிவமைக்கப்பட்ட சிலையாக இல்லாமல் களிமண்ணால் செய்யப்பட்டுள்ளது என்பதினால் அதைப் போலவே கல்லில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ள உற்சவ மூர்த்திக்கே அபிஷேகங்கள் மற்றும் பூஜைகளை செய்யும்போது அந்த உற்சவ மூர்த்தி சிலையில் அம்மன் வந்து அமர்ந்து கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்வதாக கருதுகிறார்கள்.
அந்த ஆலயத்துக்கு வருகைத் தரும் பக்தர்கள் தேவி சமயபுரத்தாள் தமக்கு உடல் நலத்தையும், செல்வத்தையும் வாரி வழங்குவாள் என நம்புகிறார்கள். அதன் காரணம் அவள் தன்னுள் இருபத்தி ஏழு நட்ஷத்திரங்களுடன் ஒன்பது நவக்கிரகங்களின் சக்திகளையும் அடக்கி வைத்துக் கொண்டுள்ளதான நம்பிக்கையே காரணம் ஆகும். இதனால் அவளிடம் சரண் புகுந்துள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பாதிப்புக்கள் அவளை வந்து வணங்குபவர்களுக்கு ஏற்படாது என்கின்றார்கள். சிவப்பு நிற மேனியோடு, பல அம்சங்களையும் அடக்கி வைத்துள்ள எட்டு கரங்களோடு, ஆயிரம் சூரிய ஒளி வெளிப்படுத்துவது போல தேவி காட்சி தருகிறாள். இரண்டு கைகளில் ஒன்றில் வாளும் இன்னொன்றில் குங்கும சிமிழும் உள்ளன. எட்டு கைகளுடன் உள்ள தேவி மாரியம்மனை உலகில் வேறு எங்குமே காண முடியாது. அதிகபட்சமாக நான்கு கைகளுடன் கூடிய தேவி மாரியம்மனையே சில ஆலயங்களில் காணலாம்.
தேவி சமயபுர மாரியம்மனின் ஆலயத்தில் வந்து உடலின் சில பாகங்களில் வந்துள்ள வியாதிகள் குணமாக வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டு பிராத்தனை செய்வார்கள். பல்வேறு உலோகங்களில் செய்யப்பட்ட மனித உறுப்புகளைப் போன்ற உருவத்தைக் கொண்ட சின்ன உலோகத்திலான சின்னங்களை அங்குள்ள உண்டியலில் போட்டு அம்மனிடம் தம்முடைய உடலில் அந்த குறிப்பிட்ட உறுப்பில் ஏற்பட்டு உள்ள வியாதி குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வார்கள். உதாரணமாக கையில் உள்ள வியாதி குணமாக கையைப் போன்ற உருவம் கொண்ட உலோகத் தகட்டையும், காலில் உள்ள வியாதி குணமாக காலைப் போன்ற உருவம் கொண்ட உலோகத் தகட்டையும் உண்டியலில் போட்டு பிரார்த்தனை செய்வார்கள்.
அனைத்து ஆலயத்துக்கும் செல்லும் பக்தர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக விரதம் பூண்டு பிரார்த்தனை செய்வார்கள். ஆனால் இந்தக் கோவிலிலோ அம்மனே தமது பக்தர்களுடைய நலத்துக்காக விரதம் இருப்பது அதிசயம் ஆகும். வருடத்துக்கு நான்கு நாட்கள் அம்மனுக்கு மோர் மற்றும் பானகம் மட்டுமே நெய்வித்தியமாக படைக்கப்படுகிறது. அந்த நாட்களில் அங்கு வருகை தரும் பக்தர்களும் மோர் மற்றும் பானகம் போன்ற இரண்டையும் தவிர வேறு எதையும் பிரசாதமாகத் தர அனுமதிக்கப்படுவது இல்லை.

முதலில் இந்த ஆலயமும் திருச்சி அகிலாண்டேஸ்வரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதற்குப் பிறகு இதை அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தில் கொண்டு வந்து விட்டார்கள்.
தேவி சமயபுரம் மாரியம்மனுடன் சம்மந்தப்படுத்தி கூறப்படும் இன்னொரு ஆலயக் கதையும் இங்கு உண்டு. சமயபுரத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ தொலைவில் உள்ள எஸ். கண்ணனூரில் கண்டுபிடிக்கப்பட்ட தேவி சமயபுர மாரியம்மனின் மூலச் சிலை இங்கு படையெடுத்து வந்த மொகலாய மன்னர்களின் படையினர் தொலைத்து விட்டுச் சென்ற அம்மன் சிலை என்றும், இன்னும் சிலர் இல்லை, அது பூமியில் வைத்துவிட்டு தூக்க முடியாமல் அங்கேயே ஒரு சிறு வழிபாட்டுத் தலம் அமைத்து விட்டுச் சென்ற விஜயநகர மன்னர்கள் விட்டுச் சென்ற சிலை என்றும் கூறுகிறார்கள். ஆனால் எஸ். கண்ணனூரில் அந்த சிலை கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் அந்த அம்மனின் சக்தியைக் காட்டும் விதத்தில் தேவி ஆதி மாரியம்மன் எனும் பெயரில் சிறிய அளவில் இன்னொரு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள தேவி மாரியம்மனை தேவி சமயபுரம் மாரியம்மனின் தாயார் என்று கருதுகிறார்கள்.
இந்த ஆலயம் எழுந்த கதையும் விசித்திரமானதுதான். கிராமியக் கதையின்படி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வனப்பிரதேசமாக இருந்த அங்கு இருந்த ஒரு புதரில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டதாம். அதைக் கேட்ட உள்ளூர் மக்கள் அங்கு ஓடிச் சென்று பார்த்தபோது அங்கு பெரிய பாம்புப் புற்று இருந்ததாம். அப்போது அங்கிருந்த ஒருவர் உடலில் புகுந்து கொண்ட தேவி மாரியம்மன் அந்த புற்றில் தான் அமர்ந்து உள்ளதாகவும் தன்னை அங்கேயே வழிபடுமாறும் கூறினாளாம். அதைக் கேட்ட கிராமவாசிகள் அங்கேயே சிறு சிலையை நிறுவி அந்த புற்றை வழிபட்டு வந்துள்ளார்கள்.
அது முதல் ஒவ்வொரு வருடமும் அதே இடத்தில் இருந்து அந்த சிலையை ஒரு பல்லக்கில் வைத்து கொள்ளிடம் நதிக்கு எடுத்துச் சென்று நீராடியபின் திரும்பி வந்து வருடாந்திர விழாவை நடத்தினார்கள். இப்படியாக இருக்கையில் ஒருமுறை அந்த பல்லக்கை அவர்கள் எஸ். கண்ணனூரில் இருந்த ஒரு வேப்ப மரத்தின் அடியில் வைத்துவிட்டு இளைப்பாறிய பின்னர் மீண்டும் கிளம்பியவர்கள் அதை தூக்க முடியாமல் திண்டாடினபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் உடலில் புகுந்து கொண்ட தேவி மாரியம்மன் தானே சமயபுரம் தேவியான மாரியம்மனின் தாயார் என்றும் என்றும் தனக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்புமாறும் உத்தரவு கொடுக்க விஜய நகர மன்னர்கள் எஸ். கண்ணனூரில் ஒரு சிறு ஆலயம் எழுப்பி சமயபுரத்து ஆலயத்தில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து அதையும் சேர்த்து அங்கு தேவி மாரியம்மனின் ஒரு சிலையை பிரதிஷ்டை செய்து அதை கண்ணபுரம் தேவி ஆதி மாரியம்மன் எனும் பெயரில் வழிபடலானார்கள். அது முதல் தேவி சமயபுர மாரியம்மன் ஆலயத்துக்கு சென்றவர்கள் அங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவி ஆதி மாரியம்மனையும் வழிபடலானார்கள். இப்படியாக தேவி சமயபுரம் மாரியம்மனும், அவளது தாயாராக கருதப்படும் தேவி ஆதி மாரியம்மனும் தாயும் சேயுமாக வணங்கப்பட்டு வருகின்றார்கள். இன்றும் தேவி சமயவரம் மாரியம்மனின் வருடாந்திர திருவிழாவில் உற்சவ மூர்த்தியை தேவி ஆதி மாரியம்மன் ஆலயம்வரை எடுத்து வந்து சற்று தங்கிவிட்டு திரும்பவும் எடுத்துச் செல்வார்களாம். இப்படி செய்வதின் மூலம் ஐதீகமாக தாயும், மகளும் ஒன்று சேர்ந்து உறவாட வகை செய்வதாக நம்புகின்றார்கள்.
தேவி சமயபுர மாரியம்மன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் அங்கு எழுந்தருளி உள்ளாள் என்றும், ஆனால் அதற்கு முன்னரே அவளது தாயாராக கருதப்படும் தேவி ஆதி மாரியம்மன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் அங்கு எழுந்தருளி உள்ளாள் என்றும் நம்பிக்கை உள்ளது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment