Monday, 5 June 2017

குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்

குரு என்பவர் எப்படி இருக்க வேண்டும்
-திருமூலர் திருமந்திரத்தில்!!!
பொய்யான துறவிகள் குறித்து திருமூலர் கூறியுள்ள சில கருத்துக்களை கடந்த இரு அத்தியாயங்களில் கண்டோம். இனி "குரு' குறித்து திருமந்திரம் கூறும் சில செய்திகளைக் காணலாம்.
குரு என்பவர் தெய்வத்திற்கு ஒப்பானவர். குரு நிந்தனை தெய்வ நிந்தனைக்கு ஒப்பாகும். இந்தியக் கலாச்சாரத்தில் குரு என்பவருக்கு மிக முக்கியமான இடமும் மரியாதையும் உண்டு.


பொய்த் துறவு பூணுபவர்கள் பூமிக்கே இழுக்கு என்கிறார் திருமூலர். தனது சுய லாபத்திற்காகவும் வயிற்றுப் பிழைப்பிற்காக வும் பொய்யாகத் துறவு வேடம் பூணுபவர் களால் நாட்டின் மானம் கெடும். இத்தகைய பொய்த் துறவிகள் குரு என்ற நிலையிலிருந்து பிறருக்கு உபதேசம் செய்யத் துவங்கினால் என்னவாகும்?
"கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தற்பாவம் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கு நாட்டுக்கும் கேடென்றே
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே.'
-திருமந்திரப் பாடல் எண்: 2023.
"கற்பாய கற்பங்கள்' என்ற சொற்களில் ஆழமான பொருள் பொதிந்து கிடக்கிறது. மனிதன் செய்யும் காரியங்கள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைவது மனமும், அதில் உருவாகும் சிந்தனைகளுமே. இவையே மனிதனைச் செயல்பட வைக்கின்றன.
"கற்பாய கற்பங்கள்' என்றால் மனதில் விரிகின்ற கற்பனைகளால் உள்ளத்தில் எழு கின்ற உணர்வுகள் அல்லது கிளர்ச்சிகள் என்று பொருள். இந்த உள்ளக் கிளர்ச்சிகளே மனிதனைத் தவறான செயல்களில் ஈடுபடத் தூண்டுகின்றன.
இத்தகைய கற்பனைகளையும் கிளர்ச்சி களையும் அடக்கி ஆளக் கற்றுக் கொண்ட வனே குருவாக இருந்து பிறருக்கு கற்பிக்கத் தகுதி படைத்தவன். இவற்றைத் தன்னிட மிருந்து நீக்கிக் கொள்ளாமல் ஒருவன் பிறருக்கு போதனை செய்ய முற்பட்டால் என்ன நிகழும்?
"தற்பாவம் குன்றும் தனக்கே பகையாகும்.'
அவனது போதனையில் உண்மையின் ஒளி இராது. அற உணர்வும் குன்றும். (தற்பாவம் குன்றும்). அது ஒரு ஞானமில்லாத போதனை யாகவே இருக்கும். இவ்வாறான போதனை களில் ஈடுபடுபவர்களுக்கு அதுவே பகையா கும். (தனக்கே பகையாகும்). தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும். இவர்கள் தீய கர்மாக்களைச் சம்பாதித்துக் கொள்கின்றனர். இதுவே இவர்களுக்கு வினையாகும்.
"நற்பால் அரசுக்கு நாட்டுக்கும் கேடென்றே'
இத்தகைய போலி குருக்களால் நாட்டிற் கும் நாட்டை ஆளும் அரசுக்கும் கெட்ட பெயர் உருவாகும். கேடு விளையும்.
"முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே'
இந்தக் கருத்தை வெகு காலத்திற்கு முன்னரே நந்திப் பெருமான் (சிவன்) கூறி வைத் துள்ளான் என்பதே இப்பாடலின் பொருளா கும். அசற்குரு (தீயகுரு) குறித்த மற்றொரு திருமந்திரப் பாடலையும் காணலாம்.
"ஆமாறு அறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறு அசத்திரு அறிவிப்போன் அறிவிலன்
கோமான் அலன் அசத்து ஆகும் குரவனே.'
-திருமந்திரப் பாடல் எண்: 2022.
மனிதப் பிறவி எடுப்பதன் நோக்கமே "வீடுபேறு' எனும் முக்தி நிலையை அடைவது தான். அதையே "ஆமாறு' என்ற சொல் குறிக் கிறது. இந்த முக்தி நிலையை அடையும் வழி முறைகளை அறியாதவன் மூடன்.
காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் ஆகியவையே வீடுபேற்றினை அடையத் தடையாக நிற்பவை என்பது சாத்திரங்கள் கூறும் உண்மை. இந்த உண்மையை அறிந்திருந்தும் அவற்றை விலக்கும் முயற்சி களில் இறங்காதவன் அதிமூடன். (மிகப் பெரிய முட்டாள்). இவர்கள் கீழ்மக்கள் என்றே கருதப்பட வேண்டியவர்கள்.
இத்தகைய கீழ் மக்களுக்குப் பொய்யான (அசத்து) போதனைகளைச் செய்து லாபம் சம்பாதிக்கும் குரு (குரவன்) ஒரு அறிவில்லாத வன். இவனே முட்டாள் கூட்டத்தின் தலைவன் (கோமான்) என்பதே இப்பாடலின் பொருளாகும்.
இது இந்தப் பாடலுக்கான நேரடியான அர்த்தம் என்றாலும்கூட இதில் சில நுட்ப மான உண்மைகளும் புதைந்துள்ளன.
* உண்மைகளை அறிந்தும் அதன்படி செயல்படத் தயாராக இல்லாதவர்கள் முட்டாள்கள். இவர்கள் பிறப்பால் உயர்ந்த வர்களாக இருந்தாலும் தங்கள் செயலால் கீழ்மக்கள் என்றே கருதப்படத் தக்கவர்கள்.
* இத்தகைய கீழ்மக்களுக்கு- அதி முட்டாள்களுக்கு ஒரு குரு உபதேசம் செய்வது வீண் வேலை. அது செவிடன் காதில் சங்கு ஊதும் கதையாகவே இருக்கும்.
* வீடுபேறு அடையும் வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு உபதேசம் செய்வது ஒரு நல்ல செயல்.
* வழிமுறைகள் தெரிந்தும் அதன்படி நடக்க முயலாத அதிமூடர்களுக்கு உபதேசம் செய்வது முட்டாள்தனமான செயல்.
* ஒரு குரு பிறருக்கு உபதேசங்கள் செய்யும்முன் காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் ஆகியவற்றை தன்னிலிருந்து விலக்கியவராக- அவற்றையெல் லாம் கடந்தவராக இருக்க வேண்டும். இத்தகைய குருவின் உபதேசங்களில் மட்டுமே உண்மை இருக்கும்.
* இவற்றை தான் விலக்காமல் பிறருக்கு உபதேசம் செய்வது பொய்யான உபதேசம் என்றே கருதப்பட வேண்டும். இவ்வாறு பொய்யான உபதேசத்தில் ஈடுபடும் குரு முழு முட்டாள். முட்டாள்களின் கூட்டத்திற்குத் தலைவன்.
இவ்வாறான முட்டாள் குருவிடம் உபதேசம் கேட்பவர்களுக்கு என்ன நிகழும்? அடுத்த பாடலிலேயே இதற்கான விடையை யும் தந்துள்ளார் திருமூலர்.
"குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வார்கள் முன்பின்
குருடனும் வீழ்வார்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.'
-திருமந்திரப் பாடல் எண்: 2024.
கண் பார்வை இல்லாத ஒருவருக்கு கண் பார்வை உள்ள ஒருவர்தான் வழிகாட்ட இயலும். கண்பார்வை இல்லாதவர்கள் கையில் ஒரு கோலை வைத்துக் கொண்டு தட்டித் தட்டி நடக்கும் வழக்கம் திருமூலர் காலத்திலேயே இருந்திருக்கிறது.
கண் பார்வை இல்லாதவர் வைத்திருக்கும் அந்தக் கோலைப் பிடித்து, ஒரு கண் பார்வை உள்ளவர் வழி நடத்திச் சென்றால் சேர வேண்டிய இடத்திற்குச் சரியாகச் சென்று சேர்ந்துவிட முடியும்.
மாறாக அந்தக் கோலை கண் பார்வை இல்லாத மற்றொருவர் பிடித்துக் கொண்டு வழிகாட்ட முற்பட்டால் என்ன நிகழும்? இருவருமே பள்ளத்தில் வீழ்ந்து பரிதவிக்கும் நிலையே வரும்.
இந்தப் பாடலில் கண் பார்வை என்பது மெய்ஞ்ஞானத்தைக் குறிக்கிறது. "குருடர்' என்பது மெய்ஞ்ஞானம் இல்லாதவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லாகும்.
மெய்ஞ்ஞானம் இல்லாத அறிவுக் குருடர் களை மெய்ஞ்ஞானம் வாய்க்கப் பெற்ற ஒரு குரு வழிநடத்தினால் அவர்களும் மெய்ஞ் ஞானத்தைக் கண்டுணர முடியும். இறுதியில் வீடுபேறையும் அடைய முடியும்.
மெய்ஞ்ஞானம் பெறாத போலித் துறவி கள் "குருவாக' அவதாரம் எடுக்கும்போது அவர்கள் தாங்களும் படுகுழியில் வீழ்வதோடு, தன்னைப் பின்பற்றி வரும் சீடர்களையும் படுகுழியில் தள்ளி விடுகிறார்கள்! இந்தப் பாடலை மேலும் சிந்தித்துப் பாருங்கள்- பல நிகழ்கால உதாரணங்கள் மனதில் விரியும்.
அசற்குருவின் (தீய குரு) பின் சென்றால் விளையும் கேடுகளை பல பாடல்களில் திருமூலர் பட்டியலிட்டுள்ளார். சரி; ஒரு நல்ல குருவின் (சற்குரு) இலக்கணம் என்ன? அதையும் திருமூலரே விளக்குகிறார்.
"பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு ஆவோர் அறிவற்றுப்
பூசற்கு இரங்குவோர் போதக் குரு அன்றே.'
இறைவனை அடையவும், வீடுபேறு அடையவும் மிகப் பெரிய தடையாக உள்ளது பந்த பாசங்களே. உற்றார்- உறவினர்மேல் உள்ள பாசம், உலக வாழ்க்கை, பொருள் ஆகியவற்றின் மேலுள்ள ஈர்ப்பு, பிடிப்பு ஆகிய அனைத்துமே இந்த "பாசம்' என்பதில் அடங்கும். இந்த பாசம் என்ற மாயக் கட்டுகளிலிருந்து விடுதலை பெறுவதே ஞானத்தின் முதல்படி.
ஒரு நல்ல குரு இந்த பந்த பாசங்களிலிருந்து விடுதலை பெற்றவராக இருக்க வேண்டும். (பாசத்தை நீக்கி.) பந்தபாசம் நீங்கிய பின்னரே மனம் பரமன் ஒருவனையே நாடி, அவனோடு இணையும்.
"நேசத்து நாடி' என்ற சொற்களின் மிக ஆழமான ஒரு உண்மை உள்ளது. "அன்பே சிவம்' என்பதே திருமூலரின் கொள்கை. இறைவன் என்பவன் அன்பு வடிவானவன். அவனை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் அந்த இறைவன் மேல் எல்லையற்ற- எதிர் பார்ப்புகள் இல்லாத அன்பு நமது உள்ளத்தில் ஊற்றெடுத்துப் பெருக வேண்டும்.
இந்த உண்மையான நேசத்தில் நாடும் போதுதான் அன்பே வடிவான இறைவனைக் கண்டுகொள்ள முடியும்.
"நேசத்து நாடி மலமற நீக்குவோர்'
இவ்வாறு நேசத்துடன் நாடும்போது நமது மன அழுக்குகள் அனைத்தும் மறைந்து போகும். இறைவனின் பேரன்பு நமது மனதில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் அகற்றி, அதைத் தூய்மைப்படுத்தும்.
இவ்வாறு மன அழுக்குகள் நீங்கப் பெற்ற வரே உண்மையான சற்குரு. இத்தகைய குரு வால் மட்டுமே தன்னை நாடி வருபவர்களின் மன அழுக்குகளையும் நீக்க முடியும்.
பந்த பாசங்களிலிருந்து விடுபடாமல், மன அழுக்குகளோடு இருக்கும் ஒருவன் உண்மை யான குருவாக இருக்க முடியாது. இவர்களையே திருமூலர் வேறு பாடல்களில் அசற்குரு (சற்குரு என்பதன் எதிர்ப்பதம்) என்கிறார்.
அறிவற்று...
பூசற்கு இரங்குவோர் போதக்குரு அன்றே'
இவ்வாறு பக்குவமடையாமல், இறைவ னோடு அன்பால் இணைந்த நிலையில் இல்லாத அசற்குரு என்ன செய்வானாம்? அறியாமையால் (அறிவற்று) பிறருடன் வீண் விவாதங்களிலும் சண்டைகளிலும் இறங்கு வார்களாம். (பூசற்கு இரங்குவோர்).
இத்தகையவர்கள் நல்ல குருக்கள் அல்ல (போதக் குரு அன்றே) என்பதே இந்தப் பாடலின் வழியே திருமந்திரம் கூறும் செய்தியாகும்.
இந்த மூன்று பாடல்களையும் இணைத் துப் பாருங்கள். ஒரு நல்ல குரு என்பவன்-
* கற்பனைகளால் எழுகின்ற உள்ளக் கிளர்ச்சிகளை வென்றவனாக இருக்க வேண்டும்.
* காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் ஆகியவற்றை வென்றவ னாக இருக்க வேண்டும்.
* பந்த பாசங்கள் எனும் தளைகளிலிருந்து விடுபட்டு, இறைவனோடு அன்பால் ஒன்றிய நிலையிலுள்ளவனாக இருத்தல் வேண்டும்.
* மன அழுக்குகள் அகன்றவனாகவும், வீண் விவாதங்களிலும் சச்சரவுகளிலும் ஈடுபடாதவனாகவும் இருப்பது அவசியம்.
இத்தகைய குணங்கள் கொண்டவரே "சற்குரு'. இவை இல்லாதவர்கள் அறிவால் சிறந்தவர்களாக இருந்தாலும், மந்திர தந்திரங் களில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், விவாதங்கள் செய்து பிறரை வெற்றி கொள்ளும் திறனுடைய வராக இருந்தாலும் அவர் சற்குரு அல்ல- அசற்குருவே!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment