Sunday, 9 July 2017

ஜாதகப்படி என்ன படிக்கலாம்?

ஜாதகத்தில் கல்வி ஸ்தானங்கள் என்று பார்த்தால் முதலில் 


வித்தியாகாரகன் புதன் மிக்க பலத்துடன் இருப்பது அவசியம். இந்த புதன் அருள் இருந்தால்தான் புத்திக்கூர்மை, சமயோசித புக்தி, நினைவாற்றல், தர்க்கவாதம், வாக்குவன்மை, கணிதத்தில் நிபுணத்துவம், ஜோதிட சாஸ்திர புலமை, வானவெளி ஆராய்ச்சி, பத்திரிகைத்துறை, எழுத்தாளர், பேச்சாளர், விரிவுரையாளர், கம்ப்யூட்டர் ஞானம் என எண்ணிலடங்கா வித்தைகளில் நாம் ஜொலிக்க முடியும். இந்த புதன் ராசிக்கட்டம், நவாம்சக் கட்டம் இரண்டிலும் பலத்துடன் இருப்பது அவசியம். புதன் நீசம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பதும் நல்லது. சில ஜாதகங்களில் புதன் நிலை சற்று குறைந்தாலும், மறைந்தாலும் வேறு சில அமைப்பினால் உயர்கல்வி யோகம் வரும்.

இன்னொரு கோணத்தில், ‘மறைந்த புதன் நிறைந்த செல்வம்’ என்று சொல்வார்கள். ஆகையால் எல்லா அம்சங்களையும் சீர்தூக்கி பார்ப்பதே சிறந்தது. புதன் முக்கியம், அதற்கு அடுத்து லக்னம், லக்னாதிபதி பலம் முக்கியம். உயர்நிலைக் கல்விவரை நான்காம் இடம், சிந்தனை, யோகத்தை தரக்கூடிய ஐந்தாம் இடம், மேல்படிப்பு, ஆராய்ச்சித்துறை ஒன்பதாம் இடம், பேச்சு, வாக்கு செயல்திறனைக் குறிக்கும் இரண்டாம் இடம் என பல பிரிவுகள் உள்ளன. சுருக்கமாக 1, 2, 4, 5, 9 ஆகிய வீடுகள், அவற்றின் அதிபதிகள் பலம் பெறுவது முதல்தர கல்வி யோகமாகும். மேலும் சில கிரக சேர்க்கைகள், பார்வைகள் மூலம் சில குறிப்பிட்ட படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற முடியும்.

ஒருவர் ஒரு துறையில் மிக உயர்வான நிலைக்கு வருகிறார் என்றால் ஜாதக பலம், கிரக சகாயம், தசா புக்தி காலம், பூர்வ புண்ணியம், புகழ் அனுபவிக்கும் பாக்கியம் அத்துடன் மிக முக்கியமாக நமக்கு பூர்வ ஜென்ம கர்மா இருக்க வேண்டும். எல்லோரும், எல்லா கல்வி படித்தாலும் அந்த குறிப்பிட்ட கல்வியில், தொழில், வியாபாரத்தில் தனத்தையும், செல்வாக்கு, பிரபலத்தையும் குறிப்பிட்ட சிலரே அடைகிறார்கள். உதாரணத்திற்கு லக்னம், இரண்டாம் இடம், பத்தாம் இடம் தொடர்பு ஏற்பட்ட ஜாதகங்கள் பெரும்பாலும் பேச்சுத் திறமையால் தொழில் செய்யும் துறையில் கால் பதிக்கிறார்கள். இந்தப் பேச்சுத் திறனை மட்டும் மூலதனமாக வைத்து செய்யும் தொழில்கள் நிறைய உண்டு. யார் யாருக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளதோ அந்த படிப்பு சார்ந்த துறையில் வாழ்வாதாரம் அமையும்.

மருத்துவராகத் திகழ்வதற்கு

இன்றைக்கு மருத்துவராக, மருத்துவ சம்பந்தப்பட்ட துறையில் சேர்ந்து படிப்பதற்கு மிகப்பெரிய யோக அமைப்பு வேண்டும். இந்த படிப்பில் அடிப்படை மருத்துவ கல்வி பயில M.B.B.S. படிப்பில் தேர்ச்சி அடைய வேண்டும். இதற்கு பிறகு நமது உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக சிறப்பு படிப்புகள் உள்ளன. D.Pharm, B.Pharm, M.Pharm. ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று இது சம்பந்தமான நுண்ணறிவு படிப்புகள் நிறைய உள்ளன. ஒரு மருத்துவர் ஆக, ஜாதகத்தில் மிக முக்கிய அம்சமாக ராகு/கேது ஆகிய இரு சாயா கிரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. கேதுவை மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ராகு மறைந்து இருக்கின்ற பொருள், உள் விஷயங்கள் மற்றும் விஷத்தை குறிக்கின்ற கிரகம்.

மருந்து, மாத்திரைகள், விஷம் சம்பந்தப்பட்டவைதான். ஒரு ரசாயனம் மருந்து மற்றொரு ரசாயனத்துடன் சேரும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு மருந்தும் விஷத்தமையுடையதுதான். அதனால்தான் அந்த மருந்து அளவு மீறிப்போகும்போது வேறு விதமான உப, துணை நோய்களை ஏற்படுத்துகிறது. ஆகையால்தான் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுகேது மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப்பொருள்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ராகுகேதுவுடன் மற்ற கிரகங்கள் 4, 5, 9, 10ம் பாவங்கள். பாவாதிபதிகள் சம்பந்தம் பெறும்போது மருத்துவத்துறையில் நுழையும் யோகம் உண்டாகிறது. பல கிரகங்கள் தொடர்பு கொள்ளும்போதுதான் மருத்துவ அமைப்பு ஏற்படுகிறது.

சந்திரன் பலமாக இருந்தால் மனநல மருத்துவர்களாக வருவார்கள். சூரியன், சுக்கிரன் இரண்டாம் வீட்டோடு தொடர்பு கொள்ளும்போது கண், பல் மற்றும் ENT மருத்துவராக முடியும். செவ்வாய் பலமாக இருந்தால் தன் கைதேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக முடியும். நரம்பியல் துறைக்கு புதன் அருள் தேவை. கேஸ்ட்ரோ என்ற வயிறு சம்பந்தமான படிப்பிற்கு குரு பலம் தேவை. எலும்பு சம்பந்தமான துறைக்கு சனியின் பலம் தேவை.

இன்ஜினியர் பொறியாளர்

சிவில் இன்ஜினியர் கட்டிடம் கட்டுதல் போன்றவற்றிற்கு செவ்வாய், புதன், சனி ஆகியோர் 9, 10ம் வீட்டோடு தொடர்பு இருக்க வேண்டும். சூரியன், புதன் சேர்க்கை புகழ் தரும். கம்ப்யூட்டரில் தேர்ச்சி அடையலாம். சனி, செவ்வாய் சம்பந்தம் மெக்கானிக்கல் துறை. புதன், செவ்வாய்,
சுக்கிரன் சம்பந்தம் கட்டிடத்துறை, ஆர்க்கிடெக்ட், வரைபட நிபுணர், உள் அலங்கார நிபுணர்.

கலைத்துறை

சினிமா, இயல், இசை, நாடகம், கேமரா, எடிட்டிங், கதை, கவிஞர், டைரக்‌ஷன் போன்றவற்றில் கால் பதிக்க சுக்கிரன் பலம் மிக முக்கியம், இரண்டாம் இடம். புதன் பலமாக இருந்தால் வசனகர்த்தா, எழுத்தாளர். கேதுவின் அருள் இருந்தால் இசைத்துறையில் நுழையலாம். ராகு+புதன் கேமரா, எடிட்டிங் போன்றவை. சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் இருந்தால் வித்யா யோகம். வித்தை, கல்வி, புகழ் கிடைக்கும்.

சட்டப்படிப்பு

லக்னம், ராசி இரண்டும் பலமாக இருப்பது அவசியம். இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி செவ்வாய் இந்த மூன்றும் முக்கிய அம்சமாகும். குரு ஆட்சி, உச்சம், கேந்திர, கோணங்களில் இருப்பது சிறப்பு. புதன், குரு பார்வை, சம்பந்தம். வாதப்பிரதிவாதம், குறுக்கு விசாரணை போன்றவற்றில் நிபுணத்துவம் ஏற்படும். குரு சட்டம் சார்ந்த அறிவு, செவ்வாய் தர்க்கவாதம், புதன் பேச்சு சாமர்த்தியம்.

ஆசிரியர் விரிவுரையாளர்

இரண்டாம் இடம், இரண்டாம் அதிபதி பலம் பெற வேண்டும். புதன் பலமாக இருந்தால் கம்ப்யூட்டர், கணக்கு ஆசிரியர் ஆகலாம். சூரியன், சந்திரன் சேர்க்கை, பார்வை கல்லூரி பேராசிரியர், எழுத்தாளர். புதன், செவ்வாய் சம்பந்தம் உடற்கல்வி ஆசிரியர். மூன்றாம் இடம் சூரியன் பலம், சம்பந்தம் பெற்றால் விஞ்ஞான ஆசிரியர். இசை, சங்கீத கலையில் ஆசிரியராக இருப்பார்.

ஆடிட்டர் கணக்கு

பி.காம்., எம்.காம்., அக்கவுண்டன்சி., C.A. படித்து ஆடிட்டராக, வங்கி பணி செய்ய லக்னாதிபதி பலம், ஐந்தாம் அதிபதி பலம், ஒன்பதாம் அதிபதி பலம். இத்துடன் மிக மிக முக்கியமாக கணக்கன் என்ற புதனின் பலம், ராசி அம்சம் இரண்டு கட்டத்திலும் இருக்க வேண்டும். ஜாதகத்தில் கேந்திர, கோணங்கள் மிக முக்கியமானவை. இந்த இரண்டிற்கும் சூட்சுமமான தொடர்பு உள்ளது. 1, 5, 9 என்ற ஸ்தானங்கள், நாம் வாழ்க்கையில் முன்னேறுவதைக் குறிக்கும். அதிர்ஷ்டம், யோகம், பாக்கியம் எல்லாம் இந்த ஸ்தானங்களில் இருந்துதான் வரும். லக்கினம் அதற்கு ஐந்தாம் இடம் அறிவு, சிந்தனை.

ஒன்பதாம் இடம்தான் உயர்கல்வி, மற்றும் அனுபவிக்கின்ற யோகத்தை தரக்கூடிய பாக்கியஸ்தானமாகும். நான்காம் இடம் கல்வி. இந்த நான்காம் வீட்டிற்கு நேர் எதிர்வீடு பத்தாம் வீடு. இந்த பார்வைத் தொடர்புதான் ஒருவருக்கு கல்வி மூலம் தொழில் அமைவதைக் குறிக்கிறது. ஒன்பதாம் இடம் உயர்கல்வி இந்த இடத்திற்கு இரண்டாம் இடம் பத்தாம் வீடாகும். அதாவது உயர்கல்வி மூலம் வேலை, தொழிலில் பணவருவாயைக் குறிக்கும் இடம். ஐந்தாம் இடம் அறிவு, சிந்தனை, அதிர்ஷ்டம். அதற்கு நேர் எதிர்வீடு லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் இடம். இந்த பதினொன்றாம் இடம் பத்தாம் வீட்டிற்கு இரண்டாம் இடம். அதாவது வேலை, தொழிலில் நமக்கு லாபம், புகழ் ஆகியவற்றைத் தரும் இடம்.

இப்படி ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் நேரடியான, மறைமுகமான தொடர்பு இருப்பதுதான் ஜோதிடக் கலையின் மிக ஆச்சர்யமான விஷயமாகும். ஆகையால்தான் இந்த வீடுகளில் இருக்கின்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கின்றபோது யோக அமைப்புகள் விருத்தியாகின்றன. 1, 4, 5, 9 ஆம் வீடுகள் இதன் அதிபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு, பார்வை பரிவர்த்தனை பெற்றால் அக்கிரகத்தின் இயல்பிற்கேற்ப கல்வியில் சாதனை செய்ய முடியும். ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி வலுவாக ஆட்சி, உச்சம், கேந்திர, கோணங்களில் இருப்பது சிறப்பு. ஐந்தாம் வீட்டில் இருக்கும் கிரகங்களின் இயல்புபடி கல்வியில் சிறப்பு உண்டு. சூரியன், செவ்வாய், கேது போன்ற கிரகங்கள் இருந்தால் மருத்துவத்துறையில் கல்வி அமையும். ஐந்தாம் இடத்தில் செவ்வாய் M.B.A. படிக்க முடியும்.

செவ்வாயுடன், புதன் சேர்ந்து இருந்தால் கம்ப்யூட்டரில் ஞானம் உண்டு. ஐந்தாம் இடத்தில் புதன் பலம் பெற்றால் கணக்கு, ஆடிட்டர், கம்ப்யூட்டர் சயின்ஸ்துறைகளில் உயர்கல்வி அமையும். ஐந்தாம் இடத்தில் பலம் மிக்க குரு வங்கியில் பணிபுரியும் யோகத்தை தருவார். குருபுதன் சம்பந்தம் ஏற்பட்டால் வக்கீல், வரி ஆலோசகராக இருக்க முடியும். மேலும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராக முடியும். ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் வலுவாக அமைந்தால் கலை, இயல், இசை, நாட்டியம், டைரக்‌ஷன், அரங்க அமைப்பு போன்ற கல்வியில் தொடர்பு வரும். ஐந்தாம் இடத்தில் ராகு சுபபலம் பெற்றால் எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்தாளுனர், சவுண்ட் இன்ஜினியர் போன்ற கல்வி அமையும். ஐந்தாம் இடத்தில் சனி, கேது இருக்க வேதாந்த விஷயங்களில் நாட்டம் செல்லும்.

மருந்து, ரசாயனம் சார்ந்த படிப்பு அமையும். இன்னும் இக்காலக் கல்வி அமைப்பின்படி கிரக சேர்க்கை, பார்வை மூலம் பலவிதமான உபதுணை படிப்புகள் ஏராளமாக உள்ளன. அரசு சார்ந்த உத்யோக படிப்புகள், தனியார் தொழில் சார்ந்த படிப்புகள், டெக்னிக்கல் கல்வி என்று நிறைய உள்ளது. எந்த கல்வியாக இருந்தாலும் 1, 2, 4, 5, 9 ஆகிய ஸ்தானங்கள், அதன் அதிபதிகள், புதன், குரு ஆகிய கிரகங்களின் பலம் மிகவும் முக்கியம். இதற்கடுத்தபடியாக கல்வி பயிலும் காலகட்டத்தில் நல்ல தசா புக்திகள் அமைய வேண்டும். ஏனென்றால் ஜாதகம் எத்தனை பலமாக இருந்தாலும் நடைபெறக்கூடிய நேரம், காலம் சாதகமாக இருக்க வேண்டும். இதற்கும்மேல் மிகமிக முக்கியமாக அவரவர் பிராப்த கர்மா என்று ஒன்று இருக்கிறது, அது நம்மை வழிநடத்திச் செல்லும்


"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com

No comments:

Post a comment