Wednesday, 5 July 2017

போகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :

போகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் : 


வெள்ளூர்
>> போகர் சித்தர்க்கு அஷ்டமாசித்திகள் கைகூடிய ஆலயம் என்பது மட்டுமல்லாமல் மன்மதனுக்கு அருளல் - மற்றும் ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி, அதற்கு அதிபதியான தலம் என்ற ஏராளமான தெய்வீகச் சிறப்பை தன்னகத்தே கொண்ட அற்புதமான ஆலயம்தான் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் உடனுறை ஸ்ரீசிவகாமசுந்தரி - ஸ்ரீ ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் ஆகும்..
சிவபோக சக்கரம்:
>> போகர் ஏழாயிரம் என்ற நூலில் திருக்காமேஸ்வரர் சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். பிறகு,அதில் சரியான திதியும்,நட்சத்திரமும்,ஓரையும் கூடிய சுப நேரத்தில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினார்;
அதன்விளைவாக போகர் சித்தர்பிரானுக்கு வெகு விரைவிலேயே அஷ்டமாசித்துக்கள் கைகூடின;இதை அறிந்த பாம்பாட்டி சித்தர்,புலிப்பாணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் இங்கே வருகை தந்து திருக்காமேஸ்வரரை முறைப்படி வழிபாடு செய்து அஷ்டமா சித்துக்களில் சித்தி பெற்றனர்; ஏராளமான தெய்வீக சாதகங்கள் நிகழ்ந்த இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை!

>> வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹாமண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தை தரிசனம் செய்யலாம்; ஆலயத்தின் ஈசான பாகத்தில் சிவலிங்க வடிவில் போகர் சித்தர் அரூபமாக இன்னும் தவம் செய்து வருவதாக ஐதீகம் மேலும்,அகத்தியர் நாடியிலும்,வசிஷ்டர் நாடியிலும்,காகபுஜண்டர் நாடியிலும் இந்த ஆலயத்தின் சிறப்புக்களை விவரித்துள்ளனர்.
தல பெருமை
>> பாற்கடல் கடைந்தபோது வெளிவந்த அமுதம் அசுரர் களுக்கு கிடைக்காமல் இருக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு மட்டும் அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியை பார்த்து, சிவபெருமான் மோகித்தார். இதையறிந்த மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தை விட்டு வெளியேறினாள். மேலும் இதுபற்றி சிவனிடம் கேட்டறிய அவரை அழைத்தாள். ஆனால் சிவபெருமான் வரவில்லை.

>> இதனால் பூலோகத்துக்கு சென்று வெள்ளூரில் ஈசனை நோக்கி தவம் செய்தாள். அப்போதும் சிவன் வரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன்பின் ஈசன், மகாலட்சுமி முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்த மாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமி தேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது.

>> வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெள்ளூர் எனப்பெயர்பெற்றது.வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.
ஐஸ்வர்ய மகாலட்சுமி
>> தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற தலம் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இங்கு வந்து வழிபடுவது சிறப்பு தரும். வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோவிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி வீற்றிருக்கிறாள்.
இக்கோவில் குறித்த புராணச் செய்தி :
தட்சன் யாகம் :
>> ‘ஈசனை விட, தானே உயர்ந்தவன்’ என்கிற செருக்கு கொண்டு, பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மகளான தாட்சாயினி யின் கணவர் சிவபெருமானுக்கு, இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. வேண்டுமென்றே ஈசனை, தட்சன் தவிர்த்தான். ஆனால் தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது என்பதால், யாகசாலைக்கு சென்ற பராசக்திக்கு அவமானமே மிஞ்சியது.
கணவனின் சொல் கேட்காமல் வந்ததற்கு இது தேவைதான் என்று எண்ணிக்கொண்ட தாட்சாயினி, தந்தையின் யாகம் அழிந்துபோக சாபம் கொடுத்து விட்டு வந்தார். ஆனாலும், தனது சொல் கேட்காமல் சென்ற காரணத்தால், ஈசனின் கோபத்திற்கு ஆளானார். தான் பெரும் தவறு செய்துவிட்டதை உணர்ந்த தாட்சாயினி, பூலோகத்தில் மீண்டும் பிறப்பெடுத்து சிவபெருமானை அடையும் நோக்கில் தவம் இருந்தார்.
திருக்காமேஸ்வரர்
இறைவனும் இறைவியும் பிரிந்த காரணத்தால், உலக சிருஷ்டி தடைபட்டது. சிவனையும், சக்தியையும் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் கூடி விவாதித்தனர். சின்முத்திரையுடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சிவபெருமானை விழிக்கச் செய்து, பார்வதியின் மீது ஈர்ப்புவர மன்மதனை அம்பு எய்தும்படி தேவர்கள் கூறினர். அதற்கு மன்மதன் மறுப்பு தெரிவித்தான். ஈசன் மேல் அம்பை தொடுப்பது எனக்கு நானே அழிவை தேடிக்கொள்வதற்கு சமம் என்று தேவர்களிடம் வாதாடினான். இதனால் தேவலோகமே ஒன்று திரண்டு மன்மதனுக்கு சாபமிட முயன்றதால், வேறு வழியின்றி ஈசன் மீது காம பாணம் தொடுக்க மன்மதன் ஒப்புக்கொண்டான்.
உலகம் இவ்வாறுதான் இயங்க வேண்டும் என்று அனுமானித்த ஈசனால், நடக்கப்போவதை கணிக்க முடியாதா என்ன? பல மைல் தூரத்தில் இருந்து காம பாணம் எய்திய, மன்மதனை தனது நெற்றிக் கண்ணை லேசாக திறந்து பார்த்தார் ஈசன். அதன் வெப்பம் தாங்காமல் மன்மதன் சாம்பலாகி போனான். அப்போது ஈசனுக்கு தன்னை நோக்கி தவம் செய்யும் பார்வதி தேவியின் எண்ணம் வந்து அவருடன் கூடி திருக்காமேஸ்வரராகவும், அன்னை பார்வதி தேவி சிவகாம சுந்தரியாகவும் காட்சியளித்தனர்.
மன்மதனுக்கு அருளல்
இந்த நிகழ்வை சித்திரிக்கும் புடைப்புச் சிற்பம் கோவிலில் காணப்படுகிறது. சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன் மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவி ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திருப்பி தர வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே நேரம் மன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு அற்றுப்போய், உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார் சிவபெருமான். அதோடு, ‘மன்மத மதன களிப்பு மருந்து’ எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார். இந்த மருந்து, சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.
ஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிரகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னிதிகள் அமைந்துள்ளன. தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.
அமைவிடம் :
திருச்சிராப்பள்ளி மாவட்டம்,முசிறி வட்டம், திருச்சியில் இருந்து குணசீலம் செல்லும் சாலையில் மேற்கே 32 கி.மீ.தொலைவிலும், முசிறியிலிருந்து கிழக்கே 6 கி.மீ.தொலைவிலும் அமைந்திருக்கும் கிராமம் வெள்ளூர் ஆகும்.இந்த ஆலயத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகா உடனுறை திருக்காமேஸ்வரர், ஸ்ரீஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் அமைந்திருக்கிறது.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment