Thursday 13 July 2017

சிவனே அனைத்திற்கும் மூலாதாரம்.!!!

சிவனே அனைத்திற்கும் மூலாதாரம்.!!!


இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. ஒன்று அவன்தானே என்கிறது திருமந்திரம்.இதனை மாணிக்கவாசகர்
″முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே″ - திருவெம்பாவை
என்றார். இவை சைவ மரபின் இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டை வலியுறுத்துவன.
இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி என்றால் தலைவன். எனவே ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவன். அவனைச் சிவம் எனப் போற்றுவது சைவ மரபு.
இறைவன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து(உள்பொருள்) ஆகவும் சித்து(அறிவுடையபொருள்) ஆகவும், ஆனந்தம்(இன்பமயமானபொருள்) ஆகவும் விளங்குகின்றான். ஆதலால், இறைவன் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.
இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்றும் மூன்று திருமேனிகளை எடுத்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவான்.
″கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை ″ - திருக்குறள்
தன்வயத்தனால்
தூய உடம்பினனாதல்
இயற்கை உணர்வினனாதல்
முற்றும் உணர்தல்
இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்
பேரருள் உடைமை
முடிவில் ஆற்றலுடைமை
வரம்பில் இன்பமுடைமை
ஆகிய எண்குணங்களையும் உடையவன்.
இறைவன் ஒருவனே அவனைப் பல்வேறு வடிவங்களில் வழிபடுகின்றோம். ஏனெனில் அவ்வடிவங்களில் இறைவன் எமக்கு அருள்பாலிக்கின்றான். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், விநாயகன், முருகன், இலக்குமி, துர்க்கை, சரஸ்வதி போன்றவை அனைத்தும் அத்தகைய வடிவங்களே.
″யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி யாங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர் ″
எனச் சிவஞானசித்தியார் கூறுவது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்துகிறது
இறைவன் உருவமற்றவன். அவனை மனத்தில் நினைத்தற்காகவும், மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவம் தாங்குவதால் உருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம்.
பல்வேறு மூர்த்திகளுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அனைத்தையும் சிவப்பரம்பொருளாகவே காணும் சிவநெறி எம்மிடையே ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இது எங்கள் சைவ மரபின் தனித்துவமாகும்.
″ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு
ஆயிரம் திருநாமம் பாடி நாம்தௌ;ளேனம் கொட்டாமோ″ - திருவாசகம்
″மெய்ப்பொருள் ஒன்றே. அறிஞர்கள் அதனைப் பல பெயர்களால் அழைக்கின்றார்கள். ″ என்னும் வேதவாக்கு இறைவன் ஒருவனே என்னும் கோட்பாட்டை மேலும் வலியுறுத்துவதாக அமைகின்றது.
அன்பே சிவம்
″அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே″ – திருமூலர் திருமந்திரம்
″அன்பே சிவம் ″ என்றார் திருமூலர். அன்பு வேறு சிவம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. அன்புதான் சிவம் ஆகவும் சிவம் தான் அன்பு ஆகவும் விளங்குகின்ற உண்மையை இத்திருமந்திரப் பாடல் உணர்த்துகிறது.
அன்புதான் சிவம் அதனால் அன்பினை உள்ளத்தில் இருத்திää அதனை எப்பொழுதும் நினைந்து செயற்படுதல் நம் கடமையாகும். அன்பையே மலராகவும், பத்திரங்களாகவும், நீராகவும், மந்திரங்களாகவும் கொண்டு அர்ச்சிக்கலாம். படையல் செய்யலாம். பிரசாதமாக ஆகத் தமர்லு பிறர் என்னும் வேறுபாடு இன்றிச் சமமாக எல்லோருக்கும் வழங்கலாம். அதனை எல்லோருக்கும் வழங்குவதில் ஏற்படும் ஆனந்தம் எல்லையற்றது.
சிவத்தியானமாக, சிவ வழிபாடாகக் கருதிää தினந்தோறும் பிற உயிர்களுக்கு அன்பு செய்து வரவேண்டும். அப்போதுதான் அது மாபெரும் சக்தியாக அமையும். அன்பினால் ஆகாதது ஒன்றும் இல்லை. அன்பு வாழ்வுதான் சைவசமய வாழ்வு. அன்புநெறியே சைவநெறி.
இறைவன் எவ்வழிää அவ்வழியிலேயே அடியாரும் ஒழுக வேண்டும். அதுதான் உண்மைச் சைவர்கள் ஒழுகும் வழி. இறைவன் அன்பே வடிவானவன். எனவேää சைவர்களும் அவ்வழி நின்று வாழவேண்டியது முறையாகும்.
சைவ சமயத்தின் நோக்கம் உயிர்கள் கடவுளை அடைதலாகும். அதற்குச் சைவர்கள் கடவுள் மீது பக்தி செலுத்துதல் வேண்டும். கடவுளைக் காலையிலும் மாலையிலும் மற்ற வேளைகளிலும் பூசித்தல், தியானித்தல் திருக்கோயிலில் வழிபாடு செய்தல், அவன் புகழ் பாடுதல், பரவுதல் முதலியன மூலம் பக்தி செலுத்தலாம். அதேவேளை, இந்த உலகிலுள்ள அனைத்திலும் கடவுள் நிறைந்திருப்பதால், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல் அவசியமாகின்றது. உயிர்களுக்குச் செய்யும் அன்பு இறைவனுக்குச் செய்யும் அன்பாகும். உயிர்களுக்குச் செய்யும் தீமை இறைவனுக்குச் செய்யும் தீமையாகும்.
பிற உயிர்களுக்கு அன்புசெய்தல், பேணுதல் என்பன அன்பே வடிவான கடவுளுக்குப் பிரியமான தொண்டாக அமையும். அதனூடாகச் சமய நோக்கமான கடவுளைப் பற்றுதல் என்பதை இலகுவில் அடைய முடியும். எல்லா நன்மைகளும் அன்பிலிருந்துதான் ஊற்றெடுக்கின்றன. அன்பே சிவம். எல்லாத் தீமைகளும் அன்பின்மையிலிருந்தே உருவாகின்றன. அன்பின்மை சிவநிந்தை ஆகும். அது சுயநலத்தை வளர்க்கின்றது. சிவத்தை மறுப்பவர்கள் அன்பை மறுக்கின்றார்கள். அன்பை மறுப்பவர்கள் வாழ மறுக்கிறார்கள் என்னும் உண்மையைச் சைவநெறி காட்டுகிறது.
″எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே″ – தாயுமானவர்
எனத் தாயுமானவர் இறைவனை வேண்டுகிறார். ″அன்பின் வழியது உயிர் நிலை″ என்றார் திருவள்ளுவர். எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவதையும் இரக்கம் காட்டுவதையும் சைவர்கள் வாழ்க்கைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிந்தனை, பேச்சு, செயல் என்பவற்றினால் அன்பு வெளிப்படும்போதுதான் சிவ தரிசனம் செய்வதாக அமைகின்றது. அப்போது தான் சர்வம் சிவமயம் என்பது உணரப்படுகிறது.
″யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி″ என்து திருமூலர் திருமந்திரம். கடவுள் எம்மீது கருணை கூர்ந்து ஈய்ந்த பொருளை நாம் மட்டும் அனுபவிக்கக்கூடாது. பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதலே முறையாகும்.
பசித்து வந்தவர்களுக்கும்ää உதவி வேண்டியவர்களுக்கும் அவர்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும். நலிந்தோர்க்கு உதவுதல், அநாதைகள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர், நோயாளர், வயோதிபர், குழந்தைகள் என்போர்க்கு உதவுவது புண்ணியங்களாகும். தன்னல மறுப்புää பிறர்துயர் துடைத்தல் என்பவற்றைச் சைவ நெறி மிக உயர்வாகப் போற்றுகிறது. அவை அன்பின் செயற்பாடுகளாக விளங்குகின்றன. அன்பே சொரூபமாய் விளங்குவன யாவும் வணக்கத்திற்குரியவை. அந்த வகையில் கடவுள், தாய், தந்தை, பெரியோர், குரு ஆகியோர் வணக்கத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர். அன்பே சிவம், சிவபெருமானைச் சகல சீவ தயாபரன் என்றும், கருணாமூர்த்தி என்றும், அன்பினில் விளைந்த ஆரமுது என்றும் நூல்கள் சிறப்பிக்கின்றன. அன்பு நெறியை மேற்கொள்வதன்மூலம் மனிதர், சிறந்த நிலையை எய்துவதுடன், மேலும் வளர்ச்சிபெற்று அருள், கருணை கைவரப்பெறும் போது தெய்வீக வாழ்வு அடையப்பெறுகின்றனர்.
இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான். அவ்வாறு எங்கும் வியாபகமாய் உள்ள இறைவனை உணர்வதற்கு உருவம் துணை செய்கிறது. உருவம் உள்ளத்தில் பதிவது போல அருவம் பதிவதில்லை. ஆதலால் இறைவனின் திருவுருவம் அழகிய விக்கிரகங்களாக அமைக்கப்பட்டு திருக்கோயிலில் வைத்து வழிபடப்படுகிறது. பிள்ளையார், சிவலிங்கம், அம்பாள், முருகன், விஷ்ணு, துர்க்கை, வைரவர், சூரியன், ஐயப்பன் முதலிய பலவித வடிவங்களிலே வழிபாடுகள் நடைபெறினும் எல்லா உருவங்களிலும் சிவனே உறைகிறான் என்பதே சைவத்தின் நிலைப்பாடு.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment