Friday 30 June 2017

காசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி?

காசி- ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி?


இந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒருதடவையாவது காசி யாத்திரை செல்வது தான். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி? என்பதை காண்போம்:
காசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும். முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் சூட தீபாராதனை காட்டி கும்பிட வேண்டும். பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள வேண்டும்.
பிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும். அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் (1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம், 2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன், 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை 4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி, 5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு, 6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல் 7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். 8. நள தீர்த்தம், 9. நீல தீர்த்தம்,10.கவய தீர்த்தம்,11.கவாட்ச தீர்த்தம்,12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், 14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயா தீர்த்தம், 17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல் 18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி 20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல் 21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல் 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும். காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும். பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.
அதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும. இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment