Monday 5 June 2017

வடுகச் சித்தர்

வடுகச் சித்தர்


கொல்லிமலையில் ஒரு பங்களாவில், கோடை காலத்தில் ஓய்வெடுக்க வந்திருந்தார் அந்த வெள்ளைக்கார அதிகாரி.
உயர்ந்த பதவி கிடைத்ததால், இந்தியாவுக்கு வந்தவருக்கு
கொல்லி மலை மிகவும் பிடித்துப் போயிருந்தது.

எனவே கொல்லி மலையில்
ஒரு பங்களா கட்டிக் கொண்டார்.

விடுமுறையில் அவ்வப்போது வந்து தங்கிச் செல்ல ஆரம்பித்தார்.
பொதுவாக இரக்க குணம், நாலு பேருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நன்நோக்கும் அவருக்கு உண்டு.
இந்திய மக்களை மிகக் கேவலமாக நினைத்துக் கொண்டிருந்த அவரின் மேலதிகாரிகள் சிலர், அவர் இந்திய மக்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஆதரவாக கொண்டுவரும் திட்டங்களை எதிர்த்தனர்.
தெய்வீக நம்பிக்கை கொண்ட அவருக்கு தனது அதிகாரிகள் செய்கின்ற மாற்றாந்தாய் போக்கு பிடிக்கவில்லை.
எனவே, மன நிம்மதியை இழந்து கொண்டிருந்தார்.
ஒரு சமயம் அவரின் மேலதிகாரி, ஒரு இந்திய மகனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
?
உண்மையில் அந்த நபர் குற்றவாளி அல்ல என்பது அவருக்கு தெரியும்.

அந்த நபர் சிறு சிறு குற்றங்களை செய்திருந்தது உண்மை. அதற்காக இப்படியொரு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டாம் என்று அவர் தனது குறிப்பை எழுதி மேலிடத்திற்கு அனுப்பினார்.
அது, மேலிடத்து அதிகாரிக்கு கோபத்தை உண்டு பண்ணியது.
"நீ வெள்ளைகாரனாக பிறந்திருந்தும், நன்றி இல்லை, உன்னை பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்குகிறேன்" என்று உத்தரவு போட்டார்.
இதைக் கண்டு அவர் கலங்கவில்லை. அடுத்த நிமிடம் கொல்லிமலைக்கு தன குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு அவருக்கு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
கொல்லிமலையின் அழகை கண்டு இயற்கையின் செழிப்பில் தன்னை மறந்து நின்று கொண்டிருக்கும் பொழுது
ஒரு சித்தர் அவர் முன் தோன்றினார்.

அவர் வடுகச் சித்தர்.
அவருக்கு ஓரளவுக்கு சித்தர்களைப் பற்றித் தெரியும்,
ஆனால், இதுவரை அவர்களை நேரில் கண்டதில்லை.
தன் முன் வந்திருப்பது வடுகச் சித்தர் என்பதும் அவருக்கு தெரியாது.
இருப்பினும் அவரிடம் பேச்சுக் கொடுத்தார்.
"யார் நீங்கள்?"
"நான் ஒரு வழிப்போக்கன். தனியாக நின்று கொண்டிருக்கிறீர்களே என்ன விஷயம் என்று பார்க்கவே வந்தேன்" என்றார் வடுகச் சித்தர் ஆங்கிலத்தில்.
மிக அற்புதமாக வெள்ளைக்காரர்களுக்கே உரிய உச்சரிப்பு நடையோடு வடுகச் சித்தர், அவரிடம் பேசியது, அவருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
"நீ கவலைப்படாதே! உன்னை சஸ்பெண்ட் செய்த ஆர்டர் இப்போது விலக்கிக்கொள்ளப்பட்டது.
அது மட்டுமல்ல, உனக்கு மிகப் பெரிய பதவிக்கும் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது" என்றார் வடுகச் சித்தர்.

இதை கேட்டதும் ஆச்சரியம் அடைந்த வெள்ளைக்காரர்
"எப்படி உங்களுக்கு நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது தெரியும்?" என்று கேட்டார்.

" நீ இறை பக்தி கொண்டவன்.
முன் ஜென்மத்தில் இதே கொல்லிமலையில், சித்தனான எனக்கு தொண்டு செய்தவன்.

நியாயத்திற்கு பாடுபடும் உனக்கு, இப்படிப்பட்ட சோதனைகள் வரத்தான் செய்யும்.
இப்போது பார், ஆச்சரியமான தகவல் உன்னை தேடி வரும்" என்று சொன்ன வடுகச் சித்தர் அடுத்த நிமிடம் "ஜில்"லென்று காற்றில் பறந்து போனார்.
பத்து நிமிடம் அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
யாரிவர்? இவர் பெயர் என்ன?
தனது கடந்த கால வாழ்க்கையை பற்றி சொன்னதோடு, தான் சஸ்பெண்ட் ஆனது பற்றியெல்லாம் புட்டு புட்டு வைக்கிறாரே.
இவர் தெய்வமா, யட்சினியா அல்லது சித்தரா?
எல்லாமே அருகில் இருந்து பார்த்தது போல் பேசுகிறாரே. இதென்ன ஆச்சரியம் "
என்று தன்னை மறந்து வியந்து கொண்டே இருந்தார்.

அவர் நின்ற இடம் மலை உச்சியில் ஒரு பாறையின் மீது.
காலையில் எதுவும் சப்பிடாததினாலும், சித்தர் தன் முன் திடீரென்று தோன்றி நிறைய விஷயங்களை சொல்லி ஆச்சரியப் பட வைத்ததாலும் அப்படியே மயங்கி விழுந்தார் அவர்.
அவர் பாறையில் இருந்து மயங்கி விழுந்ததால், நிலை தடுமாறி அருகிலுள்ள சிறு பள்ளத்தில் போய் விழுந்தார். சற்று தள்ளி உருண்டிருந்தால், ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்து, ஒன்றும் இல்லாமல் போயிருப்பார்.
அவர் மயங்கி விழுந்த பொழுது, யாரோ ஒருவர் அவரைத் தாங்கி கீழே படுக்க வைத்ததுபோல் ஓர் உணர்வு தோன்றியது.
அவர் கண் விழித்துப் பார்த்த பொழுது, ஒரு மரத்தடியில் புல் வெளியில் படுத்திருப்பது தெரிய வந்தது.
அவருக்கு எதிரில் சற்று முன்பு தோன்றிய அதே வடுகச் சித்தர் கவலையோடு அமர்ந்திருப்பது தெரிந்தது.
"என்ன காரியம் செய்தீர்கள் துரை அவர்களே!'
நல்லவேளை நான் வந்து கைதூக்கி காப்பாற்றவிட்டால், இந்நேரம் அகண்ட பாதாளத்தில் போய் விழுந்திருப்பீர்கள்!" என்றார் வடுகச் சித்தர்.
இறைவனுக்கும், உங்களுக்கு நன்றி! என்றார் அவர்.
என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது. ஏதோ ஒன்று நடக்கிறது. அது நன்மையா, கெடுதலா என்றும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று மெதுவாக எழுந்திருக்க முயன்றார்.
"உங்களால், இப்பொழுது எழுந்திருக்க முடியாது. சிறிது நேரம் இங்கே ஓய்வெடுங்கள். பிறகு மேலே செல்லலாம், என்றவர் அவரை தடவிக் கொடுத்தார்.
வடுகச் சித்தர் தடவிக் கொடுத்ததும், அவருக்கு ஏதோ ஒரு புது ரத்தம் பாய்ந்ததுபோல் தோன்றியது.
நன்றி சொல்ல பிரியப்பட்ட போது சித்தர் மறைந்து போயிருந்தார்.
அடுத்த ஐந்தாவது நிமிடம், அந்த சிறு பள்ளத்திலிருந்து விறுவிறுப்பாக நடந்து மலை உச்சிக்கு ஏறினார்.
இதற்குள், காலையில் மலை உச்சிக்கு சென்ற அவர் இன்னும் வீட்டிற்குத் திரும்பவே இல்லை என்ற கவலையால் அவர் வீட்டார் அவரைத் தேடி அங்கு வந்தனர்.
சஸ்பெண்ட் ஆனதால் மனம் நொந்து போய் அவர் ஒருவேளை தற்கொலைக்கு முயன்றிருப்பாரோ என்ற சந்தேகம் கூட அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்டிருந்தது.
எப்படியோ, அவரை கண்டுபிடித்து, அவரது உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அவர்களிடம், நடந்ததை எல்லாம் சொன்னார்.
பாதி பேர் நம்பவில்லை. ஏதோ கற்பனை செய்து இப்படி எல்லாம் பேசுகிறார் என்றார்கள்.
இன்னும் சிலரோ, சஸ்பெண்ட் ஆனதால், புத்தி பேதலித்துவிட்டது என்று பைத்தியக்கார பட்டம் சூட்டினார்கள்.
உள்ளூர் நபர் ஒருவர், காலை வேளையில் அங்கு பேய்கள் நடமாடும். அதுதான் அவரை இவ்வளவு பாடு படுத்தியிருக்கிறது, என்றார்.
ஆனால் அவரோ, இதை லட்சியம் செய்யவில்லை.
அவரது கைகள் வடுக சித்தரை நோக்கி கும்பிட்டுக் கொண்டிருந்தது.
அப்போது வீட்டின் முன் ஒரு அரசாங்க வாகனம் ஒன்று வந்தது.
ஒர் உயர்ந்த அதிகாரி காரிலிருந்து சந்தோஷமாக இறங்கினார்.
இவ்வளவு பெரிய அதிகாரி, தன்னை தேடி தன் வீட்டிற்கு வருவார் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஆச்சரியப்பட்டு மனம்
திறந்து அவரை வரவேற்றார்.

"வாழ்த்துக்கள் நண்பரே,
உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. ஒரு நல்ல உயிரை தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்றி இருக்கிறீர்கள்.

தங்களது மேலதிகாரி, அவசரப் பட்டு தவறு செய்துவிட்டான். எனவே, அவனை லண்டனுக்கே திரும்பி போகச் சொல்லிவிட்டோம்.
உங்களுக்கு உயர் பதவியை அளிக்க முன் வந்திருக்கிறோம்.
சஸ்பெண்ட் உத்தரவையும் ரத்து செய்துவிட்டோம்.
இன்றைக்கே நீங்கள் அந்தப் பதவி பொறுப்பை ஏற்க வேண்டும். நடந்துவிட்ட தவறுக்கு வருந்துகிறோம்", என்று அவரின் கையை குலுக்கி பாராட்டு தெரிவித்து, உயர் பதவிக்கான உத்தரவு, சஸ்பெண்ட் விலக்கப்பட்ட உத்தரவையும் கொடுத்தார்.

அவருக்கு ஏற்பட்ட சந்தோசம் கொஞ்ச நஞ்சமல்ல.
இதே செய்தியை முன்கூட்டியே வடுகச் சித்தரே நேரில் சொல்லிவிட்டாரே என்ற புளங்காகிதம் ஏற்பட்டது.
முன்ஜென்மத்தில் கொல்லிமலையில் வடுகச் சித்தருக்கு தொண்டு செய்து வந்ததால் இப்போது அந்த வடுகச் சித்தரே நேரில் வந்து சில அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறார்.
வடுகச் சித்தரின் மகத்துவம் உணர்ந்த அவர் தன் வாழ்நாள் முழுவதையும் வடுகச் சித்தருக்காக அர்ப்பணிக்க முடிவெடுத்தார்.
வடுகச்சித்தரின் உருவத்தை கற்சிலையாக வடித்து, கொல்லிமலையில் உள்ள தன் பங்களா வீட்டில் வைத்து பூசைகள் நடத்தினார்.
வடுகச் சித்தரும் அடிக்கடி அவருக்கு காட்சி கொடுத்து, அருள் உரை வழங்கி, நூற்றி நாற்பது வருடம் வாழ வைக்க காய கல்பம் கொடுத்தார்.
"வடுகச்சித்தர் அடிப்பொடி "என்று தன்பெயரை மாற்றிக் கொண்டு நிறைய தானம், தருமம், மருத்துவ உதவி செய்து, ஒரு வித்தியாசமான மனிதராக சித்தரின் பாதங்களுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டார் அந்த வெள்ளைக்காரர் .
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment