Saturday 15 April 2017

வசீகரம்... சொந்த வீடு... செல்வம் சேர... சங்கடஹர சதுர்த்திக்கான 21 அர்ச்சனைகள்..!

வசீகரம்... சொந்த வீடு... செல்வம் சேர... சங்கடஹர சதுர்த்திக்கான 21 அர்ச்சனைகள்..!



மும்மூர்த்திகளுக்கும் தேவர்களுக்கும் முதலானவர் விநாயகர். விநாயகரின் தொந்தி பிரம்மனின் அம்சமாகவும், முகம் திருமாலின் அம்சமாகவும், மூன்று கண்கள் சிவனின் அம்சமாகவும் திகழ்கின்றது. எனவே விநாயகரை வழிபடாமல் எந்தத் தெய்வத்தையும் வழிபட இயலாது.
சங்கடஹர சதுர்த்தி :
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடுகள் நடப்பது போல விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெறுகின்றது. மாதத்தில் தோன்றும் பௌர்ணமியை அடுத்து வரும் இந்தச் சதுர்த்தி தினம் மிகவும் விசேஷமானதாகும். சங்கடம் என்றால் "கஷ்டம்" என்று பொருள், ஹர என்றால் "அழிப்பது"என்று பொருள். கஷ்டங்களை அழித்து இன்பத்தைத் தருவது தான் சங்கடஹர சதுர்த்தி.
காலம் காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வரும் இந்த விரதம் மிகப்பழைமையானதும் சக்திவாய்ந்ததுமாகும்.
திருமணத் தடை நீங்க , தோஷங்கள் தீர, குழந்தை செல்வம் கிடைக்க, வேலை வாய்ப்பு கிடைக்க, நோய்கள் குணமாக, இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். குறிப்பாக கடன் தொல்லை தீரவும், பித்ருதோஷங்கள் நீங்கவும் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மற்ற விரதங்களைப் போல அல்லாமல் சதுர்த்தி விரதம் மட்டும் மாலை வேளையில் சந்திரன் உதயமாகும் தருணத்தில் திதி வேளையில் தூய்மையான மனதோடு பூஜை செய்ய வேண்டும். நாள் முழுவதும் பால், பழம் , பழச்சாறு போன்ற திரவ உணவு வகைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
வீட்டிலுள்ள விநாயகருக்குப் பிடித்தமான புன்னை, மந்தாரை, செவ்வரளி, வில்வம், மாதுளம்பூ, ஜாதிமல்லி, மகிழம்பூ, பாதிரி, சம்பங்கி, மாம்பூ, அரளி, பவளமல்லி, குருந்தை,கண்டங்கத்திரிப்பூ, தும்பை, ஊமத்தை, முல்லை, மாதுளம்பூ, கொன்றை, செங்கழுநீர், தாழம்பூ போன்ற இருபத்தோரு மலர்களில் எவையேனும் ஒன்றைச் சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும்.
விநாயகருக்கு மிகவும் பிடித்த வில்வம் பழத்தையும் அவருக்குப் படைக்கலாம். வில்வமரத்தை வீட்டில் வளர்ப்பதினால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பார்கள். இதுமட்டுமல்ல ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும், புண்ணிய நீர் ஆடிய பலனும் கிடைக்கும் என்பார்கள்.
அருகிலிருக்கும் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று ஆர்ச்சனை செய்து , கோவிலை மூன்று முறை வலம் வந்து வழிபடலாம்.
கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது நமது வேண்டுதலுக்கு துகுந்தாற் போல கீழேயுள்ள 21 இலைகளில் எவையேனும் ஒன்றைக் கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.
சங்கடஹர சதுர்த்தி
1. நியாயம் கிடைக்க - மாவிலை
2. வாழ்வில் இன்பம் கிடைக்க - வில்வம் இலை
3. இல்வாழ்க்கை இனிக்க - கரிசலாங்கண்ணி
4. கல்வியில் வெற்றி பெற - இலந்தை
5. பொறாமை நீங்கி பெருந்தன்மை பெருக - ஊமத்தை
6. வசீகரம் - நாயுருவி
7. தைரியம் , வீரம் விவேகம் பெற - கண்டங்கத்தரி
8. வாழ்கையில் வெற்றி பெற - அரளி
9. உயர்பதவி, நன்மதிப்பு கிடைக்க - அரசு
10. திருமணத்தடை விலகி நல்ல வரன் அமைய - தவனம்
11. இல்லற சுகம் பெற - மரிக்கொழுந்து
12. செல்வச் செழிப்பு பெற - நெல்லி
13. குழந்தை வரம் பெற - மருதம்
14. கடன் தொல்லையிலிருந்து விடுதலையடைய - அகத்திக்கீரை
15. சொந்த வீடு, பூமி பாக்கியம் - ஜாதி மல்லி
16. ஞானம் , அறிவு , தன்னம்பிக்கை பெறுவதற்கு - துளசி
17. பேரும் புகழும் கிடைக்க - மாதுளை
18. கருவிலுள்ள சிசுவிற்கு பாதுகாப்பு மற்றும் வம்ச விருத்தியடைய - எருக்கு
19. சகல வித பாக்கியங்களும் பெற - அருகம்புல்
20. அனைத்துச் சக்தியையும் தாங்கும் இதயம் பெற - தேவதாரு
21. இவ்வுலகில் வாழும் காலத்திலும் அதற்குப் பிறகும் நன்மைகள் கிடைக்க - வன்னி
வன்னி மரத்தை வலம் வர வேண்டும் :
சங்கடஹர சதுர்த்தி
விநாயகருக்கு மிகவும் உகந்தது வன்னி மரம் அன்றைய தினத்தில் இம்மரத்தை வலம் வருவது கூடுதல் பலனை அளிக்கும். ஆன்மிக ரீதியாக வன்னி மரத்தைத் தொட்டாலும் , வலம் வந்தாலும் பாவ வினைகள் அகலும் என்பார்கள். ஆனால் இந்த ஆன்மீகத்தில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது. வன்னி மரம் என்பது ஒரு வகையான மூலிகை மரமாகும். கடுமையான வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் உடையதால் அதன் காற்றோ இலையோ நம் மேல் பட்டால் சரும நோய்களும், தீராத நோய்களும் தீரும் .
உங்கள் கஷ்டங்களை விநாயகரிடம் சமர்பித்துவிட்டு , முழுமனதோடு வேண்டிக்கொள்ள அனைத்து வினைகளையும் களைப்பான் விநாயகன்.

No comments:

Post a Comment