Thursday 13 April 2017

நன்மை செய்யும் காளி அம்மன்.....!!

காளி அம்மன்.....!!
"காளி!’ இந்தப் பெயரைச் சொன்ன உடனே, பயங்கரமான உருவமும், பயமும் மனதில் தோன்றுவது உண்டு. 


"அவளா… அவ ஒரு காளி ஆத்தா!’ என்று சிலரை பற்றிக் கூறுவதுண்டு.
ஏதோ ஒரு பொல்லாத்தனத்தைப் பார்த்து இப்படிச் சொல்வர்.
காளி படம் வீட்டில் வைக்கலாமா, பூஜை செய்யலாமா என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விடுவர்.
ஆனால், "காளி’ என்பவள், அனுக்கிரக தெய்வம். காளியை உபாசிக்க ஆரம்பித்த பின், நாளடைவில் பயம் நீங்கி, அவளிடம் ஈடுபாடு ஏற்படும்.
காளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம்; துஷ்டர்களை நிக்ரகம் செய்வதற்காக எடுத்த அவதாரம்.
இவளைப் பார்த்து, பயப்பட வேண்டியதில்லை பக்தர்கள்.
"அறியக் கூடியவள் நான், அறிய முடியாதவள் நான், ஞானமும், அஞ்ஞானமும் நான், பிறப்பும், பிறப்பில்லாததும் நான், கீழும், மேலும் நான், சகலமும் நான்…’ என்கிறாள் காளி.
உண்மையை மறைத்துக் காட்டுகிறாள். உண்மையைப் புரிந்து கொண்டால் ஸ்வரூபத்தைக் காணலாம்.
காளியின் இருப்பிடம் மயானம்.
பேதங்கள் ஒழிந்து, அகங்காரம் அழிந்து, பஞ்ச பூதங்களோடு மனித சரீரம் லயமாகி விடுகிற நிச்சலமான இடம்.
"ஆடிப் பாடி மகிழ்ந்த போது, என்னை நீ மறந்திருந்தாலும், நான் உன்னை மறக்காமல், உனக்காக உன்னை எதிர்பார்த்து இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன்.
உன் கடைசி காலத்திலாவது, என் அருள் உனக்கு கிடைக்கும். நான் உலகத்தின் உயிர் தத்துவம். உலகினின்று நான் பிரிந்தால், உலகம் சவமாகிக் கிடக்கும்.
"இதை விளக்கத் தான், நான், சிவ ரூபமான சவத்தின் மேல் காலடி வைத்திருக்கும் தோற்றம். ஞானம், விஞ்ஞானம் எல்லாமே என் விரிந்த கூந்தலில் அடக்கம். நாக்கை அடக்கினால் யாவும் வசப்படும்.
அதனால், நாக்கைத் தொங்கவிட்டு இதை விளக்குகிறேன். சரீரத்தில் தலையே பிரதானம். அதுவே, ஞான சக்தி நிலையம். இந்த நிலையத்தில் உள்ளது எதுவோ அதுவே பிரும்மாண்டத்தில் உள்ளது…’ என்கிறார்.
"பிரமாண்டத்தைப் படைத்து, காத்து, அழிப்பவள் அவளே. சங்கல்ப மாத்திரத்தில் விளையாட்டாகவே செய்யக் கூடியவள்.
இந்த பிரும்மாண்டங்களையே முண்ட மாலையாக தரித்திருக்கிறாள். ஒரு கரத்தில் கொடுவாள். அஞ்ஞானத்தை வெட்டித் தள்ளும் சாதனம்.
கீழே தொங்கும் தலை, விஷ வாசனைகளிலிருந்து அம்பிகையால் விடுவிக்கப்பட்ட ஜீவனின் இறுதித் தோற்றம்.
வர, அபய முத்திரை, பக்தர்கள் வேண்டுவதை அளித்து அபயம் தருவது. ஆடை அணியாதவள் காளி. ஜீவன் அஞ்ஞானத்தால் மூடப் பட்டுள்ளது.
அஞ்ஞானம் விலகினால், ஜீவப்ரகாசம் புலனாகும் என்பதை, ஆடை இல்லாமலிருப்பது விளக்குகிறது.
பராசக்தி சிரிக்கிறாள்; அட்டகாசமாகச் சிரிக்கிறாள். "வாழ்வில் சிரித்திரு, துன்பம் கண்டு நடுங்காதே…’ என்கிறாள்.
வாழ்வின் உல்லாசமே சிரிப்பாக மலர்கிறது. இப்படிப்பட்ட அம்பிகையை வழிபட்டு, அவள் அருளாலே சம்சாரமாகிய கடலை கடக்கலாம் என்கின்றனர்.
காளியை வழிபட, பலவித பூஜா முறைகள் சொல்லப்பட்டுள்ளன. இது தவிர, காளியின் அருள் பெற, அவளது நாமாவளிகளைச் சொன்னாலே போதும்.
ஸ்தோத்ர, அர்ச்சனைகளால் அவள் பிரீதியடைகிறாள். காளி கவசம், காளி கீலக ஸ்தோத்ரம் என்று பல ஸ்தோத்ரங்கள் உள்ளன.
முறையாக வழிபட்டால், காளியின் அருள் பெற்று, சகல பாக்கியங்களையும் பெறலாம். "காளி… காளி…’ என்று பயந்து ஒதுங்கிப் போக வேண்டாம்.
நன்மை செய்யத்தான் தெய்வங்கள் உள்ளன; யாரையும் கெடுப்பதற்கல்ல!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment