Monday 6 November 2017

ஆதிசங்கரர் பற்றி....


ஆதிசங்கரர்
இந்து மதத்தில் மட்டும் முன்பு 72 பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவினருக்கும் தாங்கள் விரும்பும் தெய்வமே முதற்கடவுள் என்கிற எண்ணம் இருந்தது. இதனால் இந்தப் பிரிவுகளிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்சனைகளைக் குறைக்க முயன்றதுடன் 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பல பிரிவுகளை இணைத்தும், சில பிரிவுகளைத் தவிர்த்தும் முடிவில், “சைவம்,வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்” என்று வகைப்படுத்தியதுடன், அத்வைதம் எனும் கொள்கையை வலியுறுத்திய ஆன்மிக மகான் ஆதிசங்கரர். இந்த மகானைப் பற்றி அறிந்து கொள்வோமா
கேரள மாநிலத்தின் பூர்ணா நதிக்கரையில் “காலடி” என்ற ஊரில் இறைவழிபாட்டிலும், தான தருமங்கள் செய்வதிலும் புகழ் பெற்று விளங்கிய சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு, பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இத்தம்பதியர்கள் மன வருத்தமடைந்தனர்.
அவர்கள் திருச்சூருக்குச் சென்று “வடுகநாதன்” என்ற பெயரில் அங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானிடம் தங்களுக்குக் குழந்தை வரம் தர வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்தனர். இவ்விரதத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார். அவர்களிடம்“உங்களுக்குத் தீய குணங்களுள்ள பல குழந்தைகள் வேண்டுமா அல்லது நற்குணமும் இறைபக்தியும் கொண்டு, பலருக்கும் வழிகாட்டியாய் விளங்கக் கூடிய ஒரு குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார். இதைக் கேட்ட தம்பதியர்கள் இருவரும் சேர்ந்தவாறு, “எங்களுக்கு நற்குணமுடைய ஒரு குழந்தை போதும்” என்றனர்.
சிவபெருமானும், “உங்கள் விருப்பப்படியே நற்குணமுடைய ஒரு குழந்தை உங்களுக்குப் பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை குறுகிய காலமே உயிர் வாழும். அந்தக் குறுகிய காலத்தில் உலகம் போற்றும் மகானாகவும் இருப்பார்.” என்று சொல்லி மறைந்தார்.


சிவபெருமான் அளித்த வரத்தின்படி 788 ஆம் ஆண்டு வசந்த ருதுவில் வைசாக சுக்லபக்ஷத்தின் ஐந்தாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் அந்தத் தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அத்தம்பதியரும் அந்தக் குழந்தைக்கு சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்றான “எல்லா நலனும் அளிப்பவர்” என்கிற பொருளிலான “சங்கரன்” என்கிற பெயரைச் சூட்டினர்.
சங்கரன் சிறு குழந்தையாக இருந்த போதே மிகச்சிறந்த அறிவுத் திறனுடன் விளங்கினார். சங்கரனுக்கு ஏழு வயதான போது அவர் தந்தை காலமானார். தந்தை காலமான பின்பு அவரது தாய் அவருக்கு உபநயனம் செய்வித்து அக்கால வழக்கப்படி குருகுலத்திற்கு வேதபாடங்கள் கற்றுக் கொள்ள அனுப்பினார். குருகுலத்தில் படித்த போது, மாணவர்கள் தினமும் பிச்சை எடுத்து வந்து அதை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அதன் பின்பு உண்பதுதான் வழக்கம்.
ஒரு முறை சங்கரர் ஏகாதசி விரதம் முடித்து விட்டு, மறுநாள் துவாதசி நாளில் பிச்சைக்குச் சென்றார். அயாசகன் என்னும் ஏழை அந்தணர் வீட்டின் முன்பு நின்று, “எனக்குப் பிச்சை இடுங்கள்” என்று அழைத்தார். வீட்டிலிருந்து எந்தப் பதிலுமில்லை. பிச்சை எடுக்கும் போது மூன்றுமுறை அழைக்க சாஸ்திரம் அனுமதிக்கிறது. இதனால் மீண்டும் இருமுறை “எனக்குப் பிச்சை இடுங்கள்” என்று அழைத்தார்.
பிச்சை கேட்கும் குழந்தைக் குரலைக் கேட்டு, அந்த ஏழை அந்தணனின் மனைவி வாசலுக்கு வந்து பார்த்தார். அங்கு பச்சிளம் பாலகனான சங்கரர் பிச்சைப் பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தார். பிச்சை கேட்கும் பாலகனைப் பார்த்த ஏழையான அவள், தன் கணவர் ஏகாதசி விரதமிருந்து விட்டு துவாதசியன்று விரதம் முடிப்பதற்காக சாப்பிட வைத்திருந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் இட்டாள்.


தனக்காக, கணவனுக்கென வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் நல்ல மனதுடன் பிச்சை அளித்த அந்தப் பெண்மணியின் ஏழமை நிலை கண்டு வருந்திய சங்கரர் திருமகளை வேண்டி, “கனகதாரா ஸ்தோத்திரம்” என்ற துதியை இயற்றிப் பாட ஆரம்பித்தார். அவர் பாடி முடித்ததும் அந்த வீட்டின் கூரையிலிருந்து தங்க நெல்லிக்கனிகள் பல அந்த வீடு முழுவதும் சிதறி விழுந்தன.
அன்றிலிருந்து சங்கரரின் அற்புதச் செயல்கள் தொடங்கின. முதுமை அடைந்த அவரது தாயால் ஆற்றிற்குச் செல்ல முடியவில்லை. இதைக் கண்ட அவர் தன் தாய் இருக்கும்படி ஆற்றைச் செல்ல வைக்க நினைத்தார். அதன்படி பூர்ணா நதியை அவர் தாய் இருந்த வீட்டிற்குப் பின்புறமாகச் செல்லும்படி பணித்தார். பூர்ணா நதியும் தன் போக்கை மாற்றி சங்கரர் வீட்டின் பின்புறமாகச் செல்லத் தொடங்கியது.
சங்கரரின் அற்புதச் செயல்களைப் போலவே, இளம் வயதிலேயே அவரது புலமையும் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதையறிந்த அத்தேசத்து மன்னர் சங்கரரை தன் அரசவையில் புலவராக்க விருப்பம் கொண்டார். ஒரு யானை மற்றும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவரை அரசவைக்கு அழைத்து வர தன் மந்திரியை அனுப்பி வைத்தார். அந்தப் பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள மறுத்த சங்கரர் தனக்கு “அரசவைப் பணியை விட ஆன்மிகப் பணியே விருப்பம். எனவே மன்னரின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாது” என்று சொல்லி மந்திரியைத் திருப்பி அனுப்பினார்.
மந்திரி மன்னரிடம் சங்கரர் சொன்ன பதிலைச் சொல்லவும்,மன்னருக்கு சங்கரரை நேரில் காணும் ஆவல் ஏற்பட்டது. மறுநாள் அவர் சங்கரரைப் பார்க்கப் புறப்பட்டார். அவர் சங்கரரிடம் பத்தாயிரம் பொற்காசுகள் மற்றும் சில நூல்களைப் பரிசாக வழங்கினார். சங்கரர் நூல்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பொற்காசுகள் அனைத்தையும் அவரிடமே திருப்பி வழங்கினார். மன்னர் அவருடைய ஆன்மிக எண்ணத்தையும், அதற்கான செயல்பாட்டையும் பாராட்டி விடை பெற்றுச் சென்றார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சங்கரர் வீட்டுச் சூழலிலிருந்து வெளியேற விரும்பினார். ஆனால் சங்கரரின் தாய் வயதாகிவிட்ட நிலையில், மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்காக மகனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். ஆனால் சங்கரர் அதற்கு மறுப்பு தெரிவித்து தான் சந்நியாசத்தை விரும்புவதாகத் தெரிவித்து வந்தார். சங்கரரின் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் ஒருநாள் பூர்ணா நதியில் சங்கரரும் அவரது தாயாரும் குளிக்கச் சென்றிருந்தனர். அப்பொழுது ஒரு முதலை சங்கரர் கால்களைக் கவ்வி நீரினுள் இழுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த சங்கரரின் தாய் பயந்து மகனைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார். அப்பொழுது தாயை அமைதிப்படுத்திய சங்கரர் தன் தாயிடம் “தாயே! நீங்கள் என்னை சந்நியாசம் ஏற்க அனுமதித்தால்,இந்த முதலை என்னை விட்டு விடும், இல்லாவிட்டால் அதற்கு இரையாகி விடுவேன்,” எனக் கதறினார்.


தன் பிள்ளை உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அவர் தாயும் சந்நியாசத்திற்கு அனுமதித்தார். அதன் பிறகு அந்த முதலை அழகான கந்தர்வனாக மாறியது. அவன் சங்கரரை வணங்கினான். சங்கரர் அன்று முதல் வீட்டைத் துறந்து ஞானியாகக் கிளம்பினார்.
அப்போது அவரது தாய் மகனிடம், தான் உலகைத் துறக்கும் காலத்தில் (மரணமடையும் நிலையில்) சங்கரர் எங்கிருந்தாலும் தாயிடம் வந்து சேர வேண்டும் என்பதுடன் மகனாகத் தாயின் இறுதிச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சங்கரரும் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி, இமயமலை நோக்கிச் செல்லத் தொடங்கினார்.
சங்கரர் இமயமலை நோக்கிச் செல்லும் போது வழியிலிருந்த பல புனிதத் தலங்களுக்கும் சென்று வணங்கினார். இமயமலைக்குச் சென்ற அவர் பத்ரிநாத் பகுதியிலிருந்த கோவிந்த பகவத் பாதர் என்பவரைச் சந்தித்தார். அவர் மாண்டூக்ய, காரிக போன்ற உபநிடதங்களை எழுதிய கவுடபாதரின் சீடராவார். தனக்கென ஒரு குருவைத் தேடிக் கொண்டிருந்த சங்கரர் அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு வேதபாடங்களைக் கற்றுக் கொள்ள முடிவு செய்தார்.
அவரிடம், தான் கேரளாவிலிருந்து வருவதாகவும், தன்னுடைய இளம் வயதில் தந்தை காலமான பின்பு தாயின் பராமரிப்பில் அருகிலுள்ள குருகுலத்திற்குச் சென்று வேதங்கள் சாஸ்திரங்கள் கற்றதையும் தெரிவித்தார். தனக்கு தாய் திருமணம் செய்து வைக்க விரும்பியதையும், தான் அதை மறுத்து ஆன்மிக வழியில் ஈடுபட விரும்பியதையும் தெரிவித்தார். இதற்காக ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தன் காலை முதலை ஒன்று கடித்ததாகவும்,அதிலிருந்து விடுபட அம்மாவிடம் அனுமதி பெற்று ஆபத்த சந்நியாசத்தை மேற்கொண்டதையும் தெரிவித்தார். தற்போது முழு சந்நியாச தீட்சை அளித்து வேதாந்தத்தைத் தனக்கு முழுமையாகக் கற்றுத் தரும்படியும் வேண்டினார்.
அவருடைய உண்மையான பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற கோவிந்த பகவத் பாதர் அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டு துறவறத்தில் உயர்ந்ததும், சிறந்ததுமான “பரமஹம்ச சந்நியாச தீட்சை” அளித்து தாம் தம் குருவிடமிருந்து கற்றவற்றைப் போதித்தார். வேதங்கள் முழுவதையும் அவருக்குக் கற்றுக் கொடுத்ததுடன் அத்வைத சித்தாந்தத்தையும் எடுத்துச் சொன்னார்.
அத்வைத சித்தாந்தத்தில் உலகில் தத்தம் கர்ம வினையினால் தோன்றும் எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும் இறை தத்துவம் அல்லது ஆத்ம தத்துவம் ஒன்றே என்பதும், இறைவனும் ஆத்மாவும் ஒன்றே என்றும் கற்பிக்கப்படுகிறது. குருகுலவாசம் முடிந்த பின்னர் சங்கரரை பாரத நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு அத்வைதக் கொள்கைகளை அனைவருக்கும் உணர்த்தும்படி கோவிந்த பகவத் பாதர் அறிவுறுத்தினார்.


குருவின் அறிவுறுத்தலுக்குப் பின்பு சங்கரர் காசி நோக்கிச் சென்றார். சங்கரர் காசியிலிருந்து தொடங்கி பாரதத்தில் பல சமயத் தலைவர்களுடன் சமயக் கருத்துக்களிலான விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். அத்துடன் தன் குருவின் கட்டளைப்படி அத்வைதக் கொள்கைகளை நாடு முழுவதும் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் சங்கரர் ஆற்றுக்குக் குளிக்கச் சென்று கொண்டிருந்தார். அவரைப் புலையன் ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் ஒன்று இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் அவனிடமிருந்து துர்நாற்றம் வீசியது. அவன் மாமிசத்தைச் சாப்பிட்டபடி சங்கரரை நெருங்கினான்.
இதைக் கண்ட சங்கரர், “டேய், விலகிப் போடா!” என்று எச்சரித்தார். அவன் உடனே, “நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலக வேண்டும்?” என்று எதிர்க் கேள்வி கேட்டான். அப்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. இதையடுத்து “மனீஷா பஞ்சகம்” என்னும் பாடலைப் பாடினார். அப்போது அங்கு புலையன் வேடத்தில் வந்த சிவபெருமான் காசிவிஸ்வநாதராக மாறிக் காட்சியளித்தார்.
இந்நிகழ்ச்சியின் மூலம்தான் சங்கரருக்கு அத்வைத ஞானம் முழுமையாகக் கிடைத்தது. இதன் மூலம் சாதியும் பேதமும் கூடாது என்ற உண்மையையும், உருவத்தைக் கண்டு யாரையும் இகழக்கூடாது என்ற உண்மையையும் சங்கரர் மூலமாக இறைவன் உலகுக்கு உணர்த்தினார் என்று சங்கர விஜயம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment