Friday 3 November 2017

கணபதி ஹோமம் ( தடைகள் நீங்க )

கணபதி ஹோமம் ( தடைகள் நீங்க )
கணபதி ஹோமத்தின் சிறப்பு அம்சங்கள் பார்ப்போம்


பாரம்பரியமாக 32 கணபதி உருவங்கள் சொல்லவார்கள். 
அவை;
பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி,துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி,ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி,நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி,திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி,ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ருணமோசன கணபதி, துண்டிகணபதி,துவிமுக கணபதி, த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி,துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி.


எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபதி ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம் ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது மரபு. விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும்கூட கணபதியை வணங்கிய பிறகே எந்த செயலையும் துவங்கவேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்த இடத்தை இப்போது அச்சிறுபாக்கம் என்று அழைக்கிறார்கள். செங்கல்பட்டு அருகே இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரையும் அச்சிறு விநாயகர் என்றே அழைக்கிறார்கள். கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஓதி, அவரை புகழ்ந்து பக்திப்பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது மிகச்சிறந்த பலனைத்தரும். நமது சக்திக்கு ஏற்றபடி செலவு செய்து இந்த பூஜையை நடத்தலாம். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை 5 ஆயிரம் ரூபாய்வரை இதற்கு செலவாகும். வீடுகளில் ஆயிரம் ரூபாய்க்குள் இந்த பூஜையைச் செய்து முடிக்கலாம். கணபதி ஹோமத்தை ஒருமணி நேரத்திற்குள் செய்து முடித்துவிடலாம்.

ஒரு குடும்பத்தின் நலம் வேண்டி முதலில் செய்ய வேண்டியது கணபதி ஹோமம் ஆகும். கணபதி ஹோமத்திற்கு பொரி, அவல், சத்துமாவு,கொழுக்கட்டை, அப்பம், அறுகம்புல், கரும்புதி துண்டு, எருக்கம்பூ ஆகியவை அவசியமாகும். ஹோமம் செய்து வைக்க புரோகி தரும் உடன் ஜெபம், தியானம் முதலியவற்றைச் செய்ய நான்கு புரோகிதர்களும் மிக அவசியம். ஹோமத்திற்கு முன் செய்பவற்றைப் பூர்வாங்கம் என்றும் பின் செய்பவற்றை உத்ராங்கம் என்றும் சொல்வார்கள்.

முதலில் ஹோமகுண்டம், கணபதி சன்னதி புண்யாஹவசன கடம்,ஆவாஹன கலசம், நைவேத்யம் போன்ற ஹோமத்திற்கான பொருள்களை தயார் செய்து முறைப்படி வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தினர் கூடத்தில் அமர்ந்து கொண்டு புரோகிதர் மூலம் கணபதி ஹோமம் செய்ய வேண்டும். செய்முறை :

1. சங்கல்பம் : இந்த நாளில் இந்த நலன் வேண்டி இந்த ஹோமத்தைச் செய்கிறேன் என்று சபதம் செய்து கொள்ளவும்.

2. தானம் : ஏழைகள், பெரியவர்களுக்கு தானம் செய்து அனுமதியைப் பெற வேண்டும்.

3. ஜப, தியானம்

4. புண்யாஹவசனம் கணபதியின் மூல மந்திரங்களால் ஒரு கலசத்தில் ஆவாஹனம் செய்து ஆசனமிட்ட குடத்தை வைத்து வருணனை ஆவாஹனம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதற்கான மந்திரங்களை ஜபம் செய்து பிறகு அந்த ஜலத்தால் அனைவரையும்,அனைத்தையும் மந்திரசுத்தி செய்ய வேண்டும்.

5. ஹோமம் : ஹோம குண்டத்தினருகில் மந்திரம் மூலமாக அந்தந்த பொருட்களை அந்தந்த இடத்தில் வைத்து பிரதிஷ்டை, சுத்தம் செய்து,அக்னியை குண்டத்தில் சேர்த்து பிரம்மா முதல் அனைத்து தேவதைகளுக்கான மந்திரத்துடன் நெய், சமித்து, தர்ப்பம் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.

பிறகு கணபதிக்கு மந்திரங்களாலும் திரவியங்களாலும் ஹோமம் செய்து, மந்திர கோஷங்களுடன் பூர்ணாஹூதி ஹோமம் செய்ய வேண்டும். இதையடுத்து கணபதிக்கு பூஜை செய்து நைவேத்யம் அனைத்தையும் வைக்க வேண்டும். கணபதி ஆவாஹன கலசத்தை இருப்பிடம் சேர்த்து அந்த தண்ணீரால் தங்களைப் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் இனிதே முடிந்தவுடன் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.
பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.
நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா... என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள். அவற்றில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம்.
தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி - நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார். எப்பேற்பட்ட தவறு இது என்று விநாயகரின் எதிரே தலைகுனிந்து மண்டியிட்டார். இது ஈசன் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு உலகிற்குச் சொன்ன பாடமாகும். ஈசனே வணங்கும் கணபதியை வணங்குவது என்பது ராஜபாட்டையில் நடந்துபோவது போல.
கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறாமல் நேர்ப்பாதையில் செல்லவும், பாதையில் இருக்கும் தடைகள் நீங்கவும் செய்யப்படுவதே கணபதி ஹோமமாகும். அஸ்திவாரத்தை பலமாக்குவதுபோல ஆதி சக்தியின் அருளைப் பெறுவதற்கான முறையே இந்த ஹோமம். கணபதி ஹோமத்தை செய்வதாலேயே மற்றெல்லா ஹோமத்தையும் செய்யும் தகுதியை ஒருவன் பெறுகிறான். இதற்கு எல்லாவற்றிற்கும் அடிப்படையாக சிரத்தை என்கிற சக்தி வெண்டும். ஆம், சிரத்தையோடு இருத்தல் என்பதே சக்தியின் குவிப்புதான். எனவே, அதிகூர்மையாக பணிவோடு மாபெரும் சக்தியை வேண்டுகிறோம் என்கிற விநயத்தோடு கூடிய மனப்பாங்கு வேண்டும். ஏதோ சொல்கிறார்கள் நாமும் செய்து வைப்போமே என்கிற அசிரத்தையும் அலட்சியமும் இருப்பின் எதையுமே கிரகிக்க முடியாது. இந்தக் காயமெனும் பாத்திரத்தை காலியாக அகங்காரமில்லாது வைத்துக் கொண்டால் விநாயகன் பீடம் போட்டு உள்ளுக்குள் அமர்வான். பிறகு உங்கள் அகத்தில் அவனொரு ஞான வேள்வி நிகழ்த்துவான்.
மகாகணபதி ஹோம மந்திரங்களை உருவாக்கியவர் கனகரிஷி. ஹோமமாகச் செய்தவர் காஷ்யப மகரிஷி. அருகம்புல்லின் மகத்துவத்தை எல்லோரையும் அறியச் செய்தவர்.
கணபதி ஹோமத்தில் முதலில் அனுக்ஞை. அதாவது பெரியோர்களின் அனுமதி ஆசிகளைப் பெறுவது. அதாவது குடும்பத்துடன் சேர்த்து எனக்கு எல்லாத் தடையூறுகளும் நீங்குவதின் மூலம் நினைத்துள்ள எண்ணம் சித்தித்துப் பயனடையும் பொருட்டு மகாகணபதி ஹோமம் செய்வதற்கு எனக்கு தகுதி சித்திக்கும்படியாக அனுக்கிரகம் செய்ய பிரார்த்திக்கிறேன் என்று தொடங்குகிறது. இதற்குப் பிறகு வைதிகர்களின் வழிகாட்டுதலின்படி மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். அதில் முதலில் ஹோமத்தைச் செய்பவர்கள் தங்கள் பெயர், மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகள் எல்லோரின் பெயரையும் பிறந்த நட்சத்திரங்களோடு சொல்லி ஹோமத்தைச் செய்யும் தகுதியை வழங்க அனுமதி பெற வேண்டும். தர்ப்பைகளை காலுக்குக் கீழ் போட்டுக் கொண்டு,விரலிடுக்குகளில் பவித்ரமாக அணிந்து மனைவியோடு அமர்ந்து மந்திரங்களை சொல்லி மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொண்டு விக்னேஸ்வரரை பூஜிக்க வேண்டும்.
அடுத்ததாக சங்கல்பம் அதாவது உறுதிமொழி. இந்த இடத்தில் எங்களுக்காக நடத்தப்படும் இந்த ஹோமத்தின் சகல காரியங்களையும் செய்ய இவர்களை ஆசார்யர்களாக வரித்துக் கொள்கிறேன் என்று ஹோமத்தை நடத்தி வைக்க வந்திருக்கும் அந்தணர்களை வணங்க வேண்டும். சங்கல்பத்தின்போது பகவானின் நாமத்தை அதாவது ராம... ராம... என்று ஆத்மப்பூர்வமாக சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு புண்யாகவாஜனம். சுத்தமான தரையில் பசுஞ் சாணத்தால் மெழுகி நெல்லைப் பரப்பி அதன் மீது வாழை இலை வைத்து அதில் சமமாக அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மையத்தில் தாமரைப்பூவை வரைய வேண்டும். பூவின் நுனியில் தர்ப்பைகளை வைத்து பூரண கும்பத்தை நீர் நிரப்பி அதில் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்க வேண்டும். அதன் மீது மாவிலைக் கொத்து, மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். இதை வைக்கும்போதே அதற்கென்று உள்ள மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
இதையெல்லாம் முடித்த பிறகு ஹோம குண்டம் அமைத்து எல்லா தேவதைகளையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அதாவது எல்லா தேவதைகளையும் வரவழைத்து உயிரூட்டுவதாகும். இதற்குப் பிறகு மகா கணபதி ஹோமம் ஆரம்பிக்கிறது. அவருக்கான மந்திரங்களைச் சொல்லி பதினாறு வகையான உபசாரங்களை செய்ய வேண்டும். நெய்யை ஹோம அக்னியில் வார்க்க வேண்டும். முதலில் நெய்யினாலும், அஷ்ட திரவியங்களாலும் பிறகு தேங்காய் மூடியில் மூன்று கண்கள் இருக்கும் முடியை முதலில் போட்டு ஹோமம்,அருகம்புல்லை இரண்டிரண்டாக நெய்யில் தோய்த்துப் போட்டு ஹோமம் அதைத் தொடர்ந்து நெல்லை விட்டு ஹோமம் என்று செய்யலாம். இதைத்தவிர நூறு, ஆயிரம் என்று பல எண்ணிக்கைகளில் மோதகங்களை செய்ய வேண்டும். பழங்கள்,ஆலங்குச்சி, சீந்தில் கொடி என்று பல்வேறு விஷயங்களை ஹோமத்தில் சேர்க்கலாம்.
மேலே சற்றே சுருக்கமாக் கூறிப்பிட்டிருக்கிறேன். ஆனால்,அந்தணர்களை வைத்துச் செய்யும்போது மிக மிக விஸ்தாரமாக கூடச் செய்யலாம். செய்ய வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டவே இக்கட்டுரை.
மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அந்த ஹோம குண்டத்தை யானையின் நான்கு வலிமையான கால்களாக நினைத்துக் கொள்ளுங்கள். கால்களை அசைக்காமல் ஸ்திரமாக நின்று கொண்டு யானை உடலையும், தும்பிக்கையையும், தலையையும், காதுகளையும் அசைப்பதாக பாவனை செய்து கொண்டு அக்னியை பாருங்கள். மந்திரங்களோடு சேர்த்து செய்யப்படும் அக்னியின் அசைவுகள் யானை அசைவது போன்றிருக்கும். மகாகணபதி ஹோமத்தின் மையமே உங்களுக்குள் இருக்கும் மூலாதார சக்தியைத் தூண்டுவதுதான். அசைவற்ற மூலாதாரம் என்கிற கணபதி அசைவிக்கவே இந்த ஹோமம். இல்லையெனில் மனம் தாறுமாறாக அலையும். காற்றில் பறக்கும் தூசு போல இலக்கின்றி என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கும். ஆனால், மூலாதாரம் விழித்துக் கொண்டால் மனம் ஒருமை பெறும். எண்ணங்களில் நேர்த்தியிருக்கும். தைல தாரை போன்று மனம் தெளிவாக அடுத்தடுத்து யோசிக்கும். வெறும் சிந்தனையோடு நில்லாமல் செயல் திறனிலும் உடல் வழியாக உழைக்க வைக்கும். காரணம் மூலாதாரத்தின் பூரணமான சக்தி அதை பிராண சக்தி என்று விதம் விதமாக கூறலாம். அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும்.
ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஹோமங்களைச் செய்யச் செய்ய சித்தத்தில் தெளிவையும் நம்மையும் அறியாமல் இறைவனை அடையும் ஒரு தாபத்தையும் அதிகரிக்கச் செய்யும். இல்வாழ்க்கையில் உள்ளபோதே பிரம்ம வஸ்துவை அடையும் விவேகத்தையும் அதிகரிக்கும். ஆத்மா யக்ஞேன கல்பதா என்பது ருத்ர வாக்கியம். யக்ஞேனத்தினால் ஆத்மா அடையப்படுகிறது என்பதே இதன் பொருள். இப்போது புரிகிறதா கணபதி சகல விஷயங்களிலும் எப்படி கரமருளி காக்கிறார் என்பது.
மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தால் விசேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். அத்தனை எளிமையான தெய்வத்தை சிக்கெனப் பிடித்தால் சீரும் சிறப்போடும் வாழலாம் என்பது எளிமையான பேருண்மை. எப்போதுமே பேருண்மை சூரியனைப் போன்று பிரகாசமாக தெரியும். அதுபோலத்தான் ஆனைமுகனின் வழிபாடும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment