Friday 3 November 2017

பாரம்பரிய மருத்துவம் எள்ளும் கொள்ளும் பற்றி....


பாரம்பரிய மருத்துவம் எள்ளும் கொள்ளும்

எள்ளும் கொள்ளும்
'இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு" என்பது பழமொழி. முதலில் எள்ளு பற்றிய விபரங்களை காண்போம். எள்ளு ஒரு சிறிய செடி. இந்தியாவில் பெருமளவில் பயிரடப்படுகிறது. 1-2அடி உயரமே வளரும் எள்ளுச் செடியின் ஆயுட்காலம் ஓராண்டு வரைதான்.

மூவகை வர்ணங்களைக் கொண்ட எள் வகைகள் உள்ளன. அவற்றில் கருப்பு நிறத்தைக் கொண்ட எள்ளில்தான் வெள்ளை மற்றும் செவ்வெள்ளை விட மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகின்றன. உணவாக அதன் எண்ணெய்யும் பயன்படுகிறது.

சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடிய இனிப்புடன், ஜீர்ண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலுக்கு நெய்ப்பும் சூடும் தரக் கூடியது. உடலை கனக்கச் செய்யும். தோலுக்கும் பற்களுக்கும் கேசங்களுக்கும் உறுதி தரக்கூடியது. உறுப்புகளுக்குப் பலமும் சுறுசுறுப்பும் தரும். வேக்காளத்தைக் குறைத்து அசதியைப்போக்கித் தசைகளுக்குப் புத்துயிர் ஊட்ட வல்லது. மூளைக்குத் தெளிவைத் தரும். நல்ல பசியைத் தூண்டுவதால் உணவின் அளவு அதிகரித்து இளைத்தவன் புஷ்டியாகிறான். மலக்கட்டை ஏற்படுத்தும். வாயுவால் ஏற்படும் திமிர்ப்பு, விறைப்பு,வலி முதலியவைகளைக் குறைக்கும். பெண்களின் கர்ப்பப்பையைச் சார்ந்த வறட்சியைப் போக்கி வலியை கண்டிக்கக் கூடியது.

எள்ளை தூளாக்கி சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணை கலந்து சாப்பிட வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, குடல் வலி இவைகளைப் போக்கும். உடலுக்கு நல்ல தெம்பை தரக்கூடியது. வெல்லப்பாகுடன் இதைக்கூட்டி எள்ளுருண்டை, கொழுக்கட்டை முதலிய தின்பண்டங்களை சாப்பிடுவதால் தன்னலம் பாராமல் பிறர்க்காக உழைக்கும் மனப்பான்மை வளரும். மனவெறியை அடக்க வல்லது.

வாய்ப்புண்ணை ஆற்றுவதற்கு எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகுநேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வேண்டும். ரத்த மூலத்திலிருந்து ரத்தம் சொட்டுவதை நிறுத்த எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மலம் சிக்கலில்லாமல் வெளியாகும். மூல வேதனை குறையும்.

பற்கள் எகிறுகள் தாடை இவைகளில் பலக்குறைவுள்ளவர் விதையை மென்று குதப்பிக் கொண்டிருப்பதாலும் நல்லெண்ணெய்யை வாயிலிட்டு குதப்பித் துப்புவதாலும் நன்மை பெறுகிறார்கள். மூளைக் களைப்புள்ளவர்கள் எள்ளை அதிகமாக உணவில் சேர்ப்பது நல்லது.

சிறுநீரை சுண்டச் செய்வதால் அதிக அளவில் சிறுநீர் வெளியாகும். நீரிழிவு நோயில் எள் கலந்த உணவு நன்மை தரும். பலத்தையும் தருகிறது. சிறுநீரில் சீழ் அதிக அளவில் வெயியாகும் நபர்களும் எள்ளை உணவில் அதிகமாகச் சேர்க்கலாம்.

வயது வந்தும் பூப்படையாத பெண்களும், மாத விடாய் சரியாக ஆகாமல் கடும் வயிற்று வலியால் அவதியுறும் பெண்களுக்கும்,தாய்ப்பால் குறைவாக உள்ளவர்களுக்கும் எள்ளுடன் கூடிய உணவால் நன்மை பெறுவர். உதிரச் சிக்கலை போக்க எள் ஊற வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். பனை வெல்லம் எள்ளு கருஞ்சீரகம் இம்மூன்றும் மாதவிடாய் காலத்திய வலி கடுப்பு உதிரச் சிக்கலை நீக்க பெறும் உதவி செய்கின்றன.

எள்ளின் எண்ணெய்யும் எள்ளைப் போல சிறந்தது. நல்லெண்ணெயை தேய்த்துக் குளிக்க சீக்கிரம் தோலின் வழியே ஊடுருவி கொழுப்பு வியர்வை பித்த கோளங்களின் அழற்சி அயர்வை போக்கி வியர்வையை சரியாக வெளியாக்கி, தசைகளில் தேவையற்ற மலப் பொருள்கள் தங்காமல் அகற்றி தசைகளுக்கு பலமும் தோலுக்கு மென்மையும் நிறத்தையும் மயிர்கால்களுக்குத் திடமும் கேசங்களுக்கு கருமையும் தருவதால் எண்ணெய் குளிக்கு மிகவும் சிறப்பானது. வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு என்ற பழமொழிக்கேற்ப எண்ணெய்க் குளி தவறாதவர்களை விட எண்ணெய் குளியைத் தவிர்த்தவர்களே அதிகம் டாக்டர்கள் வீட்டில் காணப்படுகின்றனர்.

கொள்ளு துவர்ப்புச் சுவை, இனிப்புச் சுவை, வறட்சி, உஷ்ண வீர்யம் இவைகளையுடையது. கொள்ளுக் கஞ்சியை அருந்துவதால் நாட்பட்ட ஜலதோஷம், மூச்சுத்திணறல், இருமல், மூலம், விக்கல், வயிற்று உப்புசம், கபவாயு, கல்லடைப்பு, போன்ற நோய்களும் வீக்கம் பெருவயிறு போன்ற உபாதைகளும் நீங்கி விடுகின்றன.

எளிதில் ஜீர்ணமாகும். மலத்தை கட்டும். உடலில் ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது. ஜீர்ண நிலையில் புளிப்புச் சுவையையும்,எரிச்சலையும் தருவது.

கொள்ளு தான்யத்தை நன்கு பொடித்து புளித்த மோரை சூடாக்கி அதில் குழைத்து கொழுப்பினால் உடல் பருத்த பகுதிகளில் மேலிருந்து கீழாக சூடு பறக்கத் தேய்த்து அரை மணிமுதல் ஒரு மணிநேரம் வரை ஊறி வெந்நீரில் குளிக்க சதை உருகி உடல் இளைத்துவிடும். உணவில் அதிகமாக இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவையையும், புலால் உணவையும் தவிர்க்க வேண்டும். பகல் உறக்கத்தைத் தவிர்த்து உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும்.
உடலுக்கு சூட்டை அதிகப்படுத்துவதால் கொள்ளின் உபயோகத்தை அதிக அளவில் உள்ளுக்கு சாப்பிடுவதை விட வெளிப்புற உபயோகம் சிறந்த பலனைத்தரும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment