Tuesday 7 November 2017

இராமானுஜர் மகான் பற்றி....


இராமானுஜர்


ஞான வழியில் செல்வதைக் காட்டிலும் பக்தி வழியில் சென்றால் இறைவனை அடைய முடியும் என்று புதிய வழியைக் காட்டிய மகான் ஸ்ரீ இராமானுஜர். விசிஷ்டாத்துவைதம் எனும் கொள்கையை நாடு முழுவதும் வலியுறுத்தி சாதாரண மக்களிடமும் கொண்டு சென்ற மகான் ஸ்ரீ இராமானுஜர். தான் நரகத்திற்குச் சென்றாலும் பரவாயில்லை, இந்தக் கலியுகத்தில் பிறந்த பலரும் மோட்சமடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் குருவின் கட்டளையை மீறி எல்லா வளங்களையும் அளிக்க வல்ல மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்த வரும் இந்த இராமானுஜர்தான்.
இராமானுஜர் 1017 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வளர்பிறையில் பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை நாளில் (04-04-1017) தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீ பெரும்புதூர் எனும் ஊரில் அசூரி கேசவ தீட்சிதர் – காந்திமதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இராமானுஜர் குழந்தைப் பருவத்திலேயே மிகவும் கூர்மையான அறிவுத் திறனுடன் இருந்தார். அவருக்கு எட்டு வயதான போது அவருக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது. இராமானுஜருக்கு அவர் தந்தையாரே முதலில் கல்வி அளித்தார். அவர் எதையும் ஒரு முறை படித்ததுமே புரிந்து கொள்ளும் ஆற்றலுடையவராக இருந்தார்.
அவருடைய தந்தையார் அவருக்கு பதினாறாம் வயதில் ரக்சாம்பாள் எனும் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். அவருக்குத் திருமணம் நடந்த சில காலத்திற்குள்ளாகவே அவரின் தந்தை மரணமடைந்தார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பத்துடன் காஞ்சிபுரத்துக்குச் சென்றார். அப்போது வடநாட்டில் காசி எப்படி கல்விக்குப் பெயர் பெற்றிருந்ததோ அதுபோல் தென்னாட்டில் காஞ்சிபுரம் கல்விக்குப் பெயர் பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. இந்த நகரின் அருகிலுள்ள திருப்புட்குழியில் யாதவப்பிரகாசர் என்கிற அத்வைத பண்டிதரிடம் வேதம் கற்றுக் கொள்வதற்காகச் சென்றார்.
யாதவப் பிரகாசரிடம் வேதம், உபநிடதம் போன்றவைகளைக் கற்றுக் கொண்டிருந்த இராமானுஜருக்கு அவரிடம் பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குருவின் விளக்கத்தை எதிர்த்து பலமுறை கருத்து சொல்லத் தொடங்கினார்.
ஒரு நாள் இராமானுஜர் தன் குருவின் பணிவிடையில் இருக்கும் போது இன்னொரு சீடன் அங்கு வந்து, யாதவப் பிரகாசரிடம், சாந்தோக்கிய உபநிஷத்தில் உள்ள “கப்யாஸம் புண்டரீகம்” என்னும் சொற்றொடருக்குப் பொருள் கேட்டான்.
“திருமாலின் சிவந்த கண்கள் குரங்கின் குதம் போல் இருந்தன” என்று அதற்கு விளக்கம் சொன்னார் யாதவப் பிரகாசர். அதாவது, கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று பிரித்து, திருமாலின் சிவந்த கண்கள் “குரங்கின் ஆசனவாய்” போல் இருந்தன என்பதாகச் சொன்னார்.
திருமாலின் அழகிய கண்களை குரங்கின் புட்டத்தோடு ஒப்பிட்டுக் கூறிய குருவின் விளக்கத்தைக் கேட்ட இராமானுஜர், “மிகவும் அபத்தமான விளக்கம்” என்று குருவிடம் மறுத்துக் கூறினார்.
பின்னர், கப்யாஸம் என்பதை கம் + பீபதி + ஆஸம் என்று பிரிக்க வேண்டும். அப்போது கபி என்பது குளிர்ந்த நீரைப் பருகும் சூரியன் என்றும், ஆஸம் என்பது தாமரை என்றும் பொருள் தரும் என்று கூறினார். மேலும், “கதிரவனால் புன்னகைக்கும் கவின் மிகுந்த செங்கமலம் போன்றது கரிய மால் விழி அழகு” என்ற சரியானப் பொருளைக் கூறியதால் குருவின் கோபத்திற்கு ஆளானார்.
இராமானுஜர் மீது கோபம் கொண்ட யாதவப் பிரகாசர் அவரை கல்வியிலிருந்து நீக்கினார். அதன் பிறகு இராமானுஜர் வீட்டிலிருந்தபடி தாமாகவே வேதபாடங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். இராமானுஜர் தாமாகப் பயின்றாலும் வேதபாடங்களில் மிகபெரும் புலமையுடன் விளங்கினார்.
இராமானுஜர் வைணவ வழிமுறைகளின் மிகப்பெரும் குருவாக விளங்கிய ஸ்ரீரங்கம் ஆளவந்தார் (யமுனாச்சாரியார்) என்பவரின் முக்கியச் சீடர்களான ஐந்து சீடர்களில் ஒருவரான காஞ்சிபூர்ணர் (திருக்கச்சி நம்பி) என்ற துறவியை ஒரு முறை சந்தித்தார். இவர் தந்தை நான்காம் வருணத்தைச் சேர்ந்தவர். தாய் வேடுவர் குலத்தைச் சார்ந்தவர். இருப்பினும் இவரை மிகுந்த மதிப்புடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.


இரவில் உணவு உண்ட பிறகு காஞ்சிபூர்ணர் இராமானுஜர் வீட்டின் இடை கழியில் படுத்துக் கொண்டார். இராமானுஜர் அவருடைய களைப்பு நீங்க அவரது கால்களைப் பிடித்து விட விரும்பினார். மேலும் அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டினார். ஆனால் அதற்கு காஞ்சிபூர்ணர் ஒத்துக் கொள்ளவில்லை. “நான்காம் வருணத்தைச் சேர்ந்த தம் கால்களை, அந்தணர் குலத்தைச் சேர்ந்த இராமானுஜர் பிடித்து விடுவது முறையல்ல. மேலும் ஒரு அந்தணருக்கு குருவாகத் தான் இருப்பதும் சரியல்ல ” என்று அவர் மறுத்ததால் இராமானுஜர் வருத்தமடைந்தார்.
“நான் மிகவும் துரதிர்ஷ்டசாலி, அதனால்தான் உங்களைப் போன்ற பெரியவர்களுக்குச் சேவை செய்யும் உரிமை எனக்குக் கிடைக்கவில்லை. பூணூல் அணிந்ததால் மட்டும் ஒருவன் பிராமணனாகி விடுவானா? திருமாலின் பக்தர்கள் அனைவரும் உண்மையான அந்தணர்கள்தான்” என்று இராமானுஜர் கூறினார். இதைக் கேட்ட காஞ்சிபூர்ணர் இராமானுஜர் மீது அன்பும், மதிப்பும் கொண்டார்.
தனக்கு குருவாக்க விரும்பிய காஞ்சிபூர்ணரை மீண்டும் ஒருமுறை சந்தித்த இராமானுஜர், அவரை தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். அதற்கு சம்மதித்த அவர் தனது வேறொரு பணியை முடித்து வருவதாகத் தெரிவித்துச் சென்றார். பின் அவரது பணியை முடித்துக் கொண்டு அவசரமாக இராமானுஜர் இல்லம் சென்று, தனக்கு பேரருளாளன் திருவாலவட்டப்பணிக்கு சீக்கிரம் செல்ல வேண்டும் எனவே உடனடியாக உணவளிக்க வேண்டினார். அச்சமயம் இராமானுஜர் வீட்டில் இல்லை. இராமானுஜர் மனைவியும் அவருக்கு உணவு அளித்தார். அவரும் இராமானுஜர் வருவதற்குள் உணவை முடித்துச் சென்றார்.
இராமானுஜர் வீடு திரும்புகையில், அவர் மனைவி காஞ்சிப்பூர்ணர் உண்ட தளிகையை கம்பால் தள்ளி, உணவருந்திய இடத்தை பசுஞ்சாணம் கொண்டு தூய்மையாக்கி நீராடி நிற்பதைக் கண்டு வருந்தினார். மனைவியின் இதுபோன்ற செயல்பாடுகள் அவருக்குப் பிடிக்கவில்லை.
ஸ்ரீரங்கம் திரும்பிய காஞ்சிபூர்ணர் இராமானுஜரின் விருந்தோம்பல், அன்பு ஆகியவற்றுடன் அவரது புலமையையும் அவருடைய குருவான ஆளவந்தாரிடம் எடுத்துக் கூறினார். ஏற்கனவே இராமானுஜரின் புலமை குறித்து அறிந்திருந்த ஆளவந்தார் தன் சீடர் காஞ்சிபூர்ணர் சொன்ன தகவலைக் கேட்டதும் வைணவ வழிமுறைக்குத் தனக்குப் பிறகு இராமானுஜரே தலைமைப் பொறுப்பேற்க வேண்டுமென்று விரும்பினார். இதற்காக இராமானுஜரை காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வர அவருடைய மற்றொரு சீடரான மஹாபூர்ணர் (பெரிய நம்பி) என்பவரை அனுப்பி வைத்தார்.
மஹாபூர்ணரும் காஞ்சிபுரம் சென்று இராமானுஜருக்கு வைணவ வழக்கப்படி தீட்சை அளித்து ஸ்ரீரங்கம் வந்து ஆளவந்தாரைச் சந்தித்துச் செல்லும்படி வேண்டினார். சில நாட்களுக்குப் பிறகு இராமானுஜரும் ஆளவந்தாரைத் தரிசிப்பதற்காக ஸ்ரீரங்கம் புறப்பட்டார். ஆனால் அவர் ஸ்ரீரங்கம் போய்ச் சேரும் முன்பே ஆளவந்தார் இறைவனடி சேர்ந்திருந்தார். ஆளவந்தாரின் வலது கரத்தில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கி இருந்தன.
அதைக்கண்ட இராமானுஜர், திருவரங்கத்துப் பெரியோர்களிடம்“ஆளவந்தாரின் வலது கரத்தில் மூன்று விரல்கள் மட்டும் மடங்கியிருக்க என்ன காரணம்?” என்று கேட்டார். அவர்கள் ஆளவந்தாரின் வியாஸ, பராசர முனிவர்களிடம் கொண்ட நன்றியறிவும், நம்மாழ்வரிடம் பற்றும், பிரம்ம சூத்திரமென்ற நூலுக்கு விசிஷ்டாத்துவைததிற்கிணங்க பாஷ்யம் எழுத வேண்டும் என்ற மூன்று மனக்குறையுமே அவரிடம் இருந்தன. தாங்கள் வந்த பிறகு இம்மூன்றையும் தாங்கள் செய்வதுடன், இந்த வைணவ வழிமுறைக்குத் தலைமைப் பொறுப்பையும் தாங்கள் ஏற்க வேண்டும் என்பதும்தான் அவருடைய கடைசிக்கால எண்ணமாக இருந்தது” என்றனர்.
இராமானுஜரும் ஆளவந்தாரின் மனக்குறைகளை இறையருளால் தீர்ப்பதாக உறுதி கூறினார். அவர் அப்படிக் கூறியதும் ஆளவந்தாரின் மடங்கியிருந்த மூன்று விரல்களும் தானாக நீண்டன. வைணவ வழிமுறைக்குத் தலைமைப் பொறுப்பேற்பவர் துறவியாக இருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால், “இறைவனின் ஆசியிருந்தால் அதுவும் நிறைவேறும்” என்று சொன்னார். பின்னர் அவர், ஆளவந்தாரை உயிருடன் பார்க்க முடியாமல் போன வருத்தத்துடன் காஞ்சிபுரம் திரும்பினார்.
இராமானுஜரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த மஹாபூர்ணர் ஏற்கனவே அவரது மனைவியையும் அழைத்து வந்திருந்தார். அவர்கள் இருவரும் ஆறு மாத காலம் வரை இராமானுஜரின் இல்லத்தில் தங்கியிருந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு அவரிடம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைக் கேட்டறிந்தார்.
ஒரு நாள் மஹாபூர்ணர் மனைவிக்கும், இராமானுஜர் மனைவிக்கும் தண்ணீர் கொண்டு வரப் போன இடத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதனை அறிந்த மஹாபூர்ணர் உடனே மனைவியை அழைத்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்குச் சென்று விட்டார். அச்சமயம் வெளியில் சென்றிருந்த இராமானுஜர் வீட்டுக்குத் திரும்பி வந்ததும் அவருக்கு வீட்டில் நடந்த நிகழ்வுகள் தெரிய வந்தது. மஹாபூர்ணர் தம் இல்லத்திலிருந்து சென்றது அறிந்து வருத்தமடைந்தார். ஏற்கனவே காஞ்சிப்பூர்ணர் வீட்டிற்கு வந்திருந்த போது அவருக்கு உணவளித்த பின்பு மனைவியின் செயல்பாடுகள் பிடிக்காத நிலையிலிருந்த இராமானுஜர், மஹாபூர்ணர் மற்றும் அவரது மனைவியையும் சண்டையிட்டு அனுப்பிய மனைவியிடமிருந்து பிரிந்துவிடுவது என முடிவு செய்தார். அவர் மனைவியை பிறந்த வீட்டிற்கு அனுப்பினார்.
அதன் பிறகு, மதுராந்தகத்திலுள்ள ஏரி காத்த இராமர் திருக்கோவிலில் மஹாபூர்ணரைச் சந்தித்தார். அந்த திருக்கோவிலிலேயே மகிழ மரத்தடியில் மஹாபூர்ணர் இராமானுஜருக்கு திருவிலச்சினை செய்து வைத்தார். தனது மனைவியின் குணத்தினால் பெரிதும் துன்பமுற்றிருந்த இராமானுஜர், அக்கோயிலிலேயே, இல்லற வாழ்க்கையை விடுத்து திரிதண்ட சந்நியாசியாக தீட்சை பெற்றார். கூரத்தாழ்வானும், முதலியாண்டானும் இவரது பிரதம சீடர்களானார்கள். இதன் பிறகு துறவிகளில் சிறந்தவராக விளங்கியதால் இவர் “யதிராஜர்” என்னும் திருநாமம் பெற்றார்.
இவர் மனைவியைப் பிரிந்து துறவியான செய்தி அறிந்த ஸ்ரீரங்கத்துப் பெரியவர்கள் ஆளவந்தாரின் விருப்பத்திற்கிணங்க வைணவ வழிமுறைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இராமானுஜர் ஸ்ரீரங்கம் சென்று தலைமைப் பொறுப்பேற்றார். இதனால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகப் பொறுப்பும் அவருக்கு வந்தது. அவரும் இன்முகத்துடன் அதை ஏற்றுக் கொண்டார். கோயிலுக்குக் கிடைத்த வருமானம் அனைத்தையும் கோயில் பூசைகளுக்குப் பயன்படுத்தச் செய்தார். நாள்தோறும் பிச்சை பெற்று வந்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.
அங்கு வாழ்ந்து வருகையில், சில மந்திரங்களுக்கு ஆளவந்தார் கூறீய உண்மை அர்த்தம் அவர்களுடைய சீடர்களிடமிருந்தது இராமானுஜருக்குத் தெரிய வந்தது. சில மந்திரங்களை அவருடைய சீடர்களின் வாயிலாகத் தெரிந்து கொண்டார். ஆனால் ஓர் உயர்ந்த மந்திரத்தின் பொருளை ஆளவந்தாரின் ஐந்து சீடர்களில் கோஷ்டிபூரணர் என்பவருக்கு மட்டும் அவர் உபதேசித்திருந்தது தெரிய வந்தது. கோஷ்டிபூரணரிடம் உள்ள அந்த உயர்ந்த மந்திரத்தைக் கற்றுக் கொள்ள விரும்பி அவரைச் சென்று பார்த்தார். அவர் இராமானுஜரைச் சிறிது காலத்திற்குப் பிறகு வருமாறு தெரிவித்தார். இப்படியே 18 முறை சொல்லித் திருப்பி அனுப்பினார். 19 வது முறை இராமானுஜருக்கு அந்த மந்திரத்தையும், பொருளையும் உபதேசம் செய்ய முன் வந்தார்.
கோஷ்டிபூரணர் இராமானுஜரிடம், “இந்த மந்திரத்தைத் தகுதி இல்லாதவர்களுக்கோ அல்லது சாதாரணமானவர்களுக்கோ உபயோகிக்கக் கூடாது“ என்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு அந்த மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார்.
மந்திர உபதேசத்திற்குப் பிறகு இராமானுஜர் தம் இடத்திற்குப் புறப்பட்டார். வழியில் திருக்கோஷ்டியூர் நரசிம்மர் கோயிலில் ஒரு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே அதிகமான வைணவர்கள் கூடியிருந்தனர். இவ்வளவு வைணவர்களையும் ஒரே இடத்தில் கண்ட இராமானுஜர் அந்தக் கோயில் சுவற்றின் மீது ஏறி நின்று கொண்டார். கோஷ்டிபூரணர் அவருக்கு உபதேசித்த “ஓம் நமோ நாராயண” எனும் மந்திரத்தையும், அந்த மந்திரத்தால் மோட்சமடைய முடியும் என்றும் சொன்னார்.
இதையறிந்த கோஷ்டிபூரணர் உடனே இராமானுஜரை அழைத்து வர அவருடைய ஆட்கள் சிலரை அனுப்பினார். அவர்கள் இராமானுஜரை கோஷ்டிபூரணரிடம் அழைத்துச் சென்றனர். கோஷ்டிபூரணர் கோபமாக, “நான் உனக்கு உபதேசித்த மந்திரத்தை, எனக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிவிப்பதா?” என்று கடிந்து கொண்டார்.
இராமானுஜர் ஒன்றும் பேசாமல் இருந்தார்.


“குருவின் ஆணையை மீறி வாக்குறுதி தவறியவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?” என்று கேட்டார் கோஷ்டிபூரணர்.
“தெரியும். பத்தாயிரம் வருடங்கள் நரகத்தில் துன்பப்பட வேண்டியிருக்கும்” என்றார் இராமானுஜர்.
“தெரிந்துமா, இப்படி தவறு செய்தாய். என் கட்டளையை மீறி மந்திரத்தையும் அதன் பொருளையும் எல்லோருக்கும் உபதேசித்தது தவறில்லையா?” என்றார் கோஷ்டிபூரணர்.
“இம்மந்திரத்தைக் கேட்டவர்கள் அனைவரும் மோட்சம் பெறுவார்கள் என்று தாங்கள்தானே கூறினீர்கள். இவ்வளவு பெரிய வைணவர்கள் கூட்டத்தைக் கண்டு, குருவின் ஆணையை மீறுவதால் எனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, கூட்டத்திலிருப்பவர்கள் அனைவரும் மோட்சம் பெறட்டும் என்று எனக்குத் தோன்றியது. அதனால் அனைவரும் கேட்க அதைக் கூறி விட்டேன். தங்கள் ஆணையை மீறியதற்கும், வாக்குறுதி தவறியதற்கும் தாங்கள் அளிக்கும் தண்டனை எதுவாயினும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
இதைக் கேட்ட கோஷ்டிபூரணரின் கோபம் அடங்கியது. அவர் மீது அன்பு வந்தது. உடனே அவர் இராமானுஜரை “என் பெருமானாரே” என்றபடி கட்டித் தழுவிக் கொண்டார். “என் பெருமானாரே” என்றால் எல்லோருக்கும் தலைவர் என்று பொருள். இதனால் இராமானுஜருக்கு “எம்பெருமானார்” என்ற பெயர் ஏற்பட்டது.
ஆளவந்தாரின் இறப்பிற்குப் பின்பு, ஆளவந்தாரின் மூன்று விருப்பங்களை நிறைவேற்றுவதாகச் சொன்ன இராமானுஜர் அதன்படி அவருடைய சீடரான கூரத்தாழ்வானின் புதல்வருக்குப் பராசர பட்டர் என்கிற பெயரைச் சூட்டினார். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்திற்கு ஐந்தாம் வேதம் எனப் பெயர் தந்து அதைப் பெருமைப்படுத்தினார். வியாசரின் வேதாந்தத்தின் சூத்திரங்களுக்கு“ஸ்ரீ பாஷ்யம்” என்ற விரிவுரையை இயற்றினார்.
இராமானுஜர் பாஷியத்தில் சங்கரரின் அத்வைதக் கொள்கையைக் கண்டித்து, வேதம், உபநிடதம் ஆகியவற்றின் சரியான பொருள் எனக் கருதியதை எடுத்துக் காட்டினார். வேதாந்த சூத்திரங்கள் உருவமற்ற பொருளை வணங்குமாறு கூறவில்லை, கடவுளுக்கு உருவமுண்டு என்றே அவை கூறுகின்றன என்ற இராமானுஜர், “மோட்சம் பெற ஞானம் வழியல்ல. பக்தியே மோட்சத்திற்கான வழி” என்றும் குறிப்பிட்டார். சங்கரர் பல இடங்களில் பெளத்த வாதங்களைப் பயன்படுத்தியிருந்ததால் அவரை அரைப் பௌத்தர் என்று ஸ்ரீபாஸியத்தில் குறிப்பிட்டார்.
ஸ்ரீபாஷ்யம் எழுதி முடித்த பின்பு இராமானுஜர் தன் சீடர்கள் சிலருடன் தலயாத்திரை மேற்கொள்ளத் தொடங்கினார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் பல பண்டிதர்களுடன் வாதங்கள் செய்து அதில் வெற்றி பெற்றார். அவர் யாருடன் வாதங்கள் செய்தாலும் அதில் அவரே வெற்றி பெற்றார். காஷ்மீர், காசி ஆகிய ஊர்களிலிருந்த சைவ, புத்த, சமண சமயப் பண்டிதர்கள் பலருடன் வாதங்கள் செய்து அவர் வெற்றி பெற்றார். இதனால் அவர் பெயரும், புலமையும் இந்தியா முழுமைக்கும் பரவியது. அவரது உபதேசங்களைக் கேட்டு பலர் வைணவத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பல அரசர்கள் அவரைப் பணிந்து சீடர்கள் ஆனார்கள்.
இப்படி இந்தியா முழுவதும் பயணித்துவிட்டு இராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பினார். அப்போது சோழநாட்டின் அரசனாக இருந்த கிருமிகண்ட சோழன் என்பவன் சைவ மதத்தைத் தீவீரமாகப் பின்பற்றி வந்தவன். இராமானுஜர் மூலம் வைணவம் வெகுவேகமாகப் பரவுவதைக் கண்ட அவன் மிகுந்த கோபம் கொண்டான். அவன் ஸ்ரீரங்கம் கோயிலில் “சிவாதி பரதரோ நாஸ்தி” என்று ஒரு பட்டயம் எழுதி வைத்தான். அதன் பொருள் “சிவனை விட மேற்பட்ட பரம்பொருள் இல்லை” என்பதுதான். அவனால் சைவ மதத்தை எதிர்த்தவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. அவன் வைணவர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தான். அவன் இராமானுஜரிடம் சிவனை விடப் பெரியவர் எவருமில்லை என எழுதி வாங்க வேண்டும் என்று முதலில் திட்டமிட்டான்.
இராமானுஜரைக் காக்க அவரது சீடன் கூரத்தாழ்வான் அரசவைக்குச் சென்று, “நாராயணனே பரன்” என்று பலமுறை எடுத்துரைத்தான். மன்னன் அதற்கு இணங்காமல், “சிவனே பரன்” என்று எழுதச் சொன்னான். அவர், “மரக்கால் பெரியது, குறுணி அதைவிடப் பெரியது” என்ற பொருளில் “சிவாத் பரதரம் நாஸ்தி, த்ரோணமஸ்தி ததபரம்” என்று எழுதித் தந்து அரசனின் கோபத்துக்குள்ளானார். இதனால் அரசன் அவரது கண்களைக் குருடாக்க உத்தரவிட்டான்.
தன் சீடர் கண்களை இழந்தது கேட்டு இராமானுஜர் வருத்தமடைந்தார். அரசன் இராமானுஜரின் சீடரைக் கண்கள் குருடாக்கியது போல் இராமானுஜரை எப்படியும் கொன்றுவிட வேண்டுமென்று திட்டமிட்டான். இதைத் தெரிந்து கொண்ட இராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து வெளியேறினார்.
இராமானுஜர், அந்த அரசன் இறக்கும் வரை, பன்னிரண்டு ஆண்டுகள் மைசூர் அருகிலுள்ள சாளக்கிராமம் எனுமிடத்தில் போய்த் தங்கியிருந்தார். அங்கு இருந்தபடியே வைணவப் பிரச்சாரம் செய்து வந்தார். இராமானுஜர் ஊர் ஊராகச் சென்று விசிஷ்டாத்வைத கொள்கையைப் பரப்பி வருகின்ற காலத்தில் தொண்டனூர் என்ற பகுதியை ஆண்டு வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இவருடைய சீடனானான். அவனுக்கு விஷ்ணு வர்த்தனன் என்ற பெயர் சூட்டி சீடனாக்கிக் கொண்டார்.
ஒரு நாள் இருவரும் காட்டுவழியே போய்க்கொண்டிருந்த போது துளசிக் காட்டில் ஒரு அடர்ந்த புதருக்கிடையில் திருநாராயணனின் சிலை ஒன்று தென்பட்டது. இராமானுஜர் விருப்பப்படியே விஷ்ணு வர்த்தனன் மைசூருக்கருகே உதயகிரி மலையின் மீது மேல்கோட்டை என்றழைக்கப்படும் இடத்தில் ஒரு கோயிலைக் கட்டிமுடித்தான்.
முன்பொரு காலத்தில் முகம்மதிய படையெடுப்பின் போது, டில்லி சுல்தான் கோயிலை இடித்து சிலைகளையும், பொன் பொருள் போன்றவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம்தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்த இராமானுஜர். மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான். தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த சிலையை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான். அதைத் தன் மகளிடமிருந்து திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல என்பதால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம் என்றான். நிபந்தனை இதுதான். இராமானுஜர் உற்சவ மூர்த்தியை அழைக்க வேண்டும. அந்தச் சிலை தானாகவே அவரிடம் வந்து சேர வேண்டும் என்றான்.
உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பது போல் ”என் செல்லப் பிள்ளாய் வருக” என்று குழைவாக அழைத்தார். என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்து மாறி ஒரு குழந்தை வடிவில் நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று. சுல்தான் மலைத்துப் போனான். அவன் விதித்த நிபந்தனைப்படியே உற்சவ மூர்த்தியை எடுத்துப் போக அனுமதித்து அத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். மேல்கோட்டை உற்சவமூர்த்தி இன்றும் கூட ‘செல்லப்பிள்ளை’ என்றே அழைக்கப்படுகிறார்.
சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள். அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள். அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து ‘பீபீ நாச்சியார்” என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் இராமானுஜர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நடைபெறும் வைரமுடிசேவை விழாவில் இவ்விருவரும் சேர்ந்தே வீதி உலா வரும் வழக்கம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், டில்லி சுல்தானிடமிருந்து சிலையைக் கொண்டு வரும் வழியில் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரை எதிர்த்து சிலையையும், சுல்தான் கொடுத்த பொன் பொருள் ஆகியவற்றையும் கவர்ந்து கொள்ள முயன்ற போது உடன் வந்தவர்கள் அலற, இராமானுஜர் ”அவனைக் காப்பாற்றிக் கொள்ள அவனுக்குத் தெரியும்” என்று சொல்லி அமைதிப்படுத்தினார்.
அருகிலிருந்த சேரிமக்கள் இவர்கள் அலறல் கேட்டு திரளாக ஓடிவந்து கொள்ளைக்காரர்களை விரட்டி, இராமானுஜரையும் மற்றவர்களையும் ஊரின் எல்லை வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தனர். அவர்கள், “கோயிலுக்குள் நுழைய தங்களுக்கு அனுமதியில்லை” என்று சொல்லி விடை பெற்றுக்கொள்ள முயன்றனர். இராமானுஜர் இறைவனைக் காப்பாற்றிய அவர்களுக்குத்தான் உண்மையிலேயே அதிக உரிமை உண்டு என்று சொல்லி அவர்களையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்தவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை இருந்த அந்தக் காலத்தில் முதன் முதலாக தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் கொண்டு சென்ற பெருமை இதன் மூலம் இராமானுஜருக்குக் கிடைத்தது.
இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, ஆற்றில் குளிக்கச் செல்லும் போது தனது சீடர்களுள் உயர்குலத்தைச் சேர்ந்த நம்பியாண்டான், கூரத்தாழ்வான் ஆகிய இருவரின் தோள் மீதும் கைபோட்டபடி செல்வார். குளித்து விட்டுத் திரும்பும் போது வில்லிதாசன் எனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் தோளில் கை போட்டபடி திரும்புவார். இராமானுஜரின் இச்செயலில் எரிச்சலடைந்த உயர்சாதியினர் அவரைப் பற்றித் தவறாக விமர்சித்தனர். அப்போது, “வில்லிதாசனைத் தொடுவதால்தான் நான் மிகவும் சுத்தமாகிறேன்” என்பார்.
ஆளவந்தாரின் மாணவர் மஹாபூர்ணரின் நண்பர் மாறனேரி நம்பி. இவர் பிறப்பால் தாழ்த்தப்பட்ட சாதியினர். மாறனேரி நம்பி இறந்தவுடன் அவருக்கான இறுதி சடங்குகளை செய்தவர் மஹாபூர்ணர். ஒரு தாழ்ந்த சாதியினனுக்கு பிராமணன் இறுதி சடங்கு செய்யலாமா? என திருவரங்கத்து உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவித்த போது அதை முறியடித்தவர் இராமானுஜர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சேரியில் வசித்த மக்கள் என்று தாழ்த்தப்பட்ட நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களை ஆலயப் பிரவேசம் செய்வித்த இராமானுஜரின் புரட்சி இன்றும் போற்றப்படுகிறது.”பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. கல்வியில் சிறந்தவரே உயர்ந்தவர். தவம், கல்வி, ஆள்வினை இவற்றால் ஆவதே குலம்” என்றார் இராமானுஜர்.
இராமானுஜர் வட மொழியில் நித்ய க்ரந்தம், கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த ஸாரம், வேதாந்த தீபம், வேதார்த்த ஸங்க்ரஹம், மற்றும் கத்யத்ரயம் என்ற மூன்று உரைநடை நூல்களான ஸ்ரீ வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், சரணாகதி கத்யம் என்ற ஒன்பது நூல்களை செய்தருளினார். ஆழ்வார்கள், நாதமுனிகள், ஆளவந்தார் மூலம் இராமானுசருக்கு எட்டிய வைணவ சமயத்தை திருவரங்கரே எம்பெருமானார் தரிசனமென்று பெயரிட்டார் என்றும், திருக்குறுகூர் நம்பியே இராமானுசரிடம் சீடராக ஆசைப்பட்டு திருவிலச்சிணை பெற்று வைணவ நம்பி என்ற திருநாமம் பெற்றார் என்றும் இராமானுஜரின் புகழ் பரப்பும் சில வரலாறுகள் சொல்கின்றன.
பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையிலும், விசிஷ்டாத்வைதத்தை நாடெங்கும் பரப்பிய புரட்சியாளரான இராமானுஜர் தனது நூற்றியிருபதாம் ஆண்டில் தனது கடமையை முடித்து இவ்வுலகை விட்டு நீங்கும் தறுவாயில் இவரது சீடரான முதலியாண்டான் வேண்டுகோளின்படி அவர் வடித்த உருவச்சிலையை தானே தழுவித்தந்து, இராமானுஜர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த திருமேனி” யாய் கோவில் கொண்டார். இவ்வாறு கோவில் கொண்ட ஒருவாரத்திலேயே இராமானுஜர் நோய்வாய்பட்டு காலமானார். இவரது விமலசரம விக்கிரகமான பூதவுடலை ஸ்ரீரங்கத்து பெரியோர்களும் அவர் சீடர்களும் அரங்கன் கோவில் சுற்றிலேயே திருப்பள்ளிப்படுத்தி அவ்விடத்து திருமண்ணால் உருவச்சிலை அமைத்து வழிபடலாயினர். இந்தத் திருமேனி “தானான திருமேனி” என்றழைக்கப்படுகின்றது. பின்பு திருநாராயணபுரத்து சீடர்கள் வழிபட அமைத்த உருவம் “தமருகந்த திருமேனி “என்றழைக்கப்படுகின்றது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment