Monday 6 November 2017

ஞானிக்கு பக்தி அவசியமா







ஒரு சமயம், ஆதிசங்கரர் ஆகாய வழியில் வானில் பறந்து சென்ற போது, மூவுலகிலும் இருப்பவரான நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைப் பார்த்தார்.
“அவசரமாக எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்களே” என்று கேட்டார்.
“இன்று ஏகாதசி. குருவாயூரப்பனை தரிசிக்க செல்கிறேன். நீங்களும் வாருங்களேன்” என்று சங்கரரையும் அழைத்தார் நாரதர்.
“விக்ரக ஆராதனை செய்வதும், நாமஜபமாக இறைவனின் பெயரை உச்சரிப்பதும் பாமரருக்குத் தான் தேவை. ஆத்மஞானம் பெற்றவர்களுக்கு தேவையல்ல” என்ற கருத்துடைய சங்கரர் அவருடன் செல்ல மறுத்துவிட்டு தன் ஆகாயப் பயணத்தைத் தொடர்ந்தார்.
குருவாயூர் கோயிலைக் கடந்து செல்லும் போது, சங்கரர் வானில் இருந்து கோயிலின் வடக்குவாசலில் போய் விழுந்தார். குருவாயூரப்பனின் லீலையை எண்ணி வியந்து, தன்னுடைய கருத்து தவறானது என்பதை உணர்ந்து வருந்தினார். பெருமாளிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
அவர் முன் தோன்றிய குருவாயூரப்பன், “ஞானிக்கும் பக்தி அவசியம்’என்று எடுத்துக் கூறினார். நீலமணிவண்ணனான கண்ணனின் பெருமைகளை எண்ணி ஆதிசங்கரர் அவ்விடத்தில் 41நாட்கள் வரை தியானத்தில் ஆழ்ந்து குருவாயூரப்பனை வழிபாடு செய்தார்.
இன்றும் குருவாயூரப்பன் வீதி உலா வரும்போது ஆதிசங்கரர் வழிபட்ட இடத்தில் மேளதாளங்கள் இசைக்காமல் அமைதியாகக் கடந்து செல்கின்றனர். அப்போது குருவாயூரப்பனிடம் ஆதிசங்கரர் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம். (தொன்ம நம்பிக்கை). என்றும் சொல்கிறார்கள்.
அத்வைதம் மூலம் உலகிற்கு ஒரு புது ஒளி ஏற்றிய சங்கரர் தன் புலமையால் வேதாந்த சூத்திரங்களை எழுதிய பட்ட பாஸ்கராவை விவாதத்தில் வென்றார். இதுபோல் தண்டிக்கும், மயூராவிற்கும் வேதாந்தத்தைக் கற்பித்தார். அபினவ குப்தா, முராரி மிஸ்ரா,உதயணாசாரியர், தர்ம குப்தர், குமரில, பிரபாகரா போன்றோரையும் பல்வேறு இடங்களில் நடந்த விவாதங்களில் வென்றார். இப்படி நாட்டின் பல பகுதிகளிலும் தன் புலமையால் வெற்றியைப் பெற்று தன் கொள்கைகளை வலியுறுத்திச் சென்று கொண்டிருந்தார். அவருடன் விவாதத்தில் தோற்ற பலரும் அவருடைய சீடராக மாறினார்கள்.
இந்நிலையில் சங்கரர் மஹிஷ்மதியில் கர்மமீமாம்சத்தில் தேர்ந்தவரும்,சந்நியாசிகளை வெறுப்பவருமான மண்டன மிஸ்ரர் என்பவரை சந்தித்தார். சங்கரர் மண்டன மிஸ்ரரை பொதுவான விவாதத்திற்கு அழைத்தார். விவாதத்திற்கு ஒப்புக்கொண்ட அவர் சகல சாஸ்திரங்களிலும் பண்டிதையான தம் மனைவி சரசவாணியை (பாரத தேவி என்றும் குறிப்பிடுவர்) நடுவராகக் கொள்ள சம்மதித்தார். சங்கரர் தோல்வியுற்றால் கிருகஸ்தாஸ்ரமத்தைத் தழுவி திருமணம் செய்து கொள்வதாகவும், மண்டன மிஸ்ரர் தோற்றால் தம் மனைவியிடமிருந்தே காஷாயம் பெற்று சந்நியாசியாக வேண்டும் என்றும் சபையோர் முன்னிலையில் இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இரவும், பகலுமாக மண்டன மிஸ்ரருக்கும், சங்கரருக்குமிடையே வாத விவாதம் பதினேழு நாட்களுக்கு தொடர்ந்தது. சரசவாணி இருவர் கழுத்திலும் மலர்ந்த புஷ்பங்களால் உருவாக்கப்பட்ட மலர் மாலைகளை அணிவித்து விட்டு தம் வேலைகளை கவனிக்கத் தொடங்கினார். கடைசியில் மண்டன மிஸ்ரர் அணிந்திருந்த மலர்மாலை முதலில் வாடத் தொடங்கியது. இதன் பின்பு மண்டன மிஸ்ரர் தம் தோல்வியை ஏற்றுக் கொண்டார். காஷாயம் தரித்து சங்கரரின் சீடரானார்.
இதைக் கண்ட சரசவாணி தம் கணவரின் பத்தினியான தம்மையும் வென்றால் தான் வெற்றி முழுமை அடையும் என்று கூறினார். முதலில் பெண்ணுடன் விவாதிப்பதா என்று சங்கரர் தயங்கினாலும்,அவ்வம்மையார் சங்க கால மகளிரின் புலமையை பல மேற்கோள்களுடன் எடுத்துக்காட்ட பின்னர் சம்மதித்தார். சங்கரர் மேலும் பதினேழு நாட்கள் தொடர்ந்து விவாதித்து வெற்றி பெறும் நிலையில் இருந்தார். அப்பொழுது சரசவாணி பிரம்மசாரியான சங்கரரிடம் காம சாஸ்திரத்தைப் பற்றிக் கேள்வி கேட்டார். சந்நியாசியான சங்கரரால் அதற்குப் பதில் சொல்ல இயலவில்லை.
சங்கரர் சரசவாணியிடம் தன் தோல்வியைத் தற்காலிகமாக ஒப்புக் கொண்டதுடன் தனக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்குமாறும் வேண்டினார். ஒரு மாத காலத்திற்குள் அவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதாகவும் கூறிச் சென்றார். சரசவாணியும் அதற்குச் சம்மதித்தார்.
அதன் பிறகு சங்கரர் தன் சீடர்களுடன் காசிக்குச் சென்றார். இல்லறவியலைக் கண்டறியவும், சிற்றின்பத்தின் எல்லையை அறியவும், மது, மங்கை, மோகம், காமம் போன்ற கலைகளை அறியவும், சந்நியாசியான தன் உடலால் இன்பம் எதுவும் அனுபவிக்கக் கூடாது என்றும் முடிவு செய்த அவர் பரகாய பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாய்தல்) செய்ய முடிவு செய்தார்.




இதற்காகத் தான் பிரவேசிக்கப் போகும் உடல் கிடைக்கும் வரை காத்திருக்க முடிவு செய்து ஆத்ம யோகத்தில் அமர்ந்தார். சங்கரரின் யோக நிலையில் அந்த நாட்டு மன்னன் அமரூகன் என்பவன் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் மரணமடைந்தது தெரிந்தது. அவன் அதிகமாக மது அருந்துவதுடன் காமப்பித்து பிடித்து பல கன்னியர்களைக் கொண்டு வந்து இன்பம் அனுபவித்து வந்தவன் என்பதும் தெரிந்தது.
உடனே தன் சீடர்களில் முக்கியச் சீடரான பத்மபாதர் என்பவரை அழைத்து, “இந்த நாட்டு மன்னன் காமுகன், பல கன்னியர்களுடன் இன்பமுற்றவன். மது அருந்துபவன். அளவுக்கதிகமாக மது அருந்தியதால் அவன் இன்று இறந்து விட்டான். அவன் உடலில் தான் பிரவேசிக்கப் போகிறேன்” என்றார்.
இதைக் கேட்ட சீடர் பத்மபாதர், “தாங்கள் முற்றும் துறந்த சந்நியாசி மற்றும் ஞானி. தாங்கள் இறந்து விட்ட அந்த அரசன் உடலில் பிரவேசித்து அந்தப்புரத்து அழகிகளுடன் இருப்பதாலும்,அரண்மனையில் கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கையில் வாழ்வதாலும் தங்கள் உண்மைத் தன்மைக்கு ஊறு ஏற்பட்டு விடாதா?” என்று கேள்விகளைக் கேட்டார்.
சங்கரர், “தேளாலும், பாம்பாலும் நமக்குப் பயம் உண்டாகிறது. நாமே தேளாகவும், பாம்பாகவும் மாறிவிடும் போது பயம் தேவையில்லை. நான் சரசவாணியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அதற்கு இதுவே சரியான வாய்ப்பு. அரசன் அமரூகன் உடலில் பிரவேசித்து அனுபவப்பூர்வமாக விடை அறிந்து கொள்வேன். ஒரு மாத காலத்திற்குள்ளாகவே என் உடலுக்குத் திரும்பி விடுவேன். அதுவரை இந்த உடலை அகோபில குகையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருங்கள்” என்று கூறியபடி கீழே படுத்தார்.
அந்த உடலிலிருந்து சங்கரரின் ஆவி பிரிந்து சென்று அரண்மனையில் இறந்து கிடந்த அரசன் அமரூகன் உடலுக்குள் பிரவேசித்தது. அமரூகன் உயிர் பெற்று எழுந்தான். அவனுக்குச் சிகிச்சையளித்த வைத்தியரும், அருகிலிருந்த அமைச்சரும் ஆச்சர்யமடைந்தனர். உடனே ராணி, அரசனும் தன் கணவனுமான அமரூகனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அமரூகன் விரும்பும் மதுவை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்தாள். அமரூகன் அதை வாங்கிக் கீழே ஊற்றி விட்டு இந்த விசத்தை இனி குடிக்க மாட்டேன் என்றான். ராணி மீண்டும் மீண்டும் ஊற்றிக் கொடுக்க அவனும் குடிக்க மாட்டேன் என்றவாறு கீழே ஊற்றிக் கொண்டேயிருந்தான்.
மரணத்துக்குப் பின்பு உயிர்த்தெழுந்த மன்னன் தன் எண்ணங்களாலும், குணநலன்களாலும் முற்றிலும் மாறியிருந்ததைக் கண்டு ராணிகளும், அமைச்சர்களும் மகிழ்ந்தனர். அரசனின் உடலில் இருப்பது அமரூகன் உயிரல்ல, வேறு ஏதோ ஒரு மகானின் உயிர் என்பதை உணர்ந்து கொண்டனர். மன்னனை அந்த மகானின் உயிருடன் அப்படியே வைத்துக் கொள்ள விரும்பினர்.
இதனால் சில தூதுவர்களை அனுப்பிச் சுற்றுப்புற காடுகளிலும்,குகைகளிலும் யோக வல்லுனர், ஞானி ஒருவரின் உடல் எங்காவது ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்று தேடி அழிக்க உத்தரவிட்டனர். அவர்களும் உயிரற்ற உடல் எங்கிருந்தாலும் அழிக்கும் நோக்கத்துடன் சென்றனர். சர்வ சக்தி படைத்த மாயையின் வசமான சங்கரர் அரசிகளுடன் கூடி மகிழ்ந்து அம்ரூகன் பெயரால் அமரூகம் எனும் தனி காவியத்தையும் எழுதிக் கொண்டிருந்தார். இதனால் தாம் வந்த காரியத்தையும், தம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் மறந்திருந்தார்.
சங்கரர் அமரூகனின் உடலில் பிரவேசித்து ஒரு மாத காலமாகக்கூடிய நிலையில் குரு வராமல் போகவே அவருடைய சீடர்கள் அரசவையை அடைந்தனர். அவர்கள் மன்னர் முன் சில தத்துவப் பாடல்களைச் சொல்ல சங்கரருக்கு பூர்வாசிரம நினைவுகள் திரும்பியது. தான் எழுதிக் கொண்டிருந்த அம்ரூத காவியத்தைச் சீடர்கள் கையில் கொடுத்து விட்டுத் தம் உடலைத் தேடிப் புறப்பட்டார். அம்ரூகன் உடல் கீழே விழுந்தது. இதற்குள் அரச தூதுவர்கள் அகோபில குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சங்கரரின் உடலை எடுத்துச் சென்று எரியூட்டத் தொடங்கி இருந்தனர். இதையறிந்த சங்கரர் தன் யோக சக்தியினால் சிதையிலிருந்த தனக்குரிய உடலுக்குள் பிரவேசித்தார். அப்படியே சிதையில் எரிந்து கொண்டிருந்த தீ அணைந்திடவும் வேண்டினார். மழை பெய்து தீ அணைந்தது.
அதன் பிறகு சங்கரர் சிதையிலிருந்து எழுந்து வந்தார். தான் எழுதிய அம்ரூக காவியத்துடன் மீண்டும் மண்டன மிஸ்ரருடைய இல்லத்திற்குச் சென்று சரசவாணியின் எல்லாக் கேள்விகளுக்கும் தக்கவாறு பதிலளித்து வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் மண்டன மிஸ்ரர் மற்றும் அவரது மனைவி சரசவாணி இருவரும் சேர்ந்து தங்களுடைய செல்வம் அனைத்தையும் சங்கரருக்குக் கொடுத்தனர். தங்களைச் சீடராக ஏற்றுக் கொள்ளவும் வேண்டினர். சங்கரர் அதை அவ்வூரிலிருந்த ஏழை எளியவர்களுக்கும்,இல்லாதவர்களுக்கும் பகிர்ந்தளித்தார். மண்டன மிஸ்ரருக்கு சுரேஷ்வராச்சார்யா என்ற பெயரில் சந்நியாச தீட்சை அளித்து சிருங்கேரிக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த மடத்திற்கு பீடாதிபதியாக்கினார். சரசவாணியை சிருங்கேரி மடத்தின் சாரதையாக இருக்கச் செய்தார். (மண்டன மிஸ்ரர், சரசவாணி ஆகியோர் பிரம்மா, சரசுவதி ஆகியோரின் அம்சம் என்று சொல்கின்றனர்)

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment