Monday, 4 December 2017

மஹா பெரியவா அற்புதங்கள்

மஹா பெரியவா அற்புதங்கள் .

நைவேத்யம் !!

திருச்சியில் ஒரு போட்டோ ஸ்டுடியோ சொந்தக்காரர். பெரியவா பக்தரும் கூட. பூஜையறையில் காஞ்சி மகானின் படம் பிரதானமாக இருக்கும்.

தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு, ஏதாவது ஒரு நைவேத்யம் மகாபெரியவர் படத்துக்கு முன் வைத்து வணங்கிவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார். பெரியவாளின் நாமத்தை அவரது உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.

ஒரு தடவை பெரியவா, ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலுக்கு விஜயம் செய்திருந்தார். அதுவோ உஷ்ணப் பிரதேசம். வெயில் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருந்தது.

திருச்சியில் இருந்த போட்டோகாரர் பெரியவாளைத் தரிசிக்க வேண்டும் என்று மனதில் ஆசை. அன்று காலை ரயிலில் புறப்படும்முன் வழக்கம்போல் பெரியவா படத்துக்கு முன்னால் நைவேத்யமாக பாலை காய்ச்சி ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டுப் போனார்.

கர்நூலில் அதிகமான பக்தர் கூட்டம். எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம். நமது போடோக்காரர் எந்தப் பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லை. சற்றுத் தூரத்தில் இருந்த மணற் குவியல் ஒன்றின்மீது ஏறி நின்று மகாப் பெரியவாளைத் தரிசிக்க முயன்றார். வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டது. கும்பல் குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார். இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு.

சற்றுத் தூரம்தான் நடந்திருப்பார். யாரோ அவரைக் கூப்பிடுவதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தார்.

காஞ்சி மடத்தில் வேலை பார்க்கும் சிப்பந்தி ஒருவர் வேகமாக போடோக்ராபரிடம் இவரிடம் ஓடி வந்தார். “ நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க ?”

“ஆமாம்”

“பெரியவா உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.”

“என்னையா ?” — பக்தருக்கு வியப்பு.

“நீங்க போட்டோகிராபர் தானே ?”

“ஆமாம் ”

“ அப்படியென்றால் உங்களைத்தான் அழைச்சுண்டு வரச் சொன்னார், வாருங்கள்”

விடாப்பிடியாக அவரை அழைத்துக் கொண்டுபோய் பெரியவா முன் நிறுத்தினார், அந்தச் சிஷ்யர். கைகளைக் கூப்பியவாறு,

கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட, புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார்.

அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மகான், “ என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கே… கடைசியில் பார்க்காமலே போனால் என்ன அர்த்தம் ?” என்றார்.

“கும்பல் நிறைய இருந்தது, அதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு” என்று தடுமாற்றத்துடன் இழுத்தார் போடோகாரர்.

“சரி. சரி.. சாப்பிட்டியோ ? “

“ சாப்பிட்டேன் ! ”

சில வினாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார். “ என் வாயைப் பார்த்தியோ ?”

நாக்கை வெளியே நீட்டுகிறார். சூடுபட்டது போல் சிவந்திருக்கிறது. பிறகு கேட்டார். “ உதடெல்லாம் கூடப் புண்ணாகி விட்டது.
'' ஏன் தெரியுமா ?”

போடோகாரருக்கு என்ன சொல்றதுன்னு புரியவில்லை.

“நீ பாலைச் காய்ச்சி கொதிக்க கொதிக்க சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா… அதான்! “

திருச்சிக்காரருக்குப் புறப்படும்போது தான் சூடாக அவர் படத்தின் முன்பு பாலைக்காய்ச்சி வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மஹா பிரபு, என்னை மன்னியுங்கள் “ என்று கதறினார்.

எந்த அளவுக்கு பக்தியோ அந்த அளவுக்கு காஞ்சி மகானுக்கு பக்தர்கள் அளிப்பதை விரும்பி ஏற்கும் கருணை!

ஜெய ஜெய சங்கரா !! ஹர ஹர சங்கரா !!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment