Friday 21 July 2017

லிங்கோத்பவ மூர்த்தி

அநேகமாக எல்லா சிவாலயங்களில் கர்ப்பக் கிரஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். 


(சில கோயில்களில் மட்டும் இந்த இடத்தில் மஹா விஷ்ணு இருக்கிறார்) லிங்கோத்பவ மூர்த்தி என்பது பரமேசுவரனுடைய அறுபத்தி நான்கு மூர்த்திகளுக்குள் ஒன்று.
விருஷபாரூடர், அர்த்தநாரீசுவரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள் பரமசிவனுக்கு உண்டு. அவைகளுக்குள் ஒன்று லிங்கோத்பவ மூர்த்தி.
அந்த மூர்த்திதான் சிவாலயத்திலுள்ள லிங்கத்துக்குப் பின்புறம் காணப்படுகிறது. அதில், லிங்கத்துக்குள் ஒரு திவ்விய மூர்த்தி இருக்கும். அதன் ஜடா மகுடம் லிங்க வட்டத்துக்குள் முடியாமலே இருக்கும். அதன் பாதமும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. இந்த மூர்த்திக்குக் கீழே ஒரு வராக மூர்த்தி இருக்கும். மேலே ஹம்ஸ ரூபத்தில் ஒரு மூர்த்தி இருக்கும்.
இந்த லிங்கோத்பவர் யார்?
ஸ்ரீ ருத்ராபிஷகம் பண்ணுவதற்கு முன்பு ஒரு சுலோகம் சொல்லிவிட்டு, அப்புறம்தான் அபிஷகம் பண்ணுவது வழக்கம். அந்த சுலோகம்.
ஆபாதால நப: ஸ்தலாந்த புவன ப்ரஹ்மாண்டமா விஸ்புரத் ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத் பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம் ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம் விப்ரோ மிஷிஞ்சேத் சிவம் II

இந்த ஸ்லோகத்தில் என்ன தெரியுமா சொல்லியிருக்கிறது?. பாதாள முதல் ஆகாச பரியந்தம் எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாகப் பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும் என்று சொல்லியிருக்கிறது.
ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும் சொல்ல முட்யாது. எந்த வஸ்துவை அதில் வைக்கிறோமோ அதனுடைய வர்ணத்தை அது பிரதிபலிக்கும். குண-தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிகலிங்கம் இருக்கிறது. அதன் பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அது நிர்விகாரமானது. பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அது எதையும் மறக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ்களங்க திருஷ்டாந்தம். நினைக்கிற ரூபமாக இது தெரியும்.
மேலே சொன்ன சுலோகப்படி, அதன் சிரஸில் பூரண சந்திரன் இருக்கிறது. பூர்ணேந்து என்று சுலோகத்தில் வருவது. ‘பூரண இந்து!': இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈஸ்வரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு,கை, கால் முதலிய அவயங்களும் கொண்ட “ஸகள” ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக் கொண்டு சந்திர மௌளியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா நிஷ்கள் தத்வமாயிறுக்கிறபோது, அங்கே சந்திரன் கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயங்களோடு இல்லாமல், லிங்கமாக சகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூரண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிர்கமே கங்கை மாதிரி கொட்டுகிறது.
யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அமிருத்தம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது.
ஸமஸ்த ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவ லிங்கத்துக்கு ஒயாமல் அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம், இதை எல்லாம் அறிவுருத்துவது.
லிங்கம் ஏன் வட்ட வடிவமாயிருக்கிறது?
வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான் அடி முடியில்லை. ஆத்யில்லை. அந்முமில்லை. மற்றவர்களுக்கு உண்டு. முக்கோணத்துக்கு சதுரத்திற்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் காட்டுகிறது.
சரியான வட்டமான ( circle ) இல்லாமல், லிங்கம் நீள வட்டமாக (ellipse) இருக்கிறது. பிரபஞ்சமே எல்லிப்டிக்காகத்தான் இருக்கிறது. நம் சூரிய மணிடலத்தை (Solar System) எடுத்துக் கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீள்வட்டமாகத்தான் இருக்கிறது. என்று நவீன விஞ்ஞானத்தில் சொல்வதும், பிரம்மாண்டமும் ஆவிஸ்புரத் என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூபத்துக்கு மிகவும் ஒற்றுமையாக இருக்கிறது.
யாராவது பந்துவை நினைக்கிறோம். சந்தோஷமாயிருக்கிறது. அவருடைய உறுவத்தையும் பார்த்தால்தான் சந்தோஷம் பூரணமாகிறது. அவ்வாறே உறுவமற்ற சிவமும் ஒரு உருவத்தோடு வந்து அநுக்கிரகம் பண்ணினால் தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும். உருவத்தைப் பார்த்து ஆனந்தம் அநுபவிக்கிற நமக்கு உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும்.
அதற்காகத்தான் உறுவமற்ற பரமேசுவரன், அருவுருவான லிங்கமானதோடு நில்லாமல், அந்த லிங்கத்துக்குளேயே திவ்விய ரூபம் காட்டும் லிங்கோத் பவ மூர்த்தியாக இருக்கிறார். இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை. அதாவது ஆதியும் அந்தமும் அற்ற ஆனந்த வஸ்துவே தாம் என்று உணர்த்துவதற்காக, மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே அந்த மாதிரித் தம் பாதம் அதற்குள் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்.
அடிமுடி எல்லை இல்லாமல், அவர் ஜ்யோதி ஸ்வரூபமாக நின்றார்.ஜ்யோதிர்லிங்கமாக,ஆகாயத்துக்கும் பூமிக்குமாக பரமசிவன் உத்பவித்த இரவே சிவராத்திரியாகும்.
அப்படி ஜ்யோதிஸ்வரூபமாகப் பரமேசுவரன் நின்ற பொழுது, விஷ்ணு அவரது பாதத்தைப் பார்க்க பாதாளத்துக்குப் போனார். பூமியைக் கல்லும் ஸ்வபாவம் வராஹத்திற்கு உண்டு. எனவே, அந்த ரூபத்தை எடுத்துக் கொண்டார்.
பிரம்மா ஹம்ஸ ஸ்வரூபமானவர். பட்சிக்குப் பறப்பது ஸ்வபாவம். பட்சியாகப் பறந்து ஜோதிர்லிங்கத்தின் முடி தேடிப்போனார். இரண்டு பேருக்கும் தேடிப் போனவை அகப்படவில்லை. ஹம்ஸம் வந்தது. நான் கண்டு விட்டேன் எனப் பொய் சொல்லியது. அதனால்தான் பிரம்மாவுக்குப் பிரத்தியோகமாகப் பூஜை இல்லாமல் போய் விட்டது. பரிவாரமாக மட்டும் வைத்துப் பூஜை செய்வதுண்டு. புராண ஐதிஹ்யத்தில் இப்படி இருக்கிறது.
பிரம்மா ஹம்ஸரூபமாகப் போய்ப் பார்த்ததும் சிவ பெருமானின் சிரஸ் அகப்படவில்லை என்றும் சொல்வதின் தாத்பரியம் என்னவென்றால், பரமாத்மர் ஆதி அந்த ஹீனமான வஸ்து என்பதுதான். சிருஷ்டி, பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து அது எந்பதுதான். இப்படி அடி முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாக வரையே, என் சாமர்த்தியத்தால் அறிய முடியும் என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால், வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார்.
அன்பினாலே மிகமிக திருப்தி பெற்று அநுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதாலேயே, அவருக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் இருக்கிறது. ஆஷ§டோஷ் முகர்ஜி என்று ஒரு சீர்திருத்த (Reformist) முக்கியஸ்தரைச் சொல்வார்கள். ஆசுதோஷிதான் ஆஷ§டோஷ் என்றாயிற்று.
ஆசுகவி என்றால் கேட்டவுனேயே கவி பாடுகிறவர் அல்லவா?
இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளள்தான் ஆசுதோஷி.
சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் இல்லை.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment