Wednesday 5 July 2017

நன்மை அருளும் ராகுகால பூஜை !!!

நன்மை அருளும் ராகுகால பூஜை !!!


சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை வழிபாடு செய்ததின் பயனாகவே கிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் 1½ மணி நேரம் ராகுவும், 1½ மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபடும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபடும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நேரங்களில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்பதாலேயே, ராகுகாலத்தில் சுப காரியங்களை செய்வது தவிர்க்கப்படுகிறது. அதே சமயம் ராகு காலத்தில் அம்மனை ஆராதிப்பது, குறிப்பாக சண்டிகையாகவும், துர்க்கையாகவும் தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரக் கூடியது என்கிறது தேவி பாகவதம்.
ராகுகாலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1½ மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. அதிலும் சிறப்பானது செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும், அம்பிகையை ‘மங்கள சண்டிகையாக’ வணங்குவதே காரணம். செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நற் பலன் தரும். துர்க்கையை பார்த்தபடி தீபம் ஏற்றுவது நல்லது. கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றவேண்டும்.
வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகுகாலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும். இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.
அதன்படி செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.
வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
வீட்டில் பூஜை செய்யும் முறை
ராகுகால துர்க்கை பூஜையை இயன்றவரை கோவிலில் செய்வதே நல்லது. முடியாத நேரத்தில் அவரவர் வீட்டிலும் செய்யலாம். ராகுகால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் அருந்தலாம்.
வீட்டு பூஜை அறையை மெழுகி கோலமிட வேண்டும். சுத்தமான மணைப் பலகை ஒன்றின் மீது நுனி வாழை இலையை வைத்து (நுனி வடக்கு பார்த்து இருப்பது நல்லது), அதன் நடுவே சிறிது பச்சரிசியைப் பரப்பி, அதன் மையத்தில் சிறிது துவரம் பருப்பைப் பரப்புங்கள். இந்த அமைப்பின் நடுவே குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கை வைத்து, அதனை துர்க்கையாக பாவித்து, பொட்டு வைத்து, பூ போட்டு பின்னர் விளக்கேற்ற வேண்டும். அதன் முன் எலுமிச்சைப் பழத்தின் சாறை ஒரு பாத்திரத்தில் பிழிந்து விட்டு, மூடியில் திரி போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.
செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள். தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள். துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும். தயிர் சாதம், பால் பாயாசம் என உங்களால் இயன்ற நிவேதனங்களோடு, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறினை சேர்த்து பானம் தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள். பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள். ராகுகாலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment