Tuesday 18 July 2017

இராவணனின் அடாத ஆசை ! அடக்கினான் ஆலிலை கண்ணன் !!

இராவணனின் அடாத ஆசை !
அடக்கினான் ஆலிலை கண்ணன் !!


கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கரா பகுதியிலுள்ள ஏழு முக்கிய மான புண்ணிய தலங்களில் கோகர்ணமும் ஒன்று. அரபிக் கடலின் ஓரமாக இத்தலம் அமைந்துள்ளது.
சிவபெருமான் தன் சக்தியால் உருவாக்கிக் கழுத்தில் அணிந்து கொண்டிருந்த ஆத்ம லிங்கம் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப் பதால், கோகர்ணம் மிக முக்கிய க்ஷேத்திரமாக விளங்குகிறது.
இராவணனின் தாயார் ஒரு கோடி லிங்கங்களை வைத்து வழிபட வேண்டும் என்ற தன் விருப்பத்தை மகனிடம் கூறியதாகவும்; அவன் அத்தனை லிங்கங்களை எப்படிச் சேகரிப்பது என்று புரியாமல் முனிவர்களை அணுகி ஆலோசனை கேட்டதாகவும்; அவர்கள், "தினமும் ஆத்ம லிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூஜித்தால், ஒரு கோடி லிங்கங்களை வைத்து வழிபட்ட பலன் கிடைக்கும்' என்று கூறியதாகவும் ஐதீகம்.
இந்த ஆத்ம லிங்கத்தைப் பெறுவதற்காக இராவணன் கடினமான தவம் இருந்தான். அது கண்டு அகம் மகிழ்ந்த சிவபெருமான் அவன் கேட்ட வரத்தை அளித்து, அந்த ஆத்ம லிங்கத்தை இலங்கை சென்றடையும் வரை தரையில் எங்கேயும் வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தார். யாரொருவர் ஆத்ம லிங்கத்தைத் தொடர்ந்து மூன்று வருட காலம் பக்திச் சிரத்தையோடு பூஜை செய்து வருகிறார்களோ அவர் சிவனுக்குச் சமமான சக்தியைப் பெறுவார் என்பதால், பிரம்மா, விஷ்ணு முதல் இந்திராதி தேவர்களும், சிவன் இராவணனுக்கு அளித்த வரத்தைப் பற்றி அறிந்து, மிகவும் பயந்து அவரிடம் சென்று முறையிட்டனர். அவர், ""எப்படியாவது இராவணன் ஆத்ம லிங்கத்தை தரையில் வைக்கும்படிச் செய்துவிட்டால் அதைத் திரும்பப் பெறலாம்'' என்ற ஒரே வழியைக் கூறினார். இதைச் செய்வதற்கு சிவபிரானது மூத்த புதல்வனான விநாயகப் பெருமானும் விஷ்ணுவும் உதவ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர் பிரம்மா மற்றும் தேவர்கள்.
ஆத்ம லிங்கத்துடன் வந்து கொண்டிருந்த இராவணன் பகல் சுமார் மூன்று மணிக்கு கோகர்ணத்தை அடைந்தான். அப்போது திருமால் தம் சக்கரத்தைச் சூரியனுக்கு முன்பாக நிறுத்தவே, இராவணன் சூரியன் அஸ்தமனமாகிவிட்டதாக நினைத்து, சந்தியாவந்தனம் எவ்வாறு செய்வது என்று புரியாமல் திகைத்தான். ஆத்ம லிங்கத்தை எப்படித் தரையில் வைப்பது என்ற குழப்பம் அவனுக்கு. அப்போது அந்தணச் சிறுவனின் வடிவத்தில் விநாயகர் ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு அங்கு வருவதைக் கண்ட இராவ ணன் நிம்மதி அடைந் தான். அவன் அச்சிறுவனை அழைத்து, மாலைச் சந்தி செய்யும் வரை லிங்கத்தை வைத்திருக்கும் படி கேட்டான். சிறுவன் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. இராவணன் பலமுறை கேட்கவே, சிறுவன் தான் கூறும் நிபந்தனைக்குக் கட்டுப்படுவ தானால் வைத்திருப்பதாகச் சொன்னான். இராவணன் பூஜையை முடித்துக் கொண்டு விரைவில் திரும்ப வேண்டும்; கால தாமதம் ஆனால் மூன்று முறை அவனுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதாகவும், அவன் வந்து லிங்கத்தைத் தன்னிடமிருந்து பெற்றுக் கொள்ளாவிட்டால் அதைப் பூமியில் வைத்துவிடுவேன் என்றும் கூறினான் சிறுவன்.
இராவணனும் அதற்கு இசைந்து ஆத்ம லிங்கத்தைச் சிறுவனிடம் தந்து விட்டு மாலைக் கடமைகளை நிறைவேற்ற கடற்கரை நோக்கிச் சென்றான். அவன் சென்ற சிறிது நேரத்துக்குள் சிறுவன் இராவணனது பெயரை மும்முறை மெதுவான குரலில் அவசரமாக அழைத்துவிட்டு லிங்கத்தைத் தரையில் வைத்துவிட்டான். உடனே திருமால் தன் சக்கரா யுதத்தைச் சூரியனுக்கு முன்பிருந்து எடுத்துவிடவே, சூரிய கிரணங்கள் பூமியில் பிரகாசமாக விழத் தொடங்கின. மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்த இராவணன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சிறுவனிடமிருந்து லிங்கத்தைப் பெறுவதற்காக ஓடோடி வந்தான். அதற்குள் லிங்கம் தரையில் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துத் திகைத்தான். உடனே கடுங்கோபமுற்று சிறுவன் உருவில் இருந்த விநாயகரது தலையில் ஓங்கிக் குட்டினான்.
பின்னர் லிங்கத்தை எப்படியேனும் தரை யிலிருந்து பெயர்த் தெடுக்க எவ்வளவோ முயன்றான் இராவ ணன். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. அதனால் அந்த லிங்கத்துக்கு "மஹா பலேச்வரர்' என்று பெயரிட்டு, அதன்முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். இதுதான் இந்த ஆலயம் அமைந்த வரலாறு.
மகாபலேச்வரர் கோவிலிலிருந்து 40 அடி தூரத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இங்குள்ள பிள்ளையாரின் தலையில் குட்டுப்பட்ட தழும்பைக் காணலாம்.
இராவணனிடமிருந்து லிங்கத்தைப் பெறும் முயற்சியில் உதவி புரிந்த கணபதியைக் கௌரவிப்பதற்காக, யாத்திரிகர்கள் சிவன் கோவிலுக்குச் செல்லும்முன் கணபதியை முதலில் வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்று சிவபெருமான் உத்தரவிட்டார். இந்தக் கோவிலில் கணபதி நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார்.
மஹாபலேச்வரர் ஆலயம் திராவிடச் சிற்பக்கலை நுணுக்கங்களோடு கட்டப் பட்டுள்ளது. கருவறையில் ஆத்ம லிங்கத்துக்குப் பதிலாக செவ்வக வடிவமான ஒரு கருங்கல் உள்ளது. அதன் நடுவில் ஒரு துளையும், துளை யைச் சுற்றிப் பழுப்பு நிறமான கல் ஒன்றும் உள்ளது. இவை அனைத்தையும் சேர்த்துச் "சாளக்கிராம பீடம்' என்று குறிப்பிடுகிறார்கள். இதன் ஒரு பக்கம் சுவர்ணரேகை என்ற கோடு குறுக்காக ஓடுகிறது. அர்ச்சகர்கள் மந்திரங்களை உச்சரித்த வண்ணம் யானைத் தந்தத்தின் மூலம் துளையின்மேல் நீர் ஊற்றுகிறார்கள். கூடவே யாத்திரிகர்களை அந்தத் துளைக்கு நடுவில் கைவிட்டு, ஆத்ம லிங்கத்துக்கு மேற்புறம் என்று கூறப்படும் திடமான வழவழப்பாக உள்ள கல்லைத் தொட்டுப் பார்க்கச் சொல் கிறார்கள். கோவிலுக்கு வருபவர்களைப் பீடத்துக்கு ஒரு பக்கமாக அமர்ந்து தங்கள் கைகளாலேயே பூஜை செய்யச் சொல்கி றார்கள்.
இக்கோவிலுக்குள், "தாமிர கௌரி' என்று வழங்கும் துர்க்கையின் உருவச்சிலை ஒன்றும்; கோவிலுக்குப் பின்புறம் பார்வதிக்கென்று தனிக்கோவில் ஒன்றும் உள்ளது.
கோவிலுக்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி விட்டு அரபிக்கடலிலும் குளிக்கிறார்கள். பின்னரே ஆலயத் துக்குள் செல்கிறார் கள்
கோகர்ணத்துக் குள் நுழையும் போது காணப்படும் பத்ரகாளி கோவிலைப் பற்றிய வரலாறு இது: இராவணன் தன் தாய்க்காக ஆத்ம லிங்கத்தைப் பெறுவதற்குக் கடுந்தவமிருந்த போது, சிவனும் பார்வதியும் வேறு வடிவில் காட்சி அளித்தார்களாம். இராவணன் பார்வதியின் அழகில் மயங்கி, உடல் முழுவதும் சாம்பலைத் தரித்து, பரட்டைத் தலையுடன் பித்தனைப் போலக் காட்சி அளித்த சிவனிடம் அவருடைய மனைவியைத் தனக்குத் தருமாறு கேட்டானாம். சிவன் தருவதாக ஒப்புக் கொள்ளவே, பார்வதி இராவணனைப் பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினாளாம். இதைக் கண்டு கவலை கொண்ட நாரதர் திருமாலுடன் கலந்து ஆலோசித்தாராம். திருமால், பார்வதி பத்ரகாளியாக மாறுவதற்கு உதவினார். இராவணன் ஆத்ம லிங்கத்தைப் பற்றி அறவே மறந்துபோய், பின்னால் என்ன நிகழ்கிறது என்று அறியாமல், பார்வதி தனக்குக் கிடைத்த தில் பெருமகிழ்ச்சி அடைந்து இலங்கை நோக்கிச் செல்லத் தொடங்கினான். நாரதர் அவனை நோக்கி, ""இலங்கையில் அழகிற் சிறந்த மண்டோதரி இருக்கும்போது, ஏன் பார்ப்பதற்கு அவலட்சணமான பெண்ணை உன்னுடன் அழைத்துச் செல்கிறாய்?'' என்று கேட்டாராம். உடனே திரும்பிப் பார்த்த இராவணன், பார்வதி கோர உருவத்தில் இருப் பதைக் கண்டு ஓட ஆரம்பித்தானாம். ஊரின் நுழைவாயிலில் கோவில் கொண்டுள்ள இந்தப் பத்ரகாளி கோகர்ணத்திலுள்ள தங்களைக் காத்து வருவதாக மக்கள் நம்புகிறார்கள்.
சரித்திரத்தின் வாயிலாகப் பார்க்கும்போதும் கோகர்ணம் மிகவும் முக்கியமான இடமாகும். விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயர் இவ்விடத்தில் தம் எடைக்கு எடை பொன் வழங்கியதாகவும்; சத்ரபதி சிவாஜி ஆத்ம லிங்கத்தைத் தரிசிக்க வந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
ஆத்ம லிங்கத்தை வழிபடுவோருக்கு நிம்மதி யான வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையால், கோகர்ணம் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் யாத்திரிகர்களைத் தன்னிடம் ஈர்க்கிறது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment