Tuesday, 19 September 2017

கர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் !!!

கர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் !!!

1. தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது தொடர்பான கோளாறுகளையும், இடையூறுகளையும் நீக்கும் ஒரே தலமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது.
2. இத்தலம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
3. இத்தலத்துக்கு ஈசனான முல்லைவன நாதர் வினைப் பயனால் ஏற்படும் வியாதிகளை தீர்ப்பதால் அவருக்கு பவரோக நிவாரணன் என்றும் ஒரு பெயர் உண்டு.
4. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலும் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் ஒவ்வொரு தடவை பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போது கர்ப்பரட்சாம்பிகையை மனதில் நினைத்து கொண்டு காணிக்கைப் பணம் தனியாக எடுத்து வைப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். 3 மாதத்துக்கு ஒரு தடவை திருக்கருகாவூர் வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு அந்த காணிக்கையை செலுத்துகிறார்கள்.
5. இங்கு தலவி நாயகராக கற்பக விநாயகர் உள்ளார்.
6. கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர்.
7. இத்தலத்தை வழிபடுவோர்க்குக் குறைப் பிரசவம் ஏற்படுவதில்லை. கர்ப்ப வேதனையும் மிகுதியாவதில்லை. கருவுடன் மரணமடைவோரும் இலர். கருவைத் தருவதும், காப்பதுமாகிய அருள் திறன் பொருந்தி அம்பாள் விளங்குகிறாள். 8. காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச ஆரண்யங்களுள் இதுவுமொன்று.
9. ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
10. இக்கோவிலில் ரதவடிவிலான சபாமண்டபமும் அதில் நித்துவ முனிவர் பூசித்த லிங்கமும் உள்ளது.
11. மூலவர் சுயம்பு மூர்த்தி; மேற்புறம் பிருதிவிபாகம்; புற்று மண்ணாலாகியது. சுவாமி திருமேனியில் முல்லைக்கொடி (இத்தலம் ஒரு காலத்தில் முல்லை வனமாக இருந்ததால்) சுற்றிய வடு உள்ளது.
12. இங்குள்ள நந்தி - உளிபடாத விடங்கமூர்த்தம் என்பர்.
13. இத்தல அம்பாளுக்கு சுத்தமான நெய்யால் தீபமிட்டு, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அந்நெய்யையுண்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
14. சோழர்கள், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன் கால கல்வெட்டுக்கள் உள்ளன.
15. முதலாம் இராசராசன் கல்வெட்டில் “நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் “ என்று தலம் குறிக்கப்படுகின்றது.
16. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
17.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.
18. திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது.
19. மாதவி (முல்லைக் கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்று பெயர் பெற்றது.
20. இத்தலம் ஒரு சிறப்புமிக்க பிரார்த்தனைத் தலமாகும், இத்தலத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் சிறப்புடையது.
21. க்ருத யுகத்தில் தேவர்களும், த்ரேதா யுகத்தில் முனிவர்களும், துவாபர யுகத்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், தேவதைகளும் வணங்கினர். கலியுகத்தில் முனிவர்களும், மனிதர்களும் வணங்கி வரும் தலம் திருக்கருகாவூர் தலமாகும்.
22. அம்மை இத்தலத்தில் 64 சக்தி பீடங்களில் முதன்மையான வீர சக்தியம்மன் ஆக அருள்பாலித்து வருகிறாள்.
23. பொன்னி நதி பாபநாசம் வட்டத்தில் வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
24. இத்திருத்தலத்தில் பிரம்மன், கௌதமர், மன்னர் குசத்துவசன், சங்குகர்ணன் நிருத்துவ முனிவர் முதலியோர் வாழ்ந்து சிவ பூசை செய்ததாக வரலாறு உள்ளது.
25. முல்லைக்கொடியை தல விருட்சமாக கொண்ட தலம் ஆதலால் இத்தலம் மாதவி வனம் என்றும் அழைக்கபடுகின்றது. இதனாலே இறைவரும் முல்லைவனநாதர் என்றும் மாதவிவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
26. முக்தி தரும் சிறப்புத்தலம் என்று ஞான சம்பந்தர் பாடிய தலம்.. தில்லை வனம் காசி திருவாரூர் மாயூரம் முல்லைவனம் கூடல், முதுகுன்றம் - நெல்லை களர்காஞ்சி கழக்குன்றம் மறைக்காடருணை காளத்திவாஞ்சிய என முத்தி வரும்.
27. தட்ச சாபத்தில் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாதம் பௌர்ணமியில் இங்கு வந்து பூஜை செய்ததால் ஒவ்வொரு பங்குனி மாத முழு நிலா நாளன்று சந்திரன் தன் ஒளியால் இறைவனை வணங்குவதைக் காணலாம்.
28. பிரம்மன் படைப்புத்தொழிலில் ஆணவம் கொண்டதால் படைப்புத் தொழில் தடைப்பட்டது, இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி முல்லை வன நாதரை பூஜித்ததால் மீண்டும் படைப்புத்தொழில் கைவரப் பெற்றார்.
29. சுவர்ணகரன் தீய செயலால் பேயுருக் கொண்டான். கார்க்கிய முனிவரால் இத்திருத்தலத்தில் திருவாதிரை நன்னாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பேயுரு நீங்கப் பெற்றான்.
30. கௌதமரிடம் புகலடைந்த முனிவர்களின் சூழ்ச்சியால் பசுக்கொலை புரிந்த பாவத்திற்கு ஆளானார். போதாயனார் முனிவரின் சொற்படி நீராடி ஒரு லிங்கத்தை வைத்து பூஜித்தால் பசுக் கொலைப்பழி நீங்கியது. கௌதமேஸ்வரர் என்ற பெயருடன் அம்மன் சன்னதியில் ஒருத் தனிக் கோவில் உள்ளது.
31. மன்னன் குசத்துவன் காட்டில் வேட்டையாடும் போது சத்திய முனிவரின் சாபத்தால் கொடும்புலி உருப்பெற்று சத்திய கூப தீர்த்தத்தில் நீராடு சுய உருப்பெற்றான்.
32. சங்கு கர்ணன் என்னும் அந்தணன் விந்தியா குருஷன் மகளை திருமணம் செய்ய மறுத்ததால் அவர் சாபப்படி பேயுருப் பெற்றான். பின் முன் வினைப்பயனால் இத்திருத்தல எல்லையை அடைந்ததும் பேயுரு நீங்கப்பெற்றான்.
33. இத்தலத்தின் சோமாஸ்கந்தர், நடராஜர், ஆறுமுகர் உற்சவ மூர்த்திகள் மிகவும் அழகு வாய்ந்தவை.
34. கோவிலின் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீசுவரர் மிகுந்த பொலிவுடன் உள்ளார். நடராஜர் மண்டபத்தில் உள்ள தேர் சக்கரமும், குதிரையும் காணக் கண் கோடி வேண்டும்.
35. இத்திருத்தல புராணத்தை அம்பலவாணப் பண்டாரம் பாடியுள்ளார். நான்மணி மாலை, இரட்டை மணி மாலை வீரபத்திர சுவாமிகள் பாடியுள்ளார். பதிற்றுப் பத்தந்தாதி ஆலந்தூர் கோவிந்தசாமிப்பிள்ளையும், வடமொழி ஸ்லோகங்கள் சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷதரும் பாடியுள்ளார். அம்பிகை ஸ்தோத்திரங்களை டி.எஸ். வைத்திநாதன் பாடியுள்ளார்.
36. காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையில், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் ஆலயம் திறந்திருக்கும்.
37. இத்திருக்கோவிலில் உள்ள நவக்கிரகங்கள் சற்று மாறுபட்ட நிலையில் இருக்கம் சூரியனைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்களும் சூரியன் பார்த்தவாறு நின்றிருக்கும். நவக்கிரகங்கள் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தருகின்றனர்.
38. இத்திருக்கோவிலில் சந்தன மரங்கள் தானாகவே வளர்கின்றன. மரத்தை வைத்துப் பயிர் செய்ய வேண்டிய அவசியமில்லை.
39. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் போன்ற மூவரால் பாடல் பெற்ற புண்ணியத் திருத்தலம் இது.
40. 1946 ஆம் ஆண்டு காஞ்சி முனிவர் சாதுர்மாஸ்ய விரதத்தை இங்கே அனுஷ்டித்தார்கள். அப்போது ஐந்து மாத காலங்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார்கள்.
41. இத்திருக்கோவிலின் சிற்ப வேலைப்பாடுகள் பல்லவ காலச் சிற்பக் கலை நுணுக்கத்தோடு கூடியவை.
42. மதுரை கொண்ட கோபுர கேசரிவர்மன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் மற்றும் விக்கிரம சோழன் போன்றோர் காலத்திய கல்வெட்டுக்கள் இத்திருக்கோவிலின் சுற்று மதிற்சுவர்களிலும், எம்பெருமானின் கர்ப்பக்கிரகச் சுவர்களிலும், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபங்களிலும் காணப்படுவதாக, இத்திருக்கோவில் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
43. தமிழக இந்து சமய அறநிலையத்தினரால் இத்திருக்கோவில் திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
44. ஸ்காந்த புராண புத்ர வைபவக் காண்டத்தில் சனத்குமார சம்கிதையில் இத்திருக்கோவில் தல வரலாறு காணப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் அமைந்ததாகும்.
45. அம்பலவாணப் பண்டாரம் என்பவரால் தமிழில் பாடப்பட்ட 338 பாடல்கள் தற்சமயம் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் இல்லை.
கோவில் முகவரி:
அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோவில்
ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை சன்னதி திருக்கருகாவூர் அஞ்சல்,
பாபநாசம் தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.
தமிழ்நாடு போன்: (04374) 273423
மொபைல்: 8870058269

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment