Saturday, 16 September 2017

குரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..?

குரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..?

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் அடக்கம். இவற்றை நவ நாயகர்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரகங்கள் ஆளுகின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு அம்சம், ஒவ்வொரு காரகத்துவம், ஆதிக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில சுப கிரகங்களாகவும் சில பாவ கிரகங்களாகவும் உள்ளன. அதே சமயத்தில் ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்கேற்ப இந்த அம்சங்கள் மாறுபடுவதுண்டு. ஒருவருக்கு
நல்லதை செய்கின்ற கிரகம், மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்லதை செய்கின்ற தசை மற்றொருவருக்கு தீமை செய்யும்.
இது அந்தந்த ஜாதக அமைப்பின்படி உள்ள அம்சமாகும். அந்த வகையில் சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய, விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் உங்களுக்கு நன்மையைத் தருவாரா, குருவின் செயல்கள் என்ன, குரு பலம், குரு பார்வை, குரு யோகம் உங்களுக்கு உள்ளதா என்பதைப் பார்க்கலாம். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பணம் எனப்படும் பொருட்செல்வம், இன்னொன்று புத்திரயோகம் எனப்படும் குழந்தை செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது.
இந்த இரண்டிற்கும் காரகம் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குரு பகவான் ஆவார். மேலும் ஞானம், அறிவு, கூர்ந்த மதிநுட்பம், நாடாளும் யோகம், உயர்ந்த கௌரவ பதவிகள், நிதித்துறை, நீதித்துறை, தர்ம காரியங்கள், அறங்காவலர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, கவர்னர், பள்ளி, கல்லூரி தாளாளர்கள், ஆசிரியர், விரிவுரையாளர், வங்கி, கஜானா, மதபோதகர், மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள், சொற்பொழிவாளர்கள், வேதம், உபதேசம், அஷ்டமாசித்து மற்றும் எண்ணிலடங்காவிஷயங்களை தன் கைக்குள் வைத்திருப்பவர் குருபகவான் ஆவார்.
குருவின் செயல்கள்
சுப கிரகமான குருவிற்கு சில அசுப அமைப்புகளும் உண்டு. குரு பார்வை தான் யோகம், தோஷ நிவர்த்தி போன்ற ஏற்றமான பலன்களைத் தரும். ஆனால், தனித்த குரு எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தின் - வீட்டின் ஸ்தானத்தை கெடுத்து விடும். அதை வைத்துத்தான் குரு நின்ற இடம் பாழ் என்ற சொற்றொடரும், அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு என்ற ஜோதிட வாக்கும் ஏற்பட்டன.
லக்னத்தில் குரு: லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும். அதே நேரத்தில் லக்னத்தில் தனித்து இருந்தால் பல்வேறு வகையான சிக்கல்கள் உண்டாகும். மிகப் பெரிய குழப்பவாதியாக ஜாதகரை உருவாக்குவார். சுயமுடிவு செய்யும் தன்மையை இழக்க வைப்பார்.
இரண்டில் குரு: லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் பேச்சில் தடுமாற்றம் இருக்கும். திக்குவாய் கோளாறு ஏற்படலாம். குடும்பத்தில் ஏதாவது வாக்கு வாதங்கள் இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்கும். அல்லது வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும்.
ஐந்தில் குரு: லக்னத்திற்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில் குரு தனித்து இருந்தால் குழந்தை பாக்ய தடை அல்லது காலம் கடந்து குழந்தைகள் பிறப்பது, உடற்குறையுள்ள புத்திரர்கள், புத்திரர்களால் நிம்மதியற்ற தன்மை, புத்திரசோகம் என ஏற்படும்.
ஏழில் குரு: லக்னத்திற்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால், மண வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன்- மனைவிக்குள் சதா பிரச்னைகள் ஏற்படும். வழக்குகளை கூட சந்திக்க வேண்டி வரும். ஆனால், ஏழாம் இடத்தில் இருந்து குரு லக்னத்தை பார்ப்பதால் அந்தஸ்து, கௌரவம், புகழ், அதிகாரம் போன்றவை ஜாதகருக்கு உண்டாகும்.
பத்தில் குரு: லக்னத்திற்கு பத்தாம் இடமான தொழில், உத்யோக ஸ்தானத்தில் குரு பகவான் தனித்து நின்றால் வியாபாரம், தொழிலில் ஏதாவது சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும், அடிக்கடி தொழிலை மாற்றுவார். பல தொழில்கள் செய்தாலும் எதிலும் பிடிப்பு இருக்காது. தொழில் செய்யும் இடங்களில் வழக்குகள் மற்ற குறுக்கீடுகள் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம், இலாகா மாற்றம், வழக்குகள் என ஏற்படலாம். ஆனால், பத்தாம் இடத்தில் இருந்து குரு நான்காம் வீட்டைப் பார்ப்பதால் உடல் ஆரோக்யம், மண், மனை, வீடு, வாகன யோகம் உண்டாகும்.
குருவும் - கேதுவும்
கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்ல
லாம். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர்.
குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர் இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு, கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், பெரிய தர்ம ஸ்தாபனம் அமைக்கும் பாக்யத்தை ஏற்படுத்துவார். சங்கீதம், பாட்டு, இயல், இசை, திரைப்படத் துறையில் யோகத்தை தருவார். சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் வல்லமை குரு-கேதுவுக்கு உண்டு.
வியாழ வட்டம்
ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் இந்த ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு பல யோக அம்சங்கள் கூடிவரும். ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் இருப்பார். வங்கி, நிதித்துறை, நீதித்துறையில் உயர்ந்த பதவிகளை வகிக்கும் பாக்யம் ஏற்படும். சமூகத்தில் இவரின் சொல்லிற்கு ஒரு மதிப்பு இருக்கும். நாடாளும் யோகத்தையும் குரு பகவான் அருள்வார்.
ஜல ராசி கிரகம்
ராசிகளுக்கென்று ஒவ்வொரு தத்துவம், காரகத்துவம் உண்டு. அந்த வகையில் ஜல ராசிகளில் குரு முக்கிய பங்கு வகிக்கிறார். காரணம், கடகம் என்ற ஜல ராசியில் குரு உச்சம் பெறுகிறார். மீனம் என்ற ஜல ராசியில் குரு ஆட்சி பெறுகிறார். மகரம் என்ற ஜல ராசியில் குரு நீச்சம் பெறுகிறார். ஒருவர் கடல் கடந்து அயல்நாடுகளுக்கு சர்வ சாதாரணமாக சென்றுவர குருவின் அருள் தேவை. வெளிநாடு சம்பந்தமான தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டு தூதுவர், நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கும் அமைப்பு, கப்பல் வணிகம் ஆகியவை சிறக்க குருவின் கருணை வேண்டும்.
குரு - சந்திர யோகம்
யோகங்கள் பெரும்பாலும் சந்திரன் மூலம்தான் ஏற்படுகின்றன. சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம். குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். கல்வியில் பிரகாசிப்பார்கள். குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர யோகம் உண்டாகிறது. இதன் மூலம் உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment