Saturday, 16 September 2017

அனுமனை எப்படி வழிபடலாம் ?

அனுமனை எப்படி வழிபடலாம் ?

இராம நாமம் எங்கெங்கெல்லாம் ஒலிக்கப்படுகிறதோ அங்கங்கெல்லாம் அனுமன் இருந்து அந்த நாம ஸங்கீர்த்தனத்தைக் கேட்டு மகிழ்ந்து அந்தத் தாரக நாமத்தை யார் ஜபித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களைக் காத்து வருபவன் அனுமன் என்பது ஆன்றோர் வாக்கு. அனுமன் அசாத்தியமான செயல்களைக் கூட மிக எளிதில் செய்து முடிப்பவர் என்பதை அவரது சரிதையிலிருந்து நாம் அறியலாம். ஆழிதாவி ஆழி தந்து (மோதிரம்) இராமனையும் சீதையையும் இணைத்தார். லங்கா நகரத்தையே எரித்து இராவணனுக்கே மனத்துள் பீதியை ஏற்படுத்தியவர். போர்க்காலத்தில் இலக்குவன் நாக பாசத்தால் மயங்கியபோது சஞ்சீவி மலையையே எடுத்து வந்து உயிரை மீட்டவர்.
இக்கலியுகத்தில் பிரத்யட்ச மூர்த்தியாய் விளங்கி தன்னை வழிபடும் அன்பர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தருபவர். இவரால் ஆகாத செயல் ஏதும் இல்லை. ஞானம் பலம், வீரம், பக்தி, சேவை, விநயம், பிரம்மசர்யம் ஆகிய அனைத்திலுமே உச்ச நிலையில் இருப்பவர்.
பலம், வீரம் மட்டுமன்றி அதற்கு மாறுபட்ட குணமான விநயத்திலும் இவரை மிஞ்ச முடியாது. பல முரண்பாடான குணங்கள் இவரிடம் ஒன்று சேர்ந்திருப்பது இவரின் தனிச்சிறப்பு. இராமபிரான் வைகுந்தத்துக்குச் செல்லும் போதும் இவர் அவருடன் செல்லாமல் பூவுலகில் சிரஞ்சீவியாய் இருந்து நம்மை இன்றும் காத்து வருபவர்.
எந்தத் திருக்கோவில்களிலும் அனுமனுக்கென ஒரு தனிச் சந்நிதி இல்லாதிருந்த போதிலும் ஏதாவது தூணிலாவது பல வடிவங்களில் காட்சி தந்து பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருவதை நாம் பல கோவில்களில் காணலாம். அஞ்சனை மைந்தனின் அருள் பெற பலவித வழிபாட்டு முறைகள் அமைந்துள்ளதை பலரும் அறிவோம் என்றாலும் அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு அவரின் வழிபாடுகள் சிலவற்றை அறிவோம்.
ஸ்ரீஇராம நாமத்தை உச்சரித்து தன்னை வணங்குவதையே ஆஞ்சனேயர் மிகவும் விரும்புவாராம். தற்போது கூட ஸ்ரீ இராமாயண உபன்யாசமோ, பாராயணம் செய்யும் போதோ அவ்விடத்தில் ஒரு மணையை போட்டு வைத்து வருவது பழக்கம். அங்கு ஹனுமன் அஞ்சலி ஹஸ்தனாய் எழுந்தருளியிருந்து உபன்யாசத்தையோ பாராயணத்தையோ கேட்டு மகிழ்வார் என்பது ஐதிகம்.
வெண்ணெய்க் காப்பு வழிபாடு
இராவணன் இறந்த பிறகும் இரண்டு அசுரர்கள் எப்படியும் ஸ்ரீ இராமபிரானை அழித்திட முயற்சி செய்தார்களாம். அப்போது இராமபிரான் அனுமனை அனுப்பி அரக்கர்களை வதம் செய்ய உத்தரவிட்டான். அப்போது பல தேவர்களும் தெய்வங்களும் அனுமனுக்கு விசேஷ அனுக்ரஹம் (அல்லது வரம்) அளித்தும் பல ஆயுதங்களையும் அளித்தார்களாம். கோவிந்த பகவான் அனுமனுக்கு வெண்ணெயைக் கொடுத்தாராம். அந்த வெண்ணெய் உருகுவதற்குள் அரக்கர்களை போரில் அழித்துத் திரும்பினார் அஞ்சனை மைந்தன். அதுபோல் நாமும் அவருக்கு வெண்ணெய்க் காப்பு சமர்ப்பித்தால் நம் விருப்பங்களை உடன் நிறைவேற்றியளுவார் என்பதும் ஓர் ஐதிஹம்.
இராவணனுடன் நடந்த யுத்தத்தில் ஆஞ்சனேயர் ஸ்ரீ இராம லக்ஷ்மணர்களைத் தோளில் சுமந்தார். இராவணன் விடுத்த அம்புகளையெல்லாம் தம் உடலில் தாங்கிக் கொண்டதால் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்ட போது மருத்துவமும் அறிந்த அம்மாவீரன் தன் உடற் புண்களுக்கு வெண்ணெயைப் பூசிக் கொண்டு குளிர்ச்சி அடைந்ததாகவும் சான்றோர் கூறுவர்.
வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு
சீதா பிராட்டியை அனுமன் அசோக வனத்தில் இராமதுதனாகச் சந்தித்தபோது சீதாபிராட்டி வெற்றிலையை அனுமனின் தலை உச்சியில் வைத்து சிரஞ்சீவியாக வாழ அருள்புரிந்தாராம். ஆகவே வெற்றியைத் தந்த வெற்றிலையும் (வெற்றி + இலை) அவருக்கு விருப்பப்பட்ட பொருளானதால் வெற்றிலை மாலை சமர்ப்பிக்கப்படுகிறது.
வடைமாலை சாற்றி வழிபாடு
தானியங்களில் உளுந்து உடலுக்கு வேண்டிய ஊட்ட சக்தியை அளிப்பதாகும். அவருடைய தாயார் அஞ்சனாதேவி அனுமனுக்கு வடை செய்து கொடுப்பாராம். அதனால் அவர் ஆரோக்யமாய் இருந்தார். அதனால் நம்முடைய பல இன்னல்கள் நோய்கள் நீங்கி வாழ அனுமனுக்கு வடைமாலை சமர்ப்பித்து வணங்கலாம்.
வாலில் சந்தனப் பொட்டும் குங்குமப் பொட்டும் வைத்து வழிபடுவது, குரங்குகளின் இனத்திற்கே தங்கள் வால் பகுதியின் மீது மிகுந்த பற்று உண்டு. அனுமனுக்கும் வாலில் வலிமை அதிகம் உண்டு. இதற்கான ஒரு வரலாற்றைக் காணலாம்.
பீமசேனன் திரௌபதியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நினைத்து சௌகந்திகா மலரைத் தேடிக் காட்டில் அலைந்தபோது வழியில் ஒரு கிழக்குரங்கு பாதையை மறைத்தவாறு வாலை நீட்டிக் கொண்டு அதைத் தாண்டிச்செல்ல விரும்பாமல் குரங்கிடம் வாலை சற்று நகர்த்திக் கொள்ளச் சொன்னபோது குரங்கு “நான் மிகவும் தள்ளாடிய நிலையில் படுத்திருக்கின்றேன் நீயே வாலை நகர்த்திவிட்டுச் செல்லலாம்” என்று கூறியது. (படுத்திருந்த குரங்கு ஆஞ்சனேய மூர்த்தி தான். அவருக்கு வந்துள்ளது தனது சகோதரன் பீமன் என்பதும் தெரியும். இருந்தபோதிலும் ஒரு சோதனை செய்ய நினைத்து இவ்வாறு கிடந்தார்.) பீமனால் வாலைத் துளிகூட நகர்த்த முடியவில்லை. இருந்தாலும் வீராப்பாகப் பேசி தான் இராமபக்தனான அனுமனின் சகோதரன் என்றும் தன்னால் முடியும் என்றும் பேசி வாதிட அனுமனும் மகிழ்ந்து தன்னுடைய சுயரூபத்தை அவனுக்குக் காட்டி அருள் புரிந்தார். அப்போது அனுமன், தங்கள் வாலின் மகிமையே பெரிதாயிருக்க மற்ற பெருமைகளை எப்படி புகழ்வது என்று அவரை வணங்கி அருள் பெற்றான். இந்த வரலாற்றைப் பின்பற்றியே வாலில் பொட்டு வைத்து பூஜிக்கும் வழிபாடு ஆரம்பித்ததாகக் கூறுவர்.
ஸ்ரீராம சேவைக்காக லங்கைக்குச் சென்ற அனுமான், தியாக மனப்பான்மையுடன், குரங்குகளுக்கே பிரியமான, தனது வாலுக்கு தீவைத்ததையும் மகிழ்ச்சியுடன் ஏற்று தனது வாலின் மகிமையை நிரூபணம் செய்தார். இதுவும் அவரது வாலில் காரியசித்திக்காக பொட்டு வைத்து பூஜிப்பதை அர்த்தமுள்ளதாக்குகிறது.
செந்தூரக் காப்பு வழிபாடு துளசிமாலை வழிபாடு
துளசி இலை மருத்துவ சக்தி வாய்ந்தது. நோய்களைத் தீர்க்கும் குணமுடையது. எனவே துளசிமாலைகளை அனுமனுக்கு அணிவித்தால் நாமும் சகல நோய்களிலிருந்து விடுபடலாம்.
அனுமனின் வால் வழிபாட்டின் விசேஷங்கள்
இராமனுக்கு கைங்கர்யம் செய்ய வேண்டுமென சிவபெருமான் ஆசைப்பட்டு ஆஞ்சனேயர் உருவம் எடுத்தார். திருமாலின் சிறந்த பக்தர்களில் ஒருவர் சிவபிரான். அது போன்று சிவபிரானின் பக்தர்களில் திருமால் முக்கியமானவர். சிவபெருமான் ஆஞ்சனேயர் வடிவெடுத்தவுடன் பார்வதி தேவியும் தானும் இக்கைங்கர்யத்தில் ஈடுபட விரும்பிய போது வாலினுள் ஐக்கியமானாள். அதனால் தான் அனுமன் வாலில் சக்தி அம்சம் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே அனுமனின் வால் வழிபாடு பார்வதியை வணங்குவதற்கு ஒப்பானது. அனுமனின் வாலில் மணிகட்டி வேண்டிக் கொள்ளும் வழக்கமும் உண்டு.
மேலும் அனுமனின் வாலில் நவகிரஹங்களும் ஐக்கியமாகியுள்ளதாகவும் கூறுவர். அதனால் வால் வழிபாடு கிரஹ பீடைகளையும் அழிக்கும்.
முக்கியமாக ஸ்ரீ சனீஸ்வர பகவானின் அனுக்ரஹம்
அனுமானின் வாலை பூஜிப்பவர்களுக்கு எப்படியெல்லாம் அனுக்கிரகம் கிட்டுகிறது என பார்ப்போம், ஸ்ரீஇராமருக்கான சேது பந்தனம் துரிததியில் நடந்து கொண்டிருக்கையில் அனுமனை ஸ்ரீசனீஸ்வர பகவான் அணுகி தான் அவரை உடனடியாக ஏழரை வருடங்கள் பீடிக்கப்போவதாகக் கூறினார். ஸ்ரீராமரது சேவை முடிந்ததும் தானே வருவதாக அனுமன் கூறியும் அவர் தாமதிக்கத் தயாராக இல்லை. வேறு வழியின்றி "சரி, உங்களுக்கு எங்கே சௌகரியமோ அங்கு ஏறி அமருங்கள்” என அனுமான் கூற, அவரும் அவரது தலைமீது ஏறி அமர்ந்தார். அதுவரை பெரும் பாறைகளையே தூக்கிய அனுமான், பெரும் மலைகளையும் குன்றுகளையும் தூக்கித் தலைமீது அழுத்தி வைத்துச் சுமக்கத் தொடங்கினார். கல்லடி பட்டு நொந்த ஸ்ரீசனீஸ்வரர் அவரிடம் தன்னைவிட்டு விடுமாறு விடாது கெஞ்சி ‘ஹனுமான் சாலீசா’ எனும் நாற்பது ஸ்லோகங்களைப் பாடவும், கருணையுடன் தன் பக்தர்களை அவர் பீடிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், தான் போய் விழும் ஊரில் திருடுபவர்களையும், தனது பக்தர்களுக்கு இன்னல் விளைவிப்பவர்களையும் மட்டும் அவர் பீடிக்கலாம் எனும் சலுகையுடனும் அவரை ஒரு பெரிய பாறையில் வாலினால் சுழற்றி (மஹாராஷ்டிரத்தில் பூனேக்கு அருகில் உள்ள) ‘சனி சிக்னபூர்’ எனும் ஊரில் போய் விழுமாறு செய்தார். இதுவும் அவரது வாலுக்கு பூஜை செய்ய ஒரு காரணமாக அமைந்தது.
ஜெய் ஸ்ரீராம்
அனுமனின் திருவுருவங்கள் பலவிதம். பக்த ஹனுமான், வீர ஹனுமான், சஞ்சீவி ஹனுமான், விநய ஹனுமான், பஞ்சமுக ஹனுமான் என்று பல வடிவங்கள். அவற்றை வணங்கி ஆற்றல்மிக்கவரான அனுமனின் அருளை அனைவரும் பெற்றிடுவோமாக!

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment