Friday, 19 May 2017

#சித்ரா_பவுர்ணமியைக் கொண்டாடி #சித்ர_குப்தனை வழிபடுவோம் !!!-

"திதி பார்த்து வழிபட்டால் விதிமாறும்" என்பார்கள். விதியை வெல்லும் ஆற்றல் யோகமான திதிகளில் செய்யும் வழிபாட்டிற்கு உண்டு. அந்த வகையில் திதிகளில் அமாவாசை திதியும், பவுர்ணமி திதியும் மிக முக்கியமான திதிகளாகும்.
-
ஒன்று நிலவு நிறைந்த நாள், மற்றொன்று நிலவு மறைந்த நாள். அன்றைய தினம் கடல் அருகில் நீங்கள் சென்று பார்த்தால் கடல் நீர் மேல் நோக்கி அதிகமாக எழுவதைப் பார்க்கலாம். அலை எழும் அன்றைய தினம் நாம் விரதம், வழிபாடுகளை மேற்கொண்டால் அலைபாயும் உள்ளங்களுக்கு அமைதி கிடைக்கும்.
-
மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு மட்டும் "சித்ரா பவுர்ணமி" என்று பெயர் சூட்டுகின்றோம். காரணம் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் முழுமையடைகின்றார்.
-
திருக்கயிலை மாமலையில் பார்வதி ஒரு சமயம் தோழியருடன் இருந்த போது - பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்ற ஆவல் ஏற்பட்டது எல்லோருக்கும்.
-
அதன்படி - உமையாள், தான் வரைந்த சித்திரத்திற்கு உயிர் ஊட்டினாள்.
-
அந்த சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டவனுக்கு அகமகிழ்வுடன், சித்ரகுப்தன் எனத் திருப்பெயர் சூட்டினாள். அதன்பின் உலகைக் காக்கும் பரம்பொருளான சிவபெருமானிடம் சித்ர குப்தனை அழைத்துச் சென்ற அன்னை - நடந்தவற்றை விளக்கினாள். சித்ர குப்தனுக்கு ஏதாவது ஒரு பொறுப்பைக் கொடுத்து வாழ்த்தியருள வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டாள்.
-
இப்படி - சித்ர குப்தன் தோன்றிய நாள் - சித்ரா பெளர்ணமி.
-
அதே சமயம் - தனியொரு நபராக கோடானுகோடி மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை பராமரித்து மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கின்றது தனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று இந்திரனிடம் யமதர்மராஜன் முறையிட்டான். இருவரும் இறைவனை நாடி வந்தனர்.
-
ஈசனும் அவர்களின் கோரிக்கையை ஏற்று - சித்ர குப்தனை - காமதேனுவின் வயிற்றில் பிறக்கச் செய்தருளினார். காமதேனுவின் வயிற்றில் பிறந்த சித்ர குப்தனை இந்திராணி வளர்த்து ஆளாக்கினாள்.
-
இளமையில் சித்ரகுப்தர் காஞ்சியில் - சிவபெருமானைக் குறித்து கடுந்தவம் புரிந்தார். இறைவனும் - ஏடும் எழுத்தாணியும் வழங்கி, சித்ரகுப்தனை யமனின் உதவியாளனாக நியமித்து உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதிப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.
-
தக்க பருவம் அடைந்த சித்ரகுப்தனுக்கு மயனின் மகள்களான - நீலாவதி, கர்ணவதி ஆகிய இருவரையும் மணமுடித்து வைத்து - சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தார்.
-
தன் மனைவியருடன் யமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து நம்முடைய பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இன்றும் இப்பொழுதும் கணக்கெடுத்து எழுதிக் கொண்டிருக்கிறார்.
-
இதன் அடிப்படையிலேயே - சொர்க்கமா நரகமா என்பது தீர்மானிக்கப்படும்.
-
சித்ரா பௌர்ணமி அன்று சில ஊர்களில் ஆங்காங்கே பந்தல் அமைத்து இரவு நேரத்தில் பெரியோர்கள் சித்ரகுப்த நாயனார் கதையினைப் படிப்பார்கள். மக்கள் கூட்டமாக அமர்ந்து விடிய விடிய சித்ரகுப்தர் கதையைக் கேட்பார்கள். கதை சொல்லும் நிகழ்வினை ஏற்பாடு செய்தவர்கள், வந்தவர்களுக்கு - சர்க்கரைப் பொங்கல், கொழுக்கட்டை, பணியாரம் - என வழங்குவர்.
-
இவ்வாறு கதை சொல்வதும் கேட்பதும் - மக்கள் கீழான எண்ணங்களில் இருந்து நீங்கி பாவம் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச் செயல்களில் ஈடுபட்டு மேல்நிலையினை அடையவேண்டும் என்பதற்காகவே!...
-
சித்ரா பெளர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து - பசும்பால், தயிர், நெய் இவற்றை விலக்கி - விரதம் இருந்து வழிபட்டால் நல்லது.
-
காலையில் விரதத்தை ஆரம்பித்து சித்ரகுப்தன் நினைவிலேயே இருக்க வேண்டும். மாலையில் நிலவு உதயமானதும் சித்ர குப்தனுக்குப் பூஜை செய்ய வேண்டும். மாக்கோலம் இட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து சர்க்கரைப் பொங்கலிட்டு பயற்றம்பருப்பும், எருமைப் பாலும் கலந்த பாயசத்தை நிவேத்தியம் செய்ய வேண்டும்.
-
ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும். அதுவும் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு உதவியாக - குறைந்த பட்சம் எழுது பொருட்களையாவது வழங்கலாம்.
-
சித்ரா பௌர்ணமி அன்று அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பு.
-
உப்பு சேர்க்காமல் உணவு உண்டு விரதமிருந்தால் சித்ரகுப்தன் மகிழ்ந்து நம் பாவ புண்ணிய கணக்கை எழுதும்போது புண்ணியத்தை அதிகப்படுத்தியும் பாவத்தைக் குறைத்தும் எழுதுவார். இதனால் மரணத்திற்குப் பின் நாம் நரக வேதனையிலிருந்து விலகி சொர்க்கத்தில் வாழலாம் - என்று சிலர் சொல்வதுண்டு. சில ஆன்மீக இதழ்கள் கூட இவ்வாறு குறிப்பிடுகின்றன.
-
நாம் தானமும் தவமும் செய்வது, நம் பாவவினைகள் குறைத்து எழுதப் படவேண்டும் என்பதற்காகவா!... அவ்வாறு சித்ரகுப்தன் எழுதினால், நம்பிக்கையுடன் பொறுப்பை ஒப்படைத்த ஈசனுக்குத் துரோகம் செய்தது போல் ஆகாதா?... அம்பிகையால் உருவாக்கப்பட்ட பெருமையை உடைய சித்ரகுப்தன் நம்பிக்கைத் துரோகம் செய்வாரா?...
-
உண்மையான இறையன்பர்கள் ஒரு கணம் - சிந்திக்க வேண்டும்!...
-
நாம் செய்யும் தானமும் தவமும், நம்முடைய சிந்தையும் செயலும் மேன்மை அடைவதற்குத் தானே அல்லாமல் - பாவப்பதிவுகளை மாற்றி எழுதுவதற்காக அல்ல - என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்!..
-
சிந்தையும் செயலும் சீராகவே - சித்ரகுப்த வழிபாடு!...

#சித்ர_குப்தனுக்குரிய வழிபாட்டுப் பாடல்!

பாவ புண்ணயம் பதிந்து வைக்கின்ற
தேவ தேவனே! சித்ர குப்தனே!
ஆவல் கொண்டே அகத்தினில் நினைத்துப்
பூவைச் சூட்டிப் போற்றுகின் றேன்நான்!
எனது பாவத்தின் எண்ணிக்கை குறையவும்
தனது புண்ணியம் தழைத்து ஓங்கவும்
இன்று முதல்நீ இனியதோர் பாதையை
அமைத்துக் கொடுத்தே அருளினைக் காட்டுக!
உணவும் உடையும் உறைவிட மனைத்தும்
தினமும் கிடைக்க திருவருள் கூட்டுக!
 
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com
 

No comments:

Post a comment