Monday, 15 May 2017

ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா? பெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா?

ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?
பெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா?


தாராளமாக அணியலாம். பஞ்சமுக ருத்ராட்சம் அணிவது நல்லது. மாதவிலக்கு நிற்காத இளம் வயது பெண்கள் ருத்ராட்சத்தை மாலையாக, அதாவது, மார்புவரை நீளமாக அணியக் கூடாது. ‘கண்டம்’, அதாவது, கழுத்துவரை மட்டுமே, தனது மேலாடைக்குள் மறையாதவாறு, வெளியில் தெரியும்படியாக பஞ்சமுக ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும். இதே விதி ஆண்களுக்கும் பொருந்தும்.
தாம்பத்திய வாழ்க்கையில் இருக்கும் ஆண்கள் கழுத்து வரை மட்டுமே ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள வேண்டும். மற்றபடி விரத காலத்திலும், பூஜை செய்யும் நேரத்திலும் மட்டும்தான் ருத்ராட்சத்தை மாலையாக அணிந்து கொள்ள வேண்டும். மாதவிலக்கு நின்ற பெண்கள், தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடாத பட்சத்தில் சிவ தீட்சை பெற்று ருத்ராட்சத்தை மாலையாகவும் அணிந்து கொள்ளலாம். இதில் எவ்விதத் தவறும் இல்லை.
#?ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?
எதுகை, மோனையுடன் நம்மவர்கள் நிறைய சொற்றொடர்களைப் புதிது, புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்கும், ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தால் நாய் படாத பாடு பட வேண்டும்,
சித்திரையில் பொறந்தா பெத்தவனுக்கு ஆகாது, ஆனியில பொறந்தா கூனிப் போகும், ஐப்பசியில பொறந்தா பசியில வாடும், மாசியில வயசுக்கு வந்தா வேசியாப் போவா, என முட்டாள்தனமான, மூட நம்பிக்கையை வளர்க்கின்ற பல சொற்றொடர்கள் இங்கு உலா வருகின்றன. இந்த மாதிரியான சொல் வழக்குகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவை முற்றிலும் பொய்யானவை.
ஒரு சில பித்தலாட்டக்காரர்கள் பரிகாரம் செய்து பணம் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. இது போன்ற ஏடாகூடமான கருத்துகளில் கவனத்தைச் செலுத்தாதீர்கள். எந்த மாதத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரஹ நிலையின்படியே வாழ்க்கை அமையும் என்பதுதான் உண்மை.
#?சிலர் கோயிலில் சாமி கும்பிட வரும்போது ஊர்க்கதைகள் மற்றும் குடும்பக் கதைகளை பேசுகிறார்கள். இது எவ்வாறு சரியானதாக இருக்கும்?
அவர்கள் பேசுவதை நீங்கள் ஏன் காது கொடுத்து கேட்கிறீர்கள்? ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் ஆண்டவனின் மீதுதானே மனம் லயிக்க வேண்டும்? அதனை விடுத்து அடுத்தவர் மீது கவனம் செல்வது ஏன்? எந்த ஒரு காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் மனம் ஒன்றிச் செய்துகொண்டிருக்கும் தருணத்தில் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் மீது நம் கவனம் செல்வதில்லை.
அவ்வளவு ஏன், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மனம் லயிக்கும்போது நம் வீட்டு மனிதர்கள் பேசுவது கூட நம் காதுகளில் விழுவதில்லை. வீண் மாயையில் மனம் லயிக்கும்போது, இறைவனின் பால் மனம் செல்லாதது யார் குற்றம்?
ஆலயத்திற்குள் ஊர்க்கதைகளையும், குடும்பக்கதைகளையும் பேசுவது எந்த அளவிற்கு சரியில்லையோ, அதைவிட அந்த வீண் கதைகளின் மீது நம் கவனத்தை செலுத்துவது, மிகமிக அற்பமானது. நம் துன்பங்கள் அத்தனையையும் மறந்து இறைவனின் திருப்பாதங்களைச் சரண் அடைவதற்காகத்தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அந்த ஆலயத்திற்குள் நுழையும்போதாவது இதுபோன்ற வீண் மாயைகளில் உங்கள் கவனத்தைச் செலுத்தாமல் இறைவனது திருநாமத்தை மட்டுமே மனதிற்குள்
உச்சரித்தீர்களேயானால் மனம் அமைதி கொள்வது நிச்சயம். உங்கள் மனதிற்குள் ஒலிக்கும் இறைவனது திருநாமத்தைத் தவிர வேறு ஒன்றும் உங்கள் காதுகளுக்குக்
கேட்காது. முயன்றுதான் பாருங்களேன்..!
#?முன்பெல்லாம் பெண்கள் கணவன் பெயரைச் சொன்னால், கணவனின் ஆயுள் குறையும் என்று சொல்வார்கள். தற்பொழுது இளம் பெண்கள் கணவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதும், வாடா போடா என்று அழைப்பதும், அவன் இவன் என்று மற்றவர்களிடம் சொல்வதும் அதிக அளவில் சகஜமாக உள்ளதே?
தம்பதியருக்குள் வயது வித்தியாசம் குறைந்து வருவதே இதற்கான காரணம். 25 வருடங்களுக்கு முன்பு வரை வரன் பார்க்கும்போது 5 முதல் 10 வயது வித்தியாசம் வரை இருக்கலாம் என்று எண்ணினார்கள். 15 வருடங்களுக்கு முன் 5 முதல் 7 வயது வரை வயது வித்தியாசம் இருக்கலாம் என்று வரன் தேடினார்கள். அது காலப்போக்கில் அப்படியே குறைந்துவிட்டது. 2 வயதுக்கு மேல் வித்தியாசம் இருக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருக்கும் மணப்பெண்களையே தற்போது காணமுடிகிறது.
இன்னும் ஒருபடி மேலே போய் ஒரே வயது இருந்தாலும் பரவாயில்லை, அல்லது மணமகன் 1 வருடம் வரை இளையவனாக இருந்தாலும் பரவாயில்லை, நன்றாக சம்பாதிப்பவனாகவும், வெளித்தோற்றத்திற்கு அழகானவனாகவும் இருந்தால் போதும் என்று கண்டிஷன் போடும் பெண்களையும் தற்போது வெகுவாகக் காண முடிகிறது. ஒத்த வயதுடைய ஆண்மகனை நண்பனாக எண்ணி நீங்கள் சொல்வது போல் பெயரிட்டு அழைக்கிறார்கள். இது நமது இந்தியக் கலாசாரத்திற்கு உகந்தது அல்ல. இதனை பெண்ணுரிமை என்று தவறாக எண்ணி பெருமை பேசுபவர்களும் உண்டு.
மருத்துவ உலகம் கூட இந்தக் கருத்தினை ஏற்றுக்கொள்வதில்லை. உடற்கூறியல் ரீதியாக மட்டுமன்றி, உளவியல் ரீதியாகவும் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமக்களில் ஆண்மகனை விட பெண்ணானவள் 2 முதல் 5 வயது வரை குறைந்தவளாகவே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தாம்பத்தியமும் சிறக்கும், குழந்தை பிறப்பிலும் எவ்விதமான பிரச்னையும் இருக்காது.
இந்த நியதிக்கு மாறாக நடந்துகொள்வதால்தான் பெரும்பாலான குடும்பங்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றன. கணவனை பெயரிட்டு அழைப்பதைபெண்ணுரிமை என்று கருதுவது பேதமை. கணவனை பெயரிட்டு அழைப்பது என்பது சாஸ்திர விரோதம். உங்களுடைய வருத்தம் நியாயமானதே.
#?‘ஓம் பூர்புவஸ்ஸுவ:’ என்று துவங்கும் காயத்ரி மந்திரம், ‘த்ரயம்பகம் யஜாமஹே’ என்று துவங்கும் ம்ருத்யுஞ்சய மந்திரம் ஆகிய இந்த இரண்டு மந்திரங்களுக்கும் அர்த்தத்தைத் தெரிவிக்கவும்.
.
“ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயான: ப்ரசோதயாத்” என்பது காயத்ரி மந்திரம். ஓங்காரப் பரம்பொருள் ஆன ‘எந்த பரமாத்மா நம்முடைய புத்தியையும், சக்தியையும் தூண்டுகிறாரோ, அந்த அனைத்தையும் படைக்கின்ற பகவானுடைய சிறந்த ஜ்யோதி ஸ்வரூபத்தை விடாமல் தொடர்ந்து தியானிக்கின்றேன்’ என்பது இதன் பொருள். ‘உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரிய தேவனே, உன்னை விடாது தியானிக்கிறேன். எனக்கு அறிவு கூர்மையையும், மனோ தைரியத்தையும் தந்தருள்வாயாக’ என்று எளிமையாகப் பொருள் கொள்ளலாம்.
“த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தநம் உர்வாருகமிவ பந்தநாந் ம்ருத்யோர்முக்ஷீய மாம்ருதாத்” என்பது பரமேஸ்வரனை பிரார்த்திக்கின்ற மிக உயரிய மந்திரம். ‘நறுமணம் மிக்கவரும், குறைகள் ஏதுமின்றி அத்தனையையும் நிறைவாக்குபவரும் ஆன முக்கண்ணனை போற்றுகின்றேன். பழுத்த வெள்ளரிப்பழமானது
எத்தனை எளிதாக அதனுடைய காம்பிலிருந்து விடுபடுமோ, அதுபோல மரண பயத்திலிருந்து, அதாவது, மரண பயம் அளிக்கின்ற சம்சார பந்தத்திலிருந்து என்னை விடுவிப்பாயாக - ஆனால், மோக்ஷ மார்க்கத்திலிருந்து அகலாதிருக்க அருள்வாயாக’ என்று சர்வேஸ்வரனை பிரார்த்தனை செய்வதே இதன் பொருள்.
மேற்சொன்ன இந்த இரண்டு மந்திரங்களின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு காலை, மாலை இரு வேளையும் தினசரி ஜபித்து வருபவர்களை வாழ்வில் எந்த துன்பமும் அண்டாது என்பது நிதர்சனமான உண்மை.
# ?எனது ஒரே மகன் வேறு ஜாதி இந்துப் பெண்ணை திருமணம் புரிந்துகொண்டுள்ளான். நாங்கள் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்கள். எங்களுக்கு இறுதி காலத்தில் கர்மா செய்ய அவனுக்குத் தகுதி உண்டா? அல்லது நாங்களே எங்களுக்கு கர்மா செய்து கொள்ளலாமா?
சர்வநிச்சயமாக அவனுக்குத் தகுதி உண்டு. கலப்புத் திருமணங்கள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் எல்லோருக்கும் மனதில் எழுகின்ற சந்தேகத்தை தைரியமாக எழுதி அனுப்பி உள்ளீர்கள். மிகுந்த சர்ச்சைகளுக்கு இடமளிக்கின்ற கேள்வி என்றாலும் இதற்கான விடையை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கர்மா என்றால் கடமை என்று பொருள்.
தனது பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய அந்திமக் கடன்களை சரிவர செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு மகனுக்கும் உண்டு. பிராமண வகுப்பில் பிறந்த உங்கள் மகன் வேறு ஜாதி இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாகச் சொல்கிறீர்கள். வேதோக்தமாக கர்மாவைச் செய்ய இயலாவிட்டாலும், புராணோக்தமாக அவனது பெற்றோர்களுக்கு உரிய கர்மாவை அவன் செய்துதான் ஆக வேண்டும்.
இந்துப் பெண்தான் என்றில்லை, வேறெந்த மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அல்லது பிள்ளையானவன் மதம் மாறி இருந்தாலும் சரி, அவன் பின்பற்றுகின்ற ஜாதி அல்லது மதத்தினுடைய சம்பிரதாயப்படி அவன் தனது பெற்றோருக்கான கடமையைச் செய்துதான் ஆக வேண்டும். அவன் எந்த முறையில் அந்த பிதுர் கர்மாவைச் செய்தாலும் அதைப்பற்றி கவலையில்லை.
அவன் செய்கின்ற கர்மா பிதுர்லோகத்தில் உள்ள அவனது பெற்றோரைக் கண்டிப்பாகச் சென்றடையும். மகன் உயிரோடு இருக்கும் பட்சத்தில் நீங்களே உங்களுக்கு கர்மா செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பிதுர்லோகத்தில் நம் கதி என்னவாகுமோ என்று கவலைப்பட வேண்டியதும் இல்லை. நீங்கள் பெற்ற பிள்ளைக்கு உங்களுக்கு கர்மா செய்ய அத்தனை தகுதியும் உண்டு. அவன் செய்கின்ற கர்மா உங்களை மோக்ஷப்ராப்திக்கு அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#?பிரமாண்டமான விழா மேடைகளில் ஆளுயுரக் குத்துவிளக்கினை மெழுகுவர்த்தி கொண்டு ஏற்றுகிறார்களே... இது சரியா? அதற்கு பதில் தீபாவளி சமயத்தில் உபயோகப்படுத்துவது போலான நீண்ட தீக்குச்சிகளைக் கொண்டு ஏற்றலாமே?
- க.விஜயலக்ஷ்மி, மேடவாக்கம்.
குத்துவிளக்கு ஏற்றி விழாவினைத் துவக்கு வது என்பது நம் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் செயல். அரசியல், இலக்கியம், சமயம் சார்ந்த விழாக்கள் ஆகட்டும் அல்லது வியாபார ரீதியான விழாக்கள் ஆகட்டும், எதுவாகிலும் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினைத் துவக்குவது என்பதைத் தற்போது பரவலாகக் காணமுடிகிறது. இந்த நவீன யுகத்திலும், நமது கலாசாரத்தைக் கட்டிக் காக்கின்ற இது போன்ற நிகழ்வுகளை அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.
இதனை மெழுகுவர்த்தி கொண்டு ஏற்றுகிறார்களே, சரியா என்று கேட்டிருக்கிறீர்கள். மெழுகுவர்த்தி என்றதும் உங்கள் மனதில் கிறித்துவ மதம் நினைவிற்கு வரு
கிறது என்று எண்ணுகிறேன். குத்துவிளக்கு என்பது இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானது என்பதும், மெழுகுவர்த்தி என்பது கிறித்துவ மதத்திற்கு மட்டுமே உரியது என்பதும் முற்றிலும் தவறான கருத்து.
இது உங்கள் அறியாமையையே காட்டுகிறது. நம் வீட்டிலும் சரி, ஆலயத்திலும் சரி விளக்கு ஏற்றுவதற்கு தீக்குச்சிகளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
தீக்குச்சியின் தலையில் வைக்கப்பட்டுள்ள ‘பாஸ்பரஸ்’ எனும் வேதிப்பொருள் உராய்வு கொள்ளும்போது நெருப்பு என்பது உண்டாகிறது. மெழுகு என்பது இயற்கையாக பூமிக்கு அடியில் கிடைக்கின்ற பெட்ரோலிய பொருட்களை பலமுறை வடிகட்டி, சுத்திகரிப்பதால் கிடைப்பது. ஆக, மெழுகு வர்த்தி என்பதும் சுத்தமான பொருளே ஆகும். அந்நிய தேசத்தவர்க்கு மெழுகு அதிக அளவில் எளிதாகக் கிடைத்தது.
நம் இந்தியத் திருநாட்டில் எள், ஆமணக்கு முதலான தாவரங்களிலிருந்து எண்ணெய் எளிதாகக் கிடைத்தது. நமக்கு்க் கிடைத்த பொருளைக் கொண்டு விளக்கேற்றி நாம் இறைவனை வழிபட்டோம். அவர்களுக்கு கிடைத்த பொருளில் விளக்கேற்றி அவர்கள் இறைவனை வழிபட்டார்கள். ஆக, குத்துவிளக்கு என்பதும், மெழுகுவர்த்தி என்பதும் காலம் மற்றும் தேசத்தின் அடிப்படையில் உண்டான மாறுபாடுதானே தவிர, மதத்தின் அடிப்படையில் தோன்றிய மாறுபாடு கிடையாது.
எரிவது குத்துவிளக்கா, மெழுகுவர்த்தியா என்பது முக்கியமல்ல, நம் மனதில் அஞ்ஞானம் என்ற இருட்டு மறைந்து, மெய்ஞானம் என்ற உண்மையான அறிவுச்சுடர் ஒளிவீச வேண்டும்என்பதே அதில் பொதிந்துள்ள உண்மையான கருத்து. அதற்காக குத்துவிளக்கில் மின்சார பல்புகளை ஒளிரவிடுவது தவறான செயல். ஆகவே மெழுகுவர்த்தியைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினைத் துவக்குவதில் எந்தத் தவறும் இல்லை.
#?விஞ்ஞானம் முடிவடையும் இடத்தில் மெய்ஞானம் தொடங்குகிறது என்பது சரியா?

இந்தக் கருத்தினை நான் ஏற்றுக் கொள்ள வில்லை. விஞ்ஞானம் என்பது மெய்ஞானத்தின் ஒரு அங்கம்தான். உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்லவேண்டும் என்றால் மெய்ஞானம் என்பது ‘தியரி’, விஞ்ஞானம் என்பது ‘பிராக்டிகல்’. அதாவது, மெய்ஞானம் என்ற தியரி பாடத்தினை நாம் அனுபவ பூர்வமாகக் கண்டறிந்துகொள்ள உதவும் பிராக்டிகல் வகுப்புதான் விஞ்ஞானம் என்பது. தியரி வகுப்புகள் சாதாரண அறிவினை உடைய மாணவனுக்கு சற்றே சிரமமாக இருக்கும்.
பிராக்டிகல் (செய்முறை) வகுப்புகள் மிகவும் எளிமையானதாக, புரியும்படியாக இருக்கும். விஞ்ஞானம் என்பது மெய்ஞானத்தின் உண்மைகளை நமக்குப் புரிய வைக்கும் கருவி. ஆக, விஞ்ஞானம் என்பது மெய்ஞானத்திற்குள் அடங்கியிருக்கும் ஒரு அங்கம் என்பதே உண்மை.
#?கடவுள் மீது பக்தி கொண்ட மனைவியும், கடவுள் நம்பிக்கையில்லாத கணவனும் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வார்கள்?
நிச்சயமாக நல்லபடியாகவே வாழ்வார்கள். அவர்கள் வாழ்க்கைக்கும், அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நாம் அன்றாட வாழ்வினில் சாதாரணமாக நம்மைச் சுற்றியுள்ள குடும்பங்களில் காண்கின்ற பொதுவான ஒன்றினைத்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். குடும்பம் என்று வந்துவிட்டால் ஒவ்வொருவரின் குணாதிசயமும் ஒவ்வொரு மாதிரிதான் இருக்கும். ஒருவருக்கு சிற்றுண்டியில் இட்லி, தோசை பிடிக்கும், மற்றொருவருக்கு பூரி, சப்பாத்தி பிடிக்கும். இது அவரவர் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது.
ஒருவரது விருப்பத்தை மற்றொருவர் மீது திணிக்கும்போதுதான் பிரச்னை உருவாகிறது. ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் மதித்து நடக்கும் பட்சத்தில் கருத்து வேறுபாடு காணாமல் போகிறது. கடவுள் நம்பிக்கையும் இதே போலத்தான். மனைவியின் நம்பிக்கையில் கணவன் தலையிடாமலும், கணவனின் உணர்வை மனைவி மதித்து அவரை வற்புறுத்தாமலும் இருக்கும் பட்சத்தில் வாழ்க்கை சிறப்பாகவே செல்லும்.
எத்தனையோ நாத்திகவாதிகளின் இல்லத்தரசிகள் கடவுள் பக்தி மிகுந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையில் இவர்கள் தலையிடுவதில்லை. கணவன்மார்களின் கொள்கையில் மனைவிகள் குறுக்கிடுவதில்லை. மனைவி என்பவள் கணவனின் மறுபாதி, கணவன் என்பவன் மனைவியின் உயிர்நாடி. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் தாம்பத்தியம் சிறப்பாகவே அமையும்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment