Wednesday 24 May 2017

அமாவாசை திதி...!!!!

அமாவாசை திதி...!!!!
திதிகளில் மிகவும் சிறப்பு பெற்றது, மகத்துவங்கள் கொண்டது அமாவாசை திதி.
இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.
அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும்.
இதனால், அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அவரவர் குடும்ப வழக்கப்படி முன்னோர்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும் வழிபாடுகள் செய்யலாம்.
புரோகிதர்களை அழைத்து யாகம், ஹோமம் செய்து வணங்கலாம். இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம்.
இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா, அம்மா இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம்.
துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.
மகாளய அமாவாசையன்று புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பாகும். சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம்.
ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை வாங்கித் தரலாம். வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஏழை பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம்.
முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு கீரை, பழ வகைகள் தரலாம். யானைக்கு கரும்பு, பழவகைகள், சர்க்கரை பொங்கல் அளிப்பதால் பாவ தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அமாவாசை நிறைந்த நாள் என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால், சாஸ்திரத்தில் இதுபற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
அமாவாசை என்பது இருட்டு நாள், நீத்தார் நினைவு நாள் என்றே பல சாஸ்திர நூல்களில் இருக்கிறது.
திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புதிய விஷயங்களும் ஆரம்பிக்கக் கூடாது என பிரதோஷ வழிபாடு என்ற நூல் வலியுறுத்துகிறது.
ஆகையால் அமாவாசையன்று புது காரியங்கள் தொடங்குவது, அட்வான்ஸ் கொடுப்பது, அக்ரிமென்ட் போடுவது, வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது.
புண்ணிய மாதமான ஆடியில் வரும் அமாவாசையன்று இந்த செயலை செய்வது மிகமிக விசேஷமாக கூறப்படுகிறது. இந்நாளில் முன்னோரை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக!
செல்வம் அள்ளித்தரும் மகாளய அமாவாசை வழிபாடு
ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள் மகாளய அமாவாசை என அழைக்கப்படுகின்றது.
அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது. மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தத்தமது சந்ததியர்களை காணவருகின்றார்கள்.
இவ்வாறு அவர்கள் வரும் இக் காலம் மகாளய பட்ச காலமாக போற்றப்படுகின்றது. (மகா+ஆலயம்=மகாளயம்). எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வீட்டில் காலம் சென்ற மூதாதயரின் ஒருவரது படமேயாயினும் இருக்குமானால் அதன் முன் இக் காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.
அல்லது பழவர்க்கங்களில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.
நம் முன்னோர்களை நினைத்து வயதானவர் களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.
மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும்.
அமாவாசை அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், "என்றோ ஒரு பாட்டன் மூலம் இன்று வரை நம்குலம்'' என்ற நிலையில் இருந்த நாம் இனி வரும் காலங்களில் நாம் பாட்டன்களாகவே இருக்கும் நிலையும் சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.
கடவுளுக்கு நாம் செய்யும் பூஜையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கினைத்தான் நாம் நமது முன்னோர்களுக்கு செய்கின்றோம். கடவுளையே நமக்கு அடையாளம் காட்டிய அந்த அன்பு ஜீவிகள் நாம் செய்யும் பூஜையில் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவதில் தெய்வத்திற்கு நிகரான வரம் தருகின்றார்கள். நாம் கடவுளிடம் செலுத்தும் அன்பைப் போல் நமது முன்னோர்களிடமும் செலுத்தினால் கை மேல் பலன் கிட்டும்.
நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள்.
எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. நாமும் நமது மூதாதயரை எண்ணி பித்ரு பூஜையை செய்வதன் மூலம் மூதாதயரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம்.
தர்ப்பண வழிபாடு:-
தன் வீட்டில் உயிர் நீத்த அப்பா, அம்மா படத்தை எடுத்து சுத்தம் செய்து உரிய திதி நாளில் துளசி, மலர்மாலை சாற்றி பொட்டு வைத்து அதற்கு முன்பாக ஒரு தாம்பளத்தை வைத்து படத்தில் குறிப்பிட்டபடி தர்பை சட்டம் போட வோண்டும். அதன்மேல் முன்னோர் பெயரைச் சொல்லி அதில் எழுந்தருள்க என்று சொல்ல வேண்டும். அதாவது, எனது தாயே எழுந்தருள்க!
தந்தையே எழுந்தருள்க! என்று எள்ளும் தண்ணீரும் விட வேண்டும். பிறகு சிவ (அல்லது) விஷ்ணு கோத்ரத்தை சேர்ந்த பவருக்கு தர்பணம் செய்கிறேன் என்று கூறி 3 முறை நீர் எள் விடவும், அடுத்ததாக, எனது தந்தையின் தந்தைக்கு தர்ப்பணம் செய்கிறேன், என்று 3 முறை எள் தீர்த்தம் விடுக.
மூன்றாவதாக எனது பாட்டனார்.....க்கு தர்ப்பணம் விடுகிறேன் என்று மூன்றுமுறை எள், தண்ணீர் விடவும். அடுத்ததாக, எனக்குத் தெரியாமல் என் வம்சாவழியில் வருகின்ற பித்ருக்களுக்கு (காருணீக பித்ரு) தர்ப்பணம் செய்கிறேன் என்று எள் நீர் விடவும். இதன் பொருட்டு தேவர்களும், தேவ ருலக வாசிகள் அனைவரும் எனது தர்ப்பண வழிபாட்டால் திருப்தி அடையட்டும் திருப்தியக;
என்று 3 முறை கூறுக. இது தான் எளிய தர்ப்பண பூஜை முறை.பிறகு எழுந்து நின்று கையில் எள் நீர் எடுத்துக்கொண்டு மூன்று முறை தன்னையே சுற்றுக்கொண்டு முட்டி போட்ட நிலையில், கட்டி கொண்டுள்ள வேட்டி துணியால் எள் தீர்த்தத்தை தொட்டு நெற்றி கண்களில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.
அதில் உள்ள கூர்ச்ச முடிச்சை அவிழ்த்து எடுத்து என்னை சேர்த்துக் கொண்டு குலம் உறவினர்கள் தழைக்க தர்ப்பணம் செய்தேன். உலக மக்கள், என் மக்கள் நலன் காக்கப்பட்டும் என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு யாருக்கு தர்ப்பணம் செய்தோமோ அவக்குப் பிடித்தமான பண்டத்துடன், தேங்காய்,வாழைப்பழம் வைத்து மலர் துளசி போட்டு நெய் தீபம் காட்ட வேண்டும். தர்ப்பண நீரை அருகில் உள்ள நீர் நிலைகளில் அல்லது செடிகளில் விட்டு வரவேண்டும்.
காக்கைக்கு அன்னம்:-
உங்கள் கையில் உள்ள ஒரு பிடி சாதத்தை உருண்டையாகப் பிடித்து எள் நீர் விட்டு சிறிது பருப்பு கலந்து காக்கையை அழைத்து அது சாதத்தை எடுத்த பிறகு கயா....கயா... கயாதிதி சமர்ப்பணம் என்று மூன்று முறை கூறிய பின் விளக்கில் உள்ள திரியை மட்டும் மாற்றி தீபம் ஏற்றி விட்டு பிறகு வீட்டு தெய்வத்திற்கு பூஜை செய்த பிறகு குடும்பத்தில் உள்ளவர்கள் உணவு சாப்பிட வேண்டும்.
பித்ருக்களும் தேவர்களும் காக்கை வடிவில் உணவு எடுக்க வருவதாக சாஸ்திரம் கூறுவதால் காக்கைக்கு அன்னமிட்டு கயாவில் சிரார்த்தம் செய்தது போல இந்த தர்ப்பணம் செய்தேன் என்று கூறுகிறோம்.
பித்ரு தர்ப்பண பூஜை செய்வதால் மனிதர்களுக்கு உணவு, மற்ற தானங்கள், காக்கைக்கும் பசுவுக்கும் பிண்ட உணவு இறைகின்ற அரிசி எள் முதலியவற்றுக்கு உணவு என்று இயற்கையாகவே உயிரோம்புதல் நடைபெறுகிறது.
சில கடுமையான பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களே தனக்குச்சக்தி இல்லாமை காரணமாக தடை வந்து செய்ய முடியாவிட்டால் மட்டும் அதற்கு வேறு வழி கூறப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அன்னம் இடலாம். எள் மற்றும் காசு வைத்து தானம் கொடுக்கலாம். அதுவும் முடியவில்லை எனில் கட்டை விரலை ஈரம் செய்து அதில் ஒட்டிய எள்ளை தானம் தந்து பித்ருக்களை நினைக்கலாம்.
பசுவுக்குப் புல் எடுத்துப்போட்டு அதைத் தர்ப்பணமாக ஏற்கும் படி பித்ருக்களை வணங்கிக்கேட்கலாம். அதுவும் முடியாதவர்கள் ஆகாயத்தை அன்னாந்து பார்த்து ஏ பித்ருக்களே! எனக்கு எதுவும் செய்ய இயலவில்லை வேண்டுகிறேன். திருப்தி பெறுவீர்களாக என்று வேண்டி விழுந்து வணங்கலாம்.
தர்ப்பணம் செய்வது எப்படி!
மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, தர்ப்பணங்கள் ஆகிய வற்றை எவ்வாறு முறைப்படி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். இறந்தவர் தினம் தெரியவில்லை என்றால், மிருகசீரிடம் மற்றும் மக நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம்.
தானம் செய்யுங்கள்:
(தர்ப்பணம் கொடுக்கும் போது கீழ்க்கண்டவற்றை ஆதரவற்றோர் இல்லத்திற்காக கொடுக்கலாம்) காய்கறிகள் 5 வகை (பூசனி, வாழைத்தண்டு தவிர்க்கவும்)
தரமான பச்சரிசி
1 ரூபாய் காசு 11
கடலை பருப்பு
பயத்தம் பருப்பு
துவரம் பருப்பு
உளுத்தம் பருப்பு
மிளகாய்
புளி
உப்பு சிறிய பொட்டலம்
மிளகு
சீரகம்
கடுகு
வெந்தயம்

ஆதரவற்றோர் இல்லத்திற்கு போர்வை, சோப், சர்க்கரை போன்று இன்னும் பயனுள்ள பொருட்களையும் தானமாக தரலாம்.
தர்ப்பணம் கொடுப்பது ரொம்ப எளிது
பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும், பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள். உயர்சாதிகாரர்களுக்குத்தான் அது சரிபட்டு வரும். நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம் இல்லை என்கிறார்கள். சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள்.
திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.
தர்ப்பணம், சிரார்த்தம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது. தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய 12 பேர் மட்டும் தெரிந்தால் போதும்.
சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதற்கும் கவலைப்பட வேண்டாம். என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும் என்று மனதார நினைத்து கையில் உள்ள எள் மீது தண்ணீர் ஊற்றி, அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு முடிந்தது.
மகாளய அமாவாசை (அக்டோபர் 4-ந்தேதி) தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம். மூதாதையர்களின் பெயரைச் சொல்லி எள் கலந்த நீரை தர்ப்பை புல்களின் மீது ஊற்றுவதில் என்ன கஷ்டம்? இதை கூட பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக செய்வதில்லை.
குறைந்தபட்சம் அது நம் கடமை என்று நினைத்தாவது செய்யக்கூடாதா? இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். முடிந்தால் மகாளயபட்ச நாட்களில் என்றாவது ஒருநாள் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுங்கள்.
அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள். இது பலரும் அனுபவித்து வரும் உண்மை. ஈடு, இணையற்ற அந்த பலன்களை பெற நீங்களும் மகாளயபட்ச வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.
தர்ப்பணம் எப்போது கொடுப்பது?
தர்ப்பணம் செய்ய வேண்டிய தினத்தன்று அதிகாலையில் எழுந்துவிட வேண்டும். குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மூதாதையர்களை நினைத்துக்கொண்டே தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுத்து விடுவது நல்லது.
முடியாதவர்கள் காலையில் சீக்கிரம் தர்ப்பணத்தை முடித்து விடவேண்டும். ஏனெனில் நாம் கொடுக்கும் எள் கலந்த நீரை பித்ருக்கள் ஏற்றுக்கொள்ளும் நேரம் என்பது மிக, மிக புனிதமானது. எனவே நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும். எந்த காரணத்தையும் கொண்டும் சூரியன் மறைந்த பிறகு தர்ப்பணம் செய்யக்கூடாது.
நாம் தர்ப்பணம் செய்ததும் அதை பெற்றுக் கொள்ளும் ஸ்வதா தேவி கண் இமைக்கும் நேரத்துக்குள் அதை நம் பித்ருக்களிடம் ஒப்படைத்து விடுவாள். எனவே தர்ப்பணம் செய்யும் போது "ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி'' என்று சொல்ல மறந்து விடக்கூடாது.
பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள் இயற்கையாக மரணம் அடையும் போது, இறந்த நேரம், திதி ஆகியவற்றை ஒரு டைரியில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அந்த திதியில் தர்ப்பணம், சிதார்த்தம் உள்ளிட்டவைகளை செய்தல் வேண்டும்.
பெரும்பாலனவர்கள் இந்த திதி தினத்தை முறையாக செய்வதில்லை. கணிசமானவர்களுக்கு அந்த திதி என்றாலே என்ன என்ற விவரம் கூட தெரியாமல் உள்ளது. ஆதிகாலத்தில் தமிழர்கள் "நீத்தார் வழிபாடு'' நடத்தி பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும் செய்தனர்.
அதை செஞ்சோற்று கடனாக நினைத்தனர். இப்போதும் பித்ருகாரியம் செய்கிறார்கள். ஆனால் அதை முறையாக, பித்ருக்கள் திருப்திபடும்படி செய்வதில்லை. அதனால்தான் குடும்பங்களில் மங்கள காரியங்கள் நடப்பது தடைபடுகிறது அல்லது தாமதமாகிறது.
புத்திர சுகம் கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே நம் வம்சம் விளங்க வேண்டுமானால் நம்மை வளர்த்து ஆளாக்கிய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட வேண்டும். அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண நாட்களில் அவசியம் தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
முடியாதவர்கள் வரும் மகாளயபட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பண பூஜைகளை கட்டாயமாக செய்ய வேண்டும். உங்கள் முன்னோர்கள் எல்லாருமே பித்ருலோகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அவர்கள் செய்த கர்ம வினைகள் தொடரக்கூடும்.
அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம்தான் தாகம் தணிப்பதாக இருக்கும். தாத்தாவுக்கு அப்பா எல்லாம் மறுபிறவி எடுத்திருப்பார் எனவே அவருக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைக்கலாம். உங்கள் முன்னோர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும் கூட நீங்கள் கொடுக்கும் தர்ப்பணம் அவர்களுக்கு பெரும்பலனை கொடுக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.
எனவே நீங்கள் முன்னோர் வழிபாட்டை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்தல் வேண்டும். நீங்கள் வழிபாடு செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் பித்ருலோகத்தில் இருந்து மகாளய பட்சத்தின் 15 நாட்களும் உங்களோடு இருக்க உங்கள் முன்னோர்கள், உங்கள் வீடு தேடி வருகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
பெற்றோர் படத்துக்கு துளசி மாலை
கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.
இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.
முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும். முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான்.
நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்
நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment