Sunday, 28 May 2017

உஜ்ஜயினி காலபைரவர்....!!!

உஜ்ஜயினி காலபைரவர்....!!!
சிவபெருமானின் உக்ர வடிவங்களுள் ஒன்றாக விளங்குகிறது பைரவர் திருக்கோலம்.
அந்தகாசுரனை அழிக்கும்பொருட்டு சிவபெருமான் தன்னிலிருந்து காலபைரவரைத் தோற்றுவித்தார்.


பஞ்சாக்னி நடுவே பலகாலம் கடுந்தவம் செய்து சிவபெருமானிடம் அரிய பல வரங்களைப் பெற்றான் அந்தகாசுரன்.அந்த ஆணவத்தால் வானோர்க்கு பல இன்னல்கள் புரிந்தான்.
அவனை வெல்ல பிரம்மா, தேவேந்திரன் முதலான யாராலும் இயலவில்லை. வேறு வழியின்றி அவர்கள் அந்தகாசுரனிடமே சென்று, உங்கள் கட்டளையை ஏற்று நடக்கிறோம். காத்தருள வேண்டும் என்று சரணடைந்தனர்.
போரிடுவதில் ஆண்சிங்கம் போன்றவன் நானொருவனே. எனவே நீங்களனைவரும் பெண்கள்போல் வளையலணிந்து, கண்களில் மைதீட்டி, சேலையுடுத்தி வாழவேண்டும். யாரேனும் ஆண்போல் உடையணிந்தால் அழித்துவிடுவேன் என்றான் அந்தகாசுரன்.
தேவர்கள் வேறு வழியின்றி அதற்குக் கட்டுப்பட்டனர். பின்னர் மந்தர மலையையடைந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்தனர்.
அவர்களுக்கு காட்சிகொடுத்த சிவபெருமான், அந்தகாசுரனின் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவதாகக் கூறினார். அதன்படி தனது அம்சமாக பைரவரை உருவாக்கி அனுப்பினார்.
கடுங்கோபத்துடன் சென்ற பைரவர் அந்தகாசுரனின் சேனைகள் அனைத்தையும் அழித்து, முடிவில் அவனை தன் சூலத்தால் குத்தித் தூக்கினார்.
இவ்வாறு பல பைரவர்களை சிவபெருமான் தோற்றுவித்ததாகச் சொல்வர். பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஒரு தலையைக் கிள்ளியதும் பைரவ சொரூபமே.
இவர் கொடுமையை அழிப்பதில் எவ்வளவு கோபம் கொள்கிறாரோ அதேபோன்று கருணை புரிவதிலும் இணையற்றவர். பக்தர்களின் பயத்தைப் போக்கி வெற்றியைத் தேடித்தருபவர் பைரவர்.
கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் நிகழ்ந்ததாக சத்ருத்ர சம்ஹிதாவின் 8-ஆவது அத்தியாயம் குறிப்பிடுகிறது.
அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் சந்நிதி இருப்பதைக் காணலாம். இவரே அனைத்திற்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
இவர் தனி ஆலயங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் தலங்களும் உண்டு. அவற்றிலொன்று உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம்.
மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூர் நகருக்கு அருகேயுள்ள உஜ்ஜயினி காலபைரவர் ஆலயம் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை தன்பால் இழுக்கிறது. இவ்வாலயத்தில் அஷ்டமி திதியில் பைரவ பூஜை செய்தால் எதிரிகள் அழிவர்; எத்தகைய நோயும் குணமாகும்; இழந்தவற்றை மீண்டும் பெறலாம் என்று நம்பிக்கையோடு கூறுகின்றனர்.
இவ்வாலயத்தில் விசித்திரமான ஒரு வழக்கம் உள்ளது. மதுவை சமர்ப்பிக்கும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு கிண்ணத்தில் மதுவை நிரப்பி பைரவரின் வாயருகில் வைக்கிறார் பூசாரி. என்ன ஆச்சரியம். மெல்ல மெல்ல அந்த மது பாதிக் கிண்ணம் அளவுக்கு குறைந்து விடுகிறது. பக்கத்தில் எங்கும் வழிவதில்லை.
பல ஆய்வாளர்கள் இந்த பீடத்தை சோதித்தும் பார்த்துவிட்டனர். மது உறிஞ்சப்படும் மாயம்தான் தெரியவில்லை. இதைக் காணவே பல வெளிநாட்டினர் இங்கு வருகிறார்கள்.
இவ்வாலயத்துக்குப் பின்னால் குகைக்குள் பாதாள பைரவி சந்நிதி இருக்கிறது. இங்கே தந்திர பூஜைகள் செய்யப்படுகின்றன. கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இங்கே வழிபடுபவர்களின் பிரச்சினைகள் நிச்சயம் அகலுகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment