Monday, 15 May 2017

குரு மகான்கள்...!!!

குரு மகான்கள்...!!!
அருணகிரிநாதர்.இளமை வேகத்தில் தவறுகள் பல செய்து உடல் ஆரோக்கியம் இழந்து நோய்வாய்ப்பட்டவர் அருணகிரிநாதர்.தொழுநோய் பற்றிய நிலையிலும் பரத்தையினரைத் தழுவிடும் வேட்கையை மட்டும் விட்டாரில்லை. தமக்கையின் ஆதரவில் வாழ்ந்து வந்த அவர், வறுமையால் வாடிய போதும், வக்கிர உணர்வில் என்றுமே வாடியதில்லை.
தீயொழுக்கம் உடலை உருக்கிய நிலையிலும் மெய் சுகத்திலிருந்து மீளாத அருணகிரிநாதர், தமக்கையிடம் அந்தச் செலவுக்குப் பணம் கேட்க, அரிசியாலன்றி, ஒலியாலேயே நிரம்பிய கலயங்களைப் பார்த்து மனம் வெதும்பி, தம்பிக்கு கொடுக்கப் பணமில்லையே என்ற ஏக்கத்தில் பரிதவித்தாள். ‘தம்பி, உனக்கு எதற்காகப் பணம் வேண்டும்?
பெண் சுகத்துக்காகத் தானே! என்னிடம் பணமில்லை. ஆனால், பரவாயில்லை; என் உடலைத் தருகிறேன், எடுத்துக் கொள்’ என்று இரு கரம் நீட்டி அவரை அழைத்தாள்.அந்த நொடியில் ஞானோதயம் பெற்றார் அருணகிரிநாதர். பெண் என்றால் தாய், தமக்கை எல்லோருமே பெண்தானே! அதாவது, உலகத்துப் பெண்களையெல்லாம் தாயாக, தமக்கையாக பாவிக்க வேண்டும் என்பதுதானே வாழ்க்கை நெறி?
அருணகிரியார் அகம் தெளிந்தார். முருகனை நாடினார். உருகினார். செய்த பாவங்களெல்லாம் கரைந்தோடுமாறு அழுது கண்ணீர் பெருக்கினார். முருகன் மயில் மீது அமர்ந்தபடி காட்சியளித்து அவருக்கு உவகை ஊட்டியதுடன் உடல் நோயெல்லாம் நீங்கச் செய்தார்.அந்நாளில் திருவண்ணாமலை பிரதேசத்தின் ஆஸ்தான பண்டிதனான சம்பந்தாண்டானுக்கு அருணகிரியார் மீது ஆறாத பொறாமை ஏற்பட்டது.
அவருடைய ஞானம், முருக தரிசனத்துக்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட தெய்வீகப்புலமை இவற்றால் அழுக்காறு கொண்ட அவன், அவரை தொலைத்துவிடத் தீர்மானித்
தான். திருப்புகழ் பாடி முருக தத்துவத்தைப் பரப்பிய பாவலர், வில்லிபுத்தூராரின் கல்விச் செருக்கை அடக்கியவர் என்று அவர் பெரிதும் புகழ்ப்படவே அதை தனக்கு
பிறர் செய்யும் அவமரியாதையாகவே நினைத்தான் சம்பந்தாண்டான்.
அரசனைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டு அந்த செல்வாக்கில், ‘அரசருக்குப் பெரிதும் விருப்பமான பாரிஜாத மலரைக் கொண்டு வாருங்கள்’ என்று அவருக்கு ஆணையிட்டான். அவனுடைய ஆணைக்குப் பின்னால் ஏதோ சதியிருப்பதை உணர்ந்த அருணகிரியார், துணிவுடன் ஒரு முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, இறந்து கிடந்த ஒரு கிளியின் உடலுக்குள் கூடு பாய்ந்தார். பறந்து சென்றார்.
பாரிஜாத மலர்களைக் கொண்டு வந்தார். மன்னனிடம் சமர்ப்பித்தார். இடைப்பட்ட காலகட்டத்தில் சம்பந்தாண்டான் தந்திரமாக ஒரு வேலை செய்தான். அருணகிரியாரின் உடலைச் சுட்டிக் காட்டி, ‘பாரிஜாத மலர் கொண்டு வரும் முயற்சியில் தோற்றுவிட்டதால் தற்கொலை செய்து கொண்டார்’ என்று புனைக்கதை கூறினான். அது மட்டுமன்றி, ‘தம் பிரேதத்தை எரிப்பதில்தான் அருணகிரியாருக்கு விருப்பம்’என்றும் கூறி, அவர் உடலுக்கு எரியூட்டி விட்டான்.கிளி ரூபமாக வந்த அருணகிரியார், தன் உடலின் சாம்பல் மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டு கிளி உருவத்துடனேயே முருகனை அடைந்தார் என்கிறது புராணம்.
பட்டினத்தார்
கப்பல் கப்பலாய் திரவியம் கொண்டு வருவான் திரைகடல் ஓடிய மகன் மருதவாணன் என்று ரொம்பவும்தான் எதிர்பார்த்துக் காத்திருந்தார் திருவெண்காடர்.ஆனால், மருதவாணன் கப்பல் நிறைய எரு மூட்டைகளையும் தவிட்டு மூட்டைகளையுமாகக் கொண்டு வந்ததைப் பார்த்து துக்கித்துப் போனார்.
ஆத்திரத்துடன் மகனைப் பிடித்தார். ‘‘என்ன இது?’’ என்று கோபம் கொப்புளிக்கக் கேட்டார்.‘‘பிரித்துப் பாரும்’’ என்று அலட்சியமாகச் சொன்ன மகன் அங்கிருந்து புறப்பட்டான்.இத்தனைக்கும் மருதவாணன், திருவெண்காடரின் சொந்த மகனல்ல. வளர்ப்பு மகன்.
அவன்தான் இப்படிக் கப்பல் முழுக்க வரட்டியையும், தவிட்டு மூட்டைகளையும் கொண்டு வந்திருக்கிறான்!ஆத்திரமுற்ற திருவெண்காடர், ஒரு வரட்டியை எடுத்துத் தரையில் ஓங்கி அடித்தார்.உள்ளிருந்து ரத்தினக் கற்கள் தெறித்து வந்து விழுந்தன. இப்படியே ஒவ்வொரு வரட்டியிலும்! தவிட்டு மூட்டை முழுவதிலும் பொன் துகள்கள்!
தம் வணிகப் பரம்பரையின் பெயர் விளங்க வந்த பிள்ளை என்ற உற்சாகத்தில் மகனைத் தேடிக் கொண்டு வீட்டிற்குப் போனார். அங்கே, மனைவி ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தாள். அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று எழுதப்பட்டிருந்தது. அப்படி எழுதிக் கொடுத்துவிட்டு மருதவாணன் எங்கோ மாயமாய் மறைந்தவாணனாகி விட்டான்.
சுரீரென்றது திருவெண்காடருக்கு. உண்மைதானே! போகும்போது எதை எடுத்துச் செல்லப் போகிறோம்? உயிர் உடலை, நீங்கும் போது அதுவரை குடி
யிருந்த உடலையும் அப்படியே விட்டுவிட்டுத்தானே போகவேண்டும்? வேறு எதைத்தான் அது கொண்டு செல்ல முடியும்?மனசிலிருந்த ஆசாபாசங்கள் கழன்று ஓட, உடலிலிருந்து ஆடைகளும் கழன்று வீழ்ந்தன. நாகரிகம் கருதி கோவணம் மட்டுமே அணிந்த அவர், அன்றே மனைவி, உற்றார், உறவினர், சொத்து, திரவியம் அனைத்தையும் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
துறவியாய்ப் போனவன் மீண்டும் சொத்து நாடி வரலாமோ என்ற ஐயத்துடன் அவருடைய ஒரே தமக்கை அவருக்கு விஷம் பொதிந்த பணியாரம் ஒன்றைத் தந்து அனுப்பினாள். சூட்சுமம் புரிந்து கொண்ட, இப்போது பட்டினத்தாராகிவிட்ட திருவெண்காடர், அந்த பணியாரத்தை தமக்கையின் வீட்டு ஓலைக் கூரை மீது எறிய, கூரை ‘குப்’பென்று தீப்பற்றி எரிந்தது. அதோடு, தனக்கும் தன்னுடைய சொத்துகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடுத்திவிட்டுப் புறப்பட்டு விட்டார்.
துறவிக்கு சொந்தமில்லை, பந்தமில்லை என்ற நியதியைத் தன் தாயைப் பொறுத்தவரை உடைத்தெறிந்தார் பட்டினத்தார். பந்தம் எல்லாவற்றையும் அறுத்தெறிந்தாலும் பூவுலக பந்தம் விட்டுச் செல்லும் தாய்க்கு மகன் இறுதிக்கடன் செய்ய வேண்டியது கடமை என்றுணர்ந்தார்.
அதனால்தான் யார் உதவியும் இல்லாமல் பச்சை வாழை மரங்களை எரிய வைத்து தாயின் சிதைக்கு தீ மூட்ட அவரால் முடிந்தது.பட்டினத்தார் சென்னை திருவொற்றியூரில் கடற்கரை மணலில் உயிரோடு புதைந்து அப்படியே சமாதியாகி விட்டதாகவும், பிறகு சுயம்பு லிங்கமாக அவர் வெளியே வந்ததாகவும் கூறுகிறார்கள். பட்டினத்தார் ஜோதிமயமாக இறைவனுடன் ஐக்கியமானார் என்றும் சொல்வார்கள்.
ராமலிங்க அடிகளார்
சமரச சன்மார்க்கம் - மனித இனத்திலேயே உள்ள பாகுபாடுகளையும் வேறுபாடுகளையும் கண்டு வருந்திய ராமலிங்க சுவாமிகள் துவங்கிய சங்கம் இது. ஆனால், அவருக்குப் பிறகு அவருடைய உள்ளுணர்வுகளின் அழுத்தம் பிறரிடம் பிரதிபலிக்காததால் அந்த இயக்கம் உலகம் முழுமையும் பரவ இயலவில்லை.
ஆனாலும் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் புகழும், அவருடைய கொள்கைகளும் என்றும் நிலைத்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.அடிகளை அறிவோமா?
நூற்று எழுபத்தேழு ஆண்டுகளுக்கு முன் ஒளிர்ந்த ஜோதி அவர். சிதம்பரம் அருகே மருதூரில் ராமய்யப் பிள்ளை - சின்னம்மாள் தம்பதியரின் ஐந்தாவது குழந்தை
ராமலிங்கர்.முலைப்பால் உண்ணும் பருவத்திலேயே முக்தி ஞானம் பெற்ற தவப்புதல்வர் அவர். சிதம்பரத்தில் தில்லை நடராசன் சந்நதி எதிரே கூப்பிய கரங்களும், ஒன்றிய மனதுமாய் ராமய்யப் பிள்ளை தம்பதி. தந்தையின் கை மடிப்பில் ராமலிங்கர் ஆரோகணித்து நெஞ்சிலே சாய்ந்திருந்தார்.
கற்பூர தீபம் நடராஜரின் தேஜஸை விகசித்துக் காட்டியது. அனைவரும் உள்ளம் உருக, மெய் நெகிழ பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தபோது அந்த மழலைச் சிரிப்பு, தெய்வீக மணியோசையின் பிரதிபலிப்பாக அனைவரையும் கவர்ந்தது. நடராசன் நகைப்பூட்டினாரா? கற்பூர ஒளி கிச்சு கிச்சு மூட்டியதா? இறைவன் திருவிளையாடல் போல நடந்த அந்தச் சம்பவமே ராமலிங்கனாரின் தெய்வீகத் தன்மையை வெளிக்காட்டியது.
தந்தையின் மறைவுக்குப் பிறகு மூத்த அண்ணன் சபாபதியின் ஆதரவில் வாழத் துவங்கினார் ராமலிங்கனார். பள்ளிக்குச் செல்வதை வெறுத்தார். அதனாலேயே தமையனாரின் கோபத்திற்கும் ஆளானார். ஆனால், ஏட்டுச் சுரைக்காயைச் சுவைக்காத அவர், கேட்டுப் பெறும் அறிவையெல்லாம், கேளாமலேயே, படிக்காமலேயே பெற்றார். படிப்பதற்கென்றே தனியறை ஒதுக்கப்பட்டிருந்தாலும் அங்கும் இறை உணர்வுடனேயே வாழ்ந்து வந்தவர் அவர்.
அறையிலே பாடப்புத்தகங்களுக்கு பதிலாக விளக்கு, சாம்பிராணி, கற்பூரம் என்று பூஜை சாமான்களும், பழம், இனிப்பு என்று நைவேத்யப் பொருட்களும் நிறைந்திருந்தன. சுவரிலே ஒரு கண்ணாடி. அந்தக் கண்ணாடியைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார் ராமலிங்கர். எதிரே இருக்கும் உருவத்தை பிரதிபலிப்பது கண்ணாடியின் இயல்பு. ஆனால், இவரிடமிருந்த கண்ணாடி காட்டியது அழகு முருகனின் ஆனந்தக் கோலம்!
கண்ணாடியே முருகன் படம்! அதற்கே பூஜை வழிபாடு. ஆராதனை...! ஒன்பது வயதில் யாருக்கும் கிடைத்தற்கரிய பேறு! ஆறுமுகங்கள், கடம்ப மாலையணிந்த பன்னிரு தோள்கள், கையில் கூர்வேல். பெருமாளைத் தாங்கும் பெருமையுடன் மயில், நெடிதுயர்ந்த சேவல்கொடி என்று தான் கண்ட தரிசனத்தை விவரிக்கிறார் அடிகளார்.
ராமலிங்கரின் முதல் சீடர் என்று தொழுவூர் வேலாயுத முதலியாரைச் சொல்லலாம். பள்ளிக்கூடத்தை எட்டிக் கூடப் பார்க்காத ராமலிங்கரை சோதிப்பதற்காக வந்தவர், சிலேடையாக நூறு பாடல்களைத் தாமே இயற்றி, அவை எல்லாம் சங்ககாலப் பாடல்கள் என்று கூறி வள்ளலாரிடம் சமர்ப்பித்தார்.
அவற்றில் ஒன்றிரண்டை மட்டும் படித்த ராமலிங்கர் உடனேயே சொல்லிவிட்டார்: ‘‘இது யாரோ ஒன்றும் தெரியாத அறிவிலி எழுதியது. இவ்வளவு பொருட்பிழை, இலக்கணப் பிழைகள் சங்கப்பாடல்களில் காணக் கிடைக்காது!’’ பிடரியில் அடித்த வேதனையை உணர்ந்தார் முதலியார். உடனே வள்ளலாருக்கு சீடரானார்.
சென்னைவாசியான ராமலிங்கனார் இங்கு தழைத்த ஆன்மிக நெறிகளைப் புகழ்ந்து, ‘தருமமிகு சென்னை’ என்று பாடினார். ஆனால், ‘அவர்’ காலத்திலேயே ஆத்திகம் பலவீனப்பட்டு, நகர மக்களின் பொய் நிறைந்த வாழ்க்கையைக் காண நேர்ந்தது.
இந்நிலையைச் ‘சிறிதும் நான் ஊன்றிப் பார்த்ததே இல்லை’ என்று சொல்லி வேதனைப்பட்டிருக்கிறார் அடிகளார்.நகரின் மீது ஏற்பட்ட வெறுப்பால் ஒதுங்கிப் போய் ஏதேனும் கிராமத்தில் வாழ்க்கையை நடத்துவது என்ற முடிவுக்கு வந்த அவர் தேர்ந்தெடுத்தது வடலூர் கிராமத்தை.
தன் தேவைக்கேற்ற உதவியை ஓரிரு நண்பர்களிடமிருந்து மட்டுமே கோரிப் பெற்றார் ராமலிங்கனார். ஆனால், அவருக்கோ கொட்டிக் கொடுக்கத் தயாராக எல்லோருமே இருந்தார்கள். தன் எச்சரிக்கையையும் மீறி தன் தேவைக்கும் மிகுதியாக கொடுக்கப்பட்டது என்றால், தேவையில்லை என்று தோன்றிய பணத்தையும், பொருளையும், கிணற்றிலோ, குளத்திலேயோ எறிந்து விடுவார் ராமலிங்கனார்.
‘‘இரண்டு காதுகளையும், மூக்கையும் படைத்த இறைவன், மனிதர் நகையணிவது தனக்கு உடன்பாடுதான் என்றிருந்தால் ஆண்களின் காதுகளிலும், பெண்களின் மூக்குகளிலும் ஓட்டைபோட்டே படைத்திருக்கமாட்டாரா?’’ என்று கேலியாகக் கேட்பார்.தான் இயற்றும் பாடல்கள், தான் சொல்லும் கருத்துகள் எதுவும் புத்தக வடிவில் வெளியாவதை வள்ளலார் விரும்பியதில்லை. அப்படிப்பட்ட தற்புகழ்ச்சி தனக்கு வேண்டாம் என்பார் அவர்.
ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூர் கோயிலுக்கு எப்படி தினமும் நடந்துபோய் வந்து கொண்டிருந்தாரோ அதே போல ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள கந்தக் கோட்டத்திற்கும் போய் வந்தார். கந்தக் கோட்டத்தில் முருகன் சந்நதிக்கு எதிரே அமர்ந்து அவர் பாடிய பாடல்களை அதே கோயிலில் பணியாற்றிய ஒருவர் குறித்து வைத்துக் கொண்டு பின்னாளில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். நூலின் பெயர் ‘சென்னை கந்தர் தெய்வ மணிமாலை’.
அதே போல தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் ரத்தின முதலியார் இருவரும் வள்ளலாரின் பிற பாடல்களைப் புத்தகமாக கொண்டு வர அனுமதி கேட்டபோது, அவர் மறுத்துவிட்டார். ரத்தின முதலியார் உண்ணா நோன்பு மேற்கொண்டு வள்ளலாரின் கருணையையும் அனுமதியையும் பெற்றார்.
எதிர்மறைப் பொருளையும் நேர்மறையாக்கிய வள்ளல் அவர். இந்தப் பாடலைப் பாருங்கள்: ‘வேண்டாம்’ என்பதையெல்லாம் ‘வேண்டும்’ என்று எவ்வளவு அழகாகச் சொல்கிறார்.‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண் ஆசையை மறக்க வேண்டும்.’
ராமகிருஷ்ண பரமஹம்சர்
ஏழு வயதிலேயே ஞானத் தேடலில் ஈடுபட்ட மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர். உலகே வியந்து போற்றும் விவேகானந்தர் போன்ற ஆன்மிகச் சீடர்களைப் பெற்றவர். கொல்கத்தாவிலிருந்து சுமார் 150 கி.மீ. தொலைவிலுள்ள கமார்புகூர் என்ற கிராமம், இவர் பிறப்பால் மேன்மை பெற்றது. கொல்கத்தா நகரமோ இவரைத் தன்னிடம் குடியமர்த்தி வளர்த்ததால் சிறப்பு பெற்றது. சுதிராம்-சந்திரமணி தம்பதியருக்கு அருந்தவப்புதல்வராகப் பிறந்தவர். இயற்பெயர்: சுதாகரன்.
சிறு வயது முதலே இறையருள், துறவு, ஆன்மிக போதனை என்று பக்குவப்பட்ட மனதுடன் உலகை உய்விக்க வந்தவர் ராமகிருஷ்ணர்.வாழ்க்கைத் தத்துவங்களை எளிய சொற்களில், பளிச்சென்று புரியும் கதைகள் மூலமாகவே சொல்லி மக்களை நல்வழிப்படுத்த முனைந்தவர். உலகெங்கும் இவருடைய போதனைகள் பெரிதும் போற்றப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன.
மனைவியையும் இறை ஸ்வரூபமாகவே கண்டு அவருக்கு காளி பூஜை செய்த மகான் ராமகிருஷ்ணர். மனைவி சாரதாதேவியும் இல்லறப் பற்றின்றி கணவருடைய நெறியிலேயே ஆன்மிக சித்தாந்தங்களில் தன்னை முற்றிலுமாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
மக்கள் ஆன்மிக உணர்வு மேற்கொள்ள ராமகிருஷ்ணர் கூறிய கதைகள் நிறைய உண்டு. அவற்றில் ஒன்றை இங்கே காணலாம்:தினம் தினம் மீன் பிடித்து, சொற்ப வருமானத்தில் திருப்தியில்லாமல் உழன்று கொண்டிருந்தான் ஒரு மீனவன்.
நிறைய செல்வம் வேண்டும்; உலக சுகம் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையில் மீன்பிடித் தொழிலை விட்டு விட்டு, பிறர் வீடுகளில் புகுந்து பொருட்களைத் திருட ஆரம்பித்தான். துவக்க பயம் அகன்று, பிறகு யாரிடமும் பிடிபடாத வாய்ப்புகளால் துணிச்சல் பெற்று, திருட்டுத் தொழிலை அமர்க்களமாக நடத்திக் கொண்டிருந்தான்.
அந்த முறையில் ஒரு ஜமீன்தாரின் தோட்டத்திற்கு புகுந்தான் திருடன். அவனால் ஏற்பட்ட கலகலப்பில் தோட்டக் காவலர்கள் விழிப்படைந்து அவனைப் பிடிக்க ஓடோடி வந்தார்கள். அதைப் பார்த்துப் பயந்த அவன், ‘கடவுளே, இந்த ஒரு முறை என்னைக் காப்பாற்றி விடு, இனி திருட்டுத் தொழிலுக்கே முழுக்குப் போட்டு விடுகிறேன்’ என்று வேண்டிக் கொண்டான் அவன். உடனே ஓர் எண்ணம் தோன்றியது.
அங்கே பக்கத்தில் காய்ந்த மரங்களையும் கிளைகளையும் எரித்துப் போட்டிருந்தார்கள். அவன் தன் உடைகளைக் களைந்தான். வெறும் கோவணத்துடன், எரிந்து பரவியிருந்த சாம்பலை எடுத்துத் தன் உடலெங்கும் பூசிக் கொண்டான். பிறகு ஒரு சந்நியாசி ஆழ்ந்த நிஷ்டையில் இருப்பது போல் அமர்ந்து கொண்டான்.
திருடனைத் தேடி வந்த காவலர்கள், சலனமில்லாமல் அமர்ந்திருக்கும் சந்நியாசியைக் கண்டார்கள். அவனை ஒரு பெரிய யோகி என்று கருதினார்கள். அவன் கால்களில் வீழ்ந்து வணங்கினார்கள். விவரம் தெரிந்துகொண்ட ஆன்மிகவாதியான ஜமீன்தார் ஓடோடி வந்தார். திருடன் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.
பூக்களையும் பழங்களையும் காணிக்கையாகத் தந்தார். அது மட்டுமல்ல; அந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் ஒரு யோகி, தம் தோட்டத்தில் தரிசனம் கொடுப்பதை தெரிவித்து, அவர்களனைவரையும் அவருடைய ஆசி பெற அழைத்தார்.
திருடனை சாமியாராகப் பாவித்து வழிபட கூட்டம் நெருங்கியடித்தது. நெகிழ்ந்து போனான் திருடன். பெரிய தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்த தனக்கு இப்படி ஒரு மரியாதையும், மதிப்பும் இருக்கிறதே என்று பிரமித்தான். வெறும் வேடத்திற்கே இவ்வளவு மதிப்பு என்றால் உண்மையாகவே துறவியானால், இறையின்பத்தை எளிதாக அடைந்து விட முடியுமோ என்று கருதினான் அவன். ‘என்னிடம் கடவுளை எதிர்பார்த்துதானே மக்கள் எனக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள்!
வெளியே நான் யோகி; உள்ளுக்குள்ளேயோ போகி! என் வெறும் புறத்தோற்றமே இத்தனை மதிப்புகளை அளிக்கக் கூடும் என்றால், உள்ளேயும் நான் யோகியானால், உயர்ந்ததொரு பேரின்பமாக அந்த இறைவனையே கண்டு மகிழலாமே!’ என்று கருதினான். அந்த சிந்தனை அவனை எல்லா உலக இன்பங்களையும் துறக்க வைத்தது.மறுநாள் சாமியாரை நாடி வந்தவர்களுக்கு ஏமாற்றம்! அவனைக் காணோம். ஆமாம், அவன் உண்மை துறவியாகி மக்களால் எட்டமுடியாத தொலைவில் கானகத்திற்குச் சென்று தவம் செய்ய போய்விட்டான்(ர்).
அன்னை சாரதாதேவி
இல்லறத் துறவிகளில் ஆண்களுக்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் ராமகிருஷ்ண பரமஹம்சர். அதேபோல பெண்களில் அன்னை சாரதாதேவி.
ஒன்றுமே அறியாத பால பருவத்திலேயே தன்னுடைய கணவராக ராமகிருஷ்ண பரமஹம்சரை அடையாளம் காட்டிய சாரதாதேவி, அவரை மணமுடித்த பின்னர்,
அவர் அடியொற்றி கணவரின் ஆன்மிக வாழ்வுக்கு மட்டும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாரே தவிர சிறிதுகூட லௌகீக வாழ்வில் நாட்டம் கொண்டவரில்லை. இந்த உறவு முறை, திருமண பந்தம் தெய்வீகமானது. அதனால்தான் ஊரறிய திருமணமானாலும் கணவன் - மனைவி இருவரும் ஆன்மிகத் தொண்டிலேயே தம் வாழ்நாளை செலவிட்டனர்.
சாரதாதேவியின் பிறந்த ஊரான ஜெயராம்பாடியிலிருந்து சுமார் நான்கு மைல் தொலைவில் காமார்புகூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில்தான் ராமகிருஷ்ணர் அவதரித்தார். அன்னை பராசக்தி உபாசகரான அவருடைய அபரிமிதமான பக்தி. ‘கிறுக்குத்தனம்’ என்று விமர்சிக்கப்பட்டது.
ஆனாலும் அவர் யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காளியன்னை மீதான பக்தி அவருக்கு மேலும் மேலும் பெருகிக் கொண்டுதான் போயிற்று.
இந்த இரு கிராமங்களுக்கும் இடையே சிகோர் என்று ஒரு கிராமம். அங்கே ஒரு தெருக்கூத்து நடைபெற்றது. தன் மடியில் அமர்ந்திருந்த சாரதையை வயதான பெண்மணி ஒருத்தி கொஞ்சலாக சீண்டினாள். ‘‘நீ கல்யாணம் செய்துக்கறதாக இருந்தா யாரை செய்துப்பே?’’பளிச்சென்று சாரதையின் பிஞ்சுக்கரம் நீண்டது.
அதன் ஆள்காட்டி விரல் சுட்டிய இடத்தில் ராமகிருஷ்ணர் அமர்ந்திருந்தார்! மற்றவர்களின் கேலிக்கும், சிரிப்புக்கும் ஆளானாள் இரண்டே வயது நிரம்பிய சாரதை. இல்லையா பின்னே! தன்னைவிட சுமார் இருபது வயது மூத்த ஒருவரைத் தன் கணவராக வரிப்பது என்றால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவா இருக்கிறது?
ஆனால், ராமகிருஷ்ணரும், தனக்கான திருமண பேச்சும் அது தொடர்பான அலைச்சலும் தன் வீட்டில் பெருகியதைக் கண்டு, ‘‘எங்கெங்கோ ஏன் அலைந்துகொண்டிருக்கிறீர்கள்? ராமச்சந்திர முகர்ஜியின் மகள் எனக்காகக் காத்திருக்கிறாள் போய் மணம் பேசிவிட்டு வாருங்கள்?’’ என்று
சாரதையைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
திருமணம் ஆயிற்று. தன் மனைவியாகிய சாரதையை காளி அன்னையின் சொரூபமாகவே கண்டார் ராமகிருஷ்ணர். ஒரு அமாவாசை இரவில் சாரதையை அன்னையாகவே வழிபட விரும்பினார் ராமகிருஷ்ணர். ஒரு மனையில் சாரதையை அமரச்செய்து மலர் மாலையிட்டு, உதிரிப்பூக்களால் காளிதேவிக்கு அர்ச்சனை செய்வதுபோலவே செய்தார் ராமகிருஷ்ணர். ‘அன்னை’ முன் வணங்கித்தொழுது பூஜையை முடித்தார்.
இந்த அனுபவத்தில் தன்னுள் ஒரு தெய்வாம்சம் புகுந்ததை சாரதையால் உணர முடிந்தது. உடல்மீதான பற்றை விலக்கி ஆன்மிகத் தொண்டிற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் சாரதை.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஒரு சிறிய அறையில் அன்னை சாரதாதேவி வசிக்கத் துவங்கினார்.
தினமும் கங்கையில் நீராடி, தன் அறையிலேயே நீண்ட நேர தியானத்தை மேற்கொள்வார். ராமகிருஷ்ணருக்கு உணவு தயாரித்து அளித்த பிறகு தானும் உணவருந்துவார். மாலையில் எண்ணெயிட்டு விளக்குகளை ஏற்றி வைத்து தியானத்தில் ஈடுபடுவார். அதன்பிறகு ராமகிருஷ்ணருக்கான இரவு உணவைத் தயார் செய்வார்.
இதுதான் அன்னை சாரதையின் ‘குடும்ப’ வாழ்க்கை, ‘அவருடைய ஆன்மிக’ வாழ்க்கை எப்படியிருந்தது?ராமகிருஷ்ணர் தம் சீடர்களோடு, ஆடிப்பாடி இறையுணர்வில் ஆழ்ந்திருக்கும் சமயங்களில் - ஏன் தினமுமே அப்படித்தான் - அன்னையால் அவரை நெருங்க முடியாது. அந்த நாட்களில் தன் அறையிலிருந்த தடுப்புத் தட்டியில் ஓர் ஓட்டை போட்டு அதன் வழியாக ராமகிருஷ்ணரை தரிசிப்பார்.ராமகிருஷ்ண பரமஹம்சர் நோய்வாய்ப்பட்டார். அவர் முக்தியடையும் முன், தான் ஆற்றிவந்த பொறுப்புகளையெல்லாம் இனி அன்னையே மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தன்னுடைய ஐம்பத்தேழாவது வயதில் 21.7.1920 அன்று அன்னை தம் சீடர்களைத் தவிக்க விட்டுவிட்டு இம்மண்ணுலகை நீத்தார். கயாவிலுள்ள பேலூர் மடத்திற்கு அவர் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. கங்கைக்கரையில் அக்னி அவ்வுடலை ஆட்கொண்டது. அதே இடத்தில் உருவாகியிருக்கும் ஒரு கோயில் இன்றும் அன்னையின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
விவேகானந்தர் கொல்கத்தா நகரின் பெருமை, இவர் பிறப்பால் மேலும் சிறப்பு கண்டது. 1863ம் ஆண்டு இந்தத் தவப்புதல்வன் அவதரித்தார்.இந்தியாவின் கிழக்கு ஓரத்தில் பிறவி எடுத்த இவர், உலகம் முழுவதையுமே தன் கருத்து ஆற்றலினால் வசீகரித்தார். எல்லாத் துறைகளிலுமே முன்னேறி உலகுக்கே முன்னோடியாகத் திகழ்ந்த அமெரிக்காகூட, ஆன்மிகத் துறையில் அதன் பார்வை இந்தியாவில் லயித்துவிடக் காரணமாக இருந்தவர் இவர்.
அந்த நரேந்திரநாத் தத்தர்தான் விவேகானந்தர்.படிப்பு, விளையாட்டு, இசை என்று பல துறைகளிலும் வித்தகராகத் தம் பால்ய பருவத்திலேயே விளங்கியவர். நினைவாற்றல் இவருக்குக் கிடைத்த வரப்பிரசாதம். என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை முற்றிலும் அப்படியே நினைவில் இருத்தி, பலர் புருவங்களை உயர்த்தியவர்.
ஆன்மிக நெறியில் ராமகிருஷ்ண பரமஹம்சரை ஆசானாகக் கொண்டவர். தன்னுடைய முப்பத்தொன்பதாவது வயதில் 1902ம் ஆண்டு உலகெங்கும் லட்சக்கணக்கான சீடர்களைப் பரிதவிக்க விட்டு விட்டு இம்மண்ணுலகை நீத்தார்.இளைஞர்களுக்கு விவேகானந்தர் ஓர் உதாரண புருஷர். தன் வாழ்நாளில் தீரத்துடன் அவர் சந்தித்த நிகழ்ச்சிகள் ஏராளம்.
மனஉறுதி, எதற்கும் அஞ்சாத திடசிந்தனை, நியாயத்துக்காகப் போராடும் குணம், அதேசமயம் தகுதியானவர் மீதான கருணை, பெரியோர்களுக்கு மரியாதை, தேசப்பற்று, ஆழ்ந்த ஆன்மிக ஞானம் இவற்றின் மொத்த உருவம்தான் அவர்.அவர் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களைப் பார்க்கலாமா?
விவேகானந்தர் பல சமஸ்தான மன்னர்களுக்கு உற்ற நண்பராக இருந்தார். அதைவிட, அந்த மன்னர்கள் அவருடன் தாம் நட்பு வைத்திருப்பதில் பரிபூரண சந்தோஷம் அடைந்தார்கள். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுத்தார்கள். ஆனால், இப்படி உதவி பெற்ற விவேகானந்தரை பிறர் விமர்சித்தார்கள். ‘அவர்களைச் சார்ந்து நீங்கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேட்டார்கள்.
அவர்களுக்கு விவேகானந்தர் நேரடியாக, தெளிவாக பதில் சொன்னார்: ‘‘நான் மன்னரைச் சார்ந்திருக்கிறேன் என்று விமரிசிப்பதைவிட, என் கருத்துக்கு அவரை உடன்படச் செய்கிறேன் என்று ஏன் சொல்லக்கூடாது?
ஆயிரக்கணக்கான மக்களை ஆளும் பொறுப்பில் அவர் இருக்கிறார். அவரிடமுள்ள ஏராளமான செல்வம், அந்த மக்களுக்கெல்லாம் போய்ச்சேர வேண்டும் என்பது என் நோக்கம். மன்னரை என் பக்கம் திருப்புகிறேன் என்றால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் மறைமுகமாக உதவுகிறேன் என்றுதான் அர்த்தம்!’’
அவருடன் நண்பர்களாக இருந்த மன்னர்களில் கேத்ரி என்ற மன்னர் குறிப்பிடத்தக்கவர். இவருடன் விவேகானந்தர் தங்கியிருந்தபோது அரசு நிகழ்ச்சியாக ஒரு நாட்டியம் நடைபெற்றது. தனது பிரம்மசார்யத்துக்கு அதுபோன்ற நாட்டிய நிகழ்ச்சியைக் காண்பது இழுக்கு என்று கருதினார் விவேகானந்தர்.
நடனப் பெண்மணியையும் அவளுடைய அசைவுகளையும் கண்டால் தன் மனம் பேதலிக்கும் என்று அவர் நினைத்தார். ஆகவே நடனம் துவங்கியதும் அவர் அந்த மண்டபத்தை விட்டுப் புறப்பட யத்தனித்தார். ஆனால், மன்னர் அவரைத் தடுத்து சிறிது நேரமாவது இருந்து நாட்டியத்தைப் பார்த்துவிட்டுச் செல்லுமாறு வேண்டிக்கொண்டார்.
அன்றைய தினம், விவேகானந்தரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய தினம் என்றே சொல்லலாம். அந்தப் பெண் நாட்டியமாடியதைவிட அவள் எந்தப் பாட்டிற்காக ஆடினாளோ அந்தப் பாடலின் கருத்துதான் அவருடைய மனதில் புதுத் தத்துவத்தை உயிர்ப்பித்தது.
‘என்னிடம் நிறைய தீய குணங்கள் இருக்கலாம், ஆனால், இறைவனே அவற்றைப் பெரிதாக நினைக்காதே உனக்கு முன்னால் அனைவரும் சமம். இரும்பு, கோயிலில் உன் விக்கிரகமாக இருக்கிறது. அதே இரும்பு, கசாப்புக்கடைக்காரனின் கரத்தில் இயங்கி பல பிராணிகளின் உயிரை வாங்குகிறது.
என்னைப் படைத்தவன் நீ. என் தீய குணங்களுக்கு முக்கியத்துவம் தராதே, என்னை ஆட்கொள், இறைவா’ என்ற பொருள் தரும் சூர்தாஸின் பாடல் அவருக்குத் தெளிவைத் தந்தது. எல்லாமே பிரம்மம்தானே!
இதில் நடனப் பெண் யார், நான் யார்? நானும் பிரம்மமாகி, அவளும் பிரம்மமாகி இருக்கும்போது யார், யாரை பாதிக்க முடியும்? எனக்கு எப்படிச் சலனம் உண்டாக்க முடியும்?’ என்று தீவிரமாக சிந்தித்தார்.முதலில் தான் அந்த நடனத்தைப் பார்க்க முடியாது; பார்த்தால் சலனப்பட்டு விடுவோம் என்று கருதியதற்காக வெட்கமடைந்தார்.விவேகானந்தரின் இந்த மனமாற்றத்திற்குக் காரணமாக இருந்த கேத்ரி மன்னர்தான் அதுவரை நரேந்திர தத்தராக இருந்தவரை விவேகானந்தர் என்று அழைக்க ஆரம்பித்தார்.
ஷீர்டி சாயிபாபா
மழைநீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடியது. ஷீர்டி கிராமமும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தது. வீடு கட்டி வாழ்ந்தவர்கள் எல்லாம், மழைக்கும், வெள்ளத்திற்கும் புகலிடம் கொண்டவர்கள் எல்லாம் ஒரே ஒருவரைப் பற்றி மிகவும் கவலைப்படத் துவங்கினார்கள். அவர் - பாபா.எந்தக் குடிலும் அமைத்துக் கொள்ளாமல், யார் வீட்டிலும், அடைக்கலம் கோராமல் தனியே ஒரு வேப்ப மரத்தடியில் வாழ்ந்த பற்றற்ற மகான் அவர். தனக்கு எதுவும் தேவையில்லாதவராக இருந்தாலும், ஊரார் பிணிகளைத் தீர்த்து வைக்க அவர் தவறியதில்லை.
இயல்பாகவே அனைவருக்கும் உதவும் அவருடைய குணத்திற்கு ஆன்மிக வலுவும் சேர்ந்து கொண்டதால் மக்கள் உடல் உபாதைகள், மன உளைச்சல்கள் எதுவுமின்றி வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் எல்லாம் அந்தக் காலத்து மனிதர்கள். அதனாலேயே நன்றிக்கடன் நிறைய பட்டவர்கள்.
தம்மை உய்வித்து வரும் ஒரு மகான், தாம் எவ்வளவோ வற்புறுத்தியும் தனக்கென தனிக்குடில் எதுவும் அமைத்துக்கொள்ளாத மகான், இந்த மழையிலும் வெள்ளத்திலும் எப்படிப் பரிதவிக்கிறாரோ என்று அவர்கள் அஞ்சினார்கள். அவர்மீது அன்பு கொண்ட சிலர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வேப்ப மரத்துக்கு ஓடோடிச் சென்றார்கள்.
அங்கே மரத்தில் சாய்ந்தபடி தவ நிலையில் அசையாது அமர்ந்திருந்தார் பாபா. வெள்ள நீர் அவரைச் சூழ்ந்து ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைக் கூளங்கள் எல்லாம் அவர் மேனி மீது அப்பியிருந்தன.அவருடைய சமாதி நிலையைப் பார்த்து பிரமித்த மக்கள், அவரை எழுப்ப மனமில்லாமல் திரும்பிச் சென்றார்கள்.
சிலமணி நேரங்களுக்குப் பிறகு மழை நின்றது. வெள்ளம் வடிந்தது. மக்கள் ஓடோடி வந்து பாபாவைப் பார்த்தார்கள். பாபா கீழே சாய்ந்திருந்தார். அவர் மீது மணலும், வெள்ளக் கசடுகளும் மூடியிருந்தன. ஆமாம், அப்போதும் அவர் தியானத்தில்தான் இருந்தார். மக்களெல்லாம் அவரை எழுப்பி, சுயநினைவுக்குக் கொண்டு வந்து அழைத்துச் சென்றார்கள்.
அந்த ஊரில் இருந்த பாழடைந்த மசூதியில் அவரை அமரச்செய்து, அங்கேயே தங்கி வரும்படி கேட்டுக்கொண்டார்கள். ‘‘இந்த ஒண்டிக்கட்டைக்குத் தங்குவதற்கு இடமெல்லாம் எதற்கு? நான் மரத்தடியிலேயே தங்கிக் கொள்கிறேன். அதுபோதும்,’’ என்று பெரிதும் மறுத்தார் பாபா. ஆனால், மக்கள்தான் வற்புறுத்தி அவரை அங்கே தங்கச் செய்தார்கள்.
தன் சக்தியை உணராதவராக உணர விரும்பாதவராக இருந்தார் பாபா. அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவர் நிழல்பட்டு, பட்டுபோன செடிகள்கூட துளிர்த்தன. அவருடைய பார்வையாலேயே பல நோயாளிகள் குணம் பெற்றார்கள். நியாயமான, தேவைக்கு ஏற்ற வசதிகளைப் பெற்றார்கள்.
1820-1850 ஆண்டுகளில் ஓர் அந்தணக் குடும்பத்தில் பிறந்தவர் பாபா. யாருமே இந்த ரிஷிமூலத்தை வரையறுத்துச் சொல்லவில்லை என்றாலும் பாபாவே ஓரிரு சமயங்களில் இலை மறைவு காய்மறைவாகச் சொன்ன தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதன்மூலம் கிடைக்கும் தகவல்கள்தான் இவை.
வறுமை காரணமாகத் தம் குழந்தையை வளர்க்க இயலாத பெற்றோர்கள் அவரை ஒரு முகமதியரிடம் ஒப்படைத்தார்கள். நிஜாம் மன்னரின் பாதிரி என்ற கிராமத்தில் இவ்வாறு தம் பால்ய வாழ்க்கையைத் துவங்கிய பாபா, தன்னுடைய ஐந்து வயதுவரைதான் அந்த முகமதியரின் பராமரிப்பில் வாழ முடிந்தது.
பெரியவர் இறந்துவிடவே, அந்த ஊர் பாணயக்காரர்கோபால்ராவ் தேஷ்முக் என்பவரின்பொறுப்பில் வாழ்க்கையைத் துவங்கினார்.
கோபால்ராவ் திருப்பதி வெங்கடாசலபதியின் பக்தர். பள்ளிக்குச் சென்று படிக்காவிட்டாலும் சிறு வயதிலிருந்தே தன் வளர்ப்புத் தந்தையின் அடிச்சுவட்டில் ஆன்மிக ஞானம் வரப்பெற்றார் பாபா. கோபால்ராவையே தன் குருவாக வரித்துக் கொண்ட பாபா, பத்து வருடங்கள் அவருடைய பராமரிப்பில் வாழ்ந்து பிறகு, குருவின் கட்டளைப்படி மேற்கு நோக்கி சென்றார்.
சென்றவர், மகாராஷ்டிர மாநிலம், அகமத் நகரிலுள்ள ஷீர்டி என்ற கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்.அவருடைய இயற்பெயர், யாருக்கும் தெரியவில்லை. ஆனால் - ஷீர்டியில்
‘சாயி மகராஜ்’ என்றே மக்கள் அழைத்து அவரைத் தொழுதார்கள்.
கூடுவிட்டுக் கூடுபாயும் இறைநிலையைக் கண்டவர் பாபா. 1886ம் ஆண்டில்,
தாம் தங்கியிருந்த மசூதியில் தன் உதவியாளரிடம் ‘‘என் உயிர் இன்னும்
மூன்று நாட்களுக்கு மேல் என் உடலில் இருக்காது. பிறகு உயிர் மீண்டும் இதே
உடலுக்குள் புகுந்துவிடும். அதுவரை பத்திரமாக என் உடலைப்
அப்படி நான் வரவில்லை என்றால் நான்காம் நாள் என் உடலை இந்த மசூதி அருகிலேயே அடக்கம் செய்துவிடலாம்,’’ என்றார்.1918ம் ஆண்டு மகாசமாதியடைந்தார் இந்த மகான். அதற்கு முப்பத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் எப்படித் தம் உடலைவிட்டு நீங்கியிருந்தாரோ அதேபோலதான் இப்போதும் தன் உடலைவிட்டு நீங்கியிருக்கிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
அவர் அரூபமாக நம் எல்லோருடனும் இருக்கிறார். மனமுருக அவரிடம் நம் நியாயமான குறைகளைச் சொன்னால் பரிவுடன் கேட்டு உடனே குறைகளைகிறார். இது அவர்மீது ஆழ்ந்த பக்தியுள்ளோரின் அனுபவம்.
பாம்பன் சுவாமிகள்
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் 1850ம் ஆண்டு வாக்கில், ராமேஸ்வரத்திலுள்ள பாம்பன் பகுதியில் அவதரித்தவர் குமரகுருநாதர்.இயல்பாகவே தமிழ் ஆர்வம் கொண்டிருந்த குமரகுருநாதர், கல்லூரி நாட்களில் தம் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக, அந்தப் புலமை ஆன்மிகம் சார்ந்ததாக சைவ சமய நெறி பொதிந்ததாக அமைந்திருந்தது.முருகனருள் நிரம்பப் பெற்றவர் இவர். மனைவி அவரிடம் வந்து, ‘‘ஏனோ தெரியவில்லை, குழந்தை ஓயாமல் அழுது கொண்டிருக்கிறாள், திருநீறு கொடுங்கள்’’ என்று கேட்டார். அதை மறுத்து குமரகுருநாதர், ‘நம்பிக்கையுடன் நீயே திருநீறு இடு.’ என்று சொன்னார்.
அதேபோல மனைவியார் திருநீறு இட, குழந்தை அழுகையை உடனே நிறுத்தியது. ‘நம்பிக்கைதான் முக்கியம்; திருநீறு அந்த நம்பிக்கைக்கான ஒரு கருவி’ என்றார் அவர்.தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார் குமரகுருநாதர்.
‘‘நான் பழநிக்குப் போவதாக இருக்கிறேன். ஆனால், எப்போது திரும்ப வருவேன் என்பதைச் சொல்ல முடியாது’’ என்று நண்பரிடம் குறிப்பிட்டார். ‘திரும்ப வருவது நிச்சயமில்லை என்று கருதும் பட்சத்தில் போவானேன்?’’ என்று கேட்டார் நண்பர். ‘‘இல்லை, இது கந்த
வேளின் கட்டளை. நான் போகத்தான் வேண்டும்’’ என்று பதிலுரைத்தார் குமரகுருநாதர்.
அன்றிரவு கனவில் ஓர் உருவம் தோன்றியது. கோபமாக இருந்தது. வலது கை சுட்டு விரலை நிமிர்த்தி மிரட்டியபடி பற்களை நறநறவென்று கடித்தது. பழநிக்கு நான் வரச் சொன்னதாகப் பொய் சொல்லிருக்கிறாயே, இது சரியா? நான் எங்கே உனக்குக் கட்டளையிட்டேன்?
அவ்வாறு வருவது உன்னுடைய ஆவல் என்று சொல்லியிருந்தாயானால் பொருத்தமாக இருந்திருக்கும் இனி நீ பழநிக்கே வர முடியாமல் போகட்டும்’ என்று சபித்து விட்டும் போய்விட்டது
அந்த உருவம்.திடுக்கிட்டு விழித்த குமரகுருநாதர், முருகன் படத்திற்கு முன்னே சென்று வணங்கி அழுதார். ‘என் அகம்பாவத்துக்கு உரிய தண்டனை அளித்தீர். நன்றி’ என்று மனமுருகத் தொழுதார்.
ஆனால், தன்னுடைய இறுதி நாள்வரை, அவர் எவ்வளவு முயன்றும் பழநி முருகன் தரிசனம் கிடைக்காமலேயே போய்விட்டதுதான் அவருடைய துரதிருஷ்டம்.வேறொரு சமயம் காலில் முள் குத்தியது. அதனைப் பற்றி இழுத்து வெளியே போட்டார். ரத்தம் கசிந்தது. சிறு முள்ளே இத்தகைய துன்பம் தருமென்றால், உயிர் பிரியும் வேதனை எத்தனை கொடியதாக இருக்கும்! என்று சிந்தித்தார் குமரகுருநாதர்.
ஓரிரு நாளில் ஒரு தச்சர் அவரிடம் வந்து, ‘‘கனவில் ஒரு அழகன் தோன்றி, தங்களுக்கு ஒரு பாதக் குறடு செய்து தரச் சொல்லி உத்தரவிட்டார்; இந்தாருங்கள்’’ என்று கூறி, மரச்செருப்பினைக் கொடுத்தார்.இறைவன் கருணையை எண்ணி நெகிழ்ந்தார், குமரகுருநாதர்.1929ம் ஆண்டு மே மாதம் 30ம் நாள் குமரகுருநாத சுவாமிகள் முருகனைச் சென்றடைந்தார்.
ரமண மகரிஷி
திருச்சுழி-மதுரை நகருக்கு அருகே சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில்உள்ள ஊர். அதுவே ரமண மகரிஷி அவதரித்த ஊர். சுந்தரம்-அழகம்மை தம்பதி யரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர். பிறந்தநாள் 30.12.1879. இயற்பெயர் வெங்கடராமன். பால பருவத்திலேயே அவர் உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்தது அருணாசலமே! அந்தஉள்ளுணர்வே அவருடைய மெய்யுணர்வாக இருந்தது.
தன்னுடைய பன்னிெரண்டாவது வயதிலேயே ஆன்ம ஞானம் பெற்றவர் இவர் என்றால் மிகையாகாது. அதுவும் ஒரு சம்பவத்தின் விளைவே. அந்தச் சம்பவம் அவருடைய தந்தையாரின் மறைவு. அப்போது திண்டுக்கல்லில் படித்துக்கொண்டிருந்தார் ரமணர்.
தந்தையார் இறந்துவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டு திருச்சுழிக்கு வந்தார். அப்பா படுத்திருந்தார். அப்பா போய்விட்டார். வெங்கடராமா...!’ என்று அழுது அரற்றிய உறவினர்களை வியப்போடு பார்த்தார்.‘‘இதோ அப்பா இங்கேதானே இருக்கிறார்? போய்விட்டார் என்கிறீர்களே!’’ என்று குழப்பமாகக் கேட்டார்.
‘‘அப்பா இருந்தால் உன்னை வாய் நிறைய அழைத்து வரவேற்க மாட்டாரா? உன்னைஆரத்தழுவ மாட்டாரா? இயக்கமே நின்றுபோய் சடலமாகக் கிடக்
கிறாரே. இதனால்தான் சொல்கிறேன்,அப்பா போய்விட்டார்’’ என்று அந்தப்பிள்ளைக்கு விளக்கினார்கள் உறவினர்கள்.
அப்படியென்றால் அப்பா என்பவர் யார்? உயிரிருந்தால் அப்பா, இல்லா விட்டால்...?அப்படியானால் இந்த உடலுக்கு இப்போது பெயர், உறவு எதுவும் இல்லையா? போனது எது? உயிர்மட்டுமா, அப்பா என்ற உறவுமா? ரமணருக்குப் புரியவில்லை. ஆனால், அப்பா என்ற உறவு.
இந்த உடம்புக்கு மட்டும் உரியது அல்ல என்று மட்டும் தெரிந்தது. ஞான எழுச்சியின் முதல் கட்டம் அவரை ஆட்கொண்டது. தந்தையின் மறைவு அவர் மனதில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது உண்மை. உடலை விட்டு உயிர் நீங்கும். அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கும்? தன் தந்தையார் அந்த உணர்வை எப்படி எதிர்கொண்டிருந்திருப்பார்?
தந்தையின் மறைவுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு அறையில் தனித்திருந்தார் ரமணர். திடீரென்று மரண பயம் அவருக்குள் தோன்றியது.அது நிஜமா என்று அவருக்குப் புரியவில்லை. சரி, இறப்பை ஆராய்வோம் என்று தீர்மானித்தார்.கை கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டார். கண்களையும் வாயையும் இறுக மூடிக்கொண்டார். மனசுக்குள் எண்ணங்கள் மட்டும் ஓடின. நான் இறக்கிறேன்.
அதாவது, இந்த உடம்பு செத்துவிட்டது. இதை எடுத்துச் சென்று எரித்துவிடுவார்கள். அப்புறம் ‘நான்’ மட்டும் இருக்கிறேனே எப்படி? என் அப்பாவும் இதேபோன்ற அனுபவத்தைத்தான் கண்டிருப்பாரோ? தான் அருவமாக இருந்துகொண்டு,தன் உரு தீக்கிரையாவதைப் பார்த்துக் கொண்டிருந்திருப்பாரோ?
செத்தது தன் உடல்தான் என்றால், தான் யார்? என்று யோசித்திருப்பாரோ? அதாவது, உடலுக்குக் கட்டுப்படாத அதைவிட்டு எப்போதுவேண்டுமானாலும் பிரிந்துபோகத் தயாராக இருக்கிற நான் என்பதுதான் ஆன்மா. இதற்கு அழிவேகிடையாது!ரமணரது தாய்மொழி தமிழ்.
அதாவது, வீட்டில் அக்கம்பக்கத்தில் பேசிப் பழகியதமிழ், பள்ளிக்கூடத்தை, பாடத்தை, படிப்பை வெறுத்தவர் அவர். அதனாலேயே தமிழ் ெமாழியையோவேறு பாடங்களையோ அவர் ஆர்வத்துடன் பயின்றதுமில்லை; பயின்று தேறியதுமில்லை. ஆனால், அவர்பேச்சுக்கள், பதில்கள் எல்லாமே இலக்கண சுத்தமாக அமைந்திருந்தது வியப்புக்குரியது.
அது இறைவனின் கருணை தமிழில் உபநிடதம் யாத்த ஆற்றலும் அவருக்கு இருந்தது. தமிழ் மட்டுமல்ல, ஆரிய மொழி, மலையாளம், தெலுங்கில்கூட. அவர் புலமை பெற்றவராக விளங்கினார். அதுவரை யாரும் செய்யாத வகையில், ஒரு முன் உதாரணமாக, தமிழ் வெண்பா இலக்கணத்தைக் கையாண்டு தெலுங்குக்கவிதைகள் இயற்றியவர் அவர்!
யாரேனும் ஏதேனும் கேட்டால்அதற்கு பதிலும் சந்தேக விளக்கங்களும்் கவிதையாகப் பொழியும். இப்படி்அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளை அடியவர்கள்தான் தொகுத்தார்கள். ‘ரமண நூல்திரட்டு’, ‘அருணாசல ஸ்துதி பஞ்சகம்,’ ‘உபதேச உந்தியார்,’ ‘உள்ளது நாற்பது,’ ‘குரு வாசகக்கோவை’ என்ற தலைப்பு களில்் அவருடைய கருத்துகள் நூல்களாக வெளிவந்துள்ளன. இதற்குப் பெரிதும் முயற்சி எடுத்துக்கொண்டவர், ரமணரின் சீடரான முருகன் என்பவர்.
ரமணாசிரமம் திருவண்ணாமலையில் உருவாயிற்று. கோவணமே உடை. குறைந்த அளவே சாப்பாடு என்று தன் வாழ்க்கையை அந்த ஆசிரமத்தில் தொடர்ந்தார் அவர். அவர் தங்கியிருந்த அறை என்றுமே தாழிடப்பட்டதில்லை. நடுநிசியில்கூட, சீடர்கள் அவரைச் சந்தித்து தம் வினாக்களுக்கு விடைஅறியலாம், ஆன்மிக சந்தேகங்களுக்குத் தெளிவு பெறலாம். ஒருநாள் அவரது அறைக்குள் புகுந்தவர்கள் விளக்கம் தேடி வந்தவர்களாகத் தெரியவில்லை. பொருள் தேடி வந்தவர்கள் அவர்கள்.
ஆமாம் திருடர்கள். அந்த ஆசிரமத்தில் நிறைய பணம், பொருட்கள் இருக்கும் என்று நினைத்து வந்த அவர்கள் பிறரை பயமுறுத்துவதற்காக தடாபுடா’ என்று கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள்.
அதைப்பார்த்த ரமணர் உடனிருந்த சீடரிடம் ஒரு அரிக்கேன் விளக்கை ஏற்றிக்கொடுத்து, திருடர்கள் தேடுவதற்கு வசதி செய்துகொடுக்கச் சொன்னார்.திருடர்கள் திடுக்கிட்டார்கள். ‘பணத்தை எங்கே வைத்திருக்கிறீர்கள்’ என்று கேட்டு மிரட்டினார்கள். இது ஒரு சேவை ஸ்தாபனம். இங்கே பணமோ பொருளோ சேர்க்கும் வழக்கமில்லை, என்று பதில் சொன்னார் ரமணர்.
உடனே, எதுவும் கிடைக்காத வெறுப்பில் அங்கிருந்தவர்களைஅடித்தார்கள். ரமணர் காலிலும் ஒரு அடி விழுந்தது. ‘உனக்கு திருப்தி இல்லாவிட்டால் இன்னொருகாலிலும் அடிச்சுட்டுப் போப்பா’ என்று கேட்டுக்கொண்டார் ரமணர்! குரு அடிபடுவதைக் காணப் பொறுக்காதஒரு சீடர் அந்தத் திருடர்களைத் தாக்குவதற்காகப் பாய்ந்தார். உடனே ரமணர் அவரைத் தடுத்துவிட்டார்.
‘வேண்டாம், அவர்களைத் தாக்காதே, அவர்கள் தர்மம், திருடுவது; அதைச் செய்யட்டுமே ஏன் தடுக்கிறாய்?நாமோ சேவை எண்ணம் கொண்ட சாதுக்கள். இந்தத் திருடர்களுக்குச் சமமாக நாமும் சண்டை போட்டோமானால்,பொதுமக்கள் நம்மைத்தான் பரிகாசிப்பார்கள். வேண்டாம்’ என்று கூறி சீடரைத் தடுத்து நிறுத்தினார்.
அதுமட்டுமல்ல, திருடர்கள் காவலர்களால் பிடிபட்டபோது அடையாளம் காட்டப்படுவதற்காக ரமணரிடம் அவர்களை அழைத்து வந்தார்கள். ‘இவர்களில் உங்களைத் தாக்கியவன் யார் என்று சொல்லுங்கள்,’என்று கேட்டுக்கொண்டார்கள். ‘போன ஜென்மத்தில் நான் யாரை அடித்தேனோ அவன்தான் இப்போதுஎன்னை அடித்தான். அவனை நான் அடையாளம் காட்ட மாட்டேன், நீங்களே கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்?’’ என்று சொல்லிவிட்டார்.
ஐம்பத்து நான்கு ஆண்டுகள் திருவண்ணா மலையிலேயே வாழ்ந்திருந்த ரமணர் புற்றுநோயால்பாதிக்கப்பட்டார். இடது தோளுக்குக்கீழே ஒரு கட்டியாக இடம் பெற்ற அந்த நோய் நாளுக்குநாள் அவரை உருக்குலைத்தது.
பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் எந்த பயனும் இல்லை. இறுதி முயற்சியாக ஒரு கடுமையான அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது தனக்கு மயக்க மருந்துகொடுக்க வேண்டாமென்றும், அப்படியே நேரடியாக அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் ட்டுக்கொண்டார். ‘மிகவும் வலிக்குமே’ என்று சுற்றி இருந்தவர்கள் விசனப்பட்டார்கள்.
‘இந்த உடம்பே நமக்கு ஒரு நோய் அந்த நோய்க்கே ஒரு நோய் வந்தால் வரட்டுமே எதற்காக, வீணாக வருத்தப்பட வேண்டும்?’என்று கேட்டார் அவர்.அவர் முக்தியடையப் போகிறார் என்பதை உணர்ந்த சீடர்களும், பொதுமக்களும் தம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கினார்கள். ‘இந்த உடம்பு இனிமேல் இல்லாமல் போகப் போவதை நினைத்து ஏன் வருந்துகிறீர்கள்! பசுவின் கொம்பில் சுற்றி வைக்கப்பட்டமாலை கழன்று வீழ்ந்தால் அதற்காகப் பசு வருந்துகிறதா? அதேபோல ஞானி, தனக்கு சரீரம் என்ற ஒன்று இருப்பதாகவே நினைப்பதில்லை.
அதனால் நீங்களும் வருந்தாதீர்கள். ‘நான்’ உங்களைவிட்டு எங்கே போகிறேன்? இந்த உடம்புதான் போகிறது; போகட்டுமே!’ என்று தீர்மானமான குரலில் சொன்னார்.பத்மாசனம் இட்டு அமர்ந்த நிலையில், இறுதி மூச்சும் ஒடுங்க, சரீரத்தை விட்டு,தான் விலகினார். 1950 ஏப்ரல் 14ம் தேதி ரமணருடைய சரீரம் இவ்வுலகை விட்டு நீங்கியது. ஆனால், ரமணர் இன்றும் திருவண்ணாமலையில் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக்கொண்டுதான் இருக்கிறார்.
அரவிந்தர்
பாண்டிச்சேரி என்றதும் பளிச்சென்று நினைவுக்கு வருகிறது, அரவிந்தர் ஆசிரமம். இந்த அமைதிப் பூங்காவில் ஆன்மிக நெஞ்சங்கள் தியானத்தில் ஈடுபட்டு, அரவிந்தரின் அருளாசிக்கு பாத்திரமாகின்றன.1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி துவங்கப்பட்ட இந்த ஆசிரமம், இன்றளவும் அரவிந்தரின் கோட்பாடுகளை ஒட்டியே, அவற்றை இன்னும் மேம்படுத்தும் உத்வேகத்தோடு செயல்பட்டு வருகிறது.
இந்திய விடுதலைக்கு 45 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 15ம் தேதி கொல்கத்தாவில் அவதரித்தார் அரவிந்தர். டாக்டர் கிருஷ்ண தனகோஷ் - ஸ்வர்ணலதா தம்பதியரின்
மூன்றாவது பிள்ளை.
அவருடைய இயற்பெயர் அரவிந்த அக்ராய்ட் கோஷ். அரவிந்தரின் ஆரம்பப் பள்ளிப் படிப்பு அவருடைய இல்லத்தில்தான் துவங்கியது. ஆங்கிலேய மோகம் கொண்டு ஆத்திகத்தையும், இந்துமத சம்பிரதாயங்களையும் வெறுத்த தந்தையார், தன் மகனுக்கும் ஆங்கில மொழி மூலமாகவே அனைத்துப் பாடங்களையும் கற்பிக்கச் செய்தார். தாய்மொழியான வங்காளத்தை அரவிந்தர் அறிந்தார் இல்லை.
அது மட்டுமின்றி அவருடைய ஏழாவது வயதிலேயே கல்வி கற்க தன் மூத்த இரண்டு மகன்களுடன், இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார் கிருஷ்ணதனகோஷ். இங்கிலாந்து படிப்பு அரவிந்தருக்கு இந்திய ஆன்மிகக் கருத்துகளை எடுத்துச் சொல்லவில்லை. ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை.
இங்கிலாந்தில் படித்த காலத்தில், இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்ததை அறிந்து கொதித்தவர் அரவிந்தர். இந்தியர்களுக்கு ஆதரவாக ‘தாமரையும் குத்துவாளும்’ என்ற பெயரில் ஒரு ரகசிய புரட்சி இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தார் அரவிந்தர். இந்தியா அடிமைப்பட்டு அல்லலுறுவதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அதனாலேயே மிகவும் கௌரவமான ஐஸிஎஸ், கல்வியில் வெற்றி பெற்றாலும் இறுதியான குதிரை சவாரி தேர்வில் வேண்டுமென்றே பங்கேற்காமல், தேர்ச்சி பெறாமல் இருந்துவிட்டார்.தேர்ச்சி பெற்று பதவியும் பெற்றுவிட்டால் தாமும் ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட பணியாளாக தாய்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு எதிராகச் செயல்படுபவராக மாற வேண்டியிருக்குமே என்ற உணர்வால் ஐஸிஎஸ் தேர்வு பெறாமலிருந்தார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் அரசியல் ரீதியாக அரவிந்தர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் தன்னுடைய கட்டுரைகள், சொற்பொழிவுகள் மூலமாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஆயிரக்கணக்கான அபிமானிகளைப் பெற்றிருந்தார் அரவிந்தர். அவர்கள் அனைவருமே அவருடைய விடுதலைக்காகப் பிரார்த்தித்தார்கள்.
அந்த உள்ளார்ந்த உணர்வுகளுக்கு பலனில்லாமல் போகவில்லை. அரவிந்தர் நிரபராதி என்று தீரப்பு கூறப்பட்டு அறிவிக்கப் பட்டார். ஆனால், வழக்கு நடந்த ஓராண்டு காலத்தில் அலிப்பூர் சிறையில், தான் ஆசிரம வாசம் செய்ததாகவே அவர் குறிப்பிட்டார். ‘என்னுள் குடி கொண்டு விட்ட, நாராயணனை தேரில் தரிசிக்க, அவனைச் சென்றடைய நான் வெகுநாட்கள் இடைவிடாது முயற்சித்தேன்.
ஆனால், நடப்புலக பற்றுகள் என்னை நாராயணனிடம் அண்ட விடாது இடையூறு செய்தன. இதற்கு என்னுள் மண்டியிருந்த அஞ்ஞான இருளும் காரணமாக இருந்திருக்கும். ஆனால், பிரிட்டிஷாருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களுடைய நெருக்குதல் காரணமாக நான் கடவுளிடம் நெருங்கினேனே, அது என் பாக்கியம் தான் என்று குறிப்பிடுகிறார் அரவிந்தர்.
அந்த ஆன்மிக அனுபவத்தில் ஆவிரூபமாக விவேகானந்தரையும் அவர் தரிசித்திருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான பிறகு இந்துமத நன்னூல்கள் பலவற்றையும் அவர் படித்து ஆனந்தித்தார். தன்னை இந்துமதக் கோட்பாடுகள் நெகிழ வைத்ததையும் தனக்குள்ளிருந்து இறைவன் அடிக்கடி பேசுவதையும் அவரால் பரிபூர்ணமாக உணரமுடிந்தது.
ஆங்கிலேய அரசிடமிருந்து தப்பிய, அவர், தன் நண்பர்களின் உதவியுடன் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்ட பாண்டிச்சேரிக்கு வந்தார்.இங்குதான் பிரெஞ்சுக்காரரான பால்ரிச்சர்டு மற்றும் அவரது மனைவி மிரா, இருவரும் அரவிந்தரை சந்தித்து ஆன்மிக வழிதேடலில் ஈடுபட்டார்கள்.
மிரா, அரவிந்தரை தன் ஞான குருவாக ஏற்றுக்கொண்டு, அவர் வழியிலேயே ஆன்மிக சிந்தனைகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டார். இவரே, பின்னால் அன்னை என்று வணங்கப்பெறும், லோக மாதாவாகத் திகழ்ந்தவர்.
இருபத்தெட்டு வயது நிரம்பியிருந்த பிராயத்தில் பதினான்கு வயதான மிருணாளினியை அரவிந்தர் மணந்து கொண்டார். ஆனால், அவரது அரசியல் ஈடுபாடு, தொடர்ந்த சிறைவாசம், ஆங்கிலேயப் பார்வையிலிருந்து தப்ப பாண்டிச்சேரி வாசம் என்று அவருடைய பிரிவால் தனித்து விடப்பட்டார், மிருணாளினி.
ஆனால், பல கடிதங்கள் எழுதி மனைவியையும் ஆன்மிக நெறிக்கு உட்படுத்தினார் அரவிந்தர். தன் முப்பத்திரெண்டாவது வயதில் இவ்வுலகை நீத்த மிருணாளினியின் பெயரில், கொல்கத்தா, வேலூர் மடத்தை நிர்வகிக்கும் ராமகிருஷ்ண மடம், ஒரு அறக்கட்டளையை நிறுவி இன்றும் செயல்பட்டு வருகிறது. மனைவியின் இறுதிச் சடங்கில்கூட கலந்து கொள்ளாத வகையில் அரவிந்தரின் மனம் பக்குவப்பட்டிருந்தது.
1926ம் ஆண்டு, நவம்பர் 24ம் தேதி அரவிந்தர் ஆசிரமம் சுமார் இருபத்தைந்து சீடர்களுடன் துவங்கப்பட்டது. இந்த ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அன்னை என்றழைக்கப்படும் மிரா மேற்கொண்டார்.ஆசிரமம் துவங்கப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகுஅரவிந்தர், 1950 நவம்பர் 26ம் தேதி மகாசமாதி அடைந்தார்.
அவருடைய சமாதி, ஆசிரம வளாகத்திற்குள்ளேயே ஆன்மிக அன்பர்களின் தரிசனத்திற்காகவும் தியானத்திற்காகவும் அழகுற அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.அரவிந்தரின் சமாதியில் வணங்கித் துதிப்பவர்கள் அவரது அருளோடு கூட அன்னையின் அருளுக்கும் பாத்திரமாகிறார்கள்.
அன்னை
பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்தவர் மிரா. ஆன்மிகப் பற்று இவரை இளவயதிலேயே பற்றிக்கொண்டது. இறைத்தன்மை கொண்ட ஆன்மா வெளிப்படுத்தும் இறையம்சங்களை எல்லாம் உடலும் வெளிப்படுத்த வேண்டும் - விளக்கை இருகரங்களால் மூடினாலும் விரலிடுக் குகள் வழியாக ஒளி வெளியே சிந்துகிறதே, அதுபோல ஆனால், ஆன்மிகத்தில் உயரிய பக்குவம் பெற அவர் தன்னுடைய முப்பத்தாறாவது வயதுவரை காத்திருக்க வேண்டியதாயிருந்தது.ஆமாம். அந்த வயதில்தான் 1914ம் ஆண்டு, அவர் பாண்டிச்சேரிக்கு வந்தார்; அரவிந்தரை தரிசித்தார்.
அரவிந்தரின் பார்வை தன்மீது பட்ட உடனேயே, அவரே தன் குரு என்பதைப் புரிந்து கொண்டார். மிரா தன் குருநாதர் உறையும் பாண்டிச்சேரியே தன் ஆன்மிக வாழ்விற்கு ஏற்ற இடம் என்பதையும் உணர்ந்து கொண்டார். 1919ம் ஆண்டு முதல், தன்னுடைய நாற்பத்தோறாவது வயதில் பாண்டிச்சேரி வந்து குடியேறினார்.அரவிந்தரின் கோட்பாடுகளை சிரமேற்கொண்ட அன்னை, அவர் பெயரா லேயே உருவான ஆசிரமத்தில் தங்கி ஆன்மிகப் பணியை மேற்கொண்டார்.
ஆசிரமத்தில் சுத்தமும் தூய்மையும் முக்கியத்துவம் பெற்றுத் திகழவேண்டும் என்பதில் அன்னை சற்றுத் தீவிரமாகவே இருந்தார். எங்கே சுத்தம் இருக்கிறதோ, அங்கே தெய்வீகம் பொலிகிறது என்பார் அன்னை.இவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்துக்கு அன்னை கூறும் விளக்கம் சிந்திக்கத் தகுந்தது.
‘‘உங்களுடைய கை, கால் என்று உறுப்பு கள் எப்படி உங்களுடனேயே ஐக்கியமாகிவிடுகிறதோ, அதேபோலதான் நீங்கள் பயன்படுத்தும், உங்களுக்கு உரிமையான பொருட்களும், புத்தகம், நாற்காலி, வாகனம் என்று அந்தப் பொருட்களையெல்லாம் வெறும் ஜடப் பொருட்களாக கருதாதீர்கள். அசையாது கிடந்தாலும் அவற்றுக்கும் ஆன்மா உண்டு.
மூலைகள் மடிக்கப்பட்டும் சுருட்டப்பட்டும் வீசி எறியப்பட்ட புத்தகங்களைச் சற்றுத் தொலைவிலிருந்து உற்றுப் பாருங்கள். அவை வருத்தப்படுவதை உணர்வீர்கள். ‘இத்தனை நாள் அறிவை புகட்டிய என்னை அலட்சியமாகத் தூக்கி எறிந்திருக்கிறாயே, இது முறையா?’ என்று உங்களைப் பார்த்துச் சொல்வதைக் கேட்பீர்கள்!
புத்தகம் என்று இல்லை. நீங்கள் பயன்படுத்தும் மேசை அல்லது நாற்காலியில் ஏதேனும் ஒரு விளிம்பு உடைந்திருந்தாலும் உடனே அதைச் சரி செய்ய முயற்சி செய்யுங்கள். ஏதேனும் குறையுடன் அவை உங்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அந்த விருப்பத்தில் என்ன நியாயம் இருக்கிறது?
ஒருவர் மீது மனக்குறை வைத்துக்கொண்டே உங்களால் அவருக்குப் பரிபூரணமாக சேவை செய்ய முடியுமா?’’அன்பு செலுத்துதல் என்பது அஃறிணைப் பொருட்களுக்கும் பொருந்தும் என்ற பரந்த நோக்கில் அன்னையைத் தவிர யாரேனும் சிந்தித்திருப்பார்களா என்பது சந்தேகமே.
கடற்கரையை ஒட்டி ஒரு கிடங்கு இருந்தது. கடல் அலைகளால் அதன் சுற்றுச் சுவர்கள் இடிபட்டு விழுந்து கொண்டிருந்தன. எத்தனையோ பொறியாளர்கள் வந்து புதுப்புது தொழில் நுணுக்க முறைகளில் சுவர் எழுப்பினாலும் அலைகளின் வேகத்துக்கு முன்னால் சமாளிக்க முடியாமல் சுவர் இடிந்து விழுந்தது.
உரிமையாளர் அந்தக் கிடங்கை யாரிடமும் விற்க முடியாமல் தவித்து, இறுதியில் அன்னை, தன் ஆசிரம பயன்பாட்டிற்காக அதனை வாங்கிக் கொள்ளச் சம்மதித்தபோது பெரிதும் மகிழ்ந்தார்.ஆனால், அன்னையின் சீடர்கள், கடல் அலைகளால் அந்தக் கட்டிடத்திற்கு உண்டாகும் ஆபத்தைப் பற்றிச் சொல்லி எச்சரித்தார்கள். ஆனால், அன்னை அதற்கு உடன்படாததால் அரண்சுவர் எழுப்பப்பட்டது. கடலலைகள் பாரபட்சம் பார்க்கவில்லை. இடித்துத் தள்ளியது. மீண்டும் சுவர், மீண்டும் இடிந்தது.
எச்சரித்தவர்கள் தாம் சொன்னது சரியாகிப்போன வருத்தத்துடன் அன்னையை அணுகி கரைக்கு வந்தார். ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்தார். கடலுடன் பேசினார்.
‘’இது என் பரப்பு. எனக்குச் சொந்தமான நிலம்’’ என்றது கடல்.‘’இருக்கலாம். ஆனால், இப்போது எனக்கு இந்தக் கட்டிடம் வேண்டும்’’என்றார் அன்னை.
அன்னையின் பொது ஜன சேவையை உணர்ந்துகொண்ட கடலலைகள் பின்வாங்கித் தணிந்தன.‘இப்போது சுவர் எழுப்புங்கள்’ என்றார் அன்னை. அந்தச் சுவரை இன்றுவரை கடலலை பாசமாகத் தீண்டுகிறதே தவிர, ஆக்ரோஷமாக இடிக்க நினைப்பதேயில்லை.
உயிரற்றவை எனக் கருதப்படும் பொருள்களுடனும் அன்னையால் பேச முடிந்தது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.அன்னையின் அருள், அவரை ஒரு முறை நினைத்தவருக்கும் எளிதாகக் கைகூடும் என்பது அன்பர்களின் அனுபவம். அன்னை மகாசமாதி அடைந்துவிட்டாலும் இன்றும் அரவிந்தர் ஆசிரமத்தில் அவர் அரூபமாக ஆசி வழங்குவதை உணர முடிகிறது. அவருடைய மகாசமாதியில் கைவைத்து வணங்கும்போது உடலெங்கும் அதிர்வு ஏற்படுவதை ஒவ்வொருவரும் உணரலாம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment