Wednesday 31 May 2017

சித்தர் சிவ வாக்கியர்

சிந்தனைச் செல்வர் சித்தர் சிவ வாக்கியரின் சில பாடல் வரிகளைக் கொண்டு அவர் நாத்திகர் என்ற கருத்து பரவலாகச் சிலரால் கூறப்படுகிறது. குறிப்பாக,
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்…
- என்ற வரிகளைச் சுட்டுகிறார்கள். வசதியாக பாடலின் இறுதி வரியான “ சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ” என்பதை எளிதில் மறந்து விடுகிறார்கள்.




இந்தப் பாடல் வரிகளில் எங்கே நாத்திக் கருத்துக்கள் உள்ளது?. அவர் சமயச் சடங்குகளைக் கண்டிக்கிறார். உண்மைதான். ஆனால் நாதன் உனக்கு உள்ளேயே இருக்கும் போது வெளியில் போய் இறைவனைத் தேடிக் கொண்டிருக்கிறாயே! மூடா. போலியான சடங்குகள் எதற்கு? உனக்குள் இருக்கும் ஜோதியைத் தேடு. அதை விடுத்து வெளியில் இறைவனைத் தேடிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை. கறி சமைக்கப் பயன் படும் பாத்திரம் – வெறும் பாத்திரம் மட்டுமே. அதனால் அதன் சுவையை உணர்ந்து கூற இயலுமா? முடியாது. அது போல உருவ வழிபாடும், பூஜை, ஆராதனைகளும் இறைவனை உணர்வதற்கான பாவனையேயன்றி அவையே இறைவனாக மாட்டா. அதன் மூலம் இறைவனை உணர்ந்து அடைய வேண்டுமே தவிர, அதுவே முழுமையானதல்ல என்பதைத்தான் அவர் தனது பாடல் வரிகள் மூலம் சுட்டுகிறார்.
அதுபோல

கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!
- என்ற வரிகளைச் சொல்வார்கள்.
ஆனால் அதன் தொடர்ச்சியான

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
என்ற வரிகளை வழக்கம் போல மறந்து விடுவார்கள். இந்தப் பாடலுக்கு விளக்கமே தேவையில்லை. மனதுக்குள்ளேயே அனைத்தும் உள்ளது என்பதை மிக அழகாகச் சொல்கிறாரே சிவ வாக்கியர்.
உள்ளத்தில் உள்ளத்தைக் கடந்து செல்ல ’கடவுளை’ அடையலாம் என்கிறார் சிவ வாக்கியர். உள் கட உள் கட கடவுளை அடையலாம் என்பதே அவரது கருத்து.
இதனை

ஆடுகின்ற எம்பிரானை அங்குமிங்கும் என்றுநீர்
தேடுகின்ற பாவிகாள் தெளிந்ததொன்றை ஓர்கிலீர்
காடு நாடு வீடு வீண் கலந்து நின்ற கள்வனை
நாடிஓடி உம்முளே நயந்துணர்ந்து பாருமே.
என்று மிக அழகாக விளக்குகிறார்.
மேலும்

”உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே”
என்றும் அவர் கூறும் பாங்கு வியக்கத்தக்கது.
நீண்ட காலம் உடலைப் பாதுகாப்பது என்ற சூட்சுமத்தினை

ஈராறு கால் கொண்டெழுந்த புரவியைப்
போராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீராயிரமும் நிலமாயிரத்தாண்டும்
போராது காயம் பிரான் நந்தி ஆணையே
என்று அவர் கூறுவதையே திருமந்திரமும் பலவிதங்களில் விதந்தோதுகிறது.
ஞானம் எய்துவது எப்படி என்பதை சிவ வாக்கியர்,

உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் ஆணை அம்மை ஆணை உண்மையே
என்கிறார்.
மேலும் அவர் சொல்கிறார்,

ஓடியோடி யோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே
என்கிறார். இதயத்துள்ளே இருக்கும் இறைவனைக் காணாமல் வெளியே தேடியலைந்து, இறுதியில் எங்கும் காண இயலாமல், இறைவனை, அந்த அருட்பெருஞ்சோதியை உணரவும் முடியாமல் மாண்டுபோனவர்கள் கோடி கோடிப் பேர் என்கிறார்.
பிரம்ம ஞான தத்துவத்தைச் சிவ வாக்கியர் தனது பல பாடல்களில் சுட்டுகிறார்.

அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
- என்கிறார். அதாவது விஷ்ணு அல்ல. பிரம்மாவும் அல்ல. அதற்கு அப்பாலுக்கும் அப்பால் இருக்கிறார். அவர் கருமை செம்மை வெண்மை என பல நிறங்களைக் கடந்து அந்த அனைத்து நிறங்களுக்கும் காரணமாய் இருக்கிறார். அவர் தன்மை பெரியதும் அல்ல. சிறியதும் அல்ல. அதையும் கடந்தது. பற்ற முடிந்தவர்கள் பற்றிக் கொள்ளுங்கள் என்கிறார்.
அது மட்டுமல்ல; எந்த நாமத்தை இடைவிடாது சொன்னால் உயர்நிலையை அடையலாம் என்பதையும் அவர் தனது பாடல்களில் சொல்லுகிறார்.
……………………………………………………………..
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே…
……………………………………………………………..
ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே…
என்றும்
கார கார கார கார காவலூழி காவலன்
போர போர போர போர போரினின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்களேழு மெய்தஸ்ரீ
ராம ராம ராம ராம ராமவென்னு நாமமே
என்றும்
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
என்றும் சொல்கிறார்.
மட்டுமல்ல;
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சிவ வாக்கியர் கூறும் மறை ஞான இறைவன் யார் என்பதை நாம் உணரலாம்.
இனிமேலாவது வெட்டி மன்றத்தில் பேசுபவர்கள் அல்லது கட்டுரைகளில் எழுதுபவர்கள் “சிவ வாக்கியர்” பாடல்களை முழுமையாகப் படித்து உணர்ந்தும், அவரது ஆன்மீகப் பார்வை என்ன என்பது குறித்த புரிதலும் தெளிவும் பெற்றுப் பேசுதல், எழுதுதல் சிறப்பு. அதனை விடுத்து ”சிவவாக்கியர் ஒரு நாத்திகர்” என்றெல்லாம் உளறினால், அவர்களைப் பார்த்து நகைப்பதைத் தவிர வேறு வழியில்லை.


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment