Sunday, 28 May 2017

சித்தர்களின் தேவலோக கிரி - சுருளி மலை !

சித்தர்களின் தேவலோக கிரி - சுருளி மலை !
சுருளிமலை மதுரையிலிருந்து தேனி வழியாக 70-கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது .
பதினெட்டுச் சித்தர்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,
தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" யின் தொடர்ச்சிதான் சுருளிமலை. 
சுருளி அருவியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் .
இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.
சுருளிமலையை தேவலோக கிரி என்று கூறுவர்.
சித்தர்களும், தவமுனிவர்களும், துர்வாச மகரிஷி- கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகளும் சதுரகிரி மலையில் இறைவனை நோக்கி தவம் புரிய அத்தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான்
தவம் செய்த சித்தர்களுக்கும், ரிசிகளுக்கும் தேவ லோக வாழ்வைக் கொடுத்தருளினார்.

தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷி, முனிவர்கள் மன மகிழ்வோடு "ககன குளிகை" இட்டு ஆகாய வெளியில் பறந்து சுருளி மலையை கடக்கும் போது அங்கு ஏராளமான ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும், அந்த வனத்தின் அழகையும் , வனப்பூஞ் சோலைகளையும் சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம் எடுத்துப் போகின்ற நேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியாய் இருப்பதையும்
அந்த உதக நீரில் இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதையும் கண்டு ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம் மலையில் தவம் செய்வது முக்கியம் எனத் தெரிந்து அங்கு இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் சென்றனர்.

அவ்வாறு கைலாயத்திற்கு, செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் எதிர்ப்பட்டு ரிஷிகளை வணங்கி 'சுவாமி தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்' என்று கேட்க அதற்கு ரிஷிகள்
"சதுரகிரி மற்றும் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கு சில காலம் தவம் செய்து விட்டு இப்போது இங்கு வருகின்றோம் " என்றனர்.

இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனம் மகிழ்ந்து உடனே புறப்பட்டு சுருளிமலைக்கு வந்து அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான "பூத நாராயண சித்தரை" அழைத்துக் கொண்டு மலையில் தவம் புரிகிறார் .
அவருக்கு இறைவன் காட்சி கொடுத்து அருள் புரிகிறார்.
இவ்வாறாக பல சித்தர்களும், தேவாதி தேவர்களும், ரிஷி முனிவர்களும் தவம் செய்து சித்தியும்-முக்தியும் பெற்ற இடமே சுருளிமலையாகும் .
சுருளிமலை பில் சுருளி வேலப்பர் திருக்கோவில் உள்ளது.
அருவிக் கரையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டும், அங்கே குகையின் மீது அமைந்துள்ளது முருகபெருமானின் திருக்கோவில் .
இதன் அருகில் சுரபி நதி ஓடுகின்றது.
இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுவது ஓர் அதிசயம்.
அதே போல இங்கு ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறி உள்ளது.
பல நாட்கள் பாறைகள் மீது நீர் விழுந்து கொண்டிருந்தாலும் பாசம் பிடிக்காது,
வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது இன்னொரு அதிசயம் .

மலையரசனான நம்பிராஜன் வள்ளியை வளர்த்து, முருகப் பெருமானுக்கு மணம் முடித்து தனக்குச் சொந்தமான இந்த மலைப்பகுதியை திருமண சீராக அளித்தாராம்.
இங்குள்ள முருகபெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.
இந்த தலத்தில் தனித்தனிக் குகைகள், தீர்த்த குளங்களுடன் உள்ளன.
விபூதிக்குகை, கன்னிமார் குகை, சர்ப்பக்குகை, கிருஷ்ணன் குகை, பாட்டையர் குகை என பல குகைகள் உள்ளன.
இந்த மலை மீது கன்னிமார்கள் நடனமாடிய தடயங்கள் உள்ளன என்றும் இந்த பாறைகள் மீது அமர்ந்து தவம் செய்ய, பாவங்கள் நீங்கி, முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை.
இம்மலையில் இன்றும் அனேக சித்தர்கள் வாசம் செய்வதாக கூறுகின்றனர்.
இங்குள்ள கைலாச நாதர் குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.
நிமிர்ந்த நிலையில் உள்ளே செல்ல இயலாது . படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும்.
இமயகிரி சித்தர் தவம் செய்த போது இறைவன் சிவ பெருமான் குகையின் உள்ளே சென்று அவருக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்துள்ளார்.
அதனால் தான் இது “கைலாச நாதர் குகை' என அழைக்க படுகிறது .
கைலாச நாதர் குகை- இமயகிரி சித்தர் குகை இரண்டும் ஒன்றே.
இமயகிரி சித்தர் குகை மிகவும் சிறிய அளவில் உள்ளது .
இதனுள் இருவர் மட்டுமே அமர இடம் இருக்கின்றது. இதனுள் செல்வது யோகாசன பயிற்சி செய்வது போல் இருக்கும்.
இந்த குகையின் உள்ளிருந்து தீர்த்தம் வந்து கொண்டே இருக்கிறது.
ஒரே இருட்டு... உள்ளே அமர்ந்து ஜபம் செய்ய அற்புதமான அனுபவங்களை பெற இயலும் .
இமயகிரி சித்தர் குகைக்கு சற்று மேலே சென்றால் அற்புதமான சற்றே பெரிய குகை உள்ளது .
அதனுள்ளே உள்ள லிங்க சொருபம் மனதை லகிக்க செய்கிறது.
நுழைவாயிலில் எட்டு லிங்கங்களுக்கு நடுவே ஹோம குண்டம் அமைக்க பட்டு இருக்கும்.
மலை அடிவாரத்தில் பூதநாராயண பெருமாள் அருள் புரிகிறார் .
ஆடி அமாவாசை, மற்றும் தை , புரட்டாசி, மஹாளய அமாவாசை தினங்களில், இங்கு நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விசேஷ பூஜைகள் செய்கின்றனர் பக்தர்கள் .
சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா, தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.
மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment