Thursday 12 October 2017

இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்??

இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்??


இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம். மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம். இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் ?
பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே தன் பாலைத் தருவதால் மட்டுமல்ல. பசு எதைச் சாப்பிடுகிறது ?
மனிதன், நெல்லிலிருந்து பெறும் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுகிறான், நெல்லின் உமியைத் தவிடாகவும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசு உணவாகக் கொள்கிறது. எண்ணெயை நாம் உட்கொள்ள, மிச்சமிருக்கும் புண்ணாக்கை உட்கொள்கிறது பசு. ஆக, மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு விட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி பாலைக் கொடுக்கிறது.
இப்படித் தன்னலம் கருதாமல் மனித வர்க்கத்துக்கு பாலைக் கொடுப்பதுடன், பசுவின் சாணம் வரட்டியாகவும் இன்றைய காலகட்டத்தில் கோபர் கேஸாகவும் அதாவது - எரிபொருளாக உதவுகிறது. பசுவின் சாணத்துக்கு (ஆண்டி - இன்பெக்ஷன்) குணம் இருப்பதாலேயே, வீட்டுத் தரைகளில் பசுவின் சாணம் வைத்து மெழுகும் பழக்கம் வந்தது. பசுவின் மூத்திரத்தில் அது சாப்பிடும் புல் வகைகளிலிருந்து கிடைக்கும் மருந்துச் சத்து இருப்பதால், பல மருந்துகள் தயாரிப்பில் கோமூத்திரம் இடம்பெறுகிறது..
அந்தக் காலத்தில் பஞ்சகவ்யம் என்ற ஆரோக்கிய மருந்துக் கலவை மிகப் பிரபலம். பசுவின் மூத்திரம் கலந்ததுதான் பஞ்சகவ்யம். அள்ளி அள்ளிக் கொடுக்கும் பசுவுக்கும், காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்தார்கள் நம் முன்னோர்.
சாதுவான பிராணி, மென்மையான பிராணி பசு என்பதால் பரமசிவன் அமரும் வாகனம் பசுவாக இல்லாமல் காளையாக சித்தரிக்கப்பட்டது. இதில்கூட பசுவைக் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் நம் முன்னோர் குறிப்பாக இருந்தது புரியும். பசுவை மகாலட்சுமியின் அம்சமாகவே கருதியது, மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தில் பசுவின் பெரும்பங்கை மனதில் வைத்துதான்.
பாம்பை நாகம் என்ற தெய்வ வடிவாகவே வழிபட்டார்கள் நம் முன்னோர், மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார்.
பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார்.
முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் அமைப்புண்டு. அது சரி, நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி; அதையும் தெய்வாம்சம் கொண்டதாக ஆக்கியதேன் ? ஒரு பக்கம் தன்னலம் கருதாது கொடையளிக்கும் பசுவும் தெய்வமாகிறது.
மறுபக்கம், அந்தப் பசுவின் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பையும் தெய்வமாக்கியது ஏன் ? இந்த குழப்பத்திற்கு வாரியார் சுவாமிகள், அருமையான விடையைக் கூறியுள்ளார். மனித ஜென்மம் என்பது பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்று. மனிதனுக்கு மனிதன் பாவ-புண்ணிய விகிதாசாரம் வேறுபடலாம். ஆனால், வாழ்க்கை முழுவதும் 100 சதவிகிதம் பாவம் செய்தவனுமில்லை, புண்ணியம் செய்பவனும் இருப்பது சாத்தியமில்லை.
இறைவன் எப்படிப்பட்ட மனிதனையும் தன் பிரஜையாகவே கருதி ரட்சிக்கிறான். அதன் அடையாளமாகத்தான் மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், தெய்வாம்சம் கொண்டதாகச் செய்தார் கடவுள். அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும், கழுத்திலோ இடுப்பிலோ தன் உருவத்திலோ அணிந்துகொண்டு நஞ்சையளிக்கும் நாகப் பாம்பையே ஏற்றுக் கொள்கிறேன்.
உன்னையா ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல்தான் பாம்பையும் தெய்வாம்சம் கொண்டதாக்குகிறார் என்று விளக்கமளித்தார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் ?
நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி...
கடவுள் ஒன்றுதான்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment