Tuesday, 3 October 2017

சடாரி தெரிந்த விஷயம்.தெரியாத உண்மை.


🙌🙌 சடாரி வைப்பதன் தத்துவம்!..🙏🙏
சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள்.
தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஸ்ரீராமன். அப்போது பிரிய மனமில்லாத தன் மனைவி மற்றும் லட்சுமணன் உடன் சென்றனர். தசரதன், தான் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களைக் காப்பதற்காகத் தன் உயிரினும் மேலான ராமனை கானகம் அனுப்பினான். இதை அறிந்த பரதன், தன் தமையன் வனம் சென்றதற்குத் தானும் காரணமாக ஆகிவிட்டதை எண்ணி வருந்தினான்.
அயோத்தியை ஆள்வதற்கு தமையனுக்கே உரிமை உள்ளது என்றும், தனக்கு அரியாசனம் ஏற்க விருப்பம் இல்லை என்றும் கூறி, தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வந்து அயோத்தியின் சிம்மாசனத்தை ஏற்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். ஆனால், பரதனின் வேண்டுகோளை மறுத்த ராமபிரான், பரதன் சொல்வதுபோல் தான் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறியதுபோல் ஆகும் என்று மறுத்துவிட்டார்.
அதே நேரம், பரதனுக்கும் நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. சிக்கலான இந்த நிலைக்கு ஒரு தீர்வாகத்தான், பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றான். தன் தலைமீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்திகிராமத்துக்கு வந்தான். ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்தான். அதன் மேல் ராமபிரானின் திருவடியை வைத்து பட்டாபிஷேகம் செய்து, ராமபிரானின் சேவகனாக ஆட்சிசெய்து வந்தான்.
அந்த தருணத்தில் அனைவருக்கும் இயல்பாக தோன்றும் சந்தேகமானது பரதன் பாதுகைகளை அரியணையின் மீது நேரடியாக வைக்காமல், அவரின் திருமுடியை வைத்து அதன்மேல்தான் திருவடிகளை வைத்தான். இது எப்படிச் சரியாகும்? என்ற கேள்வி எழுவது எல்லோருக்கும் இயல்புதான்.
இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதுபோல் ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணு சயனம் கொள்வதற்காகச் சென்றார். எப்போதும் இல்லாத வழக்கமாக, அவர் தன் பாதுகைகளுடனேயே ஆதிசேஷன் மீது சயனம் கொண்டார். அந்தச் சமயம் முனிவர்கள் வந்திருக்கும் செய்தியைக் கேட்டு, அவர்களைக் காண தன் பாதுகைகளை ஆதிசேஷன் மீது வைத்துச் சென்றார்.
அவர் சென்றவுடன் ஆதிசேஷன் மீது இருந்த திருமுடியும், சங்கும், சக்கரமும் அந்த பாதுகைகளைத் தூற்றத் தொடங்கின. பகவானின் திருமுடியை அலங்கரிக்கும் நான் இருக்கும் இடத்தில் நீ எப்படி இருக்கலாம்?, பாதங்களை அலங்கரிக்கும் நீ ஆதிசேஷன் மீது அமர்வதற்கு அருகதை அற்றவன் என்றெல்லாம் கூறின. இன்னும் கடினமான வார்த்தைகளால் தூற்றவும் தொடங்கின.
எவ்வளவுதான் பொறுத்துக்கொள்வது? ஒரு கட்டத்தில் கோபம்கொண்ட பாதுகைகள், பகவானை தரிசிக்கவரும் ரிஷிகளும், முனிவர்களும் என்னையே வணங்குகின்றனர். நீங்கள் அவரது கரத்தில் இருந்தாலும் உங்களை யாரும் வணங்குவதில்லை என்று கூறின. ஆனாலும், அவை மூன்றும் விடுவதாக இல்லை. கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் நீ இருக்கக் கூடாது என்று கூறின.
இதைக் கேட்டு மனம் நொந்த பாதுகைகள் விஷ்ணுவிடம் முறையிட்டன. எனது பார்வையில் எல்லாம் ஒன்றேயாகும். இதை அறியாத சங்கும், சக்கரமும், திருமுடியும் இதற்கான பலனை ஒருநாள் அனுபவிக்கும் என்று கூறினார்.
இதன் பலனாகவே திரேதா யுகத்தில் ஸ்ரீராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் பரத, சத்துருக்ணனாகப் பிறந்தன. பாதுகைகளை இழிவுபடுத்திய அவை, தமது இந்தப் பிறப்பில் பாதுகைகளைத் தம் தலையில் சுமந்துசென்றன. மேலும், அந்தப் பாதுகைகளை திருமுடி மீது வைத்ததற்கு இதுவே காரணமாக அமைந்தது.
இந்தச் சம்பவத்தை நமக்கு நினைவுபடுத்தவே பெருமாள் கோவில்களில் நமக்கு சடாரி வைக்கப்படுகிறது. இறைவனுக்கு முன்னே அனைவரும் ஒன்றே. அவன் சந்நிதியில் பணக்காரன் - ஏழை, உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே இப்படி சடாரி வைக்கப்படுகிறது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment