Thursday, 17 August 2017

சில எளிய தியானப் பயிற்சிகள் !!!

சில எளிய தியானப் பயிற்சிகள் !!!
தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங்களைக் காட்டிலும் உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.
ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.
முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.
முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.
1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.
2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.
3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.
4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........
5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.
6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.
7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.
8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.
இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம். இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள். மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.
இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment