Saturday, 26 August 2017

சிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடம் ( Sri Bade Saheb)!!!

சிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடம் ( Sri Bade Saheb)!!!
விழுப்புரதிலிருந்து புதுவை செல்லும் 20 கிலோமீட்டர் தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் உள்ளது. இதன் இடது புறத்தில் 2 கீ.மீ தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு மஹா சித்த புருஷரான ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தன் ஜீவ சமாதியில் இருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அற்புத ஆற்றல் படைத்த சித்தர் இவர்.
ஸ்ரீ படே சாஹிப் சித்தர் அமைதியானவர். இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் மதங்களை தாண்டி அருள் செயல் புரிபவர். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை "படே சாயபு" என்று அழைத்தனர்.
இவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்து நோய்களை தீர்ப்பார். விபூதியை பிரசாதமாக கொடுப்பார். சிரசில் கைவைத்து நோயின் கொடுமையை குறைப்பார். சிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல் பறந்து ஓடிவிடும்.
மகான் படே சாஹிப் சின்னபாபு சமுத்திரம் என்ற சிற்றூரில் ஆத்ம சாதனை செய்து இறைவனோடு கலந்துள்ளார். இவ்வூரில் மகானின் சமாதி மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்து உள்ளது.
மகான் படே சாஹிப் அவ்வளவாக யாரிடம் பேசுவதில்லை. மௌனத்தில் ஆழ்ந்தார். மகா மௌனத்தை அடைந்து விட்ட பிறகு படே சாஹிப்புக்கு எண்ணங்கள் அற்று விட்டன. மனம் மறைந்து விட்டது. இவ்வுலக பற்று, உலக இயக்கம் யாவற்றிலிருந்தும் விலகி முழு ஆத்மீக வாழ்வுக்கு மாறிவிட்டது. உலக வாழ்க்கையில் இருந்து ஆத்மீக வாழ்வுக்கு மாறுவது மிக கடினமானது.
மகான் புதுவை மாநிலத்தைச் சார்ந்த திருக்கனூரில் சில ஆண்டுகள் தங்கி உள்ளார். திருக்கனூருக்கும் சின்னபாபு சமுத்திரதிற்கும் இடையிடையே சென்று வருவது உண்டு. இவருக்கு இரவு, பகல் கிடையாது. அதற்காக அவர் மூன்று சுதந்திரத்தை விட்டார்.
1 .தேக சுதந்திரத்தை விட்டார்
2 .போக சுதந்திரத்தை நீக்கினார்.
3.ஜீவ சுதந்திரத்தை விலக்கினார்.
ஆண்டுகள் ஓடின. ஆத்மசக்தி பெருகின. சித்துக்கள் கைவரப் பெற்றார். கருணையே வடிவமானர். மக்கள் மகானுக்கு மரியாதை செலுத்தினார்கள். தாங்க முடியாத நோய் உள்ளவர்கள் தங்கள் குறையை மகானிடம் கூறுவார்கள்.
சற்று நேரம் கழித்து தலை அசைப்பார். நோய் குணமாகி விடும். சிலரை அங்குள்ள ஒரு மரத்தை சுற்றும்படி ஜாடை காட்டுவார். அதன் படி சுற்றும் மக்கள் அனைவருக்கும் நோய் நீங்கி , மிகுந்த மகிழ்ச்சி கொண்டவராக மாறிவிடுவார்கள்.
மகான் படே சாஹிப் வரலாறு -2 ( பாம்புக்கு மோட்சம் அளித்தல்)
ஒருநாள் வனத்தாம் பாளையம் சென்று பண்ண குப்பத்திற்கு மகான் படே சாஹிப் திரும்பி வந்துகொண்டிருந்தார். ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக்கண்ட மக்கள் நடுநடுங்கினார்கள். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எவ்வித உணர்ச்சியும் இன்றி போய்க்கொண்டே இருந்தார். மக்கள் அவர் கூடவே ஓடி விஷ முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதை கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார்.
மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணைக்குப்பம் போய் சேர்ந்தார்கள். இரவு முழுவதும் மஹானை கவனித்துக் கொண்டு உண்ணாமல், உறங்காமல் கவலையோடு இருந்தார்கள். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை. மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார். அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது.
பகவானிடத்தில், சர்வேஸ்வரனின் பெரிய பிள்ளையான ஞானசொருபமான உள்ளாழ்ந்த பக்தியை செலுத்தினார். இமைகள் மூடி கொண்டன. நிஷ்டை நிலைக்கிறது. ஒரே ஏகாந்த நிலை தொடர்கிறது. குணங்களற்ற நிலை, காலங்களற்ற நிலை வந்து எய்துகிறது. பேசுவதற்கு ஏதும் இல்லை, சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை, ஏங்குவதற்கும் ஏதும் இல்லை. இத்தைகைய விவரிக்க தெரியாத தெய்வீக சக்திவாய்ந்த நிலையில் மகான் படே சாஹிப் அமர்ந்திருந்தார்.
அப்போது அவரை தீண்டிய பாம்பு (கருநாகம்) ஆனந்தமாக கோவிலுக்குள் நுழைந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தார்கள். மகான் ஆனந்தத்தில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் ஒன்றும் செய்யவில்லை. அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டி இடத்தில வாய் வைத்து விஷத்தை உறிஞ்சிய உடன் விநாயகப் பெருமானை வலம் வந்தது. சுற்றி இருந்தவர்களை திரும்பி திரும்பி நோக்கியது. மகானின் சிரசின் மேல் படம் எடுத்தது. பின் இறங்கி மூன்று முறை தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கியது. அவரது முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தது. ஒருமணி நேரம் கழித்து மகானின் கண்கள் மெல்லத் திறந்தது. நிஷ்டை கலைந்து, தன்னை பார்த்துக் கொண்டு இருக்கும் கருநாகத்தை பார்த்தார். தன் தலையை சுருட்டி தலை குனிந்து வணங்கியது. அவர் பாதத்தில் ஆபடியே தன் உயிரை விட்டது.
அந்த நாகத்திற்கு மகான் தனது இரண்டு கைகளாலும் ஆசீர்வாதம் செய்து மோட்சம் அளித்தார். அந்த பூஉடலுக்கு தன் கைகளாலே இறுதி சடங்குகளை செய்து முடித்தார். மக்கள் இந்த நிகழ்ச்சியை பிரமிப்புடன் கண்டனர். கொடிய விஷத்தை தந்த நாகத்திற்கு கூட அவரால் மோட்சம் அளிக்க முடிந்தது.
மேலும் அந்த ஊர் மக்களுக்கு விஷம் தீண்டாதபடியும், தீண்டினாலும் அது அவர்கள் உடலில் ஏறாத படியும் விஷ ஜந்துக்களுக்கு ஆணை இட்டு ஆசிர்வதித்தார் .
மக்கள் மனதில் அந்த ஆத்மஞானி "தெய்வம்" என்ற நிலையில் வைத்து போற்றபடுகிறார்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment