Monday, 28 August 2017

சனிபகவான் வழிபாடு மற்றும் பரிகாரத் தலங்கள் !!!

சனிபகவான் வழிபாடு மற்றும் பரிகாரத் தலங்கள் !!!

வட திருநள்ளாறு
சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடாசலம் தெருவில் அருளாட்சி புரிந்து வருகிறார் வட திருநள்ளாறு சனி பகவான். சனீஸ்வர பகவான் சாந்தமூர்த்தியாக காக வாகனத்தில் அமர்ந்து நீலாம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். சனிபகவானின் தாக்கத்திலிருந்து தப்ப இத்தலத்தில் பஞ்சமுக அனுமார், யக்ஞ விநாயகர் போன்றோரும் அருள்கின்றனர்.
அறையணி நல்லூர்
திருக்கோவிலூரில் பெண்ணையாற்றின் எதிர்க்கரையில் உள்ளது அறையணிநல்லூர். இங்கு உள்ள பாடல்பெற்ற தலமான அறையணிநாதர் கோயிலின் பிராகாரத்தில் சனிபகவான் காகத்தின் மீது ஒரு காலை வைத்து ஊன்றிய நிலையில் தரிசனமளிக்கிறார்.
திருநெல்லிக்காவல்
திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு எனும் சந்திப்பில் இறங்கி இத்தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.
இடும்பாவனம்
முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இங்கும் தாம் மக்களைத் துன்புறுத்தி யதால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்தத் தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது.
பவானி - கொடுமுடி
ஈரோட்டிலிருந்து 39 கி.மீ. தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இந்த இரண்டு தலங்களில் சனி பரிகாரம் செய்து கொள்ளலாம்; சனிபகவான் அருள் கிட்டும்.
பொழிச்சலூர்
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். இத்தலத்தில் சனிபகவான் மிகவும் வரப்ரசாதியாய் வீற்றிருக்கிறார். சனீஸ்வர பகவானே இத்தல இறைவனை பூஜித்து இங்குள்ள நள்ளார் தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம். எனவே, இத்தலம் வடதிரு
நள்ளாறு என அழைக்கப்படுகிறது. திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இத்தல சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர்.
வழுவூர்
சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார்.
சனிபகவான் வணங்கிய திருவாதவூர் திருமறைநாதர்
மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் சனிபகவான், திருமறைநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். வரும் செப். 26ல் நடைபெறும் சனிப்பெயர்ச்சி நாளில் திருவாதவூர் திருமறைநாதரை வழிபட்டால், திருமறைநாதர் அருளால் சனியின் வீரியம் குறையும் என நம்பப்படுகிறது. சூரிய பகவானின் மைந்தனான சனிபகவானுக்கு மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் பாதம் முடமானது. சனிபகவான் தனது தந்தையான சூரிய பகவானிடம் முறையிட்டார். இருவரும் சேர்ந்து மாண்டவ்ய முனிவரிடம் சாபவிமோசனம் கேட்டனர். அப்போது, மாண்டவ்ய முனிவர் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையம்பதிக்குத் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது திருவாதவூர்த்தலம்.
அங்குள்ள திருமறைநாதரை நியமப்படி வணங்கினால் உன் சாபம் சரியாகும் என்றார். அதன்படி, சூரியனும், சனியும் திருவாதவூர் தலத்திற்கு வந்து, நியமப்படி நீராடி, சிவனை வணங்கினர். திருவாதவூரில் வழிபட்டவரை வருத்தாதே என்று கேட்டுக் கொண்டார். பின்பு, சனீஸ்வர பகவானின் வாதம் நிவர்த்தியாகி,
சிவன் எதிரிலேயே அமர்ந்த திருக்கோலத்தில் தனி சந்நதியில் காட்சியளிக்கிறார். சனி பகவான் இங்கு தனி சந்நதியில் அருள்கிறார். இத்தலத்து ஈசனை வழிபட சனிபாதிப்பிலிருந்து தப்பலாம். இத்தலம் மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
சென்னை - பூந்தமல்லி
சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனிபாதிப்புகளிலிருந்து, குறிப்பாக நோய் உபாதைகளிலிருந்து தப்பலாம் என்பார்கள்.
குருமந்தூர்
ஈரோடு மாவட்டம் கோபி வட்டம், குருமந்தூரில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம். நாகை மாவட்டம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானுக்குச் செய்வது போலவே எல்லா வழிபாடுகளும் இங்கும் செய்யப்படுகின்றன. இவரும் அனைத்து சனி தோஷங்களையும் தணித்து நல்வாழ்வு மலர அருள்கிறார்.
கோவியலூர்
விழுப்புரம் அருகே உள்ள கோவியலூர் வாலீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இவரை வணங்க சனி பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
எட்டியத்தளி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வந்தார். அதே சமயம் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனிதோஷம் நீங்க திருநள்ளாற்றுக்கு இந்த வழியே வந்தார். இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபடச் சொன்னார். மேலும் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்யுமாறும் ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் அமைக்குமாறும் கூறினார். இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
மொரட்டாண்டி
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மொரட்டாண்டி கிராமத்தில் 27 அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் ஒரு கரத்தில் வில், மறுகரத்தில் அம்பு, மற்ற இரு கரங்கள் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள்கிறார். சனிபகவானுக்கு எதிரே 54 அடி உயர விநாயகர், 12 ராசிகளையும் தன்னுடலில் கொண்டு நிறுவப்பட்டுள்ளார். இந்த அமைப்பு சனிபகவானின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில் உள்ளது.
திருக்கோடிக்காவல் பால சனி
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சூரியனார் கோயிலிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். இத்தலத்தில் சனிபகவான் குழந்தை வடிவில் தரிசனமளிக்கிறார். எந்த ஜீவராசிகளையும் நான் பார்த்தால் அதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அப்பாவம் கரைய கோடீஸ்வரன் முன் அமர்கிறேன் என சனிபகவான் அரைக்கண்ணை மூடிய நிலையில் யோக நிலையில் அபூர்வ திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.
ஸ்ரீவைகுண்டம்
திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. இதில் நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம் உள்ளது. சனிபகவானின் அம்சமாக ஈசன் அருளும் இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபட, சனிபகவானால் ஏற்படும் திருமண தடைகள் விலக, மனம்போல மாங்கல்யம் கிடைக்கிறது. இழந்த சொத்துகளும் இந்த இறைவன் அருளால் திரும்பக்கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.
ஸ்ரீ வாஞ்சியம்
ஸ்ரீ கும்பகோணம்-நன்னிலம்-திருவாரூர் வழியில் இத்தலம் உள்ளது. காசிக்கு நிகரான இத்தலத்தில் குப்த கங்கையில் நீராடி, எமதீர்த்தத்திலும் நீராடி, இங்கு அருளும் ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டார் சனிபகவான். மூல இறைவர்களைத் தவிர, இங்கு அருளும் யமதர்ம ராஜனையும் வணங்கினால், சனிபகவானின் அருள் நமக்கு கிட்டும்.
அருங்குளம்
திருவள்ளூர்-திருத்தணி வழித்தடத்தில் திருவள்ளூரிலிந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது அருங்குளம். இங்கு அருளும் அகத்தீசர், சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டவர். இவரை தரிசித்தால் சனிபாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என சனிபகவானே ஈசனிடம் வரம் பெற்றதாக ஐதீகம்.
ஏரிக்குப்பம் யந்திரசனி
நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். திருவண்ணாமலை அருகிலுள்ள ஏரிக்குப்பத்தில் இவர் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். பல்லாண்டுகளுக்கு முன், இப்பகுதியை ஆண்ட சிற்றரசர் ஒருவர் இங்கு சனீஸ்வரருக்கு கோயில் எழுப்ப விரும்பினார். சனீஸ்வரர், ஈஸ்வர பட்டம் பெற்றவர், என்பதன் அடிப்படையில் யந்திரங்களை பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் பாண வடிவிலேயே சிலை அமைத்து, கோயில் எழுப்பினார். பல்லாண்டுகளுக்குப்பின் கோயில் அழிந்து, சுவாமி சிலை மட்டும் திறந்தவெளியில் இருந்தது. பின், பக்தர்கள் இங்கு சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பினர்.
எந்திரங்களுடன் இருப்பதால் இவருக்கு யந்திர சனீஸ்வரர் என்றே பெயர் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் தாமரை பீடத்தின் மீது, இரண்டரை அடி அகலம், ஆறரை அடி உயரத்துடன் அமைந்த சிவலிங்க அமைப்பில் சனீஸ்வரர் காட்சியளிக்கிறார். சிலையின் உச்சியில் சிவனைப் போலவே சூரியன், சந்திரன் உள்ளனர். நடுவே காகம் இருக்கிறது. லிங்க பாணத்தின் மத்தியில் அறுகோண அமைப்பிலுள்ள ‘ஷட்கோண யந்திரம்’ உள்ளது. இச்சிலையில் நமசிவாய என்னும் சிவமந்திரம், பீஜாட்க்ஷர மந்திரம், லட்சுமிகடாட்ச மந்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment