Thursday, 17 August 2017

யாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் நல்லது என்பது உண்மைதானா?

யாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் நல்லது என்பது உண்மைதானா?
உண்மைதானா என்ற சொல்லை பலரும் பயன்படுத்துகிறார்கள். அந்த அளவுக்கு சாஸ்திர சம்பிரதாயங்களில் சந்தேகம் எழும் சூழல் உருவாகியுள்ளது போலிருக்கிறது. சந்தேகம் வேண்டாம். உண்மைதான். சளி பிடித்தால் ஆவி பிடிக்கிறோம் இல்லையா? இது சாதாரண மருத்துவம். ஆனால், யாகத்தில் பலவகையான மூலிகைப் பொருட்களை மந்திரம் சொல்லி இடம் பொழுது அதன் புகைக்கு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு மட்டும் இல்லை. மனதிற்கும் நல்லது.
*கிரகண நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் நடமாடக் கூடாது என்று சொல்வது ஏன்?
முழு நிலவை அல்லது சூரியனை பூமியின் நிழல் மறைப்பது கிரகணம். சக்தி வாய்ந்த பவுர்ணமி நிலவின் அல்லது சூரியனின் ஒளி வீச்சு தடைபடுகிற பொழுது இயற்கையில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. நல்லதை விட கெடுதலே அதிகம். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் ஏற்படுகின்றன. இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்களை ஏற்படுத்தும். பிரசவ காலத்தில் தாய்க்கும் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இத்தனையையும் ஆராய்ந்து தான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில நியதிகளை வகுத்துள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை தான். கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும். அறிவியல் என்ன சொல்கிறது என்பது வேறு! சாஸ்திரம் இதைத்தான் சொல்கிறது.
*சதுர்த்தி நாளில் விரதமிருப்பவர்கள் மாலை சந்திர தரிசனம் செய்த பின் தான் உணவு உண்ண வேண்டும் என்று கூறுகின்றனர். உண்மை தானா?
எந்த ஒரு விரதம் இருந்தாலும் எதற்காக இருக்கிறோம் என்று ஒரு குறிக்கோள் இருப்பது வழக்கம். பிரதோஷ விரதம் என்றால் மாலை 4.30 மணி முதல் ஆறு மணி வரை விரதம் இருந்து பிறகு சாப்பிட வேண்டும். இதுபோன்று சதுர்த்தி விரதத்திலும் சந்திர தரிசனம் என்பது குறிக்கோள். எனவே இதை செய்த பிறகு சாப்பிடுவதே சரியானது.
* காலண்டரில், சில நாட்களில் திதியின் பெயர் இல்லாமல் "அதிதி என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கான காரணம் என்ன?
முன்னோர்களுக்கு செய்யப்படும் சிரார்த்தம் எனப்படும் திதி கொடுப்பதை அவர்கள் பிறந்த திதியிலேயே செய்ய வேண்டும். இந்தத்திதியானது முதல் நாளும், மறுநாளும் இருந்தால் ஒரு நாள் சிரார்த்தத்திற்குரிய திதியாகவும், ஒரு நாள் அதிதி எனவும் குறிப்பிடுவார்கள். அ+திதி= சிராத்த திதி இல்லாத நாள் என்று பொருள்.
* மாலை நேரத்தில் அரசமர பிரதட்சணம் கூடாது என்று சொல்கின்றனர். இதற்கான காரணம் என்ன?
சூரிய உதய காலத்தில் ஸ்ரீ லட்சுமி நாராயணர் அரச மரத்தில் இருந்து அருளுகிறார். அந்த நேரத்தில் வலம் வந்தால் கேட்டது கிடைக்கும். பொதுவாக மரங்கள் பகலில் ஆக்சிஜனையும், இரவில் கார்பன் டை ஆக்ஸைடையும் வெளிப்படுத்தும் இயல்புடையவை. அதுவும் விடியற்காலைப் பொழுதில் அரசமரம் வெளியிடும் பிராணவாயு உடலுக்கு மிகவும் நல்லது. மாலை நேரத்தில் இந்நிலை மாறி விடுவதால் வேண்டாம் என்கிறார்கள்.
** காலை ஐந்து மணிக்கு விளக்கேற்றி வழிபட விரும்புகிறேன், ஆனால், அந்நேரத்தில் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நல்வழி காட்டுங்கள்.
இரவு ஒன்பது மணிக்கு "டிவி'யை அணைத்து விட்டு எல்லாரையும் தூங்கச் சொல்லுங்கள். காலை ஐந்து மணிக்கு எல்லாருமே எழுந்துவிடலாம். ஆனால், இந்த பதிலை உங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள வேண்டுமே! "சுகமாக "டிவி', பார்ப்பதையும், காலைத் தூக்கத்தை கெடுக்கிறேன்' என்றும் உங்கள் வீட்டினர் என்னை சபிக்காமல் இருந்தால் சரி!
* சூரியகாந்தி எண்ணெய், பாமாயிலை விளக்கேற்ற பயன்படுத்தலாமா?
.
எண்ணெய் என்ற சொல்லே நல்லெண்ணெயைத்தான் குறிக்கிறது. எள்+நெய்=எண்ணெய். இதுதான் விளக்கேற்ற உயர்ந்தது. தைல தீபம் என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. "திலம்' என்றால் "எள்'. திலத்திலிருந்து எடுக்கப்படுவதால் "தைலம்' என்று பெயர். சாஸ்திரம் ஏற்பட்ட பொழுது சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவை கிடையாது. அதனால் சாஸ்திரங்கள் விட்டிருக்கலாம் என்று கேட்பீர்கள்! அதற்கு மின்சார விளக்கே போதுமே?
* மலைக்கோயிலுக்குச் செல்லும் பொழுது, குரங்குகள் பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்று விடுகின்றன. இதனால் உண்டாகும் மனக்கஷ்டம் நியாயமானதா?
குரங்குகள் நம்மைப்போல் சிந்திக்கத் தெரியாதவை. உங்கள் மனம் கஷ்டப்படும் என்று அவற்றிற்குத் தெரிந்திருந்தால் இதுபோல் செய்யுமா? சிந்திக்கத் தெரிந்த நாமே அவற்றிடம் ஏமாந்து விடுகிறோமே! ஜாக்கிரதையாக இருந்து கொண்டால் போதும். இதையும் மீறி இப்படி நடந்தால் சுவாமியே எடுத்துக் கொண்டதாக சமாதானமாகிக் கொள்ளுங்கள். வீட்டில் சுவாமி நிவேதனத்திற்காக வைத்திருக்கும் இனிப்பை விபரம் அறியாத குழந்தை சாப்பிட்டு விட்டால் என்ன செய்கிறோம்? சோலைமலை, முக்கொம்பு போன்ற இடங்களில், குரங்குகளிடம் படாதபாடு பட்ட அனுபவம் எனக்கும் உண்டு.
* முன்னோர் திதியன்று ஏழைகளுக்கு அன்னதானமும், குழந்தைகளுக்கு கல்விக்கான உதவியும் செய்தால் தர்ப்பணம் செய்த பலனைத் தருமா? விளக்கம் தேவை.
மற்ற எந்தக் காரியமாக இருந்தாலும் மாற்று வழியை சிந்தித்துச் செயல்படலாம். முன்னோர் திதி என்ற காரியம் மட்டும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியன செய்துதான் ஆக வேண்டும் அன்னதானம், கல்விக்கு உதவி என்று எல்லாமே மிகப்பெரிய புண்ணிய செயல்கள் தான். ஆனால் பிதுர்காரியத்தோடு இவற்றை ஒப்பிடாதீர்கள்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment