Friday, 11 August 2017

தூக்கத்தில் நிம்மதி

தூக்கத்தில் நிம்மதி
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே- அந்தத் தூக்கமும் அமைதியும் நானா னால்…’ என்றொரு பாடலைக் கேட்டிருப்பீர்கள்.
இது ஷேக்ஸ்பியர் வரிகளின் தமிழாக்கம்.
ரோமியோ ஜுலியட்டில்…
Sleep Dwell upon Thine Eyes
peace in Thy Breast
Would I were Sleep and Peace
So Sweet to Rest
`தூங்குவது போலும் சாக்காடு; தூங்கி
விழிப்பது போலும் பிறப்பு’ – என்றான் வள்ளுவன்.
தூக்கத்தில் கிடைக்கும் மயான அமைதி வேறு எதிலே கிடைக்கப் போகிறது! அது கவலைகளை மூடி வைக்கிறது! கண்ணீரை ஒத்தி எடுக்கிறது; நாளையப் பொழுது பற்றிய கேள்விக் குறிகளை நிறுத்தி வைக்கிறது.
மானிட தர்மத்தை ஒழுங்காக நிறைவேற்றவே, மனிதன் அடிக்கடி தூங்கித் தூங்கி விழித்து எழுகிறான்.
நோயாளியைக் கேள்வி கேட்கும் டாக்டர், `தூக்கம் வருகிறதா? பசி எடுக்கிறதா?’ என்று இரண்டு கேள்விகளைத் தானே கேட்கிறார்.
உறக்கம் கெட்டவன் வாழ்க்கையே நரகம்.
தலையணைக்குக் கீழே துயரங்களைப் புதைத்து வைத்துக் கொண்டு, திரும்பிப் படுப்பவனுக்கு வேறு எந்த வகையிலே நிம்மதி?
மாத்திரை சாப்பிட்டுத் தூங்குகிறவன், கவலைகளைச் சாகடிக்கவில்லை; நரம்புகளைச் சாகடிக்கிறான்.
மரணம் இறுதியாக வரும்வரை, வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதி தூக்கமாக இருக்க வேண்டும்.
அதற்கென்ன வழி?
`வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?’
செத்துப் போனால் யாரும் கூட வரப் போவதில்லை; இருக்கின்ற காலத்தில் துடிப்பென்ன? திகைப்பென்ன?
நடப்பது நடக்கட்டும்; நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து விடு; நிம்மதியான தூக்கம் வரும்.
எப்படிப் படுத்தால் தூக்கம் வருமோ அப்படிப் படு.
ஆனால், ஆடவன் குப்புறப் படுத்தாலும் படுக்கலாம்; பெண் மல்லாந்து படுக்கக் கூடாது; ஒருக்களித்துத்தான் படுக்க வேண்டும்.
அதனையும் முந்திய அத்தியாயத்தில் சொன்னபடி இடது கையில்தான் படுக்க வேண்டும். அப்போதுதான் இதயம் சுகமாக இயங்கும். சுவாசம் லகுவாக வெளிவரும்.
தூக்கத்தில் கனவே வரவில்லையென்றால் மிகவும் நல்லது; அது ஆழ்ந்த தூக்கம்.
ஆழ்ந்த தூக்கத்தின் மறுபகுதி தான் கனவு வருவது.
மேலே உத்திரம் உள்ள வீடாக இருந்தால், உத்திரத்துக்கு நேரே தலையை வைக்காதே; கனவு வரும்.
தலையணைக்கு அடியில் கொஞ்சம் விபூதியோ, குங்குமமோ வைத்துக் கொண்டு படு; கெட்ட கனவு வராது.
படுக்கப் போகும்போது பூஜை செய்துவிட்டுப் படு; பயமோ கவலையோ இருக்காது.
யாரையும் திட்டிவிட்டு, அதே கோபத்தோடு போய்ப் படுக்காதே; தூக்கம் வராது.
சாப்பிட்ட பிறகு, கொஞ்சம் குறுநடை போட்டுப் படு; தூக்கம் வரும்.
பக்கத்தில் நண்பனோ, மனைவியோ படுத்திருந்தால், நல்ல விஷயங்களைப் பேசிக் கொண்டே படு; தூக்கம் வரும்.
எந்தக் காரணம் கொண்டும், இரவிலே மணிக்கு மணி அடிக்கும் கடிகாரம் வைக்காதே; அது தூக்கத்தைக் கெடுப்பதற்கென்றே கண்டு பிடிக்கப்பட்டது.
சுகமான மிருதுவான சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே படு; தூக்கம் வந்து விடும்.
மலேசியாவில் `கோங்கான் கீரை’ என்றொரு கீரை இரவிலே தரப்படுகிறது. அதை மட்டும் காலை – இரவிலே சாப்பிடலாம்; அதைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் எந்த இடிச் சத்தமும் எழுப்பாது.
வாயுப் பதார்த்தங்களை இரவிலே சாப்பிடாதே; நள்ளிரவில் அது வயிற்றைப் புரட்டும்.
நான் இருபத்தெட்டு வருஷங்களாக இரவிலே இட்லி அல்லது தோசைதான் சாப்பிடுகிறேன்.
அண்மையில் ஒரு நாள், சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்தேன்; அன்று சுகமாக தூக்கம்! காரணம் அதில் உளுந்து இல்லை.
சர்க்கரை வியாதி இல்லாதவர்கள், தேங்காய்ப் பாலும் ஆப்பமும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தேங்காய்ப் பாலிலுள்ள மதமதப்பில் நல்ல தூக்கம் வரும்.
சட்டையோ, பனியனோ, போட்டுக் கொண்டு இரவிலே தூங்கக் கூடாது. பூச்சிகள் உள்ளே போனால் ஒரு தடவைக்கு மூன்று தடவை கடிக்கும்.
என்னதான் குளிரடித்தாலும் சடலத்தை மூடுவது போல் உடலை மூடிக் கொள்ளக் கூடாது; மூக்கு மட்டும் வெளியே சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
இரவிலே படுப்பதற்கு முன், பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நான்கு வெள்ளைப் பூண்டுப் பற்களைக் கடித்துத் தின்று விட்டுப் பால் குடிக்க வேண்டும்.
அதனால் வயிற்றில் இருக்கும் வாயு பகவான், காலையில் தன் மூதாதையர்களோடு ஐக்கியமாகி வெளியேறி விடுகிறான்.
அமுங்கி அமுங்கி `ஜோல்ட்’ அடிக்கும் மெத்தையில் யாரும் படுக்கக் கூடாது.
உடம்பின் நடுப்பகுதி தாழ்ந்தும், மேலும் கீழும் உயர்ந்தும் இருந்தால் புரண்டு படுப்பது சிரமம். அதனால் அடிக்கடி விழிப்பு வரும்.
வழுவழுப்பான தரையில் பாயை விரித்துப் படுப்பது வெகு சுகம்.
எங்கள் கிராமங்களில் பர்மாவில் இருந்து ஒரு பாய் வாங்கி வருவார்கள். `பர்மாப் பாய்’ என்று. மகாராஜாக்களின் மெத்தைகள் எல்லாம் அதனிடம் பிச்சை வாங்க வேண்டும்.
இப்போது `பத்தமடைப் பாய்’ ஓரளவு அந்த நிலையில் இருக்கிறது.
வசதி உள்ளவர்கள், கடம்ப மரக் கட்டிலில் பாய் இல்லாமல் படுத்தால், உடம்பு வலியெல்லாம் தீர்ந்து விடும்.
வெட்ட வெளியில் படுக்கிறவர்கள், வேப்பங் காற்றில் படுக்க வேண்டும்.
இப்போது வேப்ப மரங்களே குறைந்து வருகின்றன. தோட்டம் உள்ளவர்கள் வேம்புகளை நட்டு வையுங்கள்.
இரவில் படுக்கும் போது, `ஆலிவ் எண்ணெய்’ என்று ஒரு எண்ணெய் இருக்கிறது. அதை முகத்தில் தடவிக் கொண்டு படுத்தால் காலையில் களை இழந்த முகம் கூடப் பிரகாசமாக இருக்கும்.
சினிமா நடிகைகள் முகத்தைக் கழுவும் போது அந்த எண்ணெய் போட்டுத்தான் கழுவுகிறார்கள். அதனால் `கருப்பி சிவப்பி’ யாகத் திகழ்கிறார் கள்.
எல்லாவற்றிற்கும் மேலாகச் சாயங் காலத்தில் மூன்று மைல் நடந்தோ, நன்றாக விளையாடி விட்டோ, குளித்துவிட்டுச் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள்; ஒரு பயலையும் கேட்க வேண்டாம்.
காலையில் விழிக்கும் பொழுது யார் முகத்திலும் விழிக்க விரும்பாவிட்டால், விழிக்கும்போது இரண்டு உள்ளங் கைகளையும் நன்றாகச் சூடேற்றி முகத்தில் தேய்த்து விட்டு அந்தக் கைகளைப் பாருங்கள்; அதுவே ஒரு சூரிய நமஸ்காரம்.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment