Monday, 28 August 2017

சர்வம் புதன் மயம் !!!!

சர்வம் புதன் மயம் !!!!
நவகிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான சக்தி, ஆற்றல், உரிமை மற்றும் அதிகார அமைப்புகள் உள்ளன. சில கிரகங்களுக்கு மிக முக்கியமான காரகங்களும், அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான். சவும்யன் என்று அழைக்கப்படும் இவர் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர்.
அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புத்திதாதா என்றும் தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். சர்வம் பிரம்மமயம் என்று சொல்வார்கள். ஆனால், மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை, சர்வம் புதன்மயம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு புதன் கிரகம் ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கிய ஸ்தானம் வகிக்கிறது.
புதன் ஆதிக்கம்
எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் மகன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டம், அறிவு, ஆற்றல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஆதிக்கம், பேச்சாற்றல், சொல்லாற்றல், கணிதம், சாதுர்யம், கபடம், கவிதை, கதை, சிற்பம், சித்திரம், ஓவியம், இயல், இசை, நாடகம், நுண்கலைகள் என பல துறைகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. தர்க்கவாதம் செய்தல், சமயோசித புத்தியுடன் பேசுதல் ஆகியவற்றிற்கு புதன் அருள் தேவை.
புதனின் அமைப்பு ஜாதகத்தில் வலுவாக இருந்தால்தான் எந்தத் துறையிலும் சிறப்பாக செயல்பட முடியும். கல்வி என்பது ஓர் அழியாச் செல்வம். அந்த கல்விக்கு அதிபதியாக புதன் திகழ்கிறார். இன்றைய சூழ்நிலையில் கல்வி என்ற சரஸ்வதி நம்மிடம் இருந்தால் தனத்தை தரும் மகாலட்சுமி தானாக நம்மிடம் வந்து விடுகிறாள்.
சட்டத்தின் சாராம்சம், நுணுக்கங்கள் தெரிந்த நீதிபதிகள், வாதத்திறமை மிக்க வக்கீல்கள், புத்திக் கூர்மையுடன் விளங்குகின்ற கணித ஆசிரியர், பேராசிரியர், ஆராய்ச்சியாளர்கள், ஆடிட்டர்கள், சிந்தனைத்திறன், கற்பனைத்திறன் மிக்க பத்திரிகையாளர்கள், மீடியா, பதிப்பகத்துறையினர், பல்வேறு நுணுக்கங்களை அலசி ஆராயும் திறன் படைத்த ஜோதிடர்கள், வான சாஸ்திர நிபுணர்கள், ஐ.டி.துறை மற்றும் கணித வல்லுநர்கள், தொலைத்தொடர்புதுறை, அஞ்சல் துறை, நிதித்துறை, வங்கி ஆகியவற்றில் வேலை பார்க்கும் யோகம் பெறவும், அத்துறைகளில் நமது பணியை சிறப்பாக செய்து சாதனை படைக்கவும் புதபகவானின் அருள்பார்வை கட்டாயம் தேவை. அவரது அருள் கடாட்சம் இருந்தால்தான் இத்துறைகளில் கால்பதிக்க முடியும் என்பது உறுதி.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று சொல்வார்கள். இதை சிலர் தவறாக புதன் கிழமை என்று அர்த்தம் செய்து கொண்டி ருக்கிறார்கள். அதாவது, இந்த இடத்தில் பொன் என்பது தன, புத்திரகாரகனான குருவைக் குறிக்கும். குருவிற்கு, தனம் எனும் பணத்தையும், புத்திரயோகம் என்னும் குழந்தை செல்வத்தையும் தரக்கூடிய ஆற்றல் உள்ளது. ஆனால், பொன்னவன் என்று அழைக்கப்படும் குருவின் அருளுடன், புதனின் பலமும் சேருவது மிக அவசியம்.
ஏனென்றால் ஒருவர் எவ்வளவுதான் பொன், பொருள், செல்வம் ஈட்டினாலும் அதை சரியான வகையில் தக்க வைத்து ஒன்றுக்கு பத்தாக பெருக்கி, அந்தப் பணத்தை சரியான வகையில் முதலீடு செய்து கணக்கு, வழக்கு பார்க்க, புதனின் பலம் அவசியம் தேவை. அதேபோல் குழந்தை செல்வத்தை தருபவர் புத்திரகாரகனான குரு. என்றாலும் அந்தக் கருவை உற்பத்தி செய்வதற்கு உறுதுணையாகவும், ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு முக்கிய அம்சமான நரம்பு மண்டலத்தை ஆள்பவர் புதன். இவருடைய பரிபூரண அருள் இருந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதை வைத்துதான் பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்ற சொல் வழக்கு உண்டானது.
புதனின் அருட்கொடை இது போன்றே எல்லா விஷயங்களுக்கும் தேவைப்படுகிறது. மூளை, நரம்பு மண்டலங்களின் செயலாற்றல் இல்லாமல் மனிதனால் எதுவும் செய்ய முடியாது. ‘எல்லாமே புதன்தான் என்றால் மற்ற கிரகங்களுக்கு வேலை இல்லையா?’ என்று கேட்கத் தோன்றும். ஆம், உண்மைதான். எல்லா கிரகங்களின் காரகத்திலும் புதனின் ஊடுருவல் இருக்கும். உதாரணத்திற்கு சினிமாத்துறைக்கு முக்கிய கிரகம் சுக்கிரன். ஆனால், புதனின் அருள் இருந்தால்தான் டைரக்ஷன், நடிப்பு, வசன உச்சரிப்பு, நகைச்சுவை, பலகுரலில் பேசும் திறமை என்று எல்லாம் வெளிப்படும். இதைப் போன்றே எல்லா துறைகளிலும் புதனின் பங்கு மிக முக்கியமானதாகும். சேரும் இடம், பார்க்கும் இடம், இருக்கின்ற ராசிக்கு தக்கவாறு, புதன் ஜாதகரை மாற்றிவிடுவார்.
புதனின் வக்ர காலம்
புதனுக்கு வக்ரம், அஸ்தங்கம், நீச்சம் போன்ற பலம் குறையும் கால கட்டங்கள் உண்டு. இந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தைகள் புதனின் ஆற்றலை குறைவாக பெற்றிருப்பார்கள். அதேநேரத்தில் கிரக மாற்றங்களின்படி புதன் வக்ரமாக இருக்கும் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது; திட்டங்கள் போடக்கூடாது. புதிய தொழில், வியாபார சம்பந்தமான ஆலோசனைகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றை செய்தால் அதில் ஏதாவது குறைபாடு, பிரச்னை ஏற்படும். வேலை முடியாமல் இழுத்தடிக்கும். எந்த விஷயத்திலும் தடை, தாமதம் உண்டாகும். ஏற்கனவே முடிவு செய்த விஷயங்களில் தாமதம் வரலாம்.
காதலர்களுக்கு வீண் சந்தேகங்கள், பிணக்குகள் ஏற்படலாம். குறிப்பாக வண்டி, வாகனம், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தொலைத் தொடர்பு, தொலைபேசி வியாபார இடமாற்றம், ஏஜென்சி போன்ற தொழில் சம்பந்தமான விவகாரங்களை புதனின் கோட்சார நிலை அறிந்து செய்வது நல்லது. வக்ரமாகவும், நீசமாகவும், அஸ்தங்கமாகவும் புதன் இருக்கும் காலங்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
தீயச் செயல்கள்
புதன் சமநிலை கிரகம். இந்தக் கிரகம் ஒருவரை நல்வழியிலும் கொண்டு செல்லும்; தீய வழியிலும் கொண்டு செல்லும். மனிதனின் எல்லா வகை போதைப் பழக்கங்களுக்கும் வலிமை இல்லாத புதனே காரணம். புதனுடன் நீச்சக் கிரகங்கள், வக்ர கிரகங்கள், பாவகிரகங்கள், 6, 8, 12ம் இட ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் ஜாதகரின் புத்தி, அறிவு, ஆற்றல் எல்லாம் தீயவழிகளில் வேலை செய்யும். தன்னுடைய மூளையை கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துவார். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லுவார். தீவிரவாத சிந்தனைகள் தோன்றும். பல அழிவு வேலைகளுக்குக் காரணமாக இருப்பார். இவர் செய்யும் தகிடுதத்தங்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.
புதனால் உண்டாகும் நோய்கள்
புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவர் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் அலித்தன்மையுடைய கிரகம். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் ஏற்படுத்தக்கூடியவர். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், பய உணர்வு, சஞ்சலம், சபல புத்தி, மனநலம் குன்றுதல், காக்கை வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகும். இந்த விஷயங்கள் புதனின் தசா புக்தி காலங்களில் அதிகமாக இருக்கும். அத்துடன் புதனுடன் சேர்ந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்களின் தசாபுக்திகளிலும் உடல் கோளாறுகள் ஏற்படும்.
புதனின் அம்சங்கள்
கிரகம் - புதன்
ராசி வீடுகள் - மிதுனம், கன்னி
நிறம் - பச்சை
உச்ச ராசி - கன்னி
நீச்ச ராசி - மீனம்
எண் கணிதம் - 5
நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி
தசா காலம் - 17 ஆண்டுகள்
அம்சம் - விஷ்ணு
ரத்தினம் - மரகதம்
தானியம் - பச்சைப்பயறு
மலர் - வெண்காந்தள்
திசை - வடகிழக்கு
சமித்து - நாயுருவி
உலோகம் - பித்தளை
வாகனம் - குதிரை
காரகம் - தாய்மாமன் - கல்வி
பரிகார ஸ்தலம் - மதுரை, திருவெண்காடு.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a comment