Thursday, 3 August 2017

நாம் இந்தப் பிரபஞ்சத்தை சார்ந்தே வாழ்கிறோம்!!!

நாம் இந்தப் பிரபஞ்சத்தை சார்ந்தே வாழ்கிறோம்!!!


நாம் எல்லோருமே ஏதோ ஒன்றை நோக்கி முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறோம். அந்த ஏதோ ஒன்று எது ? நாம் இந்தப் பிரபஞ்சத்தை சார்ந்தே வாழ்கிறோம். நாமும், இந்தப் பிரபஞ்சமும் எங்கிருந்து வந்தோம் ? எதில் போய் லயமாகப் போகிறோம் ? என்றெல்லாம் பலவாறாக யோசித்துப் பார்த்தால், முக்தியில் இருந்துதான் வந்தோம். முக்தியில்தான் நிலை பெற்றிருக்கிறோம். முக்தியில்தான் லயமாகப் போகிறோம் என்பது புரிய வரும். முக்தி என்பது நம்மிலிருந்து வேறுபட்ட ஒன்றல்ல. முக்தி என்பது பரம்பொருள் நிலையே. அதுவே நம்முள் ஆன்மாவாக நிலை பெற்றிருக்கிறது. அது இல்லை என்றால் நாம் இல்லை.
அவ்வாறாகும் பொழுது அதனின்று நம்மை பிரித்து வைப்பது, மறைத்து வைப்பது எது ? இந்தப் பிரபஞ்சத்தின் இயற்கையாகும். அது நம்மை அடிமைப்படுத்துகிறது. அதிலிருந்து விடுபட்டு நான் உனக்கு அடிமை அல்லன், நான் சுதந்திரன் என்று நாம் மேற்கொண்டு முக்தியை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நம் பயணத்தின் இலக்கு முக்தியாகிய விடுதலை. இந்தப் பிரபஞ்சத்தின் இயற்கையின் மாயக் கட்டுகளில் இருந்து விடுதலை. இதுவே
வீடுபேறு.
இந்தப் பிரபஞ்சத்தில் நாம் மாயையிலேயே பிறந்து, மாயையிலேயே வாழ்ந்து, மாயையிலேயே கட்டுண்டு கிடக்கிறோம். நாம் சுதந்திரமானவர்கள் என்று நினைத்தால் அது தவறாகும். உண்மையில் நாம் எல்லோரும் இயற்கையின் கைதிகள். இந்த உலகம் ஒரு சிறைச்சாலை, உடலும் சிறைச்சாலை, புத்தியும், மனமும் கூடச் சிறைச் சாலைதான். ஒருவன் எவ்வளவு வல்லமை பெற்றவனாக இருந்த போதிலும் இயற்கையை அவனால் வெல்லவே முடியாது.
இதை வாழ் நாளில் ஒரு தடவையேனும் உணராத ஆள் இல்லவே இல்லை. வயது முதிர்ந்தவர்கள்தான் இதை நன்கு உணர்கிறார்கள். அவர்களின் அனுபவமே அதற்கு ஏதுவாக அமைகிறது. சரி, இந்த மாயை என்றால் என்ன என்று பார்க்கப் போனால், பொதுவாக அது கற்பிதம் என்று நாம் அனைவருமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால், அது கற்பிதமல்ல. உண்மையில் அது இயற்கையின் இயல்பு.
ஈஸ்வரன் மாயாசஹிதன். இயற்கையை அவனே ஆள்கிறான். இயற்கையே மாயை, இவையனைத்தும் ஈஸ்வரனுடைய செயலே என்கிற பொழுது, மாயையின் காரியங்களில் துன்பங்கள் நிறைந்திருப்பது ஏன் ? எதற்காகவெனில், ஜீவனின் மலகன்மங்களை நீக்குதல் பொருட்டேயாகும். ஜீவனின் முன்னேற்றத்திற்கு இன்பத்தைப் போல துன்பமும் முற்றிலும் அவசியமாக இருக்கின்றது. வைத்தியர் ஊசியால் குழந்தையின் உடலில் குத்துகிறார். குழந்தைக்கு வைத்தியரைக் கண்டாலே பயம். அழ ஆரம்பித்து விடுகிறது.
குழந்தையைப் பொறுத்த வரை வைத்தியர் பொல்லாதவர். குழந்தையின் பெற்றோருக்கோ குழந்தையின் வியாதியைப் போக்கி, அதன் உயிரைக் காக்கும் வைத்தியர் ஒரு கடவுள். இவ்விதமே ஈஸ்வரன் பிரகிருதி அல்லது மாயையின் மூலம் உயிர்களை பண்படுத்தி வருகிறான். இந்த ஈஸ்வர நிலையே சகுண ப்ரம்மம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிரபஞ்சத்தைக் கடந்த நிலையில் ஈஸ்வரன் நிர்குண பரம்மமாக திகழ்கிறார். மாயா காரியங்களான கால, தேச, நிமித்தம் அங்கில்லை. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் எனும் மாறுபாடுகளும் அங்கில்லை.
இவ்வுலகம் ஒரு போர்க்களம். வாழ்வு எனும் போராட்டத்தில் மாயையை வெல்ல நாமெல்லாம் போராடுகிறோம். மாயையே வெல்கிறது. ஒவ்வொரு முறையும் தோல்வியின் பொழுதும் பக்குவப்படுகிறோம். அவ்வாறு மாயையின் ஒவ்வொரு யுக்திகளாக உடைத்து எறிந்து முன்னேறுகிறோம். பிறக்கும் பொழுதே முன்பு ஏற்பட்ட தோல்வியைக் குறித்து விசனப்பட்டு அழுது கொண்டே பிறக்கிறோம். வாழ்வு எனும் போராட்டம் அப்பொழுதே தொடங்கி விடுகிறது. இப்படி இடைவிடாத போராட்டம் மீண்டும் மீண்டும் தொடர்கிறது.
இதனால்தான் ஜீவிதத்தை கரை கண முடியாத கடல் என்பர். நம்மால் இயன்ற வரை பிறவிப் பெருங்கடலில் நீந்துகிறோம். எத்தனையோ இலட்சம் யோனி பேதங்கள், எத்தனை எத்தனையோ வடிவங்கள் எடுத்து பிறவிப் பெருங்கடலில் நீந்தி இன்று கிடைத்தற்கரிய இம்மானுடப் பிறவியைப் பெற்றிருக்கிறோம். இன்னும் எத்தனை பிறவிகளில் எவ்வளவு தூரம் நீந்த வேண்டுமோ, நமக்குத் தெரியாது. இப்பிறவியில் இப்பொழுது நீந்திக் கொண்டு இருக்கிறோம். மரணம் வருவதற்கு முன் நாம் சாதித்தது வெற்றியா அல்லது தோல்வியா என்பது யாருக்குமே தெரியாது. இதுதான் மாயை.
பொறி வாயில் ஐந்தும் நம்மைப் புறவுலகில் இழுத்து விடுகின்றன. இன்பத்தை நாடி நாமும் அதன் பின்னே ஓடுகிறோம். ஆனால் அங்கிருந்து துன்பமேயன்றி இன்பம் கிடைக்கப் போவதில்லை என்பது பிறகுதான் தெரிகிறது. முன்பு ஏமாந்தவர்கள் சொன்னாலும் அதைக் கேட்க நாம் தயாராக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் நாமே அனுபவித்து, ஏமாந்து, அடிபட்ட பின்புதான் உணர்கிறோம். அதுவும் ஒரு தடவையா, இருதடவையா பல தடவைகள், பல பிறவிகள். விளக்கில் பாயும் விட்டில் பூச்சிகளைப் போல இந்திரிய சுகங்கள் நமக்கு மரணத்தை உண்டு பண்ணுகின்றன என்று தெரிந்தும் அதில் உழன்று கொண்டே இருக்கிறோம்.
இதுதான் மாயை. ஆன்மீகமோ, லௌகீகமோ பிறப்பெடுத்த ஒவ்வொரு மனிதனும் தான் மேல் நிலையை அடைய வேண்டும் என்ற வேட்கையோடுதான் பிறக்கிறான். கண் விழித்துப் பார்க்கும் பொழுது இவ்வுலகம் இனிமையானதாக, அன்புமயமானதாகத் தான் தெரிகிறது. வளர வளர மேல் நோக்கி ஏகுங்கால் ஒவ்வொரு படியிலும் ஏற முடியாதபடி இயற்கை சுவர் போல குறுக்கிட்டு நிற்கிறது. அதையும் முட்டி, மோதித் தாண்டி அப்பால் கடந்து போனால், அவன் இலக்கும் எட்டப் போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியில் ஓரளவு கடந்த பின்பு பார்த்தால் தான் மரணத்தில் வாயிலில் நிற்பது தெரிகிறது. ஒரு வேளை இனி அவன் கடக்க வேண்டிய அவசியம் இல்லாமல் கூடப் போகலாம். ஆனால், அது அவனுக்குத் தெரியாது. இதுதான் மாயை.
அனைத்தையும் துடைத்துத் தள்ளுகிற கால வெள்ளமானது கரைபுரண்டு ஆர்ப்பரித்து ஓடி வந்து கொண்டே இருக்கிறது. எதையும் விட்டு வைப்பதில்லை. யாரையும் விடுவதில்லை. ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி, அழகன், அழகி, அறிஞ்ன், முட்டாள் என்று அனைவரையும் அது விழுங்கி வருகிறது. எஞ்சி நிற்பவர் யாருமில்லை. அழிவு எனும் குறியை நோக்கி எல்லாம் ஓடிக் கொண்டேயிருக்கிறது. நாம் பெற்றுள்ள அறிவும், கலைகளும், ஞானங்களும் அந்த முடிவை நோக்கியே போகின்றன. காலகதியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவார் யாருமில்லை. சுனாமி வருகிறது,
கொள்ளை நோய்கள் வருகின்றன, புயல் வருகிறது, பூகம்பம் வருகிறது. கொத்து கொத்தாய் மனிதர்களும், உயிர்களும் மடிந்து போகின்றன. எனினும் மனிதர்கள் இந்த துயரங்களை எல்லாம், ஆடியும், பாடியும், குடித்தும் மறக்க முயல்கின்றனர். இதே பாங்கில் தனக்கு வரப்போகும் அழிவை இந்திரிய நுகர்ச்சிகளின் வாயிலாக நாம் மறைக்கவோ, மறக்கவோ முயல்கிறோம். ஆனால், நடப்பது என்னவோ அது நடந்தே தீருகிறது. மாயை என்பது இதுவே. இப்படி ஒவ்வொரு காரியங்களுக்குப் பின்னாலும் மாயையின் பங்களிப்பு மறைந்திருக்கிறது. அது எல்லா விதத்திலும் தன் வெற்றியை நிலை நாட்டி வருகிறது.
இதிலிருந்து விடுபடுவதற்கு உற்ற உபாயம்தான் என்ன ? இந்த அடிமைத் தனத்திலிருந்து நமக்கு விமோசனம் இல்லையா ? இயற்கையின் இச்சிறையிலிருந்து விடுபட வழியே இல்லையா ? இருக்கிறது. நமக்குள்ளேயே இருக்கிறது. ஒவ்வொருவரின் உள்ளத்தினுள்ளும் அதன் குரல் இடைவிடாது ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. ''தெய்வீகமானதும் குணமயமானதுமாகிய எனது இந்த மாயை கடப்பதற்கு அரியது. என்னை முழுமையாகச் சரண்டைவர்கள் இதைக் கடக்கின்றனர்'' என்ற குரல் ஒவ்வொருவரின் உள்ளேயும் ஆழ்மனதின் ஆழத்தினின்று ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இப் பிரபஞ்சத்தில் பேரிரைச்சலிலும்
இந்திரியங்களின் ஆர்ப்பரிகளுக்குமிடையே அது நம் உணர்வுக்கு எட்டாமல் போய் விடுகிறது. எவர் இதையெல்லாம் கடந்து உள்ளே ஒலிக்கும் பரம்பொருளாகிய ஆன்மாவின் இக்குரலுக்கு செவி கொடுக்க முயல்கின்றனரோ, அவர்கள் மாயையை கடப்பது உறுதியாகும். பெரும்பாலும் மனிதன் வாழ்க்கையே அழிந்துபட்டுப் போய் விட்டதாக, எதுவுமே பொருளற்றதாகத் தோன்றும் பொழுதும், எல்லா வாய்ப்புகளும் கை நழுவிப் போன பின்பும், தன் செயல் எதுவுமே இல்லை என்பதை உணர்கிற பொழுதும்தான் இக் குரலை அவன் உள்ளுக்குள் கேட்கிறான். விரக்திக்குப் பிறகே ஆன்ம விசாரம் தோன்றுகிறது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment