Sunday, 6 August 2017

திருத்தணி - Thiruttani : திருவள்ளூர்

திருத்தணி - Thiruttani : திருவள்ளூர்
மூலவர் : சுப்பிரமணியசுவாமி
உற்சவர் : சண்முகர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : மகுடமரம்
தீர்த்தம் : இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை, சரஸ்வதி தீர்த்தம், மடசெட்டிக்குளம், நல்லாங்குளம்
ஆகமம்/பூஜை : குமார தந்திரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : சிறுதணி
ஊர் : திருத்தணி
மாவட்டம் : திருவள்ளூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
அருணகிரி நாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் நிறைய பாடியுள்ளார்.இது தவிர ராமலிங்க அடிகளாரும் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார்.
திருப்புகழ்
வெற்றிசெய வுற்றகழை விற்குதைவ ளைத்துமதன் விட்டகணை பட்ட விசையாலே -
வெட்ட வெளி யிற்றெருவில் வட்ட பணை யிற்கனல்விரித்தொளி பரப்பு மதியாலே;
பற்றிவசை கற்றபல தத்தையர்த மக்குமிசைபட்டதிகி ரிக்கு மழியாதே -
பத்தியையெ னக்கருளி முத்தியைய ளித்துவளர் பச்சைமயி லுற்று வரவேணும்;
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்நினைக்குமன மொத்த
நெய்க்கமல மொக்குமுலை மெய்க்குறவி யிச்சையுற நித்தமிறு கத்த ழுவுமார்பா -
எற்றியதி ருச்சலதி சுற்றியதி ருத்தணியில் எப்பொழுது நிற்கு முருகோனே -
எட்டசல மெட்டநில முட்டமுடி நெட்டசுரரிட்டசிறை விட்ட பெருமாளே.
-அருணகிரிநாதர்
திருவிழா:
மாசிப் பெருந்திருவிழா - வள்ளி கல்யாணம் - 10 நாட்கள் திருவிழா - இத்திருவிழா இத்தலத்தில் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருள் பெறுவர். சித்திரைப் பெருந்திருவிழா - தெய்வானை உற்சவம் -10 நாட்கள் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவிலும் கலந்து கொள்கின்றனர். ஆடிக் கிருத்திகை -10 லட்சம் காவடிகள் எடுத்து வருவது மிகப் பிரம்மாண்டமாக தெரியும்.அசுவினி, பரணி, கார்த்திகை நட்சத்திரத்தன்று கர்நாடகா ஆந்திரா, மற்றும் ஆற்காடு பக்தர்கள் வரும்போது திருத்தணியே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கும். இத்தலத்தில் இது ரொம்பவும் விசேசமான திருவிழா ஆகும். இவை தவிர கிருத்திகை அன்றும் தமிழ் ,ஆங்கில புத்தாண்டு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.
தல சிறப்பு:
வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது 1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சன்னதியாக உள்ளது. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5வது வீடு. அமர்ந்த நிலையில் அருணகிரியார் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம். இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது. முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரையில் கோயில் தொடர்ந்து திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை- 631209 திருவள்ளூர் மாவட்டம்.
போன்:
+91-44 2788 5303
பொது தகவல்:
முருகனை வழிபட்ட இந்திரனால் உருவாக்கப்பட்ட "கல்ஹார தீர்த்தம்' மலையில் இருக்கிறது. வள்ளி மலையிலிருந்து வள்ளியை சிறையெடுத்து வந்து திருமணம் செய்து கொண்ட தலம். 365 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள அழகிய முருக தலம். எத்தலத்திலும் காணமுடியாத வழக்கமாக இத்தலத்து ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்குதல் வேண்டுமாம். இத்தலத்தில் வேறெங்கும் காணமுடியாத விஷ்ணு துர்க்கை ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான முருகன் திருத்தலம் இது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆறு தளங்களைக் கொண்டது. இத்தலத்திற்கு குன்றுதோறாடல் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
பிரார்த்தனை
இத்தலத்து முருகப்பெருமான் மிகவும் அருள் வாய்ந்தவர் என்பதால் தினந்தோறும் பக்தர்கள் திருமண வரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி வந்த வண்ணம் இருக்கிறார்கள். எத்தனை கோபம் , மனக்குழப்பம் ஆகியவைகளோடு இருந்தாலும் இத்தலத்து முருகனை வணங்கினால் அத்தனை கோபமும் குழப்பங்களும் விலகிவிடுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்ககை.
நேர்த்திக்கடன்:
மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல்,பொங்கல் படைத்தல் ,சுவாமிக்கு சந்தனகாப்பு ,பஞ்சாமிர்த அபிசேகம் பால் அபிசேகம் ,அன்னதானம் வழங்குவது , நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடிஎடுத்தல் ,அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் செய்கின்றனர். வசதி படைத்தவர்கள் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.
தலபெருமை:
வேல் இல்லாத வேலவன்: முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. அலங்காரத்தின்போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. முருகனுக்குரிய "குமார தந்திர' முறைப்படி இங்கு பூஜை நடக்கிறது. மூலஸ்தானத்தில் முருகனுக்கு பின்புறம் வள்ளி, தெய்வானை இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்கு தனிச்சன்னதிகளும் இருக்கிறது.
சூரசம்ஹாரம் இல்லை: முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. தற்போது, ஆயிரம் கிலோ பூக்களை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
வாசலைப் பார்க்கும் யானை: முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம். இதற்கு காரணம் உண்டு.
இந்திரன், தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து தந்தபோது, ஐராவதத்தை (தேவலோகத்து வெள்ளை யானை) சீதனமாக கொடுத்தார். இதனால், தேவலோகத்தின் ஐஸ்வர்யம் குறைந்தது. ஆகவே, ஐராவதத்தின் பார்வையை தேவலோகம் நோக்கி திருப்ப அனுமதிக்கும்படி முருகனிடம் வேண்டினார். முருகனும் சம்மதித்தார். எனவே ஐராவதம், தேவலோகத்து திசையான கிழக்கு நோக்கி இருக்கிறது.
கர்ண பரம்பரை கதை ஒன்றும் உண்டு. முருகன், வள்ளியை மணக்கச் சென்றபோது விநாயகராகிய யானையைக் கண்டு பயந்து ஓடினாள். தன்னைக்கண்டு மீண்டும் வள்ளி பயந்து விடக்கூடாது என்பதற்காக யானை வடிவில் விநாயகரே வெளியே பார்த்திருப்பதாக சொல்கிறார்கள்.
கஜவள்ளி: திருமாலின் மகள்களான அமுதவல்லி, சுந்தரவல்லி இருவரும் முருகனை மணக்க வேண்டி தவமிருந்தனர். இவர்களில் அமுதவல்லி, தெய்வானை என்ற பெயரில் இந்திரனிடமும், சுந்தரவல்லி வள்ளியாக நம்பிராஜனிடமும் வளர்ந்து முருகனை மணந்தனர். சகோதரிகளான இவ்விருவரும் வேறில்லை என்பதன் அடிப்படையில் இங்கு வள்ளியும் தெய்வானையும் அம்சத்துடன் ஒரே அம்பிகையாக "கஜவள்ளி' என்னும் பெயரில் அருள்கிறாள். இவள் வலது கையில் வள்ளிக்குரிய தாமரையும், இடக்கையில் தெய்வானைக்கு உரிய நீலோத்பவ மலரும் வைத்திருக்கிறாள். தங்கத்தேர் புறப்பாடு இல்லாத வெள்ளிக்கிழமைகளில், இவள் கிளி வாகனத்தில் எழுந்தருளுகிறாள்.
நோய் தீர்க்கும் சந்தனம்: திருத்தணியில் முருகனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சாதாரண சந்தனம் சாத்துவதில்லை. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. இந்த சந்தனத்தை பக்தர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளாமல், நீரில் கரைத்து குடித்து விடுகிறார்கள். இதனால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. விழாக்காலங்களில் மட்டுமே இந்த சந்தன பிரசாதம் கிடைக்கும்.
ஆடி கிருத்திகை விசேஷம்: முருகப்பெருமானை இந்திரன், ஆடி கிருத்திகையன்று பூஜை செய்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இத்தலத்தில் இவ்விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இவ்விழாவின்போது சுவாமி, அடிவாரத்திலுள்ள சரவணப்பொய்கைக்கு எழுந்தருளுகிறார். இந்திரன் கல்ஹார புஷ்பம் என்னும் மலரை முருகனுக்குச் சூட்டி வழிபட்ட தலமென்பதால், இங்கு அதிகளவில் மலர்க்காவடி செலுத்துகின்றனர். மலர்க்காவடி வாடகைக்கு கிடைக்கிறது.
வெந்நீர் அபிஷேகம்: மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
புத்தாண்டில் படிபூஜை: வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.
நான்கு நாய் பைரவர்: கோயில்களில் பைரவர், வேதத்தின் வடிவமான நாய் வாகனத்துடன் காட்சி தருவார். சில தலங்களில் இரண்டு நாய்களுடன் பைரவரைக் காணலாம். இங்கு நான்கு நாய் வாகனங்களுடன் அவரைத் தரிசிக்கலாம். ஒரு நாய் வழக்கம்போல, பைரவருக்கு பின்புறம் உள்ளது. மற்ற மூன்று நாய்களும் பீடத்தை சுற்றி இருக்கிறது. அவை நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. கல்வியில் புலமை பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
சித்திரை பிரம்மோற்ஸவத்தில் தெய்வானை திருமணமும், மாசியில் வள்ளி திருமணமும் நடக்கிறது. பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் தெய்வானையும், ஒருநாள் வள்ளியுமாக முருகனுடன் அருள்செய்கின்றனர். வேடன் வடிவில் சென்று முருகன் வள்ளியை மணந்ததால் பிரம்மோற்ஸவத்தின் ஆறாம் நாளில் புலி வாகனத்திலும், பின்பு யானை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.
இத்தல முருகனின் அருளை முஸ்லிம் பக்தர் ஒருவர் பெற்றார். தற்போதும் விழாக்களில், முருகன் புறப்பாடாகும் வேளையில், முஸ்லிம் ஒருவர் முரசு வாத்தியம் இசைக்கிறார். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம். இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.
தல வரலாறு:
இறைவனைத் தேடி நாமாகவே சென்று விட வேண்டும். நாம் அவனிடம் செல்ல மறுத்து, அவனால் தரப்பட்ட இந்த வாடகை வீடாகிய உலகத்தில் தொடர்ந்து வசிக்க விரும்பினால், அவன் விடமாட்டான். யோகிகளும், ஞானிகளும் அவனை அடைவதற்குரிய வழியைச் செய்து எப்படியோ அவன் திருப்பாதத்தை அடைந்து விடுகின்றனர். பாமரர்கள், இந்த உலகத்தில் நிரந்தரமாக வாழப்போவதாக நினைத்து பொன்னையும்,பொருளையும் குவித்துக் கொண்டிருக்கின்றனர். திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் புத்திரியை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான். வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச் செய்து வந்தாள்.தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் "உலகப்பற்று' எனப்படும் ஆசையையும் குறிக்கும். "இது உனக்குச் சொந்தமானதல்ல, எனக்குச் சொந்தம்' என்று பறந்து வரும் பறவைகள் பரமாத்மாவாகிய இறைவனைக் குறிக்கும். உலக ஜீவன்களோ இதைப் புரிந்து கொள்ளாமல், கவண்கல்லால் அவற்றை விரட்டியடிப்பது, தெய்வத்தைப் புரிந்து கொள்ளாத தன்மையைக் குறிக்கும்.இந்த உலகமே நிரந்தரமெனக் கருதியிருக்கும் இதுபோன்ற பாமர உயிர்களுக்கு தவம், யோகம், தியானம் இது பற்றியெல்லாம் தெரியாது. இப்படிப்பட்ட உயிர்களையும் ஆட்கொள்ளவே விரும்புவான். அப்படி வள்ளியை ஆட்கொள்ளவே முருகப்பெருமான் முதியவர் வேடத்தில் வந்தார். வள்ளியோ அவரை யாரென அறியாமல் பயந்தோடினாள். இறைவனோ, அவளை ஆட்கொள்ள யானை மூலம் பயமுறுத்தினார். அவர் அவளைத் தழுவினார். இறைவனின் ஸ்பரிசம் பட்டதுமே ஞானோதயம் பிறந்தது. அவருடன் ஐக்கியமாகி விட்டாள். பாமரர்கள், அவள் இறைவனுடன் ஐக்கியமானதை திருமணமாகக் கருதி, வள்ளி திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். வள்ளியின் திருமணத்தலம் இது. முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில் தங்கியதால் "தணிகை மலை' என்று பெயர் பெற்ற இத்தலம் "திருத்தணி' என்று மாறியது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறது. இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது.

நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment